“தொண்ணூறு வாக்குகளுக்காக நன்றி!” மணிப்பூர் மாநிலத்தின் முதல்வர் இபோபி சிங்கிற்கு எதிராகப் போட்டியிட்டு தோல்வியடைந்த அந்தப் பெண் வேட்பாளர், கலங்கிய கண்களுடன் இப்படிச் சொன்னபோது சர்வதேச ஊடகங்களும் சில வினாடிகள் ஸ்தம்பித்துதான் போயிருந்தன.

மணிப்பூரில் செயல்படுத்தப்பட்டிருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிராக, கிட்டத்தட்ட பதினாறு ஆண்டுகளுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு, சர்வதேச ஊடகங்களால் ‘இரும்புப் பெண்மணி’ எனப் பெருமையோடு அழைக்கப்பட்ட இரோம் ஷர்மிளாதான் மேற்சொன்ன வார்த்தைகளுக்கு உரித்தான அந்த வேட்பாளர்... பதினாறு ஆண்டுகால அறவழிப் போராட்டத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவு செய்துவிட்டு, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கட்சி தொடங்கி, களம் கண்ட இரோம் ஷர்மிளாவின் இத்தகைய கடும் தோல்வியினை எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

irom sharmila 407

கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் 2 அன்று, மணிப்பூரின் மலோன் எனுமிடத்தில் பேருந்துக்காக நின்றிருந்த அப்பாவி பொதுமக்கள் பத்து பேரை அசாம் துப்பாக்கி படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமது அன்றாட வேலைகளுக்காக போய்க் கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள். கொல்லப்பட்டவர்களில் 1988-ம் ஆண்டில் சிறார் வீரதீர செயல்களுக்கான தேசிய விருதைப் பெற்ற 18 வயது சினம் சந்திரமணி சிங்கும், அவரது சகோதரர் ராபின் சிங்கும், ஒரு 68 வயது மூதாட்டியும் அடக்கம்.

எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகாத அப்பாவிப் பொதுமக்களை காக்கை குருவிகளைப் போல சுட்டுக் கொன்ற அந்த சிப்பாய்கள் மீது பெயரளவுக்கு ஒரு விசாரணை கூட செய்யப்படவில்லை. மணிப்பூரில் நிலவும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின்படி, சந்தேகிக்கும் எவரையும் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாக்கிக்கொள்ளலாம் என்கிற கொடுமையான அந்த சட்டத்திற்கு எதிராகவும், இறந்த பத்து உயிர்களுக்கு நீதி வேண்டியும், அந்தப் படுகொலை நடந்த மூன்றாம் நாள் தனது உண்ணாவிரத அறப்போராட்டத்தினை தொடங்கிய இரோம் ஷர்மிளாவின் பயணம் கடுமையான இடர்ப்பாடுகளுக்கு இடையில் பதினாறு ஆண்டுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டது.

உண்ண மறுத்த இரோமை ‘தற்கொலை தடுப்பு சட்டப்பிரிவின்’படி சிறையில் அடைத்தனர், மிரட்டிப் பார்த்தனர், எவ்வளவோ அழுத்தங்கள் கொடுத்தனர், வாய் வார்த்தைகளாக பல்வேறு வாக்குறுதிகளும் கொடுத்தனர்... ஆனால், “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்ட”த்தினை நீக்கும் வரையில் ஒரு வாய் உணவைக்கூட உட்கொள்ள மாட்டேன் என்பதில் தீர்மானமாக இருந்தார் இரோம். உணவை உட்கொள்ள மறுக்கும் இரோம் ஷர்மிளாவை சிறையிலடைத்து என்ன செய்வது?

பட்டினி கிடந்து உயிர் போனால் அரசுக்குத்தான் சிக்கல்.. கைது செய்யப்பட்ட இரோமை, மருத்துவமனையில் அடைத்து வைத்து வலுக்கட்டாயமாகத் திரவ உணவை மூக்கின் வழியாகச் செலுத்தினர். மேலும், தற்கொலை தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் ஒரு நபரை, அதிகபட்சம் ஓராண்டு மட்டுமே சிறையிலடைக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்யப்பட்டதும், அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவார். உடனே, அரசு அவரை மீண்டும் கைது செய்து, மருத்துவமனை சிறையில் அடைத்து வந்தது. அந்த சட்டப்பிரிவு கடந்த ஆண்டு நீக்கப்பட்டபிறகு இரோம் சர்மிளா மீது வேறு ஏதாவது பிரிவின கீழ் வழக்கு போட்டு மீண்டும் சிறையில் அடைத்தனர்.

மூக்கில் குழாய் சொருகப்பட்ட இரோமின் புகைப்படம் உலக பிரசித்தம்... ஒருவேளை இரோம் ஷர்மிளா பட்டினியால் உயிர் நீத்தால், ஆயுதப்படை சட்டத்தைப் பற்றி பலரும் கேள்வி எழுப்புவார்கள் என்கிற அச்சத்தின் விளைவால் மணிப்பூர் அரசு இரோம் உயிர் வாழ்வதில் அதிக சிரத்தை எடுத்து வந்தது என்பதுதான் உண்மை..

இரோம் சர்மிளா, இம்பாலின் நடுத்தர வர்க்க குடும்பத்தின் ஒன்பது குழந்தைகளில் கடைசி குழந்தையாகப் பிறந்தவர். சர்மிளாவின் தந்தை இரோம் நந்தா ஒரு கால்நடை மருத்துவ உதவியாளர். சிறு வயது முதலாகவே புரட்சியாளர்கள் கதைகளை செவி வழியாகக் கேட்டு வளர்ந்த பெண் அவர். மணிப்பூரில் ஆயுதப்படையின் அடக்குமுறைகளை நேரடியாகவே அனுபவித்து வந்த இரோம் மனதில் எப்போதும் ஒரு கோபக்கனல் கனன்றுகொண்டே இருந்தது.. இறுதியில் மலோன் படுகொலைதான் அந்த நெருப்பிற்கு எண்ணெய் வார்த்தது.

