தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் கொல்லப்பட்டவர்கள் சிந்திய குருதி காய்வதற்குள் படுகாயமடைந்தவர்களின் புண் ஆறுவதற்குள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி, எட்டுவழிச் சாலைக்காக நிலத்தைப் பறிகொடுக்கும் உழவர்கள் மீதும், இத்திட்டத்திற்கு எதிராகக் கருத்து ரைப்போர் மீதும் கொடிய அடக்குமுறைகளை ஏவி வருகிறது.

salem 8way roadபிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான “பாரத்மாலா திட்டத்தில்” ரூ.5.35 இலட்சம் கோடி செலவில், நாட்டின் 500 மாவட்டத் தலைநகரங்களைச் சாலை வழியாக இணைக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.10,000 கோடி செலவில் சென்னை-சேலம் இடையே 277.3 கி.மீ. தொலைவுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 70 மீட்டர் அகல 8 வழிச்சாலை அமைப்பதற்குத் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59.1 கி.மீ., திருவண்ணா மலையில் 123 கி.மீ., கிருட்டிணகிரியில் 2 கி.மீ., தரும புரியில் 56 கி.மீ., சேலத்தில் 36.3 கி.மீ. நீளத்திற்கு இந்த எட்டுவழிச் சாலை அமைய உள்ளது. இச்சாலை அமைப்பதற்காக 2350 எக்டர் (6800 ஏக்கர்) நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதன் விளைவாக 7,237 சிறு, சிறு நடுத்தர உழவர்கள் தங்கள் நிலத்தை இழந்து வெளியேற வேண்டியிருக்கும். 20,000 கூலி விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும். எண்ணற்ற கிணறுகள், பம்ப்செட்டுகள், உழவர் களின் வீடுகள், நீர்நிலைகள் அழிக்கப்படும்.

சென்னையிலிருந்து உளுந்தூர்ப்பேட்டை வழியா கவும், வேலூர் வழியாகவும் சேலம் செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு வழித்தடங்கள் நான்குவழிச் சாலைகளாக உள்ளன. இதுதவிர இரண்டு மாநில நெடுஞ்சாலை வழித்தடங்கள் இருக்கின்றன. தொடர் வண்டியில் ஜோலார்ப்பேட்டை வழியாகவும், விருத்தாசலம் வழியாகவும் செல்ல இருப்புப் பாதை உள்ளது. ஒரு மணிநேரத்தில் சேலத் திலிருந்து சென்னையைச் சென்றடைய வானூர்திப் போக்குவரத்தும் இருக்கிறது.

சேலம் மாவட்டத்தில் அரியானூர் தொடங்கி தருமபுரி மாவட்டத்தையொட்டியுள்ள மஞ்சுவாடி கணவாய் வரை உள்ள 37 கி.மீ. தொலைவுக்கு எட்டுவழிச் சாலை அமையுள்ள பகுதி முழுவதும் தென்னை, பாக்கு, மா ஆகியவற்றின் தோப்புகளும், நெல், கரும்பு, வாழை முதலானவை விளையும் வளமான வயல் களும் நிறைந்திருக்கின்றன. இந்த நிலங்கள் காவிரிப் படுகையின் நிலங்களைப்போல் வாழையடி வாழை யாக ஆற்றுநீர்ப் பாசனம் பெற்றவை அல்ல. கடந்த ஒரு நூறு ஆண்டுக்காலத்தில் இந்த உழவர்களும் இவர்களின் அப்பாமார்களும், பாட்டன்மார்களும் கடும் உழைப்பை நல்கி, அரும்பாடுபட்டு, காட்டை-மேட்டைத் திருத்திக் கழனியாக்கினார்கள். இந்த நிலம்தான் இவர்களின் மூச்சாகவும். உயிராகவும். வாழ்வாகவும் விளங்குகிறது.

