Tamilanban and varadharajan

‘பாரதி புத்தகாலய’த்தின் புதிய விற்பனை மையம், சென்னை தேனாம்பேட்டையில் கடந்த வியாழனன்று (அக்.20) தொடங்கப்பட்டது. இவ்விழாவில் சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், “இரண்டு வாரங்களாக எந்த ஒரு நூலையும் படிக்காத ஒரு மனிதரின் உரையாடலில் எந்த நறுமணமும் கமழ்வதில்லை” என்ற ஒரு சீன அறிஞரின் மேற்கோளைச் சுட்டிக்காட்டி, புத்தகங்களின் மேன்மையை விவரித்தார். மேலும், “அமெரிக்காவிலும் வாசிப்புக்கு இன்னமும் முக்கிய இடம் இல்லை. அங்கே, விடுமுறை நாட்களில் புதிய புத்தகங்களைப் படிக்கும் மாணவர்களுக்கு அரும்காட்சியகம் செல்ல மாநில ஆளுநர் சிறப்பு அனுமதி கொடுப்பதோடு அவர்களோடு அமர்ந்து விருந்தும் உண்பார். இங்கேயும் ஏன் அப்படி வாசிப்பை வளர்த்தெடுக்கும் முயற்சி எடுக்கக்கூடாது” என்று கேட்டார். “கேரளம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் வாசிப்புக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. கேரளத்தில், படிப்பது என்பது அன்றாட அலுவல் காய்கறி வாங்குவது போல. இங்கும் அப்படியான நிலையை உருவாக்க வேண்டும். இன்றைய காலச்சூழலில், ஆதிக்க சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில், அறிவுக் களத்தில், படைப்புத் தளத்தில் முற்போக்கு சக்திகள் இணைந்து செயல்படவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

பாரதி புத்தகாய புதிய விற்பனை மையத்தைத் தொடங்கி வைத்த, மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என். வரதராஜன், “வாசிப்பு மனிதரைப் பண்படுத்தும்” என்ற கருத்தை வலியுறுத்திப் பேசினார். மேலும், “வறுமையின் கொடுமை தாங்காது துடிக்கும் கிராம மக்கள் நகரை நோக்கி பிழைப்புக்கு வருவதும், சாமான்யர்களின் பிரச்சினைகளின் மீது ஆளும் வர்க்கம் அக்கறை செலுத்தாமல், தனது அதிகார போதையில் ஆட்டம் போடுவதும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. சமூக மாற்றத்திற்கான பணியில் ‘பாரதி புத்தகாலயம்’ பெரும் பணியைச் செய்துகொண்டிருக்கிறது. பொதுவான களத்தில் மற்றவர்களோடு இணைந்தும் சுயேச்சையாகவும் தனது பணியினைச் செய்யும். பலதுறை சார்ந்த நூல்களும், பல அறிஞர்களின் சிறந்த உரைகளும் நூலாக வெளியிட்டிருப்பது பெரு மகிழ்ச்சியளிக்கிறது. சீரழிந்த கலாச்சாரங்களிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் பணியில் பாரதி புத்தகாலயம் தொடர்ந்து செயலாற்றும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பாரதி புத்தகாலய பொறுப்பாளர் ஜி. ராமகிருஷ்ணன் தமது தலைமை உரையில், “தமிழ்ப் பதிப்புலகில் தனி முத்திரையினைப் பதித்துள்ளது பாரதி புத்தகாலயம். சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் தீங்குகளுக்கும் அவலங்களுக்கும் எதிரான எழுத்துக்களைத் தொடர்ந்து அது பதிப்பிக்கும். ‘பாரதி 100’ நூல் முயற்சியின் மூலம் நிறைய புதிய படைப்பாளிகள் உருவாகி இருக்கிறார்கள். அடுத்து ‘குழந்தைகள் தின’ சிறப்பு வெளியீடுகள் வரஉள்ளன. அர்ப்பணிப்போடு செயல்படும் இந்த இயக்கத்திற்கு ஆதரவு தாரீர்” என்று கேட்டுக் கொண்டார்.