மலோன் படுகொலைகளுக்குப் பின்னர், தன் தாயின் ஆசீர்வாதம் பெற்ற பிறகே தனி மனுஷியாக அந்த வரலாற்றுப் போராட்டத்தைத் தொடங்கினார். உண்ணாவிரதத்தின் தொடக்கத்தில், அதனை காலையில் தொடங்கி மாலையில் முடித்துக் கொள்ளும் ஒரு சம்பிரதாய போராட்டமாகவே பலரும் பார்த்துவந்தார்கள்... ஆனால், ஒவ்வொரு நாளும் கழிந்த பிறகுதான், இரோமின் போராட்டத் தீவிரத்தை பலரும் உணர்ந்தனர். மெல்ல அவருக்கான ஆதரவு பெருகி, ஊடக வெளிச்சம் பட்டபோதுதான் மணிப்பூர் அரசு சுதாரித்து இரோமைக் கைது செய்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டு, அரசியல் பயணத்தை தொடங்கப்போவதாக அறிவித்த இரோமின் அறிவிப்பை எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

“நான் உயிரோடு இருக்கணும்... வாழனும்... காதலிக்கணும், திருமணம் செய்து கொள்ளனும்... ஆனால், ஆயுதப்படைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கப்பட்ட பிறகு இதெல்லாம் நடக்கணும்.. இன்றைக்கு இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மட்டும்தான் நிறைவு செய்திருக்கிறேன்... என் போராட்டம் வேறுவிதமான வழிகளில், என் இலக்கை அடையும்வரையிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்!” கடந்த ஆண்டு டெல்லி நீதிமன்ற வளாகத்தில் இப்படியோர் அறிவிப்பை வெளியிட்ட இரோமின் கண்களில் நம்பிக்கை மிளிர்ந்தது.

உடனே கட்சி தொடங்கப்பட்டு, பல்வேறு சமூக ஆர்வலர்களும் மணிப்பூர் சட்டமன்றத் தொகுதிகளில் களம் கண்டனர். மாநிலத்தின் முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து தௌபால் தொகுதியில் போட்டியிட்ட இரோம் ஷர்மிளா பெற்ற வாக்குகள் வெறும் தொண்ணூறு மட்டுமே... பதிவான வாக்குகளில் வெறும் 0.33% வாக்குகளை மட்டுமே அவரால் பெறமுடிந்தது.

உலக அளவில் பரிச்சயமான ஒரு பெண் போராளியால், ஏன் கணிசமான வாக்குகளைக்கூட மணிப்பூரில் பெறமுடியவில்லை? என்கிற கேள்விக்கு ஆயிரம் விதமான யூகங்கள் மட்டுமே விடைகளாகக் கிடைக்கின்றன...

பலதரப்பட்ட பணம் படைத்த முதலாளிகளுக்கு மத்தியில், சைக்கிளில் சென்று வாக்குகளைக் கேட்ட இரோமின் வாக்கு சேகரிக்கும் யுத்தி எடுபடாமல் போனது என்கிறார்கள்.. ஒரு துண்டுப்பிரசுரம் கூட அடித்து விநியோகிக்க இரோம் மறுத்துவிட்டார்... தனது போராட்ட வாழ்க்கையும், மக்களின் உரிமைகளுக்காக பதினாறு ஆண்டுகள் கொடுக்கப்பட்ட குரலுமே தன்னை வெற்றிபெறச் செய்யுமென தீர்க்கமாக நம்பினார். அதுமட்டுமில்லாமல், திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்துகொண்ட இரோமின் முடிவை அவரது ஆதரவாளர்கள் பலருமே விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இலக்கினை எட்டுவதற்கு முன்பே, போராட்டப் பயணத்தை திசை திருப்பிய மகளை, இரோமின் தாயாரே நேரில் சந்திக்க மறுத்துவிட்டதாக இரோமின் சகோதரர் கூறுகிறார்.

இப்படி காரணங்கள் பலவிதமாக அடுக்கப்பட்டாலும், இரோம் போன்ற ஒரு மன உறுதிகொண்ட போராளியை இந்தத் தோல்வி சற்று தடுமாறச் செய்துவிட்டது என்பது மட்டும் உண்மை.

“இனி எந்தக் காலத்திலும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை” என்று தேர்தல் முடிவு வெளியானபிறகு கலங்கிய கண்களுடன் சொன்ன இரோமின் வார்த்தைகளில் வலிகள் மட்டுமே தெரிந்தது.

“சிறிது காலம் மணிப்பூரை விட்டு விலகியிருக்க விரும்புகிறேன். மனதிற்கும் உடம்பிற்கும் சில காலம் ஓய்வு தேவைப்படுகிறது!” என்று கேரளத்தில் அட்டப்பாடியில் சிகிச்சை எடுக்கச் சென்றிருக்கும் இரோமின் முடிவு, அடுத்த போராட்டத்திற்கான தொடக்கமாக அமையும் என்ற நம்பிக்கை நிச்சயம் பொய்க்காது.

போராளிகள் தோற்கலாம்... போராட்டங்கள் தோற்பதில்லை! ஆம்... அந்த தொண்ணூறு வாக்குகள் நிச்சயம், முன்னிருந்த வேகத்தைக் காட்டிலும் அதிக உத்வேகத்துடன் இரோம் ஷர்மிளாவை செயல்பட வைக்கும் என்று நம்புவோம்!

- விஜய் விக்கி

Pin It