உலக முதலாளித்துவம் கடும் நெருக்கடியில் சிக்கி இருக்கின்றது. மக்கள் தங்கள் மீது முதலாளித்துவம் கட்டவிழ்த்து விடும் நெருக்கடிக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடுகின்றார்கள். கம்யூனிசப் புத்தகங்கள் உலகமெங்கும் பெரும் அளவில் விற்பனையாகி வருகின்றன. மக்கள் அவற்றைப் படிப்பதன் மூலம் தங்களது போராட்டத்தின் திசைவழியைத் தீர்மானிக்க முடியும் என்று உறுதியாக நம்புகின்றார்கள். உலக முதலாளிகளின் அடி வயிற்றில் இன்றும் மார்க்ஸ் நெருப்பு வைத்துக் கொண்டே இருக்கின்றார். மார்க்ஸின் பெயர் உலகின் கடைசி முதலாளி இருக்கும் வரை உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். அந்தப் பெயர் உலக முதலாளித்துவ பயங்கரவாதத்தை ஒழிக்கும் வரை ஒரு சூறாவளியாய் இந்த உலகத்தை சுற்றிவந்துகொண்டே இருக்கும். மார்க்சியம் ஒரு வறட்டு சூத்திரமல்ல; அது காலந்தோறும் புரட்சி விதைகளை இந்தப் பூமியில் விதைத்துக்கொண்டே இருக்கும் நடைமுறைத் தத்துவம். மார்க்சியம் என்பது மார்க்சின் எழுத்துக்கள் மட்டும் அல்ல, மார்க்ஸின் வாழ்க்கையையும் சேர்ந்ததுதான்.

 marx and jennyஇன்று தங்களை போராட்டவாதி என்று சொல்லிக்கொண்டிருக்கும் பலர் ஆளும் வர்க்கம் கிழித்த கோட்டை தாண்டிச்செல்ல வக்கற்றவர்களாகவும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆளும்வர்க்கத்துக்கு சாமரம் வீசுபவர்களாகவும், சொந்த வாழ்க்கையில் நேர்மையற்றவர்களாகவும் பொதுவாழ்க்கையில் உத்தமர் வேடம் போடும் கபடதாரிகளாகவும் இருப்பதைப் பார்க்கின்றோம். உலக வரலாற்றில் மார்க்ஸ் போல வாழ்ந்த ஒரு மனிதரை நாம் எங்குமே பார்க்க முடியாது. தன்னுடைய எழுத்துகளுக்காக நாடு நாடாக துரத்தப்பட்ட மனிதர் அவர். வறுமையைத் தின்று செரித்து வாழ்ந்த மனிதர் அவர். ஒவ்வொரு போராட்டவாதியும், சமூக மாற்றத்திற்காக எழுதும் எழுத்தாளர்களும், கற்றுக் கொள்வதற்கு மார்க்ஸிடம் நிறைய இருக்கின்றது.