சூன் மாதத்தின் தொடக்கத்தில் இந்த உழவர் களுக்கு எந்தவொரு முன்னறிவிப்பும் செய்யாமல், உழவர்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் எதுவும் நடத் தாமல், படையெடுப்பு நடத்துவதுபோல், நூற்றுக்கணக் கான காவல்துறையினருடன். வருவாய்த் துறை அதிகாரிகள் எட்டுவழிச்சாலை அமைப்பதற்காக உழ வர்களின் நிலங்களில் அளவீடு செய்து குறியீட்டுக் கற்களை நடும் வேலையில் ஈடுபட்டனர்.

கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தின் சொந்தக்காரர் களான ஆண்களும், பெண்களும், ஊரில் உள்ள மற்ற உழவர்களும் அரசின் நில அளவீட்டுப் பணியைக் கடுமையாக எதிர்த்தனர். கைகூப்பித் தொழுது இறைஞ்சினர்; அதிகாரிகளின் கால்களைப் பிடித்துக்கொண்டு மன் றாடினர்; நிலத்தில் புரண்டு அழுதனர்; தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு கதறினர்; சிலர் தம்மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றனர்; சிலர் தம் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முனைந்தனர். நிலத்துக்கும் உழவர்களுக்கும் இடையிலான உயிரான பிணைப்பைச் சற்றும் மதிக்காத வகையில், காவல் துறையினர், கையறு நிலையில் அழுது புலம்பிய உழவர்குடி ஆண்களையும், பெண்களையும் நிலத்தி லிருந்து அப்புறப்படுத்தியும், தளைப்படுத்தியும் வரு வாய்த் துறையினர் அளவீடு செய்து கல் நடும் பணியை முடிக்குமாறு செய்தனர்.

எட்டுவழிச் சாலையை அமைப்பதற்காக எடப்படி பழனிச்சாமியின் தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை, கருத் துரிமை, கூட்டம் நடத்தும் உரிமை முதலான சனநாயக உரிமைகளைத் தன்காலில் போட்டு நசுக்கும்படியான கொடிய ஒடுக்குமுறைகளை ஏவிவிடுகிறது. சல்லிக் கட்டுப் போராட்டம் தொடங்கி, நெடுவாசல், கதிரா மங்கலம், காவிரி ஆற்றுநீர் உரிமை, தூத்துக்குடி வரையிலான போராட்டங்களில் மக்கள் ஒரு இடத்தில் கூடுவதற்கு அனுமதித்ததால்தான் அவை மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களாக மாறின. மேலும் இப்போராட்டங்களில் சமூகச் செயற்பாட்டாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், மக்கள் அதிகாரம், புரட்சிகர சனநாயக இளைஞர் முன்னணி போன்ற பல்வேறு அமைப்புகள் கலந்துகொள்வதால்தான் மக்கள் தெளிவும் ஊக்கமும் பெற்று அஞ்சாமல் வலிமையுடன் போராடுகின்றனர் என்று எடப்பாடி ஆட்சி உறுதியாக நம்புகிறது. ஆதலால், இந்நிலையை முறியடிக்க முடிவு செய்தது.

எனவேதான், தூத்துக்குடியில் அமைதியாகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டு 13 பேரைக் கொன் றது. துப்பாக்கிக் குண்டு களைப் பாய்ச்சியும் தடியடி நடத்தியும் நூற்றுக்கணக் கானவர்களைப் படுகாயப்படுத்தியது எடப்பாடி ஆட்சி. 2002ஆம் ஆண்டில் குசராத்தில் கோத்ரா இரயில் பெட்டி எரிப்புக்குப்பின் அப்போது குசராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி, முசுலீம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமென்ப தற்காக, காவல் துறையின் துணையுடன் சங்பரிவாரங்களை ஏவி ஆயிரத்துக்கு மேற்பட்ட முசுலீம்களைக் கொன்று குவித்ததுடன், அவர்களின் வீடுகளும், சொத்துகளும் சூறையாடப் பட்டு பல ஆயிரம் முசுலீம்களை அகதிகளாக்கினார். “குசராத் இந்துத்துவத்திற்கான ஆய்வுக்கூடம்” என்று அப்போது கூறப்பட்டது. நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரான பின், “இந்தியாவையே இந்துத்துவத்தின் ஆய்வுக்கூடமாக” வேகமாக மாற்றி வருகிறார். இந்த வேலைத் திட்டத்தில் ஒன்றுதான் சங்பரிவாரங்களால் முசுலீம்களும், தலித்துகளும், தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, கவுரிலங்கேஷ் போன்ற பகுத்தறி வாளர்களும் கொல்லப்பட்டதாகும்.

