jallikattu 343

மாட்டுப் பொங்கல் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் நடைபெறுகிறது. இன்னமும் விவசாயப் பொருளாதாரத்தையே கிராமங்கள் நம்பியிருக்கின்றன. எனவே, விவசாயத் திருவிழா நீடிப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், விவசாயம் நொடித்துப்போய், விவசாயிகளின் மரணம் தொடர்கதையான நாட்களில் விவசாயம் பற்றிய உணர்வுக் கொந்தளிப்பு ஏற்படுவதற்கு மாறாக, ஜல்லிக்கட்டு பற்றிய பிரச்சனை முன்னே நிற்பது வினோதமானதுதான்.

ஜல்லிக்கட்டு சில உண்மைகள்

ஏறு தழுவுதல் உள்ளிட்ட பல வடிவங்களில் மாடுகளுக்கும் மனிதர்களுக்குமான நெருக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சங்க காலம் முதல் உள்ள ஆதாரங்களைப் பலரும் எழுதியிருக்கின்றனர்.

ஆனால், பழந்தமிழகம் என்பது ஒன்றுபட்ட ஒரே மாதிரியான தமிழகமாக இருந்ததில்லை. பல்வேறு குலக் குழுக்கள், சாதிகள், நாடுகள், மன்னர்களின் ஆட்சிப் பிரதேசம் என்று பிளவுற்றுக் கிடந்தது. அவற்றுக்கு இடையிலான உறவின் சம நிலையே தமிழகத்தைத் தீர்மானித்தது. பொது மொழியாக தமிழ் இருந்த போதும், நிலவுடமை முறை, சாதிகள், நம்பிக்கைகள் என்று பலவற்றின் அடிப்படையில் சிதைந்திருந்தது. ஒரே ஊருக்குள் கூட இருவேறு உலகங்கள் இருந்தன. சாதியச் சமூகத்தில் அதனைத் தவிர வேறு வழியில்லை.

கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மத்திய தமிழகத்தில் இருந்து (பழைய திருச்சி மாவட்டம்) மக்கள் பெரும் திரளில் இடப் பெயர்ச்சிக்கு ஆளானார்கள். படையெடுப்பு, பஞ்சம் போன்று அதற்கு சில காரணங்கள் இருந்திருக்கின்றன. பாலமேடு, அலங்காநல்லூர் (சிறுமலைக்கு கிழக்கு-தென்கிழக்கில் உள்ள ஊர்கள்), அ.வெள்ளோடு (சிறுமலைக்கு மேற்கே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊர்) செய்யப்பட்ட கள ஆய்வுகள் இடப்பெயர்ச்சி ஆனது பற்றிய செய்திகளை உறுதி செய்கின்றன.

இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள், வளமான, வனங்களால் சூழப்பட்ட பகுதிகளில் குடியேறினர். அங்கிருந்த ஜமீன்தார்களின் ஆதரவில் நிலத்தைப் பண்படுத்தி கிராமங்களை உருவாக்கினர். விவசாயத்திற்குத் தேவைப்பட்ட மாடுகளை சிறுமலையின் வனம் அளித்தது. மாடு என்ற மாபெரும் சக்தி அவர்களின் வாழ்க்கைக்கு அடிப்படையாக இருந்தது.

இவ்வாறு இடம் பெயர்ந்த மக்கள் சாதித் தொகுப்பாக இடம் பெயர்ந்தனர். இன்றைக்கு தலித் சாதியினர் என்று சொல்லப்படும் சாதிகளும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று சொல்லப்படும் சாதிகளும் அதில் இருந்தனர். அவர்கள் வாழ்ந்திருந்த பகுதியில் உள்ள விவசாய உறவின் அடிப்படையில் சாதிகளுக்கென்ற தொழிலும், பாத்திரமும் இருந்த காரணத்தால் இடப்பெயர்ச்சியில் சேர்ந்தே பயணித்திருக்கின்றனர். வெவ்வேறு சாதிப் பிள்ளைகள் இடப்பெயர்ச்சிப் பயணத்தின் அவலத்தில் ஒரே தாயிடம் பால் குடித்தது பற்றிய நினைவுகளை பாலமேடு மக்கள் பகிர்ந்துகொண்டனர்.