 பிரஷ்ய சர்க்கார் கம்யூனிஸ்ட் லீக்கை ஒழித்துக் கட்டுவதற்காக லீக்கில் உறுப்பினராக இருந்த பல பேர் மீது ராஜத்துரோக தன்மை கொண்ட சதியில் ஈடுபட்டதாக கோலோனில் வழக்கு தொடர்ந்து, கடுமையான தண்டனைகளைக் கொடுத்தது. மார்க்ஸ் பாதிக்கப்பட்ட தோழர்களுக்காக கடுமையாகப் போராடினார். பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு உதவுவதற்காக லண்டனில் ஒரு கமிட்டியையும் அமைத்தார். கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஒழிப்பதற்காக பிரஷ்ய அரசு எவ்வாறு மோசடியான வழிமுறைகளைப் பின்பற்றியது என்பதை விளக்க ‘கோலோன் கம்யூனிஸ்ட் வழக்கு விசாரணையில் வெளிப்பட்ட உண்மைகள்’ என்ற பிரசுரத்தை எழுதி வெளியிட்டார். இந்தப் பிரசுரத்தின் நகலை தன்னுடைய நண்பர் அடால்ப் கிளஸுக்கு அனுப்பினார். அதன் முகப்புக் கடிதத்தில் "நீங்கள் இந்தப் பிரசுரத்தின் வேடிக்கையை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். இதன் ஆசிரியரும் அநேகமாக சிறைவாசத்தில் இருப்பதைப் போலத்தான் வீட்டிற்குள்ளயே இருக்கின்றார். காரணம் அவரிடம் இப்போது கால் நிஜார் இல்லை. காலணிகளும் இல்லை. அவருடைய குடும்பம் மிகவும் சிக்கலான நிலையில் இருக்கின்றது. இன்னும் படுமோசமான வறுமையில் விழுந்து அழிந்துபடும் ஆபத்தான நிலைமையில் சிக்கித் தவிக்கின்றது. இந்த வழக்கு விசாரணை என்னை இன்னும் அதிகமான வறுமையிலும் பற்றாக்குறையிலும் இழுத்துவிட்டது. காரணம் நான் ஐந்து வாரகாலம் தொடர்ச்சியாக சர்க்காரின் சூழ்ச்சிகளுக்கு எதிராக, கட்சிக்காக வேலை செய்ய வேண்டியதிருந்தது. அப்போது நான் பணம் எதுவும் சம்பாதிக்க முடியவில்லை.” என்று மனம் வருந்தி கூறியிருந்தார்.

 மார்க்சின் எழுத்துக்களை வெளியிடுவதற்கு பெரும்பாலும் எந்த வெளியீட்டாளரும் முன்வராத சூழ்நிலையே நிலவியது. மார்க்சின் எழுத்துக்களை வெளியிடுவது என்பது வம்பை விலைகொடுத்து வாங்கிக் கொள்வதற்கு சமமாகவே பெரும்பாலும் அவர்கள் கருதினர். இன்று சட்டப்படி கருத்துரிமை உள்ள நாளிலேயே புரட்கரமான எழுத்துக்களை வெளியிடுவதற்கு அஞ்சும் கோழைகள் இருக்கும்போது அன்று நிலமை எப்படி இருந்திருக்கும் என்று நாம் கற்பனை செய்துகொள்ளலாம். அது போன்ற சமயங்களில் மார்க்சுக்கும் அவரது குடும்பத்திற்கும் இருந்த ஒரே ஆதரவு ஏங்கல்ஸ் மட்டுமே. பல ஆண்டுகள் மார்க்ஸ் எந்தவிதமான ஆதாரமும் வகையும் இல்லாமல் இருந்தார். பல சமயங்களில் அவரது வீட்டில் ஒரு காசு கூட இல்லாமல் ஓட்டாண்டியாக இருந்தார். வீட்டில் பத்திரிக்கை இல்லாமல், எழுதுவதற்குக் காகிதம் இல்லாமல், தபால் தலைகள் இல்லாமல், மருந்து இல்லாமல், டாக்டர்கள் இல்லாமல் அவர் வாழ வேண்டியிருந்தது. அவருடைய குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகள் அனைத்துமே பற்றாக்குறையாகவே இருந்தன. பல வாரக் கணக்கில் அவர்கள் வெறும் ரொட்டி உருளைக்கிழங்குடன் மட்டுமே வாழ்ந்து வந்தனர். அவருடைய கடன்காரர்கள் அவருடைய வாழ்க்கையை இன்னும் பரிதாபத்திற்குள்ளாக்கினார்கள். அவருடைய அவல நிலையை அதிகப்படுத்தினார்கள். சிவில் கோர்ட்டில் கேஸ் போட்டு வீட்டிலுள்ள உடமைகளையெல்லாம் ஜப்தி செய்வோம் என்று பயமுறுத்தினார்கள்.