இதுபோல், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி, கட்சி யிலும் ஆட்சியிலும் ஒரு சர்வாதிகாரிபோல் செயல்பட்ட செயலலிதாவையும் விஞ்சும் வகையில், தூத்துக் குடியை “அரச பயங்கரவாதத்திற்கான ஆய்வுக்கூட மாக” மாற்றினார். அதனால்தான் தூத்துக்குடியில் துப்பாக்கியால் சுடுவதற்கு ஆணையிட்டது யார் என்று கூறாமல் இருக்கிறார். துப்பாக்கிச்சூடு நடத்திய மே 22 அன்றிரவு முதல் தூத்துக்குடி நகரில் நூற்றுக்கணக்கான இளைஞர்களைக் கைது செய்து அவர்கள்மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளது, அ.தி.மு.க. ஆட்சி. ஸ்டெர்லைட் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் என்று அரசு கருதுகின்ற இயக்கத்தினரையும், தனிநபர்களை யும் கைது செய்துள்ளது. மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ஆறுபேர் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தளைப்படுத்தப்பட்டுள்ளனர். போராட்டக்குழுவுக்கு ஆலோசகராகச் செயல்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது செய்யப்பட்டார். உயர்நீதிமன்றம் பின்னர் இவரைப் பிணையில் விடுவித்துள்ளது. தூத்துக்குடி யில் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனை வழியிலேயே கைது செய்து சிறையில் அடைத்தது. எடப்பாடி அரசின் நடவடிக்கைகளின் நோக்கம் அரசுக்கு எதிராக எவரும் போராட முன்வரக்கூடாது; போராடுவோருக்கு எவரும் எந்தவகையிலும் ஆதரவு அளிக்கக்கூடாது என்று எச்சரிப்பதே ஆகும்.

நூறு நாள்கள் நடந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம் வெளியூர்களிலிருந்து வந்து ஊடுருவிய “சமூக விரோதிகளால்” தான் மாபெரும் மக்கள் திரள் போராட்டமாக வீறுகொண்டெழுந்தது என்று எடப்பாடி அரசு நம்புகிறது. எட்டுவழிச்சாலை அமைப்பதற்காக முதற்கட்டமாக நிலத்தை அளந்து கல் புதைக்கும் பணி நடக்கும்போது நிலத்தை இழக்கும் உழவர்கள் கடுமையாக எதிர்ப்பார்கள் என்பது அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்குத் தெரியும். எனவே நிலம் அளவீடு செய்யும் ஊரில் உள்ள உழவர்கள்கூட ஒன்றுதிரண்டு எதிர்க்க முடியாதவாறு காவல்துறை யினரைப் பெரும் எண்ணிக்கையில் குவித்து அச்சுறுத்தியது. அளவீட்டுப் பணியின்போது, நிலத்தின் உரிமையாளர் தவிர, மற்ற உழவர்களை நிலத்தின் அருகில்கூட வரவிடாமல் - அவர்களை அயலாராக - வெளியூர் ஆட்கள் போல் கருதி விரட்டியடித்தது.

செய்தியாளர்கள், தொலைக்காட்சி நிறுவன ஆள்கள் உள்ளிட்ட எவரும் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள ஊரில் உழவர்களைச் சந்திக்கவிடாமல் தடுத்தது. “சேலம் மக்கள் குழு”வின் சூழலியல் செயல்பாட் டாளர் பியூஸ் மனுஷ், போராளியாகத் திகழும் மாணவி வளர்மதி, சி.பி.எம். கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான், இயக்குநர் வ.கவுதமன் முதலானோர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்திக்க முயன்ற போது கைது செய்யப்பட்டனர். பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அன்பு மணி சேலம் மாவட்டத்தில் அவருடைய தொகுதிக்குட் பட்ட பகுதிக்குச் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்ற பின்னர் அவர் செல்லும் நிலை அவருக்கு நேரிட்டது.