பின்னர், ஏற்பட்ட சமூக- சாதி மாற்றங்களையும் இந்த கிராமங்களில் பார்க்க முடிகிறது. எப்படி இருந்தாலும், பிற்பட்ட சாதியினரின் ஆதிக்கத்தில்தான் இந்த கிராமங்கள் இன்னும் இயங்குகின்றன. தமக்கென தனி நிலவுடமை உள்ள பள்ளர் சாதி மக்கள் பாலமேட்டு ஜல்லிக்கட்டு நடத்தும் அமைப்பில் செயலாளர் பொறுப்பைக் கையில் வைத்திருக்கின்றனர். பாலமேட்டில் பின்னர் வந்து குடியேறிய (தெற்கிலிருந்து இடம் பெயர்ந்த) நாடார்கள் பொருளாளர் பொறுப்பைப் கையில் வைத்திருக்கின்றனர். அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்களும் ஜல்லிக்கட்டு நடத்தும் பொறுப்பில் இருந்த போதும் பறையர்களுக்கும், அருந்ததியினருக்கும் எந்த அதிகாரப் பொறுப்பும் இல்லை. அச்சாதியினர் ஊர் கூட்டத்தில் கருத்து சொல்லும் உரிமை மட்டுமே உள்ளவர்களாக இருக்கின்றனர்.

ஜல்லிக்கட்டு தமிழரின் பொதுப் பண்பாடா?

இப்படியாக,சாதி அதிகாரப் படிக்கட்டு முறை நீடிக்கவே செய்கிறது. பாலமேடு பற்றி சொன்னது ஓர் உதாரணம் மட்டுமே. அலங்காநல்லூர் உள்ளிட்ட பிற கிராமங்களில் உள்ளூர் வளர்ச்சிக்கேற்ப நிலைமை மாறுபடுகிறது. உதாரணமாக அ. வெள்ளோட்டில் கிருத்துவ கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. மாடு வளர்ப்பதிலும் பிடிப்பதிலும் சாதி வேறுபாடுகள் இல்லையென்று அந்த கிராம மக்கள் தெரிவித்தனர். தேனி, புதுக்கோட்டை மாவட்ட நிலவரங்கள் தெரியவில்லை.

எப்படியிருந்த போதும், சாதிக் கட்டமைப்பின் செல்வாக்கின் கீழ் உள்ள விவசாய சமூகத்தின் பண்பாடாக ஜல்லிக்கட்டு இருக்கிறது. பல்வேறு வேறுபாடுகளுடன், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வு அது. எனவே, ஜல்லிக்கட்டு தமிழ் பண்பாடு என்று பொதுமைப் படுத்துவது சரியானதால்ல.

(இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இடப்பெயர்ச்சி, அதனைத் தொடர்ந்த விவசாயப் பொருளாதாரம் போன்ற அம்சங்களை, ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதியில் ஆய்வு செய்து எழுதுவது வரலாற்று/ சமூக ஆய்வில் உள்ளவர்களின் பணியாக இன்னமும் நீடிக்கிறது.)

ஜல்லிக்கட்டு மிருக வதையா? ஆபத்தானதா?

ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்கள் அதனை ஒப்புக்கொள்வதில்லை. அது உண்மையும் கூட. பண்டைய பெருமையில் திளைக்கும், மாடு வளர்ப்பதை ஒரு சமூக கௌரவமாக நினைக்கும் நிலைமை நீடிக்கிறது. ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்போர், களுக்கு அளிக்கும் கவனத்தைவிட கூடுதல் கவனம் கொடுத்து வளர்க்கின்றனர். வெற்றிக்காக மாட்டுக்கு சாராயம் கொடுப்பது உள்ளிட்ட கொடுமைகள் சமீபத்து பத்து ஆண்டுகளில் அற்றுப் போய்விட்டது. அதற்கு அரசின் தலையீடும், ஒழுங்குபடுத்துதலும், அவற்றை ஆதரிக்கும் மக்களின் போக்கும் பிரதான காரணங்கள்.

