இளைஞர்களின் இந்தப் போராட்டம் தனது இறுதி இலக்கை எட்டிவிட்டது. ஜல்லிக்கட்டு நடப்பதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனி எந்தத் தடையும் இன்றி ஜல்லிக்கட்டை நடத்திக் கொள்ளலாம். சரி அப்புறம். அப்புறம் என்ன அவுங்க, அவுங்க வேலையைப் பார்த்துகிட்டுக் கிளம்ப வேண்டியதுதான். வேற ஒண்ணுமே இல்லையா என்பவர்களுக்கு ஒரு வெளக்கமாறும் கிடையாது என்பதுதான் பதில். அப்படினா இந்த சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, தனித்தமிழ்நாடு, ஏகாதிபத்திய எதிர்ப்பு இன்னும் தங்கள் மனதுக்குள் நிறைவேறாமல் பல ஆண்டுகளாக வைத்திருந்த அபிலாசைகளை எல்லாம் போராட்டக்களத்தில் கோரிக்கையாக வைத்தவர்கள் நிலை? அந்தத் துயரத்தை இனி அவர்களே அவர்களின் சொந்த வாயால் சொல்வார்கள் என நாம் எதிர்பார்க்கலாம். கூட்டத்தைப் பார்த்தால் வாய் குளறலாம், ஆனால் சிந்தனை குளறக்கூடாது. ஆனால் கூட்டத்தைப் பார்த்த முற்போக்குச் சக்திகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட பல பேர் சிந்தனை தடுமாற்றத்தை அடைந்து விட்டார்கள்.

jallikattu protest chennai

ஜல்லிக்கட்டுக்காக கூடிய கூட்டத்தை வைத்தே இந்தியாவில் இன்ஸ்ட்டென்டாக ஒரு புரட்சி செய்து, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை கொண்டு வந்துவிடலாம் என மனப்பால் குடித்தவர்களும், கூட்டத்தில் இருந்த இளைஞர்களை அப்படியே நம்ம கட்சிக்கு தூக்கி வந்துவிடலாம் என்று களத்திலே போய் நின்றவர்களும், கொண்டுபோன பதாகைகளை மெரினாவில் போட்டுவிட்டு, ஓடும்படி காவல் துறையால் 'அனுப்பி' வைக்கப்பட்டிருக்கிறார்கள். எத்தனை எத்தனை அரசியல் கோரிக்கைகள் தமிழகத்தில் உள்ளதோ, அனைத்தையும் இந்தப் போராட்ட காலத்தில் வைத்துவிட்டார்கள். நமக்குத் தெரிந்து தமிழ்நாட்டை சாதி அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் தான் போராட்டக் களத்தில் வைக்கப்படவில்லை. ஜல்லிக்கட்டுக்காக உட்கார்ந்த கூட்டம் நாளாக, நாளாக நாட்டு மாடுகள் பாதுகாப்பு என்ற கோரிக்கையுடன் இயற்கை விவசாயம், சிறுதானிய உணவு, அழிந்து போன தன்னுடைய பால்யகால விளையாட்டுகள் என அனைத்தையும் நினைத்து, நினைத்து பொருமும் நிலைக்குச் சென்றது. பீட்டாவை தடை செய்வதன் மூலமும், ஜல்லிக்கட்டை நடத்துவதன் மூலமும் இழந்த தனது பழம் பெருமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க முடியும் என அது கனவு கண்டது.

ஆனால் போராட்டக்களத்தில் இருப்பவர்களின் நோக்கம் தெளிவானது. அது ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்பதுதான். அதைத் தாண்டி போராட்டக் களத்தில் எதிரொலித்த முழக்கங்கள் எல்லாம் வலுக்கட்டாயமாக இறக்குமதி செய்யப்பட்டவை. இப்போது அந்த முழக்கத்தைப் பார்த்துதான் பல முற்போக்குவாதிகள் ஏமாந்துகொண்டு இருக்கின்றார்கள். “ஜல்லிக்கட்டு மட்டும் வேண்டும் என்று போராட்டம் நடந்திருந்தால், நாங்கள் ஆதரித்து இருக்கமாட்டோம். ஆனால் மாணவர்களும், இளைஞர்களும் அதையும் தாண்டி இந்தப் போராட்டத்தை முன் எடுத்துச் செல்கின்றார்கள். எனவே நாம் கண்டிப்பாக இந்தப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்" என்றார்கள். நிச்சயமாக நாம் மாணவர்கள் போராட்டத்தை ஆதரிக்கலாம். அது ஒரு பொதுப் பிரச்சினையை ஒட்டிய போராட்டமாக இருந்தால், நாம் ஆதரிக்கலாம். ஆனால் ஜல்லிக்கட்டு அதன் தன்மையிலேயே பொதுத்தன்மை ஏதும் இல்லாதது, ஜனநாயகமற்றது. எனவே பெரியார் மற்றும் மார்க்சின் கொள்கைகளைக் கடைபிடிப்பதாய் சொல்பவர்கள் ஜல்லிக்கட்டை ஆதரிப்பது தொலைநோக்குப் பார்வையில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உறுதி.