சேலத்தில் மட்டுமின்றி, திருவண்ணாமலை மாவட்டத்திலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் கருத் தரங்கம் நடத்த முயன்றவர்கள், துண்டறிக்கை வழங்கியவர்கள், உழவர் சங்கத்தினர் என்று பல்வேறு தரப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“தி இந்து” வெளியீட்டுக் குழுமத்திலிருந்து மாதம் இருமுறை இதழாக ஆங்கிலத்தில் வெளிவரும் - 2018 ஆகத்து 3 நாளிட்ட “ஃபிரண்ட் லைன்” இதழில் “போலீஸ் ராஜ்” என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில், “இன்று தமிழ்நாட்டில், அரசுக்கு விரோதமாக மாறுபட்ட கருத்தைக் கூறுகின்றவர்கள் மீது சட்டத்தின் பேரால் கடும் நடவடிக்கை எடுக்கும் நிலை இருக்கிறது. சமூகச் செயற்பாட்டாளர்கள், வழக்கு ரைஞர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரி கையாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், பாதிக்கப்படும் உழவர்கள், அநீதி இழைக்கப்பட்ட குடிமக்கள் என எவராகயிருந்தாலும் எடப்பாடி பழனிச் சாமியின் தலைமையிலான அ.தி.மு.க. அரசின் நடவடிக்கைகளையோ, பெரும் கட்டுமானத் திட்டங் களையோ எதிர்த்துக் கேள்வி கேட்டால், அவர்மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 147 பிரிவு (கலவரம் செய்தல்) தொடங்கி தேசியப் பாதுகாப்புச் சட்டம் வரை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. எந்தவொரு அமைப்புடனும் எத்தகைய தொடர்பும் இல்லாதவர் களையும், சனநாயக நாட்டின் ஒரு குடிமகன் என்ற எண்ணத்தில் அரசின் மீதான அதிருப்தியைத் தெரி விப்பவர்களையும்கூட எடப்பாடி அரசு விட்டுவைப்ப தில்லை” என்று அ.தி.மு.க. ஆட்சி கட்டவிழ்த்து விட்டுள்ள அரச பயங்கரவாதத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளது.

இதேபோல், இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் மதிக்கப்படும் - மும்பையிலிருந்து வெளிவரு கின்ற “அரசியல் பொருளாதார வார ஏட்டில்” (Economic and Political Weekly) 2018 சூலை 14 நாளிட்ட இதழின் ஆசிரியவுரையில், அரசின் கட்டுமானத் திட்டங்களை எதிர்ப்பவர்களை எப்படியெல்லாம் அச் சுறுத்தி ஒடுக்கலாம் என்பதற்கு மற்ற மாநிலங் களுக்குத் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மக்களின் கருத்துரிமையை, வாழ்வுரி மையை, சனநாயக உரிமையை மறுத்து, ஒடுக்கு முறைகளை ஏவி, ரூ.10,000 கோடியில் அமைக்கப் படவுள்ள சென்னை-சேலம் எட்டுவழிச் சாலையால் ஏற்படக்கூடிய பயன்கள் 1, பயண நேரம் குறையும், 2. எரிபொருள் மிச்சமாகும், 3. சாலையோர தொழிற் சாலைகள் (Industrial Corridor) உருவாகும்; அதனால் வேலை வாய்ப்புகள் பெருகும். 4. வேளாண் விளை பொருள்கள் பெரிய நகரங்களுக்கு விரைவாகக் கொண்டு செல்ல முடியும். 5. சாலையில் ஊர்திகளின் நெரிசலைக் குறைக்கும் என்று தமிழக அரசின் சார்பில் கூறப்படுகிறது. இக்காரணங்கள் எந்த அளவுக்கு உண்மை என்றும், இதனால் யாருக்கு நன்மை என்றும் பார்ப்போம்.

