வடமேற்கு பீகாரில் உள்ள சம்பாரண் என்னும் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தறிவற்ற விவசாயியான ராஜ்குமார் சுக்லா என்பவர் 1916 ஆம் ஆண்டு இறுதியில் லக்னோ மாநாட்டில் காந்தியைச் சந்தித்து சம்பாரணியில் அவுரி பயிரிடும் ஐரோப்பிய பண்ணையார்கள் செய்யும் ஒடுக்குமுறையை நேரில் வந்து பார்க்கும்படி காந்திக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் இந்தக் கோரிக்கையை எப்படியாவது காந்தியை ஏற்றுக்கொள்ள செய்யவேண்டும் என்ற முடிவில் காந்தி சென்ற வேறுபல இடங்களுக்கும் அவர் சென்றார். இதனால் காந்தி ராஜ்குமார் சுக்லாவின் கோரிக்கையை ஏற்று சம்பாரண் சென்றார்.

 gandhiசம்பாரணில் 1917 ஆம் ஆண்டுகளில் மட்டும் இருநூறு ஐரோப்பியர்கள் அவுரிச் சாகுபடி செய்யும் ஜமீன்தார் பகுதிகளுக்கும் அவுரித் தொழிற்சாலைகளுக்கும் உரிமையாளர்களாக இருந்தனர். பாதிக்கும் மேற்பட்ட மாவட்டத்தை அவர்களே நிரந்தரமாக குத்தகைக்கு எடுத்திருந்தார்கள். மேலும் அவர்களே நிலக்கிழார்களாகவும் இருந்தார்கள். அவர்கள் விவசாயிகள் மீது தீன்கத்தியா என்ற முறையைத் திணித்திருந்தார்கள். அதன்படி ஒவ்வொரு பைகா நிலத்திலும் மூன்று கத்தாக்கள் அளவு பகுதியில் அவுரி பயிரிடுமாறு விவசாயிகளைக் கட்டாயப்படுத்தினார்கள். மேலும் விவசாயிகளிடம் இருந்து பல்வேறு சட்டபடி இல்லாத மேல்வரிகளையும் கட்டாயமாக வசூலித்து வந்தார்கள். ஆனால் முதல் உலகப் போருக்கு முன் ஜெர்மனியில் செயற்கைச் சாயங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது அவுரிச் சாயங்களுக்கான தேவை பெரிய அளவில் குறைந்து போனது.இதனால் ஐரோப்பிய பண்ணையார்கள் தீன்கத்தியா முறையில் இருந்து விவசாயிகளை விடுவித்தனர். அதற்கு பதிலாக கூடுதல் வரி(ஷரபேஷி) செலுத்த அல்லது ரொக்கமாக ஒரு பெரும் தொகையை செலுத்த அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

 இதனால் உருவான விவசாயிகளின் எதிர்ப்பு 1908 ஆம் ஆண்டு ஒரு வெகுசன இயக்கமாக மாறியது. ஐரோப்பிய அவுரி தொழிற்சாலைகள் புறக்கணிக்கப்பட்டன. 1908 ஆம் ஆண்டு நவம்பரில் வெளியான வங்காள அரசாங்கத்தின் அறிக்கையின்படி “தொழிலாளிகள் மேல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஐரோப்பியர்கள் மேல் தாக்குதல்கள் நடைபெற்றதாகவும் அப்பகுதி முற்றிலும் போர்மூண்டது போன்ற ஒரு தோற்றத்தைப் பெற்றிருந்தது என்றும் குறிப்பிடுகின்றது. மேலும் ஐரோப்பியர்களைப் பாதுகாக்க வங்க ஆயுத போலீஸ் மற்றும் கூர்க்காக்களின் பெரும்படைகள் அனுப்பப்பட்டிருந்ததாகவும் ஸ்டேட்ஸ்மேன் (நவம்பர் 27, 1908) செய்தி வெளியிட்டது. இது எல்லாம் காந்தி வருவதற்கு முன் சம்பாரணில் நடந்த சம்பவங்கள். சம்பாரண் விவசாயிகளுக்கு ஐரோப்பிய நிலக்கிழார்களை எதிர்க்கும் தைரியம் அற்று இருந்தார்கள் என்றும் அதனால் தான் தன் பிரச்சினையைத் தீர்க்க காந்தியை அழைத்தார்கள் என்றும் கூறுவது எவ்வளவு அபத்தம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

