இந்திய அரசமைப்புச் சட்டம், எல்லோருக்கும் தங்களின் மதக் கொள்கைகளைப் பரப்பும் உரிமையை அளித்துள்ளது.அவ்வாறிருக்க, இந்துமதத்தைப் பரப்பும் எண்ணத்தோடு வந்த ரத யாத்திரையைத் தமிழ்நாட்டில் ஏன் தடுத்து நிறுத்தினீர்கள் என்று பெரிய நியாயவான்களைப் போலச் சிலர் கேட்கின்றனர்.

ram rajya ratha yatraமதுரையில் சில தேவாலயங்களில் கலவரம் செய்தபோது இக்கேள்விகளை அவர்கள் எழுப்பவில்லை. அது ஒரு புறமிருக்க, இந்து மத ரத யாத்திரையை ஏன் எதிர்த்தோம் என்பதற்கு மக்களிடம் நாம் விளக்கம் சொல்லியாக வேண்டும்.

நாம் எந்த மதத்திற்கும் எதிரிகள் இல்லை. அது அவரவர் நம்பிக்கை சார்ந்தது. மதக் கருத்துகளை பரப்புவது அவரவர் உரிமை. மதங்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிடுவதும் எல்லோருக்குமுள்ள உரிமை. ஆனால் மதக் கலவரங்களை ஏற்படுத்த எவருக்கும் உரிமையில்லை. இந்தியா முழுவதும் சங் பரிவாரங்கள் அதனைத்தான் செய்து கொண்டிருக்கின்றன.

உ.பி.யில் தொடங்கி நான்கு மாநிலங்களைக் கடந்து தமிழ்நாட்டிற்குள் நுழைந்த ராமராஜ்ய ரத யாத்திரை வெறும் ஆன்மிக, மத நோக்கங்களை மட்டும் கொண்டதன்று. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, ராமராஜ்யத்தை இந்தியாவில் ஏற்படுத்துவது, இந்தியா முழுவதும் பாட நூல்களில் ராமாயணத்தைப் பாடமாக்குவது, வார விடுமுறையை ஞாயிறிலிருந்து வியாழனுக்கு மாற்றுவது எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே அந்த யாத்திரை நடத்தப்பெற்றது.

உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான பயணத்தை மேற்கொள்வது சரியா என்பதும், மற்ற கோரிக்கைகளும் ஒரு புறமிருக்க, ராமராஜ்யம் அமைத்தல் என்னும் அரசியல் பரப்புரையை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

ராமராஜ்யம் என்றால் என்ன, அது எப்படி இருக்கும் என்பதை எல்லாம் நாம் எங்கு போய்த் தெரிந்து கொள்வது? கம்ப ராமாயணத்தில் ராமராஜ்யம் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. இருக்கவும் முடியாது. ராமர் முடி சூட்டிக் கொள்வதோடு அது முடிந்து போகிறது. எனவே அதற்குப் பின் அவர் எப்படி ஆட்சி நடத்தினார் என்பதற்கு அதில் நாம் விடை தேட முடியாது. மூல நூலான வான்மீகி ராமாயணத்திற்குத்தான் செல்ல வேண்டும்.

வான்மீகி ராமாயணம் 7 காண்டங்களைக் கொண்டது. 7ஆவது காண்டம் உத்தர காண்டம். அதில்தான் ராமர் ஆட்சி பற்றிய செய்திகள் உள்ளன. குறிப்பாக சம்பூகன் வதைச் சருக்கம் அதில்தான் உள்ளது.

உத்தர காண்டம் மொத்தம் 111 சருக்கங்களைக் கொண்டது. அவற்றுள் 73 முதல் 76 வரையிலான சருக்கங்கள் சம்பூகன் வதம் பற்றிப் பேசுகின்றன. வதம் என்பது கொலைதான். (இது குறித்த விரிவான விளக்கங்கள் நான் எழுதியுள்ள “இதுதான் ராம ராஜ்ஜியம்“ என்னும் நூலில் உள்ளது). சம்பூகன் என்னும் ஒருவன், தன் உடலோடு சொர்க்கம் செல்ல வேண்டும் என்று வரம் கேட்டுத் தவம் செய்கிறான். இதனை அறிந்த அந்நாட்டின் மன்னர் ராமர், “சூத்திரன் எப்படித் தவம் செய்யலாம்?” என்று கேட்டுக் கோபம் கொண்டு, அவன் தலையைத் தன் வாளால் கொய்து விடுகிறார். இதுதான் சம்பூக வதம். இதுதான் ராமராஜ்யம். இந்த ராஜ்யத்தையும், அதனைப் பரிந்துரைக்கும் ரத யாத்திரையையும் நாம் எப்படி அனுமதிப்பது-?

 இந்தப் போராட்டம் இந்துக்களுக்கு எதிரானதன்று. சூத்திரப்பட்டம் சூட்டப்பட்டு ஒடுக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான இந்துக்களுக்கு ஆதரவானது. 

Pin It