முதலில், சென்னை-சேலம் எட்டுவழிச் சாலை தேவை என்று மக்களோ, மக்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத் திலோ கேட்கவில்லை; இது ஆளும் வர்க்கத்தால் திணிக்கப்படும் திட்டம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கு அய்ந்தாறு மணிநேரமாகிறது. சேலம் அரியானூரி லிருந்து சென்னை வண்டலுர் வரை அமைக்கப்படும் 277 கி.மீ. எட்டுவழிச் சாலையை 2.5 மணிநேரத்தில் பயணம் செய்யலாம் என்று முதலமைச்சர் பழனிச்சாமி 11.6.2018 அன்று சட்டமன்றத்தில் தெரிவித்தார். வண்டலூரிலிருந்து சென்னை நகருக்குள் செல்வதகு குறைந்தது 1.5 மணிநேரம் தேவைப்படும். மொத்தத்தில் பயண நேரம் இரண்டு மணிநேரம் குறைவதாகவே ஒத்துக் கொள்வோம். இதனால் யாருக்கு நன்மை? மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய மகிழுந் தில் பயணம் செய்ய வாய்ப்புள்ளவர்களுக்கே இது பயனாக இருக்கும். தமிழ்நாட்டு அரசுப் போக்கு வரத்துக் கழகங்களில் உள்ள பேருந்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை சாலையில் இயக்குவதற்குத் தகுதியற்ற வைகளாக இருக்கின்றன. நல்ல நிலையில் இருப்ப தாகச் சொல்லப்படும் அரசுப் பேருந்துகளால் நான்கு வழிச்சாலைகளில் கூட மணிக்கு 65 கி.மீ. வேகத் தைத் தாண்ட முடிவதில்லை. எனவே பேருந்தில் பயணம் செய்யும் பொது மக்களுக்கு நேரம் குறையும் என்பது வெற்று வாய்ச்சவடாலே! எட்டுவழிச்சாலை, மகிழுந்தில் செல்லக்கூடிய வசதி படைத்தவர்களுக்கும், இரவு நேரத்தில் சொகுசுப் பேருந்துகளை இயக்கும் தனியார் பேருந்து முதலாளிகளுக்கும் நன்மையும் இலாபமும் தருவதாக இருக்கும். இதற்காக, பொது மக்களின் வரிப்பணத்தில் ரூ.10,000 கோடியில் சாலை அமைக்க வேண்டுமா? என்று எவரும் கேள்வி கேட்கக்கூடாது என்று எடப்பாடி ஆட்சி அச்சுறுத்துகிறது.

ஆண்டிற்கு எரிபொருள் (டீசல், பெட்ரோல்) செலவு ரூ.700 கோடிக்கு மிச்சமாகும் என்று எட்டுவழிச் சாலையின் ஆதரவு அறிவாளிகள் கணக்குப் போட்டுச் சொல்கிறார்கள். ஊர்திகளுக்கான எரிபொருள் தேவை யில் 70 விழுக்காடு அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக, பெருந்தொகை அந்நியச் செலாவணியாக ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில், மக்கள் நலனில் உண்மையான அக்கறையுள்ள ஒரு அரசு, தனியொருவர் அல்லது அவரின் குடும்பத்தினர் பயணம் செய்வதற்கான மகிழுந்து தயாரிப்பைக் குறைத்து, பொது மக்கள் பயணம் செய்யும் பேருந்து களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். ஆனால் இந்தியாவிலோ இது தலைகீழாக இருக்கிறது. பெரு முதலாளிகளுக்குக் கொள்ளை இலாபம் தரும் மகிழுந்து உற்பத்திக்கே அரசுகள் முதன்மை தந்து பலவகை யான சலுகைகளை அளித்து வருகின்றன. மகிழுந்து களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், சென்னை போன்ற பெருநகரங்களில் உச்சக்கட்ட பயண நேரங் களில் மணிக்கு அய்ந்து கி.மீ. கூட கடக்க முடிய வில்லை. எட்டுவழிச் சாலையில் மட்டும் எடப்பாடி சொல்வது போல் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்வதால் மக்களுக்கு என்ன பயன்?

