இரண்டாம் உலகப் போர் முடிந்த காலகட்டம். தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்ட நிச்சயமற்ற நரக வாழ்க்கை முடிவுக்கு வந்தது. உலகமே நிம்மதி பெருமூச்சை விடத் துவங்கிய நேரம். தாடைகளை வருடியபடி கவலையின் ரேகைகள் படிந்த முகத்துடன் ஆழ்ந்த யோசனையில் இருந்தது ஒரு கூட்டம். இவர்கள் யார்? வெடிமருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருளான அமோனியாவைத் தயாரிக்கும் ஆலைகளின் அதிபர்கள் தான் இவர்கள். இரண்டாம் உலகப் போர் முடிந்ததும், ஐரோப்பிய வரலாற்று அறிஞர்கள் மற்றும் உலகளாவிய அரசியல் வல்லுநர்கள் இனி உலகில் போர்கள் அஸ்தமித்து விட்டன. இனி உலக யுத்தங்கள் மூளுவதற்கான சாத்தியமே இல்லை என அறிவித்தனர். இந்த அறிவிப்பைக் கேட்டு உலக வெகு மக்கள் துயரங்களிலிருந்து விடுபட்டு நிம்மதி நிறைந்த தொடுவானம் நோக்கி பயணித்தனர். ஆனால் இந்த அறிவிப்புதான் அமோனியா ஆலை அதிபர்களின் கவலைக்குக் காரணம்.
தொடர்ந்து யுத்தங்கள் நிகழ்ந்தால்தான் இந்த ஆலைகளில் தயாரிப்பு நிகழும். இந்த ஆலைகள் உலகெங்கிலும் மூட வேண்டிய வேலையது. ராணுவ ஆராய்ச்சி மையங்களும் இதனுடன் சேர்ந்து மூடுவிழா காணவிருந்தது. ஆனால் திடீரென அந்த ஆராய்ச்சி மையத்தின் பெயர்ப் பலகை மட்டும் இரவோடு இரவாக மாற்றப்பட்டது. மீண்டும் சுறுசுறுப்புடன் பணியாற்றத் துவங்கியது அந்த ஆராய்ச்சி மையம். அதன் பெயர் பலகை இவ்வாறு மாற்றப்பட்டிருந்தது ‘வேளாண்மை ஆராய்ச்சி மையம்’ இப்படித்தான் விவசாயத்துறையின் அறிவியல் பூர்வ அத்தியாயம் துவங்கியது.
தேவையற்றதாகிப் போன அமோனியா வீணென்றுக் கருதப்பட்டு சில வயல்களில் கொட்டப்பட்டது. அந்த வயல்களில் பின்னாளில் பயிர்கள் வழக்கத்தைவிட சற்று அதிக வளர்ச்சியடைந்ததை சிலர் கூர்ந்து கவனித்தனர். இந்த அமோனியாவை விவசாயத்தில் இனி ஊக்கியாகப் பயன்படுத்தலாம் என சில மனித மூளைகளுக்கு யோசனை உதித்தது. நெல்லும் கோதுமையும் வழக்கத்தைவிட அதிகமாக விளைந்தன. கதிர்கள் தலையை சிலுப்பி குதூகலித்தது. ஆனால் இந்த புதிய மாற்றம் நிலைக்கவில்லை. பாரம் தாங்க முடியாது நெற்கதிர்கள் அறுவடைக்கு சற்று முன்னால் பூமியில் தலை சாய்த்தது. அதன் தண்டால் இந்த அதிக பாரத்தை சுமக்க இயலவில்லை. இந்த கூடுதல் பாரம் அதன் இயற்கையான தாங்கும் சக்தியை விட கூடுதலானது. குழந்தையின் தலையில் மூடை பாரத்தை ஏற்றினால் என்னவாகும்?
