மாணவர், இளைஞர்கள் நடத்திய எழுச்சிப் போராட்டம் குறித்து வெளி வந்த சில முகநூல் பதிவுகள்

ஜல்லிக்கட்டு ஆதரவு, பீட்டா எதிர்ப்பு என்பன இரண்டு நாட்களாக மத்திய அரசு எதிர்ப்பு, நரேந்திர மோடி எதிர்ப்பு என்பதாக உருப்பெற்றுள்ளது. நான் தொடர்ந்து சொல்லிவருவதைப்போல இது ஒரு கநனநசயட அரசமைப்பு என்பதை மறந்து எதேச்சதி காரத்துடன் செயல்படும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாக இன்று அது வடிவம் பெற்றுள்ளது. பல்வேறு விதமான மோடி எதிர்ப்பு முழக்கங்கள், நகைச்சுவை யாய், கவிதையாய், அரசியல் கூர்மை மிக்க தாய், சற்றே ஆபாசமாய்... வெகுமக்கள் தன்மையின் அனைத்து பலங்களுடனும், பல வீனங்களுடனும் ஆர்ப்பரிக்கும் முழக்கங்கள் தமிழக பா.ஜ.க தலைமையின் எதிர்கால ஆசைகளில் மட்டும் மண் வார்க்கவில்லை.. பா.ஜ.க பக்கம் சாய்ந்து பதவி, பணச் சுகம் காணலாம் எனத் தரகு வேலை பார்த்துவந்த தூதுவர்களின் ஆசைக்கும் ஆப்பு வைத்து விட்டது.                                   - அ. மார்க்ஸ்

அண்ணா ஒரு நிமிஷம்ணா...

ஆங்காங்கே கூடி நின்ற கும்பல்களில் ஒன்றினில் நான் நிற்க, அங்கே நூற்றுக் கணக்கான இளைஞர்கள் மத்தியில் இரண்டு பெண்கள் கோஷமிட்டு போராடிய வேளையில், திடீரென்று ஓரு பெண் குரலிட்டாள்‘அண்ணா ஒரு நிமிஷம்ணா. என் ஹேண்ட் பேக் (கைப்பை) மிஸ்ஸா கிடுச்சு. கோஷத்தை உடனடியாக நிறுத்திய இளைஞர்கள் சற்றே பதற்றமாக ‘ஏம்மா, நீ கவனிக்கலையா?’ ‘இல்லைங்கண்ணா, ஆபீசுலருந்து நேரா வந்தேன், லஞ்ச் பேக்லதான் இருந்துச்சு. மொபைல வெளிய எடுக்கறதுக்காக எடுத்தேன். திரும்ப உள்ள வச்சேனான்னு தெரியல’. ‘பணம் எதும் வச்சிருந்தி யாம்மா.’ ‘ஆமாணா, முன்னூறு நானூறு ரூபா இருக்கும். உள்ள என்னோட ஐடி கார்டும் இன்னொரு மொபைலும் இருக்குது.’ அப்போ உடனடியா அந்த மொபைலுக்கு ட்ரை பண்ணும்மா’ என்று சொல்லி முடிப்பதற்குள் இருபதடி தூரத்தில் ஒரு சலசலப்பு... ஒரு ஆரஞ்சு நிற கைப்பை உயர்த்திக் காட்டப்பட்டது. அருகில் வரவழைத்து அந்தப்பெண் கையில் கொடுத்து ‘இது தானேம்மா, பணம் சரியா இருக்கா பாத்துக்க’ என்றவரிடம்‘அதல்லாம் இருக்கும்ணா’ என்று பையை பிரித்துப் பார்க்காமல் சிரித்துக் கொண்டே சொன்னார் அந்தப் பெண். ‘ஆபீசுலருந்து நேரா வரேன்னியே, சாப்பிட்டியா’ அடுத்த கேள்வி. ‘ஆச்சுங் கண்ணா, ரொம்ப தேங்க்ஸ்.’ ‘வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும்!’ தொடர்ந்தது போராட்டம்.

