இந்திய சட்டசபை தேர்தல் ஆரம்பமாகி விட்டது. இது வேலையில்லா வாலிபர்களின் கஷ்டத்தை ஒருவாறு குறைக்க அனுகூலமாயிருக்கிறது என்று சொல்லலாம். அது போலவே கொள்கையோ, விஷயமோ இல்லாத பத்திரிக்கைகாரர்களுக்கும் ஒரு அளவு கஷ்டம் நீங்கிற்று என்றும் சொல்லலாம். - பெரியார்

periyyar 350மக்களால் வாக்களிக்கப்பட்டு ஜனநாயக முறையில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை என்பது  ஜனநாயகத்தின் மிக உயர்ந்த வடிவமாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் சாதி, மதம், பணம், மது போன்றவையே பிரதானமாகத் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக விளங்கி வருகின்றன. அதனால் சாதி, மதம், முதலாளித் துவம் போன்றவற்றை ஒழிக்க நினைப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தத் தேர்தல் அரசியலை வெறுக்கக் கூடியவர் களாகவும் அதன் மீது பெரும் அதிருப்தி கொண்டவர்களாகவுமே இருக் கின்றார்கள். பெரியாருக்கும் இந்தத் தேர்தல் அரசியலின் மீது பெரிதாக ஈடுபாடு  எல்லாம் இருந்தது கிடையாது. அதன் மீதான தன்னுடைய கடும் விமர்சனங்களை தன் வாழ்வின் இறுதிவரை அவர் வைத்துக் கொண்டே இருந்தார். அதைத் தன்னுடைய பேச்சிலும் எழுத்திலும் வெளிப் படுத்தவும் செய்தார்.

“இந்திய சட்டசபைத் தேர்தல் ஆரம்பமாகி விட்டது. இது வேலையில்லா வாலிபர்களின் கஷ்டத்தை ஒருவாறு குறைக்க அனுகூலமாயிருக் கிறது என்று சொல்லலாம். அது போலவே கொள்கையோ, விஷயமோ இல்லாத பத்திரிக்கை காரர்களுக்கும் ஒரு அளவு கஷ்டம் நீங்கிற்று என்றும் சொல்லலாம். நாட்டுக்கோ, நகரத்துக்கோ, ஏழைப் பாட்டாளி மக்களுக்கோ இதனால் ஏதாவது பயன் உண்டா என்று பார்ப் போமானால் தேர்தல்களுடையவும், தேர்தல் முடிவுகளுடையவும் பயன் கடைசியாக “பிச்சை போடாவிட்டாலும் பரவாயில்லை நாயைப் பிடித்துக் கட்டுங்கள்” என்கின்ற மாதிரிக்குத்தான் அதாவது நன்மை  ஏற்படாவிட்டாலும் கெடுதி யாவது இல்லாமல் இருந்தால் போதும் என்று பிரார்த்திக்க வேண்டிய அளவில்தான் வந்து முடியப்போகின்றதே ஒழிய வேறில்லை என்பது உறுதி”

இந்த நாட்டு மக்களில் கல்வியறிவு அற்ற நிலையையும், மூடத்தனத்தையும் எப்படி அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என்பதை அன்றே தோலுரித்து காட்டினார். “நம் நாட்டு நிலைமையானது ஒட்டு மொத்த மக்களின் 100க்கு  7 அல்லது 8 பேர் பேரே படித்தவர்கள் என்று சொல்லக்கூடியவர்களாய் இருப்பதாலும், அதிலும் 100க்கு ஒருவர் இருவரே நன்றாய்ப் படிக்கவும், எழுதவும், யோசிக்கவும் உண்மையைக் கண்டுபிடிக்க சௌகரியமும் உள்ளவர்களாய் இருப்பதாலும் இம்மக்களை ஏமாற்ற அதிக கஷ்டமான மார்க்கம் ஏதுமே தேடவேண்டிய அவசியமில்லாமலும் போய்விட்டது. இதானது இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு பெரிய அனுகூல மாய் ஏற்பட்டு விட்டது.”