ஆராய்ச்சியாளர்களுக்கு மீண்டும் புதிய தலைவலி துவங்கியது. நீண்ட நெடிய விவாதங்களுக்குப் பிறகு அவர்கள் ஒரு வழியாக முடிவுக்கு வந்தார்கள். மரபணுத் திருத்தங்கள் செய்து நெல்லின் உயரத்தை குறைத்தால் அதன் பாரம் தாங்கி வலிமை கூடும் என இயற்பியல் விதியின் அடிப்படையில் நெல்லின் உயரத்தைக் குறைத்தார்கள். குட்டையான பல புதிய ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்திய மண் முதல் முதலாக இந்த புதியவர்களை தரிசித்தது. கொள்ளை லாபங்களுக்கு ஆசைப்பட்டு நம் விவசாயிகளும் மகுடி ஊதும் அரசாங்க நிறுவனங்களுக்குப் பின்னால் மயங்கிச் சென்றனர். மரபான இந்திய விதைகளிலிருந்து விலகி புதிய ஒட்டு ரகங்களை நோக்கி விவசாயம் திசை மாறியது. இயற்கை விவசாயத்திலிருந்து விலகி செயற்கையான புதிய ரசாயனக் கலவைகள் கிராமங்களின் திண்ணைகளில் வந்திறங்கின. இந்தியாவிலிருந்த ஆயிரக்கணக்கான பாரம்பரிய நெல் வகைகள் வழக்கொழிய துவங்கியது. மரபாண அறிவை அழிப்பதுதான் புதிய சந்தை தன்னை நிறுவிக் கொள்வதற்கு செய்யும் அடிப்படை வேலை.
ஒரிசாவிலுள்ள கட்டாக்கில் உள்ளது உலக பிரசித்தி பெற்ற நெல் மரபணு வங்கி. அங்குதான் இந்தியாவில் விளைந்த ஆயிரக்கணக்கான மரபு வகை நெல் சேகரிப்பு இருந்தது. இந்த வங்கியின் அரிய சேகரிப்புகளை வேளாண் ஆராய்ச்சியாளர்கள் திருடி அமெரிக்கர்களுக்கு விற்றார்கள். தேச துரோக செயல்களில் ஈடுபட்டவர்கள் இன்று ஊடகங்களின் வெளிச்சத்தில் அரசாங்கத்தின் ஆலோசகர்களாக வலம் வருகிறார்கள்.
இந்திய நிலப்பரப்பெங்கும் நெல்லும் கோதுமையும் விதவிதமாய் விளைந்து வந்தது. பல வெளிநாட்டு அறிஞர்கள் இங்கு வந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பிரமித்துப் போனார்கள். இங்குள்ள வெவ்வேறு வகைகளைப் பார்த்து உலகின் அதிசயங்கள் என அவர்கள் கருதினார்கள். ஒரிசாவில் கடலோரத்தில் உப்புத் தண்ணீரில் நெல் விளையும், இமய மலையில் 15,000 அடி உயரத்தில் நெல் அமோகமாக விளையும். ஏழு எட்டு அடி உயர நெற்பயிர்கள் இங்குண்டு. வெவ்வேறு தட்ப வெப்பத்திற்கும், மண்ணிற்கும், புவியியற் அமைப்புக்கென இங்கு ஆயிரம் ஆயிரம் வகைகளை நம் பாரம்பரிய செய்முறைகளின் வழி பாதுகாத்து வந்தது இந்திய கிராமப்புற சமூகம்.
வாய்மொழியாக அதன் தந்திரங்களையும், அனுபவ அறிவையும், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மனித நாகரீகம் தன் மூளையின் வெவ்வேறு அடுக்குகளில் சுமந்து வருகிறது. இரண்டாயிரம் ஆண்டு மரபுத் தொடர்ச்சிகளை கடந்த நூற்றாண்டு பலத் தளங்களில் அரித்து விட்டது. கண்கள் இழந்தவர்களைப் போல் பல செய்முறைகள் தொழில் நுட்பங்கள் திசையறியாது தங்களைத் தொலைத்து நிற்கிறது.
புதிய குட்டையான நெல் ரகங்கள் விளையத் துவங்கியது. இந்த புதிய ரகங்கள் ஏராளமான தண்ணீரை விழுங்கியது. மரபணு திருத்தம் செய்யப்பட்டவுடன் மிகவும் பலகீனமாகி நோய்யெதிர்ப்புத் திறனையிழந்து ஏராளமான பூச்சிக் கொல்லி மருந்துகளை கோரியது. பூச்சிகளின் தாக்குதலையும், சிறு தட்ப வெப்ப மாற்றங்களைக் கூட அதனால் தாங்க இயலவில்லை.