பீட்டா போன்ற அமைப்புகள், அல்லது மிருக வதையைத் தடுக்க நினைப்போர், செலக்டீவாக செயல்படுகின்றனர். மனிதர்கள்- மிருகங்கள் உறவில் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கின்றனர். உணவுக்காக மிருகங்கள் கொல்லப்படுவது முதல், யானைகள் போன்ற காட்சி மிருகங்களுக்கு ஏற்படும் கொடுமைகள் வரை கொடுமைகள் நிறைந்ததாகவே மனித- மிருக உறவு நிலை இருக்கிறது. இதில் ஜல்லிக்கட்டில் மிருக வதை நடக்கிறது என்ற வாதம் பலவீனமாகிப் போகிறது.

ஜல்லிக்கட்டில் உயிரிழப்பு ஏற்படுகிறது, எனவே தடை என்ற வாதமும் தவறானது. வெயிலில் உலாத்துவது போன்ற கிரிக்கெட்டில் கூட உயிரிழப்பு ஏற்படுகிறது. ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகளில் உயிரிழப்புக்கான வாய்ப்புகள் அதிகம்தான். ஆனால், உயிரிழப்புதான் காரணம் என்றால், விளையாட்டுகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால், விளையாட்டுகளில் கட்டுப்பாடுகள் கொண்டுவருவதன் மூலம் விளையாட்டுகளின் இடர்கள் குறைக்கப்படுகின்றன. அதுபோன்ற ஒன்று ஜல்லிக்கட்டில் சாத்தியமில்லை என்று உச்ச நீதிமன்றம் வரை கருதும் என்றால், அதற்கு அறிவியலைத் தவிர வேறு காரணம் இருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு தடையை எதிர்ப்பவர்கள் சொல்லும் கவர்ச்சியான காரணங்கள்

நிறைய காரணங்களைச் சொல்கிறார்கள். நாட்டு மாடுகளை அழித்து அன்னிய மாடுகளைச் சார்பை ஏற்படுத்துகிறார்கள் என்று ஒரு காரணம் சொல்லப்படுகிறது. நாட்டு மாடுகளின் அழிவு வெண்மைப் புரட்சிக் காலத்திலேயே துவங்கிவிட்டது. பசுமைப் புரட்சி காளை மாடுகளை அடிமாடுகள் ஆக்கியது. மாடுகளைச் சார்ந்திருக்கும் விவசாயம் இன்று இல்லை. பாலுக்காக பசுக்களை சினையாக்குவதற்கு ஊசி மூலம் விந்தை செலுத்துவதே தற்போது நடக்கும் இயல்பான செயல்பாடு.

jallikattu 400

இந்த நிலையில், அன்னிய சார்பை உருவாக்குவதற்காக காளைகளை அழிப்பதற்காக பீட்டா சூழ்ச்சி என்று சொல்வது பாமரர்களை நம்ப வைக்கும் முயற்சி மட்டுமே. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கருத்தியலை உருவாக்குவதற்கான மலினமான முயற்சி மட்டுமே.

உள்ளூர் உயிரினங்கள் அவற்றின் சூழலுக்கு ஒத்துப்போகும் தன்மை. அவற்றின் நிலைத்த நீடித்த பொருளாதார நிலை ஆகியவற்றின் காரணமாக நாம் உள்ளூர் உயிரினங்களை இழந்து வருகிறோம். உள்ளூர் தாவரங்களை இழந்து வருகிறோம். நீராதாரங்களை இழந்துவருகிறோம். முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு தோதான முறையில் நமது உயிர்ச்சூழல் மாற்றப்பட்டு வருகிறது.

எடுத்துக்காட்டாக, பல்லுயிர்ச் சூழல் பெருக்கச் சட்டத்தின்படி, ஒவ்வொரு ஊராட்சியிலும் பல்லுயிர் சூழல் பதிவேடு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அச்சட்டம் 2002ல் கொண்டுவரப்பட்டிருந்தும், அத்தனை ஆண்டுகளாக ஒன்றும் நடக்கவில்லை. அரசியல் சட்டத்தின்படி இயங்கும் நாடு என்று அறியப்படும் ஒரு நாட்டில், நவீன வழிகளைப் பற்றிய அறிதலோ, கவலையோ இன்றி ஜல்லிக்கட்டு இருந்தால், நாட்டு மாடு இருக்கும் என்று வாதிடுவது அறியாமையின் உச்ச கட்டம். பீட்டா போன்ற அமைப்புகளை, அல்லது கட்சிகளைச் சாடுவது ஜல்லிக்கட்டின் மேல் உள்ள ஆர்வத்தைக் காட்டும். ஆனால், உள்நாட்டு மாடுகளைக் காப்பாற்றுவது என்ற நோக்கத்திற்கு உதவாது.