“இந்தக் காரணத்தால் தேர்தல்களில் பிரவேசிக்கின்றவர்கள் தங்கள் சொல்லும், எழுத்தும், கொள்கைகளும் உண்மையையும் நாணயமும், யோக்கியப் பொறுப்பும், நன்மையும் சிறிது கலந்ததாகவாவது இருக்கின்றதா என்கின்ற கவலையும், பயமும் இல்லாமல் என்ன வேண்டுமானாலும், எப்படி  வேண்டுமானாலும் பேசவும் எழுதவும் நடக்கவும் ஆன காரியங்கள் செய்ய துணிவுள்ளவர்களாகி விட்டார்கள்.”

“இதோடு மாத்திரமல்லாமல் இந்நாட்டின் பொருளாதாரத் திட்டமும், வாழ்க்கைத் திட்டமும், மக்களுக்கு எவ்வித பொறுப்பும் ஜவாப்தாரித்தனமும் ஒழுக்கமும் அற்றதாகி, எப்படியாவது வயிறு வளர்க்க வேண்டியதே மனித ஜீவனின் கடமை என்று இருந்து வருகின்றபடியால் மேற்கூறப்பட்ட கூட்டத் தாருக்கு  வெகு எளிதில் கூலிகள் கிடைத்து விடுகின்றார்கள். அவர்கள் மூலமும் மக்களை ஏமாற்றக் கருதி தங்கள் தங்களுக்கு அனுகூலமாக எப்படி  வேண்டுமானாலும் உண்மைகளைத் திருத்தியும், அபாண்டங்களைக் கற்பித்தும் அகாரணமாய் வைதும், பேசவும், எழுதவும் கூடிய கூலிகளை நியமிக்க  வேண்டியவர்களாவதுடன் இப்படிப்பட்ட பலர் கூலிக்கு அமர வேண்டியவர் களாகவும் ஆகிறார்கள்.”

“இந்த இரு கூட்டத்தாரும் மக்களின் அறியாமையும், பாமரத்தன்மையையும் நன்றாய் அறிந்துகொண்டதால் தாங்கள்  பேசுவதும், எழுதுவதும் 100க்கு 100 பொய்யாகவும் அயோக்கியத்தனமாகவும் ஏமாற்றலாகவும் இருக்கின்றது என்பதை உணர்ந்தும் இப்பவோ பின்னையோ இன்னும் அரை வினாடியிலோ உண்மை வெளியாகிவிடக் கூடியதாய் இருந்தா லும், இதற்கு முன் தாங்கள் பேசியதும் எழுதியதும் அடியோடு பொய்த்துப் போய் பலதரம் மக்களை ஏமாற்றி இருக்கின்றோமே என்பதை உணர்ந்திருந்தாலும், சிறிதும் பயமில்லாமல் தங்கள் காரியங்களை நடத்திச் செல்கின்றார்கள்.”

“இவைகள் எல்லாம் இப்போதைய வாழ்க்கைத் திட்டத்தின்படி குற்றம் என்று சொல்ல நம்மால் முடியவில்லை. ஏனெனில் இந்தப்படி எல்லாம் நடந்தால்தான் இன்று மனிதன் மகாத்மாவாகலாம், பிரபலஸ்தராகலாம், கீர்த்தியும் புகழும் பெறலாம், பட்டம் பதவியும் அடையலாம், அதிகாரம் செய்யலாம், பணம் சம்பாதிக்கலாம், பாடுபடாமல் சோம்பேறியாய் இருந்து ஊரார் உழைப்பில் வயிறு கழுவலாம் மற்றும் அவற்றிற்கேற்ற தேசாபிமானி, தேசீய வீரர், தேசியப் பத்திராதிபர் ஆகியோர்கள் ஆகலாம் என்கின்ற  நிலையில் வாழ்க்கைத் திட்டம் இருந்து வருகின்றது. இது இன்று நேற்று அல்லாமல் வெகுகாலமாகவே இருந்தும் வந்திருக்கின்றது.”