பெரும்பான்மை மக்கள் ஜல்லிக்கட்டை விரும்புவதால் அதை ஆதரிக்காமல் இருப்பது அந்த மக்களுக்கு செய்யும் துரோகம் என சில பிழைப்புவாதிகள் அதற்கு விளக்கம் கொடுக்கின்றார்கள். அந்தப் பிழைப்புவாதிகளில் பல பேர் தேர்தல் பாதையை நிராகரிப்பவர்கள். புரட்சி செய்யப் போவதாய் சொல்லி வருபவர்கள். நாம் அவர்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். பெரும்பான்மையான மக்கள் விரும்புகின்றார்கள் என்று இன்று ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் இவர்கள், ஏன் பெரும்பான்மையான மக்கள் தேர்தல் பாதையை விரும்பினாலும், அதை நிராகரித்து புரட்சி செய்யப் போவதாய் சொல்லி கட்சி நடத்த வேண்டும்? தங்களை ஓட்டுப்பொறுக்கி அரசியலில் கரைத்துக் கொள்ள வேண்டியதுதானே. மக்கள் எதை வேண்டும் என்றாலும் விரும்புவார்கள். அவர்கள் கடவுளை விரும்புவார்கள், ஜோசியத்தை விரும்புவார்கள், பேய், பிசாசு, பில்லி சூனியத்தை விரும்புவார்கள். அதற்காக நாம் அவற்றை எல்லாம் ஆதரித்துவிட முடியாது. ஒரு தலைவனின் பணி என்பது மக்களிடம் உள்ள தவறான கருத்துக்களை, பழக்கவழக்கங்களை நீக்கி அவர்களை அறிவொளி பெற்ற சமூகமாக வளர்த்தெடுப்பதுதான். அதைவிட்டு கூட்டத்துடன் சேர்ந்து கோவிந்தா போடுவதில்லை.

இத்தனை லட்சம் மக்களின் போராட்டத்தால் வேறு எந்த பயனுமே ஏற்படவில்லையா என்றால் சில பயன்கள் ஏற்பட்டன. அதை மறுப்பதென்பது தேவையில்லாதது. பி.ஜே.பி மிக அவமானகரமான முறையில் தமிழகத்தில் அசிங்கப்பட்டது. எச்சிக்கலை ராஜா, சு. சாமி போன்ற மாட்டின் சிறுநீருக்குப் பிறந்தவர்கள் மலத்திலே முக்கி எடுத்து குளிப்பாட்டப்பட்டார்கள். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பீட்டாவின் கைக்கூலியான ராதா ராஜன் என்ற பார்ப்பன பொறுக்கிப் பெண் தமிழக மக்களால் காறி உமிழப்பட்டார். இது எல்லாம் மிகவும் மகிழ்ச்சியான சம்பவங்கள். (ஆனால் பி.ஜே.பியின் அலுவலகம், சங்கர மடம் பக்கம் செல்லாததில் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கின்றது) மேலும் அய்யா வெள்ளையன் அவர்கள் ஜனவரி 26 க்குப் பிறகு கோக், பெப்சி போன்றவற்றை கடைகளில் விற்பதில்லை என முடிவெடித்திருக்கின்றார். இது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். அதைக் கடைக்காரர்கள் செயல்படுத்துவார்களா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். காரணம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பாரபட்சம் இல்லாமல் அனைத்துக் கடைகளிலும் விற்கப்படுகின்றன. (வெள்ளையன் அவர்களுக்கு இது தெரியாது என நாம் நம்புவோம்) கோக், பெப்ஸி போன்றவை எப்படி உடலுக்குத் தீங்கானதோ, அதை விட பல ஆயிரம் மடங்கு தீமையானது புகையிலைப் பொருட்கள். எனவே இது போன்ற சில நல்ல சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன. இவை எல்லாம் போராட்டத்தின் மைய முழக்கத்தில் இல்லாதது. இருந்தும் நடைபெற்றது. ஒரு வேளை போராட்டம் நடைபெற்ற உடனேயே அனுமதி கொடுக்கப்பட்டிருந்தால் இதுவும் கூட நடந்திருக்குமா என்பது கேள்விக்குறி தான்.

போராட்டம் சுமந்துகொண்டிருக்கும் கரு என்பது ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர அனுமதி மட்டுமே. அதை பெற்றெடுத்தவுடன் அது தானகவே மலடாக மாறிவிடும். அதற்கு மேல் வேறு எதையும் இந்தப் போராட்டம் நமக்குத் தரப்போவதில்லை. இந்தப் போராட்டத்தை சிலர் அரபு வசந்தத்துடன் ஒப்பிடுகின்றார்கள். இரண்டுமே தன்மையிலும், கொள்கை அளவிலும் வேறுபட்டவை. சர்வாதிகார அரசுகளுக்கு எதிராக கடுமையான விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜனநாயக மறுப்பு போன்றவற்றுக்கு எதிராக அதையே மைய முழக்கமாக வைத்து போராடிய அரபு புரட்சியை சில குறிப்பிட்ட சாதிக்காரர்களின் சுய கெளரவத்தைக் காப்பாற்றுவதற்காக நடத்தப்படும் இந்தப் போராட்டத்துடன் ஒப்பிடுவது மிகவும் அபத்தமானதாகும். போராட்டத்தின் ஊடாக கட்டமைப்பட்ட பல கிளை முழக்கங்கள் எந்த வகையிலும் மைய முழக்கத்திற்குத் தொடர்பற்றவை. அவை எல்லாம் மைய முழக்கம் வெற்றி பெற உதவலாம். ஆனால் தன்னளவில் கிளை முழக்கங்கள் வெற்றிபெற நிச்சயம் உதவப்போவதில்லை. மைய முழக்கமே அபத்தமானதகாவும், ஜனநாயகத் தன்மையற்றும் இருக்கும் போது பாவம் கிளை முழக்கங்கள் வெற்றி பெறும் என நினைப்பது அறியாமையாகும்.