ஜல்லிக்கட்டுத் தடைக்கு யார் காரணம்?

யார் காரணம் என்பதற்கு கட்சிகளுக்கு இடையில் மல்லுக்கட்டு நடக்கிறது. பீட்டா காரணம், பிஜேபி காரணம், திமுக அல்லது அதிமுக போன்ற ஒரு கட்சி காரணம் என்று காரசாரமாக விவாதம் நடக்கிறது. ஆனால், நிகழ்ந்தவற்றைப் பார்த்தால், இந்திய அரசின் அதிகாரத்துவப் போக்கும், நீதிமன்றங்களின் கண்மூடித்தனமுமே காரணம் என்று தோன்றுகிறது. காட்சிப் படுத்தும் விலங்குகள் பட்டியலில் சேர்ப்பது/ நீக்குவது என்ற தொழில்நுட்பப் பிரச்சனையாக இதனைப் பார்த்திருக்கின்றனர். மாறாக, ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் (கேரளா) போன்றவை மக்களின் பங்கேற்புடன் சில நூற்றாண்டுகளாக நடப்பவை. அவை பண்டைய பண்பாட்டின் இன்றைய தொடர்ச். அவற்றில் மாற்றம் வர வேண்டும் என்று அரசு கருதினால், சம்பந்தப்பட்ட மக்களைக் கலந்தாலோசிக்க வேண்டும். அதனைச் செய்யாத அதிகாரத்துவப் போக்கே இந்த சிக்கலுக்கான காரணம்.

எந்த மக்கள் பிரிவினருக்கும் நீண்ட வரலாறு உண்டு. வரலாற்றின் முன்னேற்றத்தில் பண்பாடும் மாற்றம் காணும், வளர்ச்சி பெறும், முன்னேற்றம் காணும். ஏறு தழுவுதல் முதல், மாட்டுப் பொங்கலின் போது மாடுகளை வணங்கி அவற்றோடு நடைபோடுவது, ஜல்லிக்கட்டு என்று அது காலம் தோறும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் பலவாறு மாற்றம் கண்டிருக்கிறது. இன்றைய சூழலில், சம கால வளர்ச்சிக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு மாற வேண்டிய தேவை இருக்கிறது. மக்களை மறந்துவிட்டு நிர்வாக உத்தரவுகளின் மூலம், ‘நாகரீக‘த்தை நிலைநாட்டுவது எதிர்விளைவுகளையே உருவாக்கும். அதனைத்தான் நாம் இன்று காண்கிறோம்.

ஜல்லிக்கட்டில் விளையாடும் ஓட்டு அரசியல்

இப்பிரச்சனையை அரசியல் செல்வாக்காக மாற்றிக்கொள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் எந்த வேறுபாடும் இன்றி முயற்சி செய்கின்றன. பாரதீய ஜனதா இதில் முன்நிற்கிறது. சென்ற ஆண்டு ஜல்லிக்கட்டு நடப்பதற்கான உத்தரவை அரசு வழங்கியபோது, அதனை பிஜேபியின் சாதனை என்று பொன். இராதாகிருஷ்ணன் சுவரொட்டி அடித்துக்கொண்டு தமிழர்களின் ஆதரவைப் பெறப் பார்த்தார். ஆர்எஸ்எஸ் உப அமைப்புகள் ஆங்காங்கே தோன்றி தமிழர்களைக் காப்பாற்ற களம் கண்டன.

விவசாயிகள் சாவினைக் கண்டுகொள்ளாமல், இயற்கையாக செத்தவர்கள் என்று இறுமாப்புடன் பேசிய அதிமுக கூட ஜல்லிக்கட்டு நடக்கும், நடத்துவோம் என்று மார் தட்டிக் கொள்கிறது. திமுகவின் ஸ்டாலின் அதற்கென ) ஆர்ப்பாட்டம் நடத்தினார். அறிக்கைகளை அனல் பறக்க விடுகிறார்.