Devendram Poobathi

இவ்விழாவில் பாரதி புத்தகாலயத்தின் ஐந்து புதிய நூல்கள் வெளியிடப்பட்டன. பேராசிரியர் அ. மங்கை எழுதிய ‘எதிரொலிக்கும் கரவொலிகள், அரவாணிகளும் மனிதர்களே’ நூலை கண்ணாடி கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ப்ரியா பாபு வெளியிட பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன் பெற்றுக் கொண்டார். பத்மாவதி விவேகானந்தன் பேசுகையில், “ஆணின் கருத்தியல் சார்ந்த விவரிப்புகளால் பெண்கள் போலவும் அதைவிட மோசமாகவும் பாதிக்கப்படுபவர்கள் அரவாணிகள். அவர்களின் துயரநிலை மாறிவரும் சூழல் உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கது. அரவாணிகளோடு இணைந்து செயலாற்றும் பாங்கு தொடரவும், விளிம்பு நிலையில் வாழ்பவர்களை அரவணைக்கும் தன்மையை வளர்க்கவும் உழைப்போம்” என்றார். ப்ரியா பாபு, “எங்களை மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்க கேட்கவில்லை; பெண்களாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் கேட்கிறோம்” என்றார். நூலாசிரியர் அ. மங்கை தனது ஏற்புரையில், “இந்நூல் அரவாணிகள் சமூகத்தின் மத்தியில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதோ என்கிற தவிப்பில் இருக்கிறேன். பாலியல் பிரச்சினை பற்றிப் பேசத் தயங்கும் சமூகம் மாற வேண்டும். அதற்காக நம்மை நாமே பரிசீலித்துக் கொள்ளவேண்டும்” என்றார்.

அர்ச்சனா பிரசாத் எழுதிய ‘சுற்றுச்சூழலும் வாழ்வுரிமையும்’ என்ற நூலை முனைவர் வெ. பா. ஆத்ரேயா வெளியிட்டுப் பேசுகையில், ‘மூலதனத்தின் முதல் தொகுதியில், வேளாண்மை பற்றிய அத்தியாயத்தில் காரல் மார்க்ஸ், நிலத்தையும் உழைப்பாளியையும் சிதைத்துத்தான் முதலாளித்துவம் வளத்தைப் பெருக்குகிறது’ என்று குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார். ‘இதர விஷயங்களில் காட்டும் அக்கறையை இடதுசாரி அமைப்புகள் சூழலியல் குறித்து காட்டுவதில்லை என்று கூறப்படும் அதே வேளையில் ஒரு பொருள் முதல்வாதப் பார்வையில் சூழலியலாளர்கள் விஷயங்களைப் பார்ப்பதில்லை என்பதும் உண்மை’என்றார். ‘இந்த நூல் ஆழ்ந்த வாசிப்புக்கும், விமர்சனக் கண்ணோட்டத்திற்கும் உரிய நல்ல முயற்சி, மிகச்சிறந்த மொழிபெயர்ப்பும்கூட’என்று பாராட்டினார். இந்நூலை தமிழ்நாடு அறிவியல் இயக்க பொதுச்செயலாளர் சி ராமலிங்கம் பெற்றுக்கொண்டார்.

‘உ.வே.சா. -_ சமயம் கடந்த தமிழ்’ என்ற சு. வெங்கடேசன் எழுதிய நூலை வெளியிட்ட பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியம், “பலநூறு பக்கங்கள் கொண்ட தமிழ்ப் பேரறிஞரின் சுய சரிதையிலிருந்து விஷயங்களை நுணுகி ஆராய்ந்து வாசித்து உள்வாங்கி 32 பக்கத்தில் இத்தனை எளிமையான அறிமுக நூலை எழுதியிருக்கிறார்” என்று நூலாசிரியரைப் பாராட்டினார். தீவிர சைவ மடத்தின் ஆதரவில் தமிழ் படித்து வளர்ந்த உ.வே.சா, சேலம் ராமசாமி முதலியாரின் பரிச்சயத்திற்குப் பிறகுதான் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை ஆகிய சமண, பவுத்த நூல்களைக் கற்கிறார். சமண அறிஞர்களிடம் கேட்டறிந்தவற்றைக் கொண்டு தான் சீவகசிந்தாமணிக்கு உரை எழுதிப் பதிப்பிக்கவும் செய்கிறார். உ வே சா-வைப் படிக்காமல் தமிழ் இலக்கியங்களைப் படிக்க முடியாது” என்றார் அவர். இந்நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இயக்குநர் ஆர். ராதாகிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்டார்.