“ஆதலால் இப்படிப்பட்ட செய்கைகளைக் கண்டு யாவரும் வருந்தக் கூடாது என்றும், யாவரையும் குற்றம் கூறக்கூடாது என்றும் சொல்வதோடு முன் சொல்லியபடி அவை களையெல்லாம் அப்புரட்டுகளையெல்லாம் தைரியமாய் வெளிப்படுத்த வேண்டியது ஒவ்வொரு யோக்கியமானவனுடையவும், பட்டம் அதிகாரம் பெருமை புகழ் ஆகியவற்றில் ஆசையில்லாத பொதுநல ஊழியத்திற்கு உயிர் வாழ்பவர்களுடையவும் கடமை.” (பகுத்தறிவு – 26.03.1934). இதைப் படிக்கும் போதே உங்கள் மனதில் இன்றைக்கு இருக்கும் பல அரசியல்வாதி களின் முகங்கள் நிச்சயம் வந்துபோகும் என்பது உறுதி.

அதே போல ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறுவது என்பது பெரியார் காலத்தில் இருந்தே தேர்தலில் வெற்றிபெற கடைபிடிக்கப் பட்டு வரும் முறையாக இருந்திருக்கின்றது. அவர் காலத்தில் ஓவ்வொருவரின் தகுதிக்கு ஏற்ப எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பதை அவரே பட்டியலிடுகின்றார். மார்க்கெட் நிலவரம் என்ற தலைப்பில் சட்டசபை ஓட்டு ஒன்றுக்கு ரூ.1 முதல் ரூ 5, ஒரு கிராமத்தின் மொத்த ஓட்டுகளுக்கு மணியக் காரருக்கு ரூ 100, கணக்குப் பிள்ளைக்கு ரூ 50, பள்ளிக்கூட உபாத்தியாயருக்கு, கிராமாந்தி ரங்களில் செல்வாக்குள்ள குடித்தனக்காரருக்கு ரூ.25, முனிசிபல் சேர்மென்களுக்கு

ரூ 1000 முதல் ரூ 1500 வரை கடன், வைஸ்சேர்மென்களுக்கு ரூ 250 முதல் ரூ 500 என்று குறிப்பிடு கின்றார். பஜாரில் இன்னும் புது சரக்கு வராததால் போலிங் ஆபீசர்களை யாரும் வாங்க வர வில்லை என கிண்டலடிக்கும் பெரியார் முனிசிபல் ஓட்டுகளுக்கு ஓட்டு ஒன்றுக்கு ரூ.5 முதல் 15 வரையும், சேர்மென்களுக்கு ரூ.1000, வைஸ்சேர்மென்களுக்கு ரூ.250, 20 முதல் 30 ஓட்டுள்ள தொகுதிகளில் ஓட்டு ஒன்றுக்கு  ரூ. 150 முதல் ரூ. 250 வரையும் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடு கின்றார் (குடிஅரசு 17.10.1926). நிச்சயம் இந்தத் தொகை என்பது அன்றைய, பண மதிப் போடு ஒப்பிடுகை யில் இன்று கொடுக்கப்படும் ஐநூறு, ஆயிரத்தை விட மிகப் பெரியதாகும். இதில் இருந்தே அன்று தேர்தலில் போட்டியிட்ட யாரும் சாதாரண ஆட்கள் கிடையாது என்பதையும் மிட்டா மிராசுகள்தான் என்பதையும் நாம் உணரலாம்.