வேளாண் விளைபொருள்களை எட்டுவழிச் சாலை மூலம் விரைவாக எடுத்துச் செல்ல முடியும் என்று கூறுவதைப் போல பித்தலாட்டம் வேறொன்று மில்லை. எட்டுவழிச்சாலை நெடுகிலும் இருபுறமும் மதில்சுவர் எழுப்பப்பட உள்ளது. 277 கி.மீ. தொலை வுள்ள இச்சாலையில் நான்கு இடங்களில் மட்டுமே நகரங்களுடனான இணைப்புச் சாலை இருக்கும். இந்நிலையில் சிற்றூர்களிலிருந்து வேளாண் விளை பொருள்களை இச்சாலைக்கு எப்படிக் கொண்டுவர முடியும்? சிற்றூர்களுக்கும் அருகில் உள்ள நகரங் களுக்கும் இணைப்புப் பாலமாக இருப்பது இருசக்கர வாகனங்கள்தாம். ஆனால் எட்டுவழிச் சாலையில் இரு சக்கர வாகனங்கள், டிராக்டர்கள், மாட்டு வண்டிகள், கால்நடைகள் ஆகியவற்றுக்குத் தடைவிதிக்கப்பட் டுள்ளது என்பதிலிருந்தே இது நகர்ப்புற பணக்காரர் களுக்கான சாலை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

எட்டுவழிச்சாலையையொட்டி தொழிற்சாலைகள் அமையும்; அதனால் வேலை வாய்ப்புப் பெருகும் என்பது பொய் என்பதை சென்னை - மதுரை நான்கு வழிச் சாலையும், சென்னை - பெங்களூர் ஆறுவழிச் சாலையும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன. வாஜ் பாய் ஆட்சிக் காலத்தில் பெரும் விளம்பரத்துடன் தங்க நாற்கர சாலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் எந்தவொரு பகுதியிலும் தொழில் வளர்ச்சியோ, வேலை வாய்ப்போ உண்டாகவில்லை. தமிழகத்தில் தொழில் நகரங்களாகக் கருதப்படும் கோவை, மதுரை, சிவகாசி, தூத்துக்குடி, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் நான்குவழிச் சாலைகள் அமைவதற்கு முன்பே தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. அரசின் முயற்சியால் பல இடங்களில் தொழிற்பேட் டைகள் அமைக்கப்பட்டமை இதற்கு உறுதுணையாக இருந்தது.

நரேந்திரமோடி 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தரப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதன்படி இந்த நான்கு ஆண்டுகளில் 8 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை 50 இலட்சம் புதிய வேலை வாய்ப்பு கூட உண்டாகவில்லை. மாறாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரக்கு - சேவை வரி அமலாக்கம் ஆகியவற்றால் கடந்த ஓராண்டில் தமிழகத்தில் மட்டும் 50,000 சிறுகுறு தொழில்கள் அழிந்துபோயின. 5 இலட்சம் பேர் வேலை இழந் துள்ளனர் என்று சட்டமன்றத்திலேயே தெரிவிக்கப் பட்டது. திருப்பூர் போன்ற நகரங்களில் பத்து பேருக்கு வேலை தரும் அளவில் தொழில் நடத்தியவர்கள் இன்று கூலியாள்களாகிவிட்டனர். இந்நிலையில் பல்லாயிரக்கணக்கில் வேலை தரும் வேளாண் நிலங்களை அழித்து எட்டுவழிச் சாலை அமைப்பது கொடுமையல்லவா?

எட்டுவழிச் சாலை அமையவுள்ள நிலப்பகுதியில் 6,400 மரங்கள் மட்டுமே வெட்டப்படும் என்றும், வெட்டப்படும் ஒரு மரத்திற்கு ஈடாக பத்து மரங்கள் நடப்படும் என்றும் சொல்லப்படுகிறது. 10 இலட்சம் மரங்கள் வெட்டப்படவுள்ளன என்று சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். பல ஆண்டுகளாக ஓங்கி வளர்ந்துள்ள மரங்களையும் வளமான வயல்ளையும் அழிக்கும் இச்சாலைக்குப் பசுமை வழிச்சாலை என்று பெயரிட்டிருப்பது பெருங்கொடுமையாகும். இவ்வாறு பல இலட்சம் மரங்கள் வெட்டப்பட்டு அமைக்கப்பட்ட சென்னை-மதுரை, சென்னை-பெங்களூர் நான்கு வழிச் சாலைகள் பொட்டல் வெளியாகக் காட்சியளிக் கின்றன. ஆனாலும் அரசு தொடர்ந்து அதே பொய்யைச் சொல்லிக் கொண்டேயிருக்கிறது. எட்டுவழிச் சாலைக் காக 300 ஏக்கர் அடர்ந்த காட்டுப் பகுதி அழிக்கப்பட வுள்ளது.