தலித் உரிமை பேசி எழுந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் அனைத்து தமிழர்களின் தலைவர் என்ற தன் நிலையை எட்ட ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார். அந்த விளையாட்டின் உள்ளே பொதிந்துள்ள சாதிக் கட்டமைப்பின் ஆற்றலை கண்டு கொள்ளாதிருப்பது தனது அரசியலுக்கு நல்லது என்று நினைக்கிறார்.

முக்குலத்தைச் சேர்ந்த இளைஞர்கள், அவர்களின் அமைப்புகள் ஜல்லிக்கட்டை ஆதரித்து களம் இறங்குகின்றனர். தமிழர் மானம் தன்மானம்போன்ற வெற்று முழக்கங்களில் அரசியல் புரிதல் அற்ற இளைஞர்களை நவீன உத்திகளின் மூலம் அணி திரட்டுகின்றனர். ஊடகங்களும் வணிகக் காரணங்களுக்காக அவற்றை ஊதிப் பெரிதாக்குகின்றன.

தமிழ் தேசிய இனமும் ஜல்லிக்கட்டும்

தமிழரின் மீதான ஒடுக்குமுறை என்றும் தமிழ் தேசிய இனம் பற்றியும் இந்த சூழலைப் பயன்படுத்தி குரல்கள் எழுகின்றன. வேடிக்கை என்னவென்றால், “பண்பாட்டு விழுமியம்“ போன்ற பதங்களைப் பயன்படுத்தி இடதுசாரி இளைஞர்கள் கூட எழுதுகிறார்கள். இடதுசாரிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் இவ்விவகாரத்தில் முனைந்து செயல்படுகின்றனர்.

சாதியின் பிடி இருக்கும் எந்த ஒன்றையும் சாதி என்ற பண்டைய பிடியிலிருந்து விடுவிக்காமல் தமிழ் என்பது பொது அடையாளமாக, எல்லாத் தமிழருக்குமானதாக ஒரு நாளும் மாறாது.

நிலப்பிரபுத்துவ சாதிக் கட்டமைப்பில் நின்று கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டை கண்மூடித்தனமாக ஆதரிப்பது தமிழர்களை ஒன்று சேர்க்க நினைத்தாலும் அனுமதிக்காது.

விவசாயப் பொருளாதாரத்தை, அதன் பின் தங்கிய நிலையிலேயே வைத்துக்கொண்டு, அதில் மூலதனமிடுவதை செலக்டீவாக செய்யும் அரசுகளின் கொள்கையை எதிர்க்காமல் நிலப்பிரபுத்துவ கட்டுமானத்தை வீழ்த்துவது முடியாது, சாதிகளை உடைத்து பொதுவான வேறொரு அடையாளத்தைக் கொண்டுவருவது சாத்தியமற்றது.

பண்பாட்டு விழுமியங்களைக் காக்க வேண்டுமென்றால், அவை காலத்திற்கு ஏற்ப மாறுவதை- பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல என்பதை- ஏற்கும் நவீன மன நிலை வேண்டும்.

அரசுகளின் அதிகாரத்துவப் போக்கை எதிர்ப்பதும், அம்பலப்படுத்துவதும், மாற்றங்களை முன்மொழிவதையும் செய்ய வேண்டும்.

இவற்றைச் செய்யாமல், “தமிழர்“ , “இனம்“ என்று பொத்தாம் பொதுவாக முழங்குவது இடதுசாரி சிந்தனை கொண்டவர்களின் செயல்பாடாக இருக்க முடியாது.

உணவு அரசியலை மழுங்க வைக்கும் உணர்வு அரசியல்

அத்தனைக்கும் பிறகும் மனிதன் உணவால்தான் வாழ்கிறான். உணவை மறந்தவன் உணர்வாளனாக இருக்க முடியாது. தமிழக விவசாயிகளின் மரணங்களை, விவசாயத்தின் மரணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஒரு குறுகிய பரப்பிலