ஒரு இராணுவத் தாக்குதலில் உங்களின் இளம் வயதுப் பாலகன் கொல்லப்பட்டு விடுகிறான். அவனின் உடலை நீங்கள் பிடித்துக்கொண்டு கதறி நிற்கிறீர்கள். அவனின் குருதி உங்களின் மேலாடை முழுவதும் படிந்திருக்கிறது. அவனின் உதிரம் உரைந்த உங்களின் வெண்தாடி சிவப்புநிறமாய் காட்சியளிக்கிறது. ஆறு ஜவான்கள் உங்கள் மகனின் சடலத்தை உங்களிடமிருந்து பறிக்க இழுக்கிறார்கள் தங்கள் குற்றத் தடயத்தை மறைக்க. சொல்லுங்கள் இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள் என்று....

kashmir stone pelting

உங்களில் ஒருவரின் சகோதரனை ஒரு இராணுவ ஜீப் வந்து அழைத்துக் கொண்டு போகிறது. இரண்டுநாட்கள் கழித்து அவனது உடல் அடுத்த தெருவில் கிடக்கிறது. அவனது தோல் முழுவதும் வெந்து போயிருக்கின்றது. அவனது உடலில் கனரக வாகனம் ஏறிய தடயம் இருக்கிறது. அவனது பிறப்புறுப்பில் மின்சாரக் கம்பிகள் இருக்கின்றன. சொல்லுங்கள் இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள் என்று....

ஒருநாள் மாலை வேளையில் உங்கள் ஐந்து வயது மகனை மிட்டாய் கடைக்கு அழைத்துச் செல்கிறீர்கள். எதிரே வந்த இராணுவ வீரனைப்பார்த்து உங்கள் மகன் பலித்துக்காட்டிவிடுகிறான். கோபமுற்ற இராணுவ வீரன் உங்கள் மகனின் கண்ணில் மண்ணை அள்ளி வீசி விடுகிறான். நீங்கள் கோபமுற்று தட்டிக் கேட்டதற்கு பரிசாக உங்கள் மகனின் கண்ணில் ஊசியேற்றப் படுகிறது ஆழமாக...... இரவு பூராவும் இப்போதும் "இராணுவம வருகிறது,|இராணுவம் வருகிறது, என்னை அடிக்கிறது "என உங்கள் மகன் புலம்பிய படியே இருக்கிறான். சொல்லுங்கள், அந்த அத்துவான இராத்திரியில்... நீங்கள் என்ன செய்வீர்கள் என்று...

காஷ்மீரிகள் கல்லெறிகிறார்கள் கல்லெறிகிறார்கள் என்று கூப்பாடிடும் ஜால்ரா ஊடகங்கள் அதனூடே இருக்கும் வலிகளை வசதியாக மறந்து விடுகின்றன. 8000 பேர் விசாரணைக்காக அழைத்துப்போகப் பட்டவர்கள் இன்னும் வீடு திரும்பவே இல்லை. சமீபத்தில் இனங்காணப் பட்ட 38 மனிதப் புதைகுழிகளில் 2730 சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கல் எறிகின்றவர்களில் 60000த்துக்கும் மேற்பட்ட இராணுவத்தால் அனாதையாக்கப்பட் சிறார்கள் இருக்கிறார்கள. 30000த்துக்கும் மேற்பட்ட விதவைகள் இருக்கிறார்கள்.

கல்லெறிதல் என்பது ஒன்றும் யுத்தமல்ல. அது இராணுவக் காட்டுமிராண்டித் தனதுக்கு எதிராக மக்கள் காட்டும் எதிர்ப்புக் குறியீடு அவ்வளவே.ஆளைக் கொல்லும் ஏ.கே. 47 க்கு முன்னால், கண்களைக் குருடாக்கும் பெல்லட் குண்டுகளுக்கு முன்னால் வெறும் கற்கள் எம்பாத்திரம் என்பது உயிரபை் பணயம் வைத்து எரிபவனுக்குத் தெரியாதா என்ன?

பொதுவாக ஒன்று... நீங்கள் உங்கள் வாகனத்தில் பயணம் மேற்கொள்கிறீர்கள். வழியில் ஒரு போலீஸ் குழு சோதனைக்காக உங்களை தடுத்து நிறுத்துகிறது. உங்களிடம் எல்லா ஆவணங்களும் இருக்கிறது என்றாலும் காவலர்களின் அதட்டல் அணுகு முறையால் நீங்கள் அருவருப்படைவதும், பதட்டப்படுவதும் இயல்புதான் என்றால் , 3 லட்சம் இராணுவ வீரர்களின் பாதுகாப்பில்(!?) இருக்கும் காஷ்மீரிகளின் அன்றாட மன நிலை எப்படி இருக்கும் பாருங்கள்.

1953 களில் சர்வஜன வாக்கெடுப்பு எனத் தொடங்கிய காஷ்மீரிகளின் போராட்டம் 1970 களில் சுய நிர்ணய உரிமை என்றும்,1989களில் காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே என்றும் வளர்ச்சியடைய மத்திய அரசின் விரிவாதிக்கக் கொள்கைக்கு வால் பிடிக்கும் இராணுவத்தின் துப்பாக்கித் தோட்டாக்களைத் தவிர யார்காரணம்?

காஷ்மீர் இளைஞர்களைப் பார்த்து மோடி சுற்றுலா வளர்ச்சிக்கு கல்லெறிவதை விடுத்து கல்லுடையுங்கள் என்கிறார். பாஜகவால் அமர வைக்கப்பட்ட மெகபூபா எல்லாவற்றுக்கும் தலையாட்டுகிறார். யாவற்றுக்கும் மௌன சாட்சியாகிவிட்டு தேர்தல் வருகிறது என்றதும் கல்லெறிவதற்கு நியாயம் கற்பிக்க முயலுகிறார் அப்துல்லா. ஆக காஷ்மீரிகளின் துயர் போக்க யாருக்கும் அக்கரையில்லை.

இவ்வளவு களேபரங்களுக்கு இடையில் உச்சநீதிமன்றம் முதலில் கல்லெறிவதை நிறுத்தச் சொல்லுங்கள் அப்புறம் அரசிடம் சவகாசமாக ஒரு 15 நாட்கள் இராணுவத்தை விலக்கச் சொல்லி கெஞ்சலாம் என்கிறது. இப்போது மறு உத்திரவு வரும் வரை சமூக ஊடகங்கள் யாவையும் முடக்குவதாக காஷ்மீர் அரசு அறிவித்து உள்ளது. காவி நீதிமன்றத்திடமும், பினாமி அரசிடமும் வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?

கற்கள் பேசும் மொழிக்கு யாரும் செவி கொடுக்காமல் மௌனித்துவிட்டு, நாளை அவை கையெறி குண்டுகளாகும்போது யாரை குறைசொல்வது?

- பாவெல் இன்பன்

Pin It