 காந்தி சம்பாரண் வருவதற்கு முன் சம்பாரண் மாவட்டம் திர்ஹுட் கோட்டத்தின் ஆணையரையும் பண்னையார்கள் சங்கத்தின் செயலரையும் பார்த்தார். அந்த மாவட்ட நகரமான மோத்திஹரி நகரை காந்தி அடைந்தபோது அவரை வெளியேறுமாறு மாவட்ட குற்றவியல் நீதிபதி கட்டளையிட்டார். ஆனால் காந்தி தான் அந்த ஆணைக்கு உடன்பட முடியாது என்பதை விளக்கி நீதிபதிக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் “தன் நோக்கம் முழுக்க முழுக்க ஒரு கலப்பற்ற அறிவுத் தேடல்தான், கிளர்ச்சி செய்வது அல்ல” என்று தனது நோக்கத்தை மிக தெளிவாக குறிப்பிட்டு இருந்தார். மேலும் இது தொடர்பாக பல பேருக்கு அவர் கடிதம் எழுதினார். ஐரோப்பிய நிலக்கிழார்களுக்கு எதிராக சம்பாரண் விவசாயிகளின் மனநிலையை அவர் தன் கடிதங்கள் மூலம் சுட்டிக்காட்டினார். இதன் விளைவாக அரசாங்க அதிகாரிகள், அவுரிச் சாகுபடியாளர்கள், நிலப்பிரபுக்களின் பிரதிநிதிகள், விவசாயிகளின் ஒரே பிரதிநிதியான காந்தி ஆகியோரைக் கொண்ட சம்பாரண் விசாரணைக் குழு (Champaran Agrarian Inquiry committee) அமைக்கப்பட்டது.

 சம்பாரணில் இருக்கும் அசாதாரண நிலைமைகள் பற்றி வெளி உலகம் எதையும் அறியவிடாதபடி மறைத்து வைப்பதை நோக்கியே காந்தியின் அனைத்து முயற்சிகளும் இருந்தன. அவர் இந்தப் பிரச்சினைக்காக காங்கிரஸ் கட்சியின் உதவியை நாடவில்லை. இதன் மூலம் விவசாயிகளின் போராட்டத்திற்கு எந்தவித அரசியல் தன்மையையும், அனைத்திந்திய தன்மையையும் கொடுக்க அவர் விரும்பவில்லை. அவரின் நோக்கமெல்லாம் சம்பாரண் விவசாயிகளின் போராட்ட உணர்வை மட்டுப்படுத்துவதாகவும் அதை இல்லாமல் அழித்தொழிப்பதாகவும்தான் இருந்தது. அதை அவரே இப்படி சொல்கின்றார் “பொதுமக்களின் கிளர்ச்சி ஏதுமின்றி ஒரு தீர்வை கொண்டுவர எல்லா முயற்சியும் எடுக்கப்பட்டு வருகின்றது”.

 பீகார் மற்றும் ஒரிசா செயற்குழு உறுப்பினரான தர்பங்கா மகாராஜா பகதூர் சர். ராமேஷ்வர் சிங்குக்கு 1917 ஆண்டு ஜூன் 4 அன்று காந்தி எழுதிய கடிதத்தில்”பண்ணையார்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் சுமூக உறவுகள் நிலவுவதைக் காணவே நான் வெகு ஆவலாக உள்ளேன்” என்றும் “ இது ஒரு குடும்பத் தகராறு இதை நான் சுட்டிக்காட்டும் முறையில் தீர்த்துக்கொண்டால் அது ஒரு ஆரோக்கியமான முன் உதாரணத்தை உருவாக்கும்” என்றும் எழுதினார். மேலும் சம்பாரணில் நிலவும் நிலைமை பற்றிய குறிப்பு 4 இல் “ சேகரிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் உணர்ச்சிகளைக் கிளறக்கூடிவையாக இருக்கின்றன…. பண்ணையார்களின் நலன்களுக்குத் தேவையில்லாமல் தீங்கு உண்டாக்கும் நோக்கம் நம் திட்டத்தில் இல்லை” என்று குறிப்பிட்டார். இதைவிட தெளிவாக காந்தியின் நோக்கத்தை நாம் எப்படித்தான் புரிந்துகொள்வது.

 விசாரணைக்குழு ஒருமனதாக தீன்கத்தியா முறை ஒழிக்கப்படவேண்டும் என பரிந்துரை செய்தது. அரசாங்க அதிகாரிகள் அதற்கு இணங்கினார்கள்.

செயற்கை சாயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் இனிமேலும் தீன்கத்தியா முறையை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாய அவசியம் இல்லை என்பதால் அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டார்கள். ஆனால் தீன்கத்தியா முறையில் இருந்து விவசாயிகளை விடுவித்த பண்னையார்கள் வாடகையில் சராசரியாக ஐம்பது சதவீத அதிகரிப்பையும் சில இடங்களில் அறுபது சதவீதம் அல்லது அதற்கும் கூடுதலாகவும் சட்டவிரோதமாகத் திணித்தார்கள். புதிய குத்தகை உரிமைச் சட்டமே பன்னிரண்டரை சதவீதத்துக்கு மேல் வரி விதிப்பதை அனுமதிக்கவில்லை. ஆனால் காந்தி உயர்த்திய வாடகையில் முக்கால் பாகம் அப்படியே இருக்கவும் ரொக்க வசூலிப்புகளில் சுமார் கால்பாகம் மட்டிலும் திரும்பக் கிடைக்கவும் ஒப்புக்கொண்டார். சில இடங்களில் வாடகை இருபது சதவீதம் மட்டுமே குறைக்கப்பட்டது. இப்படியாக காந்தி விவசாயிகளுக்கு மிகப் பெரிய துரோகம் இழைத்தார். சட்டவிரோதமாக உயர்த்தப்பட்ட வாடகையை ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் அப்படி வசூலித்த மொத்த தொகையையும் விவசாயிகளிடம் திரும்ப கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் காந்தி தன்னை அழைத்துவந்து விவசாயிகள் செய்த பெரும் பாவத்திற்காக அவர்களில் முதுகில் குத்தி தனது அடிமை புத்தியைக் காட்டினார்.