மூடை மூடையாக உரங்கள் வயல் வரப்புகளில் இறக்கி வைக்கபட்டது. கிணற்றில் நீர் வற்றத் துவங்கியது. தண்ணீரைத் தேடிய புதிய பயணம் துவங்கியது. ஆழ்குழாய் தொழில் நுட்பத்தை உலக வங்கி உலகெங்கிலும் சந்தைப் படுத்தத் துவங்கியது. உரங்களுக்கு கடன் வழங்கிய கூட்டுறவு வங்கிகள் இப்பொழுது அரசாங்கத்தின் கட்டளைக்கிணங்க ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு கடன் வழங்கியது. பெரிய லாரிகளில் ஆழ்குழாய் எந்திரங்கள் கிராமங்கள் நோக்கிப் படையெடுத்தது. நெட்டு போர், சைடு போர் என சகிட்டு மேனிக்கு பாறைகளைத் துளையிட்டு நீரைத் தேடிய பேராசைப் பயணம்.
மஹாராஷ்டிராவின் சாங்கிலிப் பகுதியில் கிராமம் ஒன்றின் ஜனத்தொகை இரண்டாயிரம் அந்த கிராமத்தில் போடப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை ஆறாயிரம் புதிய தொழில்நுட்பங்களை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் எளிமையாக சந்தைப் படுத்தியது உலக வங்கியும், அதன் கூட்டாளிகளும். இந்த புதிய நெல் ரகம் விளைந்ததும் எதிர்பாராத அபாயகர விளைவுகளை அது ஏற்படுத்தியது. கிராமப்புற வாழ்க்கையில் மிகப் பெரும் தகவமைவு ஏற்பட்டது. குட்டையான இந்த நெல் ரகம் விளைந்தது கலத்து மேட்டில் கதிரடிப்பு மும்முரமாய் நடந்தது. நெல் மூடை மூடையாய் மரிசலில் கொட்டப்பட்டது. கிராமத்துப் பெரியவர்கள் எல்லாம் மிகுந்த கவலையோடு கண்கள் கலங்கி நாட்கணக்கில் உண்ணாமல் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ள முடியாத சோகத்துடன் காணப்பட்டனர். ஏதோ எதிர்பாராத சகித்துக் கொள்ள முடியாத நிகழ்வு நடந்து விட்டது போலிருந்தது. இந்திய விவசாயத்திற்கு அடிப்படையான உழவுமாடுகளின் உணவு நெல் விளைச்சலின் உபரியாக கிட்டும் வைக்கோலே. ஆனால் மாடுகளுக்கு உணவின் அடிப்படையான வைக்கோலின் அளவு 60% குறைந்தது. இனி உழவு மாடுகளுக்கான இந்த தீணிப் பற்றாக்குறையை எப்படித் தீர்ப்பது என்ற கவலைதான் கிராமங்கள் சோகத்தில் அமிழ்ந்ததற்குக் காரணம்.
இந்தியாவின் அனேக கிராமங்களில் உழவு மாடுகளின் எண்ணிக்கை பாதியாய் குறைந்தது. இது நிர்பந்தித்து திணிக்கப்பட்ட மாற்றம். புதிய வளர்ச்சி பாதை என இந்த பயணம் கொடூர விளைவுகளை கிராமபுரங்களில் ஏற்படுத்தியது. திட்டமிடப்பட்ட இந்த விளைவுகளின் அதிர்ச்சியிலிருந்து கிராமங்கள் மூளாத பொழுது ஏறக்குறைய இந்தியா முழுவதும் சந்தைகளுக்குள் நுழைந்தது டிராக்டர் ஆழ்குழாய் கிணறு வெட்ட கடன் அளித்த அதே கூட்டுறவுகள், விவசாய வங்கிகள் இப்பொழுது தாராளமாக டிராக்டர் கடன் வழங்க முன் வந்தனர்.
