காஷ்மீர் எந்தளவிற்கு அழகுப் பிரதேசமோ, அதைவிட அதிகளவு அது முரண்களின் தேசமாக விளங்குகிறது. பனி மலைகள் படர்ந்த அந்தப் பூமியில், எரிமலைகளால் இயங்கமுடிகின்றது. நீதியையும், அமைதியையும் மட்டுமே விரும்புகிற காஷ்மீரிகளுக்கு; அநீதியையும், யுத்தக் களத்தையுமே தினமும் சுவாசிக்க வேண்டியுள்ளது. ஜனனங்கள் அங்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. மரணங்கள் துக்கத்தை அளிப்பதில்லை. இந்த முரண்கள் ஒரு நூற்றாண்டு காலமாய் வலிகளுடனான வரலாறாய் அங்கு தொடர்ந்து கொண்டுள்ளது.

இந்தியா, காஷ்மீரை தனது மாநிலம் என்கிறது. காஷ்மீர் எங்களுக்கானது என பாகிஸ்தான் எண்ணுகிறது. எங்களுக்கும் இதில் பங்குண்டு என சீனாவும் காஷ்மீருக்குள் கடை விரிக்கிறது. நிஜத்தில் காஷ்மீர் யாருக்கானது? காஷ்மீரின் பிரச்சினை என்பது ஒரு நிலம்சார் பிரச்சினை மட்டும்தானா? என்பதெல்லாம் ஆழமாகப் பார்க்கப்பட வேண்டியவைகள். ஆனால் சுருக்கமாக ஒன்றைச் சொல்வதென்றால், காஷ்மீரின் கூட்டு மனசாட்சி இவைகளை மும்முனைத் தாக்குதல்களாகவே கருதுகின்றது.

‘வெள்ளையனே வெளியேறு’ என இந்தியச் சுதந்திர முழக்கங்கள் ஒலித்துக்கொண்டிருந்த வேளையில், காஷ்மீரிலும் சுதந்திர முழக்கங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் அது ‘காஷ்மீரைவிட்டு வெளியேறு’ என இந்திய சுதந்திர முழக்கத்திலிருந்து மாறுபட்டு ஒலித்துக்கொண்டிருந்தது. இந்தியா முழுக்க பிரிட்டிஷாரை எதிர்த்து நிற்க, காஷ்மீரோ அங்குள்ள மன்னனை எதிர்த்து சுதந்திர தாகத்தை வெளிப்படுத்தியது. இன்றும் காஷ்மீர் அதே சுதந்திர முழக்கத்தை இந்தியாவை நோக்கி எழுப்பிக்கொண்டுள்ளது. பாகிஸ்தானையும், சீனாவையும் காஷ்மீரிகள் இதே கண்ணோட்டத்துடனேயே அணுகுகின்றனர்.

இந்தியாவை பிரிட்டிஷ் அரசாங்கம் முழுமையாக ஆட்சி செய்ததைப் போல், காஷ்மீரை ஆளவில்லை. காஷ்மீரின் டோக்ரா மன்னன் குலாப்சிங்கே காஷ்மீரை ஆட்சி செய்துவந்தான். பிரிட்டிஷ் அரசு காஷ்மீருக்கு ஒரு பாதுகாவலராக மட்டுமே செயல்பட்டு வந்திருப்பதை அமிர்தசரஸ் உடன்படிக்கை (1846) தெளிவாக்குகிறது. இங்குதான் காஷ்மீர் இந்தியாவிடமிருந்து மாறுபட்டு, தனி நாடாக அது இருந்ததைக் காட்டுகிறது.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு காஷ்மீர் மன்னரான ஹரிசிங், உள்நாட்டு கிளர்ச்சியாளர்களை சமாளிக்க இயலாமல் தனது நாட்டை இந்தியாவுடன் இணைக்கும் முடிவை எடுத்தார். காஷ்மீர் அப்படித்தான் இந்தியாவுடன் 1947 அக்டோபரில் இணைந்தது. இந்த இணைவும்கூட தற்காலிகமானதாகவும், இந்தியாவை ஒரு பாதுகாப்பு அரணாக மட்டுமே வைத்தும் நடந்தது. மாறாக இந்தியாவின் ஒரு மாநிலமாக காஷ்மீர் இணையவே இல்லை என்பதுதான் வரலாறும், சட்டப்படியானதுமாகும்.