 மேலும் இந்த ஒப்பந்தத்தில் அவுரித் தொழிற்சாலைகளில் மிக குறைவான கூலிக்கு வேலை பார்த்த விவசாய தொழிலாளர்களின் கூலி பிரச்சினைக்கு எந்த தீர்வுமே காணப்படவில்லை. காந்தியின் ஒப்புதலைப் பெற்ற சம்பாரண் நில உடமை மசோதா-1917, பண்ணைகளின் தோட்டங்களிலும் தொழிற்சாலைகளிலும் வட்டார மதிப்பில் ஊதியத்தை நடைமுறைப்படுத்தும் படி முன்மொழியவில்லை. காந்தியின் இந்தத் துரோகத்தால் கிளர்ச்சியில் ஈடுபட்ட விவசாயிகள் பல ஆண்டுகளுக்கு கூடுதல் வாடகைகளைச் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியாவுக்கான அரசுச்செயலர், காந்தியின் பணியைப் பாராட்டி இப்படி எழுதினார்:” பீகாரின் அவுரித் தொழிலில் உள்ள குறைபாடுகளுக்கு ஒரு தீர்வை காண அரசாங்கத்துக்கு அவர் உதவிதான் செய்துகொண்டிருந்தார்” என்று.

 காந்தியின் இந்தத் துரோகத்தைத்தான் முதலாளித்துவத்திற்குக் காவடி தூக்கும் புல்லுருவிகள் ‘புரட்சி’ என்று பிதற்றிக்கொண்டு திரிகின்றார்கள். உயர்த்தப்பட்ட வாடகையில் முக்கால் பாகம் அப்படியே இருக்கும் படி செய்த காந்தியின் இந்த துரோகம் எப்படி ஒரு புரட்சியாக இருக்க முடியும்? ஒருவேளை காந்தி சம்பாரண் போகாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்றால் மக்கள் தங்களின் ஒட்டுமொத்த கோபத்தையும் ஐரோப்பிய நிலக்கிழார்கள் மீது காட்டியிருப்பார்கள். அதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் அங்கு இருந்தது. காந்தியே இதை பலமுறை தன்னுடைய கடிதத்தின் வாயிலாக குறிப்பிட்டு இருக்கின்றார். அதனால்தான் முதலில் காந்தியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு பின்னால் காந்தி யாருக்காக சேவைசெய்ய அங்கு வந்திருக்கின்றார் என்பதைப் புரிந்துகொண்டு அவருக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தது. காந்தி ஆங்கிலேயர்களுக்கு இந்தியாவில் புரட்சி தோன்றாமல் இருக்க ஒரு சேப்டி வால்வாகவே எப்போதும் பயன்பட்டு வந்தார். காந்தி விரும்பும் இந்தியா என்பது முதலாளிகள் அற்ற இந்தியா கிடையாது. முதலாளிகள் தர்ம பிரபுக்களாக நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை.

 முதலாளிகளிடம் இருந்து தொழிலாளர்கள் 100 ரூபாய் கூலி உயர்வு கேட்டால் கடுமையான போராட்டங்கள் நிகழ்த்தி முதலாளிகளைப் பணியவைத்து 100 ரூபாயையும் வாங்கிக்கொடுப்பது மார்க்சிய வழிபட்ட போராட்ட வழிமுறை. வெறும் 20 ரூபாயை வாங்கிக்கொடுத்துத் தொழிலாளர்களின் முதுகில் குத்திவிட்டு அதையே பெரும் புரட்சியாக சித்தரிப்பது காந்திய வழிபட்ட தூரோக போராட்ட வழிமுறை. நமக்கு இன்று தேவை மார்க்சிய வழிபட்ட போராட்ட வழிமுறையே அல்லாமல் காந்திய வழிபட்ட அயோக்கியத்தனமான முதலாளிகளின் காலை நக்கும் போராட்ட வழிமுறை அல்ல. டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் கூட மார்க்சிய வழிபட்ட போராட்ட முறைக்கு மாறினால் தான் அரசு அமைப்புக்கள் அதைப் பார்த்து அஞ்சும். முதலாளித்துவத்தின் இருத்தலுக்கே வேட்டுவைக்கும் போராட்டம் தான் தொழிலாளர்களின் விடுதலைக்கு இட்டுச்செல்லும்.

 எனவே இந்திய விவசாயிகளுக்குக் காந்தி செய்த மாபெரும் துரோகத்தின் ஒரு நூற்றாண்டு முடியும் நிலையில் நாம் தேர்ந்தெடுக்கும் போராட்ட வழிமுறை நக்கிப்பிழைக்கும் காந்திய வழியா? இல்லை எதிர்த்து நின்று அடிக்கும் மார்க்சிய வழியா? என்பதுதான்.

- செ.கார்கி

Pin It