கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தமிழகத்தில் விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளதால் ஏற்கனவே சுமார் 2¼ லட்சம் உழவர்கள் அவர்களின் வாழ்வாதரமான நிலத்தின் மதிப்பை இழந்து மீளாத்துயரில் ஆழ்ந்து உள்ளார்கள்.

மக்களின் நலனுக்காக உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்ட நிலை மாறி, தனியார்ப் பெரு நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக்காகவும், லாபம் கிடைக்கும் சந்தைக்காகவும் தற்காலங்களில் உயர்மின் கோபுரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வேளாண்மை தொடர்ந்து லாபகரமாக இல்லாத நிலையில் நிலத்தின் மதிப்பு மட்டுமே உழவர்களின் ஒரே வாழ்வாதரமாகும். உயர்மின் கோபுரத் திட்டங்கள் தற்போது விளைநிலங்களின் மதிப்பை எந்த வகையிலும் மீட்க முடியாத அளவிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது.

தற்போது தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, கரூர், திண்டுக்கல் என 13 மாவட்டங்களில் 12 உயர்மின் கோபுரங்களின் திட்டங்களை விளை நிலங்கள் வழியாக செயல்படுத்தி வருகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட 13 மாவட்ட உழவர்கள் மற்றும் உழவர் சங்கங்கள் இணைந்து உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி கடந்த 3 ஆண்டுகளாக அறவழியில் போராடி வருகிறார்கள்.

பாதிக்கப்படட உழவர்களின் கோரிக்கைகள் பின்வருமாறு:

1. அடுத்து செயல்படுத்த உள்ள அனைத்து உயர்மின் கோபுரத் திட்டங்களை புதைவடமாக (கேபிள்) சாலை ஓரமாகப் பதித்திடும் முடிவை மத்திய, மாநில அரசுகள் கொள்கை முடிவாக அறிவித்திடுதல் வேண்டும்.

2. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ள பிரிட்டிஷ் காலனி ஆதிக்கச் சட்டமான இந்திய தந்தி சட்டம் 1885 நீக்கிவிட்டு பாதிக்கப்பட்ட உழவர்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய புதிய சட்டம் நிறைவேற்ற வேண்டும்.

3. நிலத்தை இழக்கும் அனைத்து உழவர்களுக்கும் 2013-ம் ஆண்டு புதிய நிலம் எடுப்புச் சட்டத்தின்படி நிலத்தின் முழுமதிப்பு இழப்பை சந்தை விலையில் நிர்ணயம் செய்து நான்கு மடங்கு வழங்கிட வேண்டும்.

4. ஏற்கனவே உயர்மின் கோபுரங்கள் அமைத்து மின்சாரம் சென்று கொண்டிருக்கும் திட்டங்களில் நிலம் இழந்த உழவர்களுக்கு கோபுரம் அமைந்த இடத்திற்கும், கம்பி செல்லும் இடத்திற்கும் மாத வாடகை நிர்ணயம் செய்து வழங்கிட வேண்டும்.

5. நியாயமான கோரிக்கைகளை வழியுறுத்திப் போராடி வரும் கூட்டு இயக்கத்தோடு மின்சாரத் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கமணி அவர்கள் நான்கு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் முன்வந்து உடனடியாக கூட்டு இயக்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டு இயக்கத்தின் சார்பில் 13 மாவட்டங்களில் 50 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நாளை மறுதினம் அதாவது நவம்பர் 18 அன்று நடைபெற உள்ளது.

தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.எம், கொ.ம.தே.க, எஸ்.டி.பி.ஐ, அ.ம.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பல்வேறு விவசாயிகள் சங்கங்களும், சமூக நல அமைப்புகளும் இப்போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். பொதுமக்களும் பெரும் திரளில் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

- கி.வே.பொன்னையன்