இந்திய – காஷ்மீர் இணைப்பிற்கென்றே, இந்திய அரசியல் சட்டத்தில் உருவாக்கப்பட்டதுதான் 370வது பிரிவாகும். இராணுவம், தகவல் தொடர்பு மற்றும் அயலுறவு ஆகிய மூன்று துறைகளைத் தவிர்த்த வேறெந்த இந்தியத் துறைகளும் காஷ்மீருக்குப் பொருந்தாது என்பதும்; இந்திய உச்சநீதிமன்றம், இந்தியத் தேர்தல் ஆணையம், இந்தியத் தணிக்கைத்துறை போன்றவற்றின் அதிகாரங்கள் காஷ்மீரில் செல்லுபடியாகாது என்பதும்; காஷ்மீரின் முதலமைச்சர் பிரதமரென்றே அழைக்கப்படுவார் என்றும்; இந்தியக் குடியரசுத் தலைவரால் காஷ்மீரின் கவர்னரை நியமிக்க இயலாது என்றும் விரிந்து செல்கிறது 370வது பிரிவின் தனிச்சிறப்புகள். இதுபோக இன்றளவும் காஷ்மீருக்கு தனியேதான் தேசியக்கொடி பறந்துகொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தங்களுடன் “காஷ்மீர் இந்தியாவுடன் நீடிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து, காஷ்மீர் மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும்” என்கிற வாக்குறுதியையும் அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, காஷ்மீர் மன்னருக்கு அளித்தன் பின்னரே இந்திய-காஷ்மீர் இணைப்பானது உறுதியாகியிருக்கிறது. ஆனால் நேரு அளித்த வாக்குறுதியை இந்தியா காற்றில்விட்டதோடு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தத்தை அளிக்கும் 370வது பிரிவின் சரத்துக்களையும் மெல்ல மெல்ல வலுவிழக்கச் செய்தது. இதுவே காஷ்மீர் மக்களை போராடத் தூண்டியது. இப்படித் தொடங்கிய காஷ்மீரிகளின் போராட்டங்கள்தான், ஒரு இலட்சத்திற்கும் நிகரான மரணங்களைக் கடந்து இன்று புர்ஹான் வானியை எட்டி நிற்கிறது.

காஷ்மீரின் போராட்ட வரலாறை ஆய்வாளர்கள் நான்கு கட்டங்களாகப் பிரித்துள்ளனர். இந்தியச் சுதந்திரத்திலிருந்து 1989ஆம் ஆண்டுவரை அமைதி வழிப் போராட்டத்தையே நடத்திய காஷ்மீரிகள், 1990-களில் ‘ஆசாதி’ (சுதந்திரம்) முழக்கங்கள் பெரும் சப்தமாய் கேட்கும்படி ஆயுதப் போராட்டத்தில் இறங்கினர். இந்த ஆயுத வழிப்போராட்டமான இரண்டாம் கட்டப் போராட்டம் 2003 வரை கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக வெடித்துள்ளது. இதன்பிறகான மூன்றாம் கட்டத்தில், அதாவது 2008ஆம் ஆண்டுவரை அம்மக்கள் மீண்டும் அமைதி வழிக்குத் திரும்பிவிட்டனர். மீண்டும் 2008-இல் நான்காம் கட்டமாகத் தொடங்கியுள்ள ‘ஆசாதி’ யுத்தம் இன்றுவரை நீடித்துக்கொண்டுள்ளது.

இந்தமுறை பெரும் ஆயுதங்களுக்கு மாற்றாக, காஷ்மீரிகள் சாதரணமான கற்களையே இந்திய இராணுவத்திற்கெதிராக வீசிக்கொண்டுள்ளனர். அந்த வகையில் நான்காம் கட்டமானது இயக்க வடிவங்களைத் தாண்டி, வெகுமக்கள் கிளர்ச்சியாக மாறிப்போய்விட்டது. ஐந்து வயதுச் சிறுவன்கூட, இந்தியப் படையினரை நோக்கி கற்களை எறியத் துணிந்துவிட்டான் இன்று.