 இப்படிப்பட்ட ஒரு கொடுமையான சூழ்நிலை பற்றி மார்க்ஸ் எழுதும்போது "என்னுடைய படுமோசமான விரோதிக்குக் கூட எனது கஷ்ட நிலை, நான் கடந்த எட்டு வார காலமாக சதுப்பு நிலச் சகதியில் சிக்கித் தவித்துக் கடந்து வந்த கதி ஏற்படக் கூடாது. மிகக் கடுமையான கோபாவேசத்துடன் என்னுடைய அறிவுத்திறன் சிதறி ஓடிக்கொண்டிருந்தது. எனது வேலை செய்யும் சக்தி இந்தக் கீழ்த்தரமான சில்லரைத் தொந்தரவுகளின் காரணமாய் சிதைந்து சீர்கேடு அடைந்து வந்தது.” என்று குறிப்பிட்டார். மார்க்சின் வறுமை அவரது குடும்பத்தை சின்னாப்பின்னப்படுத்தியது. அவரது ஏழு குழந்தைகளில் மூன்று பேர்தான் பிழைத்திருந்தனர். அவருடைய ஒரு வயது நிரம்பிய ஹின்ரிச் குயிடோ நிம்மோனியா ஜுரத்தால் இறந்தது. பிரான்ஸிஸ்கா பிறந்து இரண்டு ஆண்டுகளில் உயிர் இழந்தது. குழந்தையைப் புதைப்பதற்கு சவப்பெட்டி வாங்குவதற்குக் கூட மார்க்ஸிடம் பணம் இல்லை. குடிபெயர்ந்து வாழ்ந்த ஒரு பிரெஞ்சுக்காரர் இறந்த குழந்தைக்கான சவப்பெட்டி வாங்கிக் கொடுத்து, மார்க்சுக்கு உதவினார். மார்க்ஸை மிகவும் பாதித்த மரணம் என்பது அவரது எட்டுவயது மகன் எட்கரின் மரணமாகும். எட்கருக்கு ஏற்பட்ட கடுமையான வாயுத்தொல்லை மிக்க நோயால் 1855 ஏப்ரல் 6 ஆம் தேதி இறந்தான். அப்போது ஏங்கெல்ஸிற்கு எழுதினார் "எனக்கு எத்தனையோ அவப்பேறுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆயினும் இப்போதுதான் உண்மையான துயரம் என்றால் என்ன என்பதை அறிந்தேன்.” என்று.

  இன்று நாம் படிக்கும் மார்க்ஸின் பல நூல்கள் அவர் கடுமையான வறுமையில் இருந்த சமயத்தில் எழுதப்பட்டதுதான். மார்க்ஸின் புகழ்பெற்ற நூலான பொருளாதார கையெழுத்துப் பிரதி எழுதும்போது அவரது குடும்பம் கொடுமையான வறுமையால் சூழப்பட்டிருந்தது. இது பற்றி 1857 ஜனவரி 20ஆம் தேதி அவர் ஏங்கெல்ஸிற்குக் கீழ்கண்டவாறு எழுதினார். "இங்கே நான் இருக்கிறேன். உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். எவ்விதத் துணையுமின்றி ஆதரவற்ற நிலையில் இருந்து கொண்டிருக்கிறேன். நான் இருக்குமிடத்திற்காக ஒரளவு கையில் இருந்த பணத்தை முதலீடு செய்தாகிவிட்டது. அடுத்து என்ன செய்வது என்று எனக்கே புரியவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையைக் காட்டிலும் நான் படுமோசமான நிலையில் விரக்தியடைந்து நிற்கிறேன். பாத்திரத்தை அதன் அடிமண்டிவரை காலி செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.” என்று.