இதில் எதை உயர்வென்பது? பையோடு பணமும் மொபைலும் கிடைக்கப்பெற்றும் , அதை திரும்பக்கொடுத்த இளைஞர்களின் நாணயத்தையா... இல்லை அதைக்கையில் வாங்கியவுடன் சோதித்துப் பார்க்காத அந்தப்பெண்ணின் நன்றி மேலோங்கிய நம்பிக்கையையா... இரண்டுக்குமே தலை வணங்கியே ஆக வேண்டும்.எங்களைப் பொறுக்கிகள் என்று ஏளனமிட்டவருக்கு ஓரு விஷயத்தை தெளிவு படுத்திக் கொள்கிறோம். தனியாய்க் கிடைத்த நிர்பயா மீது பாய்ந்து வெறி தீர்த்த ‘‘உத்தமர்கள்’’ வாழும் இதே திருநாட்டில் பதற்றத்தில் வெளிறிய பெண்களை நிற்க வைத்து பயம்போக்கித் தேற்றும் பாங்குணர்ந்த ‘‘பொறுக்கிகளும்’’ வாழ்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

டி.வி. சேனலின் நெறியாளர் போராட் டத்தில் பேட்டி எடுத்த போது..... ‘ஆளுறு படிக்கும் நீங்கள், மெரினாவில் இன்று போராடக் காரணமென்ன? விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவரா?’‘என் குடும்பம் விவசாயக் குடும்பமல்ல. ஆனால் நான் சோறு தான் சாப்பிடுகிறேன்... நீங்க?’ - ராஜேஷ்குமார்

மாணவர்களின் பாதுகாப்பு வளையத் தையும் மீறி ஒரு சாமியார் மேடையேற முயன்றார். இளம்காளைகள் தண்ணீர் பாக்கெட் வீசி எறிந்து துரத்தி விட்டனர். இந்த தெளிவு தமிழ் நாட்டை எங்கேயோ கொண்டு செல்ல போகுது !       

- சங்கீதா வெங்கடேஷ்

இன்றைய அனுபவத்தில் உணர்ந்தது...

அரசியலற்ற கூட்டத்திலிருந்து அரசியல் அரும்புவதாக இந்த காட்சியைப் பார்ப்பதில் பிழையேதுமுண்டா? இதனை போராட்ட மென்பதை விட ஒரு மாபெரும் ஒன்று கூடல் திருவிழா என்றழைப்பதே பொருத்தம்... மறுப்பதற்கில்லை. ஆனால் , இந்த திருவிழா மதம் சார்ந்து , சாதி சார்ந்து அல்ல... ஒரு அரசியல் நியாயம் சார்ந்து. நம்மால் குஷால் பேபிகள், பாப்கார்ன்கள் என்றழைக்கப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தான் இந்த ஏற்பாட்டோடு மெரினாவில் நின்றுக் கொண்டிருக்கிறார். லெவந வாங்குவதற்காக நான் பேசிய அத்துனை மாணவர்களும், ஜல்லிக்கட்டு என்பது எங்களுக்கு ஒரு ஆரம்ப புள்ளி தான்... தொடர்ந்து விவசாயிகள் தற் கொலை, காவிரி பிரச்சனை அனைத்துக்கும் நாங்கள் போராடவிருக்கிறோமென சொன் னார்கள். அந்த போராட்டங்களெல்லாம்... ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல மகிழ்ச்சிகரமானதாக இருக்காதென்பது அவர்களுக்குத் தெரியவில்லை தான்.