காஷ்மீரைப் பொறுத்தவரை அங்கு செயல்படும் போராட்டக் குழுக்களின் கோரிக்கைகள் வேறு, வேறு பரிணாமங்களைக் கொண்டவைகளாக உள்ளபோதும், ‘ஆசாதி காஷ்மீர்’ கோரிக்கையுடன் போராட்டத்தை முன்னெடுப்பவர்களே பெரும்பான்மையினராக உள்ளனர். அதுமட்டுமில்லாமல், முன்பிருந்ததைப் போன்று இப்போதைய போராட்டக்காரர்கள் இல்லை. இவர்கள் முழுக்க முழுக்க காஷ்மீர் மண்ணின் மைந்தர்களாகவே உள்ளனர். நல்ல கல்விப் பின்புலமும், வசதியும் கொண்ட இளைய தலைமுறையினரே இப்போதைய போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டுள்ளனர்.

உலகில் வேறெந்த தேசிய இனப் போராட்டங்களிலும் இல்லாத அளவிற்கு, காஷ்மீர் தேசிய இனப்போராட்டங்கள் பரிணாமத்தை அடைந்திருக்கின்றன. கைகளில் ஆயுதங்களுடன் போராடும் அவர்கள், தங்களை மறைத்துக்கொண்டு இயங்குவதில்லை. மாறாக, அவர்கள் தங்களை முற்றுமுழுதாக சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்திக்கொண்டே செயல்படுகிறார்கள். இப்படியான பகிரங்க போராட்ட வடிவத்தை பரவலாக்கி, அதன்மூலம் காஷ்மீர் போராளிகளுக்கு மனத்திடம் அளித்ததினாலேயே பெரும் கவனத்தைப் பெற்றான் புர்ஹான் வானி.

முழுமையாக 22 வயதைப் பூர்த்தி செய்திடாத அந்த இளைஞரின், இறுதி ஊர்வலத்திற்கு இலட்சக் கணக்கில் மக்கள் திரண்டிருந்த காட்சிகளைப் பார்க்கும்போது, ஆசாதி காஷ்மீரிகளின் மத்தியில் புர்ஹான் அடைந்திருக்கும் இடத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. புர்ஹான் குறித்து இணையவெளிகளில் தேடும்போது, விக்கிப்பீடியா புர்ஹானை ‘PROTESTER’ (போராளி) என்றே குறிப்பிட்டிருந்தது ஆச்சரியத்தை அளித்தது. விக்கிப்பீடியா தவிர்த்த பல இணைய இணைப்புகளிலும் அதேவாசகத்தைப் பார்க்க முடிந்தது. இந்த இணையப் பயன்பாட்டு புரட்சியைத்தான் புர்ஹான் செய்திருக்கிறான். பொதுவெளியில் காஷ்மீர் போராளிகளுக்கு ஒரு இடத்தை புர்ஹான் தேடமுனைந்திருக்கிறான்.

எட்டாம் வகுப்பில் 90 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்ற புர்ஹான், பத்தாம் வகுப்பின் இடையிலேயே படிப்பை நிறுத்திவிட்டு போராட்டக் களத்திற்குச் சென்றுள்ளான். தீவிரவாத இயக்கமாகச் சொல்லப்படும் ‘ஹிஸ்புல் முஜாஹிதீன்’ அமைப்பில் இணைந்த புர்ஹான், 20 வயதிலேயே அதன் முக்கியத் தளபதியாக உருவெடுத்துவிடுகிறான். ஒருமுறை புர்ஹான் தனது அண்ணன் காலித்துடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, இந்தியப் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளான். அதன் எதிரொலியாகவே புர்ஹான் போராட்டப் பாதையை தேர்ந்தெடுத்தாக, புர்ஹானின் தந்தை முஸாபர் வானி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீரில் புர்ஹான்கள் எப்படி உருவாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு, புர்ஹானுடைய தந்தையின் பேட்டி ஒரு சாட்சி.