நாம் பெரியாரியவாதிகளையும், மார்க்சியவாதிகளையும் கேட்டுக் கொள்வதெல்லாம் தயவு செய்து போராட்டத்தை சரியாக மதிப்பிடுங்கள் என்பதுதான். போராட்டத்தின் ஊடாக அதைக் கைப்பற்றி நாம் நினைத்ததை எல்லாம் சாதித்துவிடலாம் என்ற வீண் கற்பனையில் இருந்து வெளியே வாருங்கள். ஒரு சாதிக்கட்சி போராட்டத்தில் உள்ளே புகுந்து சாதி எதிர்ப்பு கருத்துக்களைப் பேசி அவர்களை வென்றெடுக்க முடியும் என்று நினைப்பது எவ்வளவு அபத்தமோ, ஒரு மதவெறி பிடித்த கூட்டத்தில் உள்ளே புகுந்து மத எதிர்ப்புக் கருத்துக்களை பேசி ஒருவனை வென்றெடுக்க முடியும் என நினைப்பது எவ்வளவு அபத்தமோ, அதற்கு சற்றும் குறைந்தது இல்லை ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்கள் மத்தியில் அதில் ஜனநாயகம் வேண்டும் என்று சொல்ல வைப்பதும். இந்தப் போராட்டத்தை பல்வேறு இடங்களில் நடத்தும், தன்னை அரசியல் அற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இளைஞர்களுக்கு அதுபோன்ற எந்த கண்ணோட்டமும் இல்லை. அவர்களின் ஒரே நோக்கம் ஜல்லிக்கட்டு, அந்த ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கிய பீட்டா அமைப்பு அவ்வளவுதான். அப்பட்டமான சுயநலம் சார்ந்த கோரிக்கை இது. இதை நம்பி, தெளிந்த சித்தாந்தத்தை தன்னுடைய ஆயுதமாக கொண்டிருக்கும் அமைப்புகள் களத்தில் இறங்குவது உள்ளபடியே அதன் மதிப்பையும் நம்பகத்தன்மையும் குறைத்துவிடும். கூட்டத்தில் சேரும் நபர்களை வைத்து மதிப்பிடாமல் அதன் கொள்கைகளை வைத்தே நாம் மதிப்பிட வேண்டும். பொறுக்கித் தின்பது என்று முடிவு செய்துவிட்டால் நம்முடைய ஒவ்வொரு கேவலமான நடவடிக்கைகளுக்கும் நாம் நியாயம் கற்பிக்க ஆரம்பித்து விடுவோம்.

மாணவர்களின் போராட்டத்தை நாம் கொச்சைப்படுத்தவில்லை. தவறாக வழிநடத்தப்படுகின்றார்கள் என்பதுதான் நம் ஆதங்கம். ஒரு நியாயமான கோரிக்கையை ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்குமான கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ்வாறு கிளர்ந்து எழுந்து இருந்தால், நிச்சயம் அவர்களோடு தோளோடு தோள் நிற்பதில் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. போராட்டத்தில் வைக்கப்பட்ட 'ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதி' என்ற கோரிக்கையைத் தவிர மற்ற அனைத்து முழக்கங்களும் காற்றிலே கரைந்து போகப்போவதை அதை ஆதரித்தவர்கள் பார்க்கத்தான் போகின்றார்கள். பார்ப்பன எதிர்ப்புப் போராட்டமாக இதைச் சித்தரித்தவர்கள் நாளை முதல் மானமுள்ள தமிழ்மக்கள் பார்ப்பன கடவுள்களை புறக்கணித்து, நாட்டார் தெய்வ வழிபாட்டிற்குத் திரும்புவதையும் உத்திரவாதம் செய்வார்கள் என்பதையும் நாம் எதிர்பார்க்கின்றோம். ஜல்லிக்கட்டு சில ஊர்களில் நடந்து முடிந்துவிட்டது. சில பேர் ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டி உயிரிழந்துவிட்டார்கள். அதனால் என்ன? காளைகளை அடக்கும் வீரனுக்குத்தான் பெண் கொடுப்போம் என்கின்றது சங்க இலக்கியத்தின் கலித்தொகை. தாலியறுந்த பெண்ணுக்கு?

- செ.கார்கி

Pin It