ஆனால், அந்த உந்துதலை ஆக்கப் பூர்வமான ஒன்றாக பார்ப்பது தவறா ? மாநில அரசே அனுமதித்த இந்தக் களத்தில்.. மாநில அரசு பதற்றமடையுமளவுக்கும் நகர்தல்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன என்பதை களத்தில் பார்க்க முடிந்தது. முத்தாய்ப்பாக, சென்னை நகரின் வான்வெளியெங்கும் ஒலிக்கும் குரல்கள் சுமக்கும் ஒரே விஷயம்.. ‘மோடி ஒழிக. ’ இதனையும் ஆக்கப்பூர்வமாக பார்ப்பது பிழையா? ‘ஊர் சுத்துற மோடி வாடி வாசல் வாடி’... என்றொலிக்கும் கோஷங்களில் ஜல்லிக்கட்டிற்கான கோபம் மட்டும் தான் இருக்கிறது என்று என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. பண மதிப்பு நீக்க நடவடிக்கை, காவிரி, விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட கோபங்கள் அதில் புதைந்திருக் கின்றன என்பதை அவர்களோடு உரையாடினால் புரிந்துக் கொள்ள முடியும். வங்கக் கடலுக்கு மூச்சு முட்டுமளவுக்கு மனிதக்கடல் மெரினாவில் சுனாமியாக பாய்ந்து கொண்டிருக்கிறது, அதில் 90சதவீத முழக்கங்கள் மோடிக்கெதிராகவும், பா.ஜ.க.வுக்கெதிராக வும் ஒலிக்கின்றன. இம்மாபெரும் மக்கள் போராட்டத்தினைப் புகைப்படங்களாகப் பதிவு செய்ய வாருங்கள். உலகெங்கிலும் இலட்சக்கணக்கான தமிழர்களால் ஒன்று இணைந்து நடத்தப்படும் இப்போராட்டம் வெறும் போராட்டமாக மட்டுமல்லாமல் மகத்தான ‘கலாச்சாரத் திருவிழா’ வாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒரு முறை மெரினா சென்று பாருங்கள். பறையிசை, சிலம்பாட்டம், தப்பாட்டம் எனத் தமிழர்களின் பாரம்பரியக் கலைகள் அனைத் தும் இளைஞர்களால் மீட்டுரு வாக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் தவறவிட்ட, மறந்துபோன கொண்டாட்டங்கள் அனைத்தும் அங்கே மிகச் சிறப்பாக நடந் தேறிக் கொண்டிருக்கின்றன. அனைத்தும் உன்னதமான வரலாற்றுத் தருணங்கள். ஆனால் அவற்றைப் புகைப் படங்கள் எடுப்ப தற்கு ஆட்கள் இல்லை. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் விரைந்து செயல் படவும்.                                                                             - அருண் டிஐஆர்

கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும்...

கடவுள் நம்பிக்கை எனக்கில்லை; ஆனாலும் அனைத்து சாதிகளும் அர்ச்சகராக வேண்டுமென்ற ஆசை எனக்குள்ளது. கடவுள் நம்பிக்கை எனக்கில்லை இருந்தாலும் கடவுள் மீது நம்பிக்கை வைத்து கோவிலுக்குள் செல்பவர்களை சாதியை காரணம் காட்டி நுழைய மறுப்பு தெரிவிப்பதை எப்படி அனுமதிக்க முடியும்? ஜல்லிக்கட்டின் மீது எனக்கு விருப்பமில்லை; ஆனால் தமிழர்களின் உரிமையை மதவெறி பிடித்த மோடி தலைமையிலான மத்திய அரசு தடை விதிப்பதும், இங்குள்ள பிஜேபியினர் ஜல்லிக் கட்டை ஆதரிப்பது போல் பாசாங்கு செய்வதும்... மாநில அரசு தடியடி நடத்தி கைது செய்வதையும் எப்படி அனுமதிக்க முடியும்?

இவ்வளவு போராட்டங்களுக்குப்பிறகு ஒருவேளை ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றியடையும் பட்சத்தில் அதன் பிறகு நடைபெறும் ஜல்லிக்கட்டில் இதுவரை கடைப்பிடித்து வந்த சாதியும், தீண்டாமையும் தளர்த்தப்படும் என்றே நான் நம்புகின்றேன். “மனிதன் சூழ்நிலையை தீர்மானிப்பதில்லை; சூழ்நிலை தான் மனிதனை தீர்மானிக்கிறது” கார்ல் மார்க்ஸ் மத்திய- மாநில அரசுக் கெதிராக போராட வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியிருக்கிறது... “வாழ்க்கை போராட்ட மயமானது. போராட்டம் இன்ப மயமானது.” - காரல் மார்க்ஸ்.

- ரமேசு பெரியார்

Pin It