புர்ஹானின் இணையவழிப் பிரச்சாரங்களின் மூலமாக, புர்ஹான் அடையாளம் காணப்பட்டு அவனின் தலைக்கு ரூ.10 இலட்சங்களை இந்திய அரசு அறிவிக்கிறது. இதன் நீட்சியாய் புர்ஹான் ஜீலை 08, 2016 அன்று, தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது இந்திய ரைபிள் படையினரால் சுட்டுக் கொல்லப்படுகிறான். விளைவு, காஷ்மீரில் போராட்டம் மீண்டும் கொதி நிலைக்குச் சென்றுவிட்டது.

சமீபத்தில் காஷ்மீரின் முதல்வர் பொறுப்பிலிருந்த முஃப்தி முஹம்மது சயீது இறந்தபோதுகூட, ஆயிரக் கணக்கில் மட்டுமே மக்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கெடுத்தனர். ஆனால் இந்திய அரசால் பயங்கரவாதியாக அடையாளப்படுத்தப்படும் புர்ஹானின் இறுதி ஊர்வலத்திற்கு மக்கள் இலட்சக் கணக்கில் திரண்டுள்ளனர் என்பது கவனிக்கப்பட வேண்டியவையாகும். இந்த ஒப்பீடென்பது வெறும் நிகழ்வுகளல்ல, காஷ்மீரிகளின் மனநிலையை அறிய இயலும் சந்தர்ப்பங்களாகும்.

ஆனால் இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாத இந்திய அரசு, புர்ஹானின் இறப்பிற்கு நீதி வேண்டி திரண்ட மக்கள்திரளை மிகக்கொடூரமாக எதிர்கொண்டது. காஷ்மீர் மக்களின் கண்கள், இந்தியப் படைகள் தொடுக்கும் பெல்லட் குண்டுகளை நேருக்குநேர் சந்தித்தன. உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடாகத் திகளும் இந்தியாவின் காஷ்மீர் மீதான தாக்குதல்கள் ஒவ்வொன்றும், ஹிட்லரையும் மிஞ்சியவைகளாகவே இருந்தன.

காஷ்மீர் முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், இணையத் தொடர்பை முடக்கியும் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. ஆளும் அரசைத் தவிர்த்த ஏனைய அரசியல் கட்சிகள் யாவும், இந்தியாவின் அணுகுமுறையைக் கண்டு முகம் சுழித்துள்ளன. ஒருமாத காலமாக இந்தியா தனது நாட்டின் பகுதியென்று சொல்லிக்கொள்ளும் மக்களின்மீது, பெல்லட் குண்டுகளை மழையாய்ப் பொழிந்துள்ளது.

இந்தியப் படைகளின் தொடர் தாக்குதலால் பார்வை இழந்தவர்கள் 200க்கும் அதிமானவர்களாக உள்ளனர். இந்தவகை பெல்லட் குண்டுகளை மற்ற நாடுகள் முழங்காலுக்கு கீழே சுடும் வழக்கத்தையே கொண்டுள்ளன. அப்படியிருக்க இந்தியா அந்த அறங்களை முற்றாக மறுத்து, உலகின் மிகப்பெரும் சர்வாதிகார நாடாக இன்று உருவெடுத்திருக்கிறது. இந்தியப் படைகளால் குருடாக்கப்பட்ட காஷ்மீரிகளுக்கு சிகிச்சை அளிக்கச் சென்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்குழு, இந்தவகை தோட்டா ரவைகளை எப்படி உடலிலிருந்து எடுப்பதென்றே தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். மேலும் காஷ்மீரிகளின் மீதான தாக்குதலை, போர்ச் சூழலலுடன் ஒப்பிட்டுள்ளனர் மருத்துவக் குழுவினர்.