சோதனை மிக்க இந்தக் காலத்தில் ஏங்கெல்ஸ் தன்னுடைய நண்பருக்கு எல்லா வழிகளிலும் உதவி செய்தார். இது பற்றி லெனின் கூறும் பொழுது "ஏங்கெல்ஸுடைய தன்னலமற்ற இடைவிடாத நிதி உதவி மட்டும் இல்லாமல் இருந்திருக்குமானால், மார்க்ஸ் மூலதனம் என்னும் பெருநூலை எழுத முடியாமல் போயிருப்பார் என்பது மட்டும் அல்ல, அவர் வறுமையின் கொடுமையினால் தவிர்க்க முடியாமல் அழிந்தே போயிருப்பார்.” என்று. ஆனால் அவ்வளவு கொடுமையான சூழ்நிலை இருந்தபோதும் மார்க்ஸ் உற்சாகமாகவே தனது பணிகளை செய்துகொண்டிருந்தார். ஏங்கெல்ஸிற்கு எழுதினார் "என்னுடைய பொருளாதார ஆராய்ச்சியைத் தொகுப்பதற்காக இரவுகள் எல்லாம் எனக்குச் சொந்தமானதைப் போல கடுமையாக வேலை செய்தேன். எப்படியாயினும் அடிப்படைப் பிரச்சனைகளையாவது பெருவெள்ளம் வந்து என்னை மூழ்கடிப்பதற்குள் தெளிவுபடுத்திவிட வேண்டுமென்று வேலை செய்கிறேன்” என்று. புரட்சியின் லட்சியத்தில் எல்லையற்ற அளவு கடந்த பற்றும், விசுவாசமும், தொழிலாளி வர்க்கத்தின்பால் மிக மேலான கடமை உணர்வும் அவருடைய உள்ளத்தில் எப்போதுமே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தன.

மார்க்ஸ் ஒரு பெரும் படிப்பாளி என்பது அனைவருக்கும் தெரியும். தன் வாழ்நாள் முழுவதும் வறுமையின் கோரப்பிடிலேயே வாழ்ந்த மார்க்ஸ் புத்தகங்களை வாங்கிப் படிப்பதற்குக் கூட மிகவும் சிரமப்பட்டார். மார்க்ஸ் தனது கையெழுத்துப் பிரதி வேலையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, தி எக்கனாமிஸ்ட் என்னும் சஞ்சிகையின் மூலம் பூர்ஷுவா பொருளாதாரவாதி ஜேம்ஸ் மெக்லேரன் என்பவர் எழுதிய ‘பண நாணயத்தின் வரலாற்றின் ஒரு வரைவு கட்டுரை’ என்னும் நூல் வெளியாகப் போவதாக அறிந்தார். அந்த நூலை அவர் படிக்க மிகவும் விரும்பினார்.  “அந்த நூலைப் படிக்காமல் அதைப் பற்றி எழுதிக் கொண்டிருப்பது என்னுடைய தத்துவார்த்த உள்ளுணர்வுக்கு எதிரானதாகும்.” என்று நினைத்தார். உண்மையில் பிரிட்டிஷ் மியூசியம் நூலகத்திற்குப் புதிய நூல்கள் வருவதற்கு மிகுந்த காலதாமதம் ஏற்பட்டது. அந்த நூலின் விலை 9 ஷில்லிங் 6 பென்ஸ்தான். ஆயினும் மார்க்ஸிற்கு அதை விலைகொடுத்து வாங்கும் அளவிற்கு சக்தியில்லை. அவருடைய குடும்பம் மிகவும் கொடுமையான வறுமையின் பிடியில் தொடர்ந்து இருந்தது. மார்க்ஸ் தனது கையெழுத்துப் பிரதியை பெர்லினுக்குத் தபாலில் அனுப்புவதற்குக் கூட கையில் ஒரு காசு கூட இல்லாமல் இருந்தார். அவருடைய பூர்த்தி செய்யப்பட்ட எழுத்துரைகள் ஏங்கல்ஸிடமிருந்து அஞ்சல் மூலம் பணம் வரும்வரை அவருடைய பெட்டியில் கிடந்தது.