இரா துரைப் பாண்டியன் தொகுத்த ‘உலக இலக்கிய வரிசை - 1’ என்ற சிறுகதைத் தொகுப்பை, கவிஞர் தேவேந்திரபூபதி வெளியிட்டு பேசுகையில், “மிகச்சிறந்த கதைகளின் நல்ல மொழிபெயர்ப்பு இது” என்று பாராட்டினார். இந்நூலினை ‘பாரதி புத்தகாலய’ பொறுப்பாளர் ஜி. ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

Bharathi puthakalayam

ஓவியர் புகழேந்தியின் ‘மேற்கு வானம்’ நூலை, தீக்கதிர் -பொறுப்பாசிரியர் சு.பொ. அகத்தியலிங்கம் வெளியிட்டார். அவர் பேசுகையில், “சங்பரிவார் முன்வைக்கும் ஒற்றைப் பண்பாட்டுக்கு எதிரான, பன்முகப் பண்பாட்டுப் பார்வைக்கு சொந்தக்காரர் ஓவியர் புகழேந்தி. மேற்கின் மிகச்சிறந்த ஓவியர்களைக் குறித்த எழுத்தோவியத்தையும் இவர் சிறப்பாகவே வரைந்திருக்கிறார்” என்றார். இந்நூலை வங்கிஊழியர் சம்மேளன பொறுப்பாளர் ஆறுமுக நயினார் பெற்றுக் கொண்டார். நூலாசிரியர் புகழேந்தி எளிய ஏற்புரை நிகழ்த்தினார். 

முன்னதாக, பாரதி புத்தகாலய மேலாளர் க. நாகராஜன் தனது வரவேற்புரையை “வாசிப்பை இயக்கமாக்குவோம், சிந்தனையை ஆயுதமாக்குவோம், புது உலகம் படைப்போம்” என்ற பிரகடனத்துடன் தொடங்கியவர், தமிழ்ப் பதிப்புலகம் மேலோட்டமாகப் பார்க்கையில் பிரும்மாண்டமாகத் தோற்றமளிக்கிறது. ஆனால், உண்மையில் அது சிக்கலில் தவிக்கிறது. இச்சிக்கலிலிருந்து மீள வாசகர்களின் ஆதரவு தேவை” என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில், பாரதி புத்தகாலய ஊழியர்களும், புத்தக வெளியீட்டின் அங்கமாக இருந்து ஒத்துழைத்து வருவோரும் கௌரவிக்கப்பட்டனர். நவபாரத் பதின்நிலைப் பள்ளி மாணவர்கள் இசைத்த தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விழா முடிவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க துணை பொதுச் செயலாளர் இரா.தெ. முத்துவின் நன்றியுரையோடு நிறைவு பெற்றது.

பெறுநர்
தலைமையாசிரியர் / முதல்வர்
அனைத்துப் பள்ளி முதல்வர்கள்

பள்ளி குழந்தைகளுக்கான கதைப் போட்டி

பாரதி புத்தகாலயத்தின் சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கான கதைப்போட்டி நடைபெற உள்ளது, இப்போட்டியில் தங்கள் பள்ளியின் சார்பில் மாணவ மாணவிகள் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்,

இப்போட்டி மூன்று பிரிவுகளாக நடைபெறும் 

முதல் பிரிவு : 5ஆம் வகுப்புவரை
இரண்டாம் பிரிவு : 6 முதல் 8வரை. 
மூன்றாம் பிரிவு : 8 முதல் 10 வரை.

நவம்பர் 3ஆம் தேதிக்குள் வரும் கதைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும். 
கதைகள் போட்டியில் பங்கேற்கும் மாணவரின் சொந்தக் கற்பனையாக இருக்க வேண்டும். 
ஒருவரே எத்தனைக் கதைகள் வேண்டுமானாலும் அனுப்பி வைக்கலாம். 
தேர்தெடுக்கப்படும் கதைகளுக்கு பரிசு வழங்கப்படும்.
சிறந்த கதைகளை பாரதி புத்தகாலயம் பதிப்பிக்கும்,

கதைகள் அனுப்ப வேண்டிய முகவரி: 
பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை - 600 018


தங்களன்புள்ள,
(க.நாகராஜன்)
மேலாளர்.

Pin It