காஷ்மீரிகளை தனது சொந்த மக்கள் என இந்தியா சொல்லிக்கொள்வது உண்மை என்றால், இப்படித்தான் குண்டு மழையில் காஷ்மீரை அணுகுமா இந்தியா? இந்தியாவின் வேறெந்த மாநிலத்தை இந்தியா இப்படி அணுகியிருக்கிறது? இப்போது நடந்து முடிந்திருக்கும் காஷ்மீர் மீதான இந்தியத் தாக்குதலில் உயிரிழந்துள்ளவர்கள் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோராக உள்ளனர். இந்தியாவின் இம்மாதிரியான கொடும்போக்குகளால்தான், ஆசாத் காஷ்மீர் என்கிற முழக்கம் இன்று வெகுமக்கள் கோரிக்கையாக மாறியுள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

பாதுகாப்பிற்காக நிற்கும் இராணுவ வீரர்களே காஷ்மீரப் பெண்களை கூட்டு வன்புணர்வு செய்வது வாடிக்கையாகப் போய்விட்ட நிலையில், உள்ளூர்வாசிகளையே அந்நிய ஊடுருவல்காரன் எனச்சொல்லி சுட்டுக் கொலை செய்து அதன்மூலம் பதவி உயர்வை அடைய முனையும் காவலர்கள் இருக்கும்பட்சத்தில், சராசரி வாழ்வை மேற்கொள்ளும் நபர்களின் சுயமரியாதைகளை அன்றாடம் இராணுவம் கலங்கப்படுத்தும்போதும், தங்களுக்கு அடிபணிய மறுக்கிறவர்களை சர்வதேச தீவிரவாதிகளாக இராணுவம் சித்தரிக்கும்போதும், காஷ்மீரிகள் எதை நாடுவார்கள்?

துப்பாக்கிகளின் முனையில் இந்தியா காஷ்மீரிகளை பலவந்தப்படுத்தும் போதெல்லாம், காஷ்மீரிகள் போராட்டக் குழுக்களை நோக்கியே பெரிதும் நகர்த்தப்படுகிறார்கள். அப்போது அவர்கள் ‘ஆசாதி’ என முழங்காமல், வேறென்ன வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்?

காஷ்மீர் மக்களைப் போராடுவதற்கு பாகிஸ்தான் தூண்டும் காலம் முடிந்துவிட்டது. இப்போது ஆசாதியின் முழக்கம், இந்தியப் பேரரசின் சர்வாதிகாரத்தால் உயிர்பெற்றிருக்கிறது. ஆசாதி, ஆசாதி எனக் கேட்கும் பெருங்குரல்கள் காஷ்மீரின் சாமானிய மக்களின் வாயிலிருந்து இன்று உதிரத் தொடங்கியிருக்கிறது. அவர்கள் கற்களை கையிலெடுத்துக்கொண்டு, தலைவர்கள் யாருமற்று தன்னெழுச்சியாக வீதிகளை நிறைத்துக் கொண்டுள்ளனர். சொல்லப்போனால், தலைவர்கள் யாவரும் மக்களின் இழுப்பிற்கு பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றனர் என்பதுதான் காஷ்மீரின் இன்றைய எதார்த்தம்.

இந்த எதார்த்தச் சூழலை உள்வாங்கிக்கொண்டுதான் காஷ்மீரை இந்தியா அணுக வேண்டும். மாறாக மீண்டும், மீண்டும் பழியைப்போட பாகிஸ்தானைத் தேடாமல், இந்தியா தனது தவறை மீளாய்வு செய்ய வேண்டும். காஷ்மீர் மக்கள் ஆசாதியை விரும்புவதைப் போலவே, அமைதியையும் விரும்புகின்றனர். இப்போதைக்கு இந்தியா காஷ்மீரிகளுக்கு ஒரு பெரும் நம்பிக்கையை தனது செயல்பாடுகளின் வழியாக அளித்தாக வேண்டும். அந்த நம்பிக்கை தரும் செயல்பாடுகள்தான் காஷ்மீரிகளை கற்களை கீழே போட வைக்குமே தவிர, இந்தியப் படைகளின் துப்பாக்கிகள் அல்ல.