 மார்க்ஸ் இவ்வளவு வறுமையில் இருந்த போதும் வாய்ப்புகிடைக்கும் போதெல்லாம் தனது நண்பர்களுக்கு உதவுவதை அந்த வறுமையால் தடுத்து நிறுத்த முடியவில்லை. மார்க்ஸ் தன்னுடைய நண்பர்களுக்காக மிகவும் அதிகமாக கவலைகொண்டார். தன்னிடமிருந்த சில கடைசி காசுகளையும் பல சந்தர்ப்பங்களிலும் பங்கு போட்டுக்கொண்டார். அவருடைய வீடு மிகவும் எளிமையாக இருந்தது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் அவருடைய வீடு நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டுப் புரட்சிகாரர்களுக்கு புனிதமான புகலிடமாகவும் இருந்தது. 1853 ஆம் ஆண்டு இக்காரியஸ் என்னும் தோழருடைய டெயிலர் வேலை வருமானம் மிகக் குறைவாக இருந்தது. வாழ்க்கைச் செலவுக்குக் கட்டுப்படியாகாமல் இருந்தது, மேலும் காசநோயாலும் பீடிக்கப்பட்டிருந்தார், அவருக்கு உதவி செய்வதற்காக மார்க்ஸ் தனது மனைவியின் ஆடைகளை வட்டிக் கடையில் வைத்து கடன் வாங்கி, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உதவி செய்தார்.

 அவரது தகப்பனாருடைய சொத்துக்களிலிருந்து அவருக்குக் கிடைத்த பாகப் பணத்தில் கணிசமான தொகையை தொழிலாளர்களுக்கு ஆயுதங்கள் வாங்குவதற்காகக் கொடுத்தார். மேலும் 7000 டாலர்கள் வரை நியூ ரெயினிஷ்சி ஜீட்டுங் பத்திரிக்கையைத் தொடர்ந்து நடத்துவதற்காக கொடுத்தார். வறுமையால் எப்போதுமே அவரை சுயநலவாதியாக மாற்ற முடியவில்லை. வாழ்க்கையில் மார்க்ஸுக்கு எப்போதுமே பணம் தேவையான ஒன்றாக இருந்தது. ஆனால் ஒருநாளும் அந்தப் பணத்தால் மார்க்ஸை வெற்றிகொள்ள முடியவில்லை. இல்லாத போது நண்பர்களிடம் உதவி கேட்டார், இருக்கும் போது நண்பர்கள் கேட்காமல் அள்ளிக்கொடுத்தார். கம்யூனிசப் பண்பின் மொத்த உருவமாக மார்க்ஸ் திகழ்ந்தார். மார்க்ஸ் எப்போதுமே தன் வாழ்வில் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டவரல்ல. மார்க்ஸ் தனது மகள்களையும், அவர்கள் விரும்பியவர்களுக்கே மணம் முடித்து வைத்தார். மார்க்ஸின் இரண்டாவது மகள் லாரா, டாக்டரும் மார்க்சியப் பிரச்சாரகருமான பால் லபார்க்கை திருமணம் செய்துகொண்டார். அதே போல அவரது மகள் ஜென்னி சார்லஸ் லாங்கேயைத் திருமணம் செய்துகொண்டார். இவர் அகிலத்தின் முக்கியமான தலைவர்களில் ஒருவர். மார்க்ஸின் கடைசி மகளான எலியனா, மார்க்ஸின் மறைவிற்குப் பின் டார்வினிஸ்டான எட்வர்டைத் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்திலும் முக்கிய பங்கு வகித்தனர்.