பெரியார் அவர்கள் இப்படி பணம் வாங்கிக் கொண்டு தேர்தலில் வெற்றிபெற முயலும் நபர்களைப் பற்றி அவர்கள் வெட்கித் தலைகுனியும் வகையில் விமர்சனம் செய்கின்றார். “அதிகப் பணம் செலவு செய்பவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது பார்வதிக்கு பரமசிவன் சொன்ன உறுதி மொழியாகும். ஆகவே இந்த எலக்ஷன் முறை, ஏழை  ஓட்டர்கள் பிழைக்க அரசாங்கத்தார் செய்த தர்மமாகும். ஆதலால் ஓட்டர்கள் பணம் கொடுப்பவர்களை வாழ்த்து வதைவிட இப்படிப்பட்ட தேர்தல் முறையைக் கற்பித்த அரசாங்கத்தார் நீடூழி காலம் சிரஞ்சீவியாய் எப்படிப்பட்ட சிரஞ்சீவியாய்? மார்க்கண்டன், அனுமார், விபூஷணன் போன்ற சிரஞ்சீவியாய் அல்ல சூரியன், சந்திரன் போன்ற சிரஞ்சீவியாயும் அல்ல அவைகள் ஒரு காலத்தில் இல்லாமல் போய்விடும். மற்றெப்படிப்பட்ட சிரஞ்சீவியாய் என்றால் கல்லும், காவேரியைப் போல் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டுமென்று வாழ்த்த கடமைப்பட்டிருக்கின்றார்கள்.

சில கடவுள்களும் இந்த அரசாங்கத்துக்கு சிரஞ்சீவிப் பட்டம் கொடுக்கக் கடமைப்பட் டிருக்கின்றனர்.

ஏனெனின் ஓட்டுக்கு விலையாக ஓட்டர் களுக்குப் பணம் கொடுப்பது மாத்திர மல்லாமல் கோயில் கட்ட மசூதி கட்ட, சர்ச் கட்ட என்று 100, 500, 1000 கணக்காய் ரூபாய் கொடுக்க வேண்டியிருப்பதால், அந்த அந்த மதக் கடவுள்கள் இப்படிப்பட்ட எலக்ஷனை உண்டாக்கிய அரசாங்கத்தை ஆசிர் வதிக்க கடமைப்பட்டிருக்கின்றன.” (பகுத்தறிவு –23.09.1934)

தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது மட்டுமில்லாமல் எப்படி அதிகார வர்க்கத்தை கைக்குள் போட்டுக் கொண்டு வெற்றி பெறு கின்றார்கள் என்பதை ஒரு நகைச்சுவையான கதையாக சொல்கின்றார். “ஒரு ஊரில் ஒரு எலக்ஷன் நடந்தது அதற்கு நின்ற இரண்டு அபேட்சகர்களும் எலக்ஷன் அதிகாரியிடம் சென்று எலக்ஷன் எப்படி இருந்தாலும் தங்களுக்கே அனுகூலமாய் இருக்க வேண்டு மென்று தனித்தனியே கேட்டுக்கொண்டு ஆளுக்கு 100 ரூ. வீதம் இரண்டு பேரும் “இரகசியமாய்” கொடுத்து விட்டுவந்து விட்டார்கள். அதற்கு ஏற்றாற்ப்போல எலக்ஷனிலும் போலிங் ஆபீசர்களது “தவறுதல்”களால் சில தப்பிதங்கள் நடந்தது. இதை ஆதாரமாய் வைத்துக் கொண்டு (தான் தோல்வி அடைந்து விடக்கூடும் என்று கருதிய) ஒரு அபேக்ஷகர்  முடிவு சொல்லும் (டிக்ளேர் செய்யும்) அதிகாரிக்கு மறுபடியும் கொஞ்சம் பணம் கொடுத்து தன்னையே டிக்ளேர் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதுகேட்ட மற்ற அபேட்சகரும் ஓடி மறுபடியும் பணம் கொடுத்தார். இரண்டையும்  வாங்கிக் கொண்டார். அதிகாரி யோசித்தார் யாருக்கு அனுகூலம் செய்தால் தனக்கு நல்லது என்று பார்த்தார். மற்றும் பல சங்கதிகளைப் பார்த்து ஒரு கட்சிக்கு அனுகூலமாக தீர்ப்பு  கூறி கொஞ்ச ஓட்டு பெற்ற கயவனையே டிக்ளேர் செய்தார். வெற்றி பெற்றதாக முடிவு கூறினார். அதற்கு ஏதோ காரணமும் குறிப்பிட்டுவிட்டார். ஆகவே மறுபடியும் பணம் கொடுத்த எதிர் அபேட்சகர் தைரியமாய் அதிகாரி வீட்டுக்குப் போய் “இது தானே யோக்கியதை” என்றார். அதிகாரி ரகசியமாய் வீட்டுக்குள் அழைத்து வாங்கின பணத்தை கையில் கொடுத்து “சந்தர்ப்பம் வேறு விதமாய் போய்விட்டதால் இப்படிச் செய்ய நேர்ந்தது. ஆனால் வருத்தப்படாதே கோர்ட்டுக் குப் போனால் உனக்குதான் அனுகூலமாகும். மன்னித்துக்கொள் என்று  கேட்டுக் கொண்டார். அபேட்சகனோ ஓட்டர் வீட்டுக்கு அலைந்தது போறாமல் எலக்ஷன் ஆபிசர் வீட்டுக்கு அலைந்து போறாமல் இனி கோர்ட்டுக்கும், வக்கீல் வீட்டுக்கும் நீதிபதி வீட்டுக்கும் அலையும்படியா செய்கிறாய்? என்று ஏதோ தனக்கு மிக புத்தி வந்துவிட்டது போல் பேசியது மல்லாமல் அப்படித் தான் கோர்ட்டில் அனுகூலமானால் எனக்கு என்ன பிரயோஜனம்? இப்பொழுது நீ அனுகூலம்  செய்திருந்தால் எனக்கு சமீபத்தில் நடக்கும் தலைவர் தேர்தலில் 1000மோ, 2000மோ கிடைத் திருக்கும், அதெல்லாம் பாழாய் போனது மல்லாமல் இன்னமும் 500ரோ 1000மோ செலவு அல்லவா செய்ய வேண்டி இருக்கிறது.