காஷ்மீர் பெண்களின்மீது அத்துமீறிய இராணுவத்தினரை இந்தியா நீதியின் அடிப்படையில் தண்டிக்க வேண்டும். 370வது பிரிவின் சரத்துகள் முழுவதுமாக மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். ஏழு காஷ்மீர் சிவிலியர்களுக்கு ஒரு ஆயுதமேந்திய இராணுவச் சிப்பாய் என்கிற போக்கை இந்தியா மாற்றி அமைத்து, காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள ஏழு இலட்சத்திற்கும் மேலான இராணுவத்தினரை அங்கிருந்து திரும்பப் பெறுதல் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நேரு கொடுத்த வாக்குறுதியை இந்தியா தயக்கமற்று நிறைவேற்ற முன்வர வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகளின் மூலம்தான் காஷ்மீரிகளுக்கு இந்தியா நம்பிக்கையை ஏற்படுத்த இயலும். இந்த நம்பிக்கைதான் காஷ்மீர் சிக்கலுக்கு இப்போதைக்குள்ள ஒரே தீர்வுமாகும்.

மாறாக ஆயுத முனையிலேயே காஷ்மீரை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று இந்தியா நினைத்துக் கொண்டிருப்பது என்றுமே சாத்தியமில்லாத ஒன்று. அதேபோல் இந்தியப் படைகளுடன் போரிட்டு ‘ஆசாதியை’ காஷ்மீர் பெற்றுவிட முடியுமென்பதும் அவநம்பிக்கை மட்டுமே. இந்த இரண்டுவிதமான அணுகுமுறைகளினாலும் இழப்புகள் தொடருமே தவிர தீர்வு ஒருபோதும் எட்டிவிடாது.

இதேபோல் இங்கு இன்னொன்றையும் கவனத்தில் நிறுத்த வேண்டியுள்ளது. காஷ்மீர் சிக்கலென்பது வெறுமனே இந்தியா, பாகிஸ்தான் மட்டுமே பேசித் தீர்த்துவிடக்கூடிய ஒன்றல்ல. மாறாக இதில் காஷ்மீருக்கும் பங்குண்டு. எப்படி தமிழக மீனவப் பிரச்சினையில் இந்திய அரசும், இலங்கை அரசும் மட்டுமே பேசிவிட்டு இருநாடுகளும் மீனவர் தரப்புகளை மறுத்துக் கொண்டுள்ளதோ, அதேபோலத்தான் காஷ்மீர் சிக்கலிலும் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

இங்கு பிரச்சினை இந்தியா-பாகிஸ்தான் மட்டுமல்ல, காஷ்மீரும்தான் என்பதை இருநாடுகளும் வசதியாக மறந்து விடுகின்றன அல்லது காஷ்மீர் தரப்பை பலவந்தமாக மறுத்துவிடுகின்றன. எதிர்காலத்தில் இந்த முத்தரப்பில் நான்காவது முகமாய் சீனாவும் உருவெடுக்கலாம். அதற்கான எல்லாவித வாய்ப்புகளுமே உண்டு. அப்படியான நெருக்கடிகள் சூளும்பட்சத்தில், ஒருவேளை அதன்வழியாகக்கூட காஷ்மீருக்கு ஒரு இறுக்கத் தளர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

மற்றபடி ’காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே’ என்பதில் இரண்டாம் கருத்திற்கு இடமில்லை என்றாலும், அதனை தீர்மானிக்க வேண்டியது காஷ்மீரிகள்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டுமெனில், அது இந்தியாவுடன் இசைய வேண்டும். இந்தியா காஷ்மீரில் நம்பிக்கையை விதைக்க வேண்டும். ஆனால் காஷ்மீர் ஆசாதியைப் பெற வேண்டுமானால், அது ஐ.நா அவையில்தான் சாத்தியப்படும். அதைவிடுத்து இந்திய அரசிடம் காஷ்மீர், ஆசாதியைப் பெற்றுவிட முடியும் என்பதெல்லாம் வெற்று நம்பிக்கை மட்டும்தான். அதேசமயம் காஷ்மீரிகள் ‘ஆசாதியைக்’ கேட்பது ஒன்றும் தேசவிரோதக் கோரிக்கையல்ல. அது நேரு அவர்களுக்கு அளித்த வாக்குறுதி என்பதை இந்தியா நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

பழனி ஷஹான்

Pin It