 மார்க்ஸ் ஒரு சமரசம் செய்துகொள்ளாத மனிதர். யாருக்காகவும் தன்னுடைய கொள்கையில் இருந்து அவர் இறங்கி வந்தது கிடையாது. தவறு என்று பட்டதை ஒளிவு மறைவின்றி கடுமையாக விமர்சனம் செய்தார். "இந்த மனதுக்கினிய மத்தியதர வர்க்க எழுத்தாளர்கள் எல்லாம் அவர்கள் சிறப்பு ஆராய்ச்சியாளர்களாக தனித்துறை நிபுணர்களாக இல்லாவிட்டாலும் –எதிர்பாராத விதமாக குருட்டடியாக ஏதாவது ஒரு சாதகமான நிலை ஏற்பட்டு, அதன் மூலம் புதிய சிந்தனைகள் வந்துவிட்டால் அதன் மூலம் உடனடியாகவே பணம், புகழ் அல்லது அரசியல் ஆதாயம் எடுப்பதற்கு அரிப்பு கொண்டிருப்பவர்களாக உள்ளார்கள்.” என்று பணத்திற்காகவும், புகழுக்காகவும் மானத்தைவிட்டுவிட்டு எழுதும் எழுத்தாளர்களை வன்மையாகக் கண்டித்தார்..

  தன் வாழ்நாளை உலக பாட்டாளி வர்க்க விடுதலைக்காகவே அர்ப்பணித்த மார்க்ஸை முதலாளி வர்க்கம் நாடு நாடாகத் துரத்தியது. ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி ஒரு போலீஸ் சார்ஜென்ட் கீழ்க்கண்ட உத்தரவுடன் மார்க்ஸினுடைய இல்லத்திற்கு வந்தார்; "காரல் மார்க்ஸும் அவரது மனைவியும் 24 மணி நேரத்தில் பாரிஸ் நகரைவிட்டு வெளியே போய்விட வேண்டும்.” இத்தகைய கொடுமையான கண்டிப்பான நடவடிக்கைகள் அவரை விடாப்பிடியாகத் தொடர்ந்து கொண்டேயிருந்தன. 1845 லிருந்தே இந்தத் தொல்லை அவரை விடவில்லை. அப்போது அவர் பாரிஸ்லிருந்து வெளியேறேற்றப்பட்டார். பிறகு 1848-ல் பிரஸ்ஸல்ஸிலிருந்து வெளியேற்றப்பட்டார். 1849-ல் கோலோனிலிருந்து வெளியேற்றப்பட்டார். இப்போது மீண்டும் பாரிஸிலிருந்து வெளியேற்றப்பட்டார். இறுதியாக ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி மார்க்ஸ் லண்டன் மாநகருக்குச் சென்றார். தன் வாழ்நாளின் மீதி நாட்கள் முழுவதையும் அங்கேயே கழித்தார்.

 ஒரு மனிதனை அவனுடைய எழுத்துக்களுக்காகவும், செயல்பாடுகளுக்காகவும் நாடு நாடாக விரட்டி அடிக்கப்பட்டது இதற்கு முன்பு உலக வரலாற்றில் நிகழ்ந்திருக்கின்றதா என்று தெரியவில்லை. ஆனால் மார்க்ஸின் மன உறுதியை எதுவும் குலைத்துவிடவில்லை. தான் கொண்ட கொள்கையில் உயிர்மூச்சு உள்ளவரை உறுதியாக இருந்தார். 1883 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் தேதி உலக பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவனை, அதிகாரப் பூர்வமான சமுதாயத்தாலும், மாதா கோயில்களாலும் நிராகரிக்கப்பட்ட மனிதர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஹைகேட் கல்லறையில், ஜென்னி மார்க்ஸின் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டார்.

 அப்படிப்பட்ட மாமனிதனின் 200 ஆம் ஆண்டு பிறந்த தினத்தில் முதலாளித்துவப் பயங்கரவாதத்தையும், பார்ப்பன பயங்கரவாதத்தையும் ஒழிக்க நாம் சபதம் ஏற்றுக்கொள்வோம். மார்க்ஸைப் போல நாமும் போராட்டத்தையே மகிழ்ச்சியாக ஏற்று வாழ்வோம்.

 (குறிப்பு: இந்தக் கட்டுரையின் பெரும்பகுதி அலைகள் வெளியீட்டகம் வெளியிட்ட 'கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு' என்ற நூலில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கின்றது)

- செ.கார்கி

Pin It