அதற்கும் இனி அப்பீல் செய்தால் அப்புறம் வேறே செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இவ்வளவும் செய்து அனுகூலம் ஆகாமல் போய் விட்டால் என்ன பண்ணுவது? அல்லது நமக்கு அனுகூலம் ஆச்சுதென்றே வைத்துக் கொண்டா லும் மந்திகளோடு மந்தியாய் நாற்காலியில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வருவதைவிட வேறு என்ன செய்ய இடமுண்டாகும்? ஆதலால் இனிமேல் இந்த கிரகத்தைப் பற்றி நினைப்பதே இல்லை. நீ மாத்திரம் நல்லா இருந்தால் சரி, கடவுள் தான் உன்னைக் கேட்கவேண்டும். என்று சொல்லிக்கொண்டு வெளியில் வந்துவிட்டார். அதிகாரி உடனே கதவை மூடித் தாழ்போட்டுக் கொண்டார் என்பதாக ஒரு கதை தேசீய மதத்தைச் சேர்ந்த சுயராஜ்ய புராணத்தில் எலக்ஷன் அத்தியாயத்தில் காணப்பட்டது. (குடிஅரசு- 22.01.1933).

பெரியார் அவர்களுக்கு தேர்தல் அரசியலின் மீது மிகப் பெரிய வெறுப்பு இருந்தாலும் சாமானிய ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நன்மையைப் பொறுத்தே காமராஜர், அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றவர்களை ஆதரித்தாரே தவிர தனிப்பட்ட முறையில் அவருக்கு என்றுமே தேர்தல் அரசியலின் மீதும், சாதியை கட்டிக் காப்பாற்றும் இந்திய அரசியலைமைப்பு சட்டத் தின் மீதும் நம்பிக்கை இருந்தது கிடையாது. அதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தியே வந்தார். பெரியாரின் பிற்கால அரசியல் நிலைப்பாடுகளில் பலருக்கு ஆட்சேபகரமான கருத்துக்கள் இருந்தா லும் கூர்ந்து நோக்கி ஆராய்ந்தால் அதில்

பொது நலன் இருக்குமே தவிர சுயநலன்  என்பது சிறிதும் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.      

Pin It