உழவரின் தலையைக் கோடாரியால் இரண்டாகப் பிளப்பதுபோல், உழவரின் நிலத்தை எட்டுவழிச் சாலைப் பிளக்கும். அதனால் அழிக்கப்படும் கிணறுகள் போக எஞ்சிய கிணறுகளில் பல பாதையின் ஒரு புறமும், அவற்றால் பாசனம் பெற்ற நிலம் மற்றோர் புறமும் இருக்கும். அந்நிலையில் வேளாண்மை செய்வது எப்படி? பாதையின் இருபுறமும் நிலம் அமைந் துள்ள நிலையில் இடுபொருள்களை, விளைபொருள் களை எப்படி எடுத்துச் செல்லமுடியும்? 277 கி.மீ. தொலைவுக்கு 22 இடங்களில் மட்டுமே கீழ்வழிச்சா லைகள் அமைக்கப்படவுள்ளன. நிலத்தை மட்டுமின்றி, ஊர்களை, மக்களை எட்டுவழிச் சாலைப் பிளவு படுத்துகிறது.

எதற்காக 8 வழி சாலை?

எட்டுவழிச் சாலையின் உண்மையான நோக்கம், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேடியப்பன் - கவுத்தி மலை, சேலத்தில் உள்ள கஞ்சமலை, சேர்வராயன் மலை, உள்ளிட்ட பல மலைப் பகுதி களில் உள்ள இரும்பு, பாக்சைட், மாங்கனீசு முதலான கனிமங்களை வெட்டியெடுத்து, அவற்றைப் பெரிய பெரிய ஊர்திகளில் துறைமுகத்துக்கு விரைவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே ஆகும். இதற்காக ஜிண்டால் நிறுவனம் எட்டுவழிச் சாலைக்கு 75 விழுக்காடு நிதி உதவி அளிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் நான்குவழி - ஆறு வழி - எட்டு வழிச் சாலைகளின் முதன்மையான நோக்கம் முதலாளிய நிறுவனங்களின் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்களைத் தொழிற்சாலைகளுக்கு விரைவில் கொண்டு வருவதும் உற்பத்தி செய்த இருசக்கர வாகனங்கள், மகிழுந்து, கணினி, தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனங்கள் போன்றவற்றைப் பாது காப்பாகவும், விரைவாகவும் நகரங்களுக்கு எடுத்துச் செல்வதும் ஆகும். எனவே இச்சாலைகள் முதலாளிகளின் சுரண்டலுக்கும், கொள்ளை இலாபத்துக்கும் வழியமைப்பனவாகும். இச்சாலைகளின் சுங்கச்சாவடி களில் தனியார் நிறுவனங்களின் வரிக்கொள்ளை நடக்கிறது.

சிற்றூர்களிலும், நகரங்களிலும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒருவழிச்சாலைகள், இருவழிச் சாலை கள் கடந்த பல ஆண்டுகளாகக் குண்டும் குழியுமாகச் சீரழிந்து கிடக்கும் நிலையில், ரூ.10,000 கோடியில் எட்டுவழிச் சாலை ஏன் என்று கேட்போரை வளர்ச்சிக்கு எதிரானவர்கள், சமூக விரோதிகள், தேச விரோதிகள், நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்தி அ.தி.மு.க. ஆட்சி ஒடுக்குகிறது. ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைகளை மென்று விழுங்கியே வரலாற்றில் மக்கள் நாயகம் வென்று வந்திருக்கிறது. இன்றைய ஆட்சியாளர்களுக்கும் இது ஓர் எச்சரிக்கை!

Pin It