கிராமங்களை அழிக்கும் வரலாற்று சதி தான் பசுமை புரட்சி. யூரியா, பொட்டாஸ், அமோனியா, பூச்சிக் கொல்லிகள் என இந்த அபாய விஷக் கூட்டணி நம் மண்ணின் தன்மையை உருமாற்றி அதன் எல்லா வளங்களையும் அழித்தது. விவாசாயியின் நண்பன் மண்புழு என்று தவறாது பாடங்களில் இடம் பெற்ற அந்த ஜீவன் இயற்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிவுக்கு சென்றது. மண்புழு மண்ணை அழகாய் கோதுவது மட்டுமின்றி அதன் எச்சம் உலகின் எந்த உரத்திற்கும் ஒப்பில்லை. எத்திசையிலும் உயிரற்ற நிலம் பரவிக் கிடந்தது. மண் நிர்மூலமாக்கப்பட்டது.
வேளாண் துறையின் ஆராய்ச்சிகளுக்கு உலகெங்கிலும் கோடிக்கணக்கான நிதி ஒதுக்கப்படுகிறது. இந்திய வேளாண் சந்தையை அந்நிய கம்பெனிகளுக்கு முற்றிலும் தடைகளற்று திறந்து விடும்படி இந்திய அரசாங்கத்தை சென்ற பயணத்தில் அழுத்தமாகக் கேட்டுக் கொண்டார் அமெரிக்க ஜனாதிபதி புஷ். பன்னாட்டு நிறுவனங்கள் புஷ்ஷின் நிழலாய் அவருடன் வந்து சென்றனர். உலக விவசாயத்தையே கைவிட்டு எண்ணக்கூடிய சில நிறுவனங்கள் கபலிகரம் செய்யத் துடிக்கிறது.
சமீபத்தில் கருத்தரங்கம் ஒன்றில் கலந்த கொள்ள நாக்பூர் சென்றிருந்தேன். அங்கு முக்கிய ஆய்வாளர் ஒருவர் கூறிய தகவல் வேடிக்கையாக இருந்தது. செயற்கை கோள்களிலிருந்து பெறப்படும் தகவல்களில் 31/2 சதவிகிதம் மட்டுமே வேளாண் ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மனதில் அழுத்தமாக தோன்றியது. நல்ல வேளை இவர்கள் 31/2 சதவிகிதம் தகவல்களை மட்டும் பயன்படுத்தினார்கள். விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் ஆண்டுக்கு 3500ஐ எட்டி நிற்கிறது.
ரயில் விபத்து நிகழ்ந்தவுடன் எல்லா ஊடகங்களும் அந்த விபத்து பற்றிய தகவல்கள் முழுமையாக வருவதற்கு முன்பே ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று குரல் எழுப்புவதை நாம் பார்த்திருக்கிறோம். இது மிகவும் வழக்கமாக நிகழ்வு நமக்கு ஆச்சரியம் அழிப்பது கடந்த 10 ஆண்டுகளில் இத்தனை ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்த பின்பும், யாரும் விவசாய அமைச்சர் இதற்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியதாக தெரியவில்லை. இது மிகவும் விசித்திரமாக உள்ளது. தினமும் நாளிதழ்களில் விவசாயத் தற்கொலைகள் பத்திகளைப் போல் மாறிவிட்டன. யாருக்கும் இது உறைக்கவில்லை.
என்றாவது ஒருநாள் வேளாண் ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த மரணங்கள் நிகழ்வதற்கான அடிப்படை ஆய்வுகளை முடிவுகளை எடுத்தது நாங்களே என குற்ற உணர்வோடு தற்கொலை செய்துகொள்ளும் செய்தியை தினமும் செய்தித்தாள்களில் தேடி வருகிறேன். மனசாட்சியற்ற இந்த வர்க்கத்திடம் இப்படி எதிர்பார்ப்பது முட்டாள் தனமானது என்று திடமாகத் தெரிந்தாலும், மனம் நப்பாசைகளுடன் சஞ்சரிக்கிறது.
- அ. முத்துக்கிருஷ்ணன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
உழவின் திசைவழி மரபிலிருந்து நவீனம் நோக்கியதா?
- விவரங்கள்
- அ.முத்துக்கிருஷ்ணன்
- பிரிவு: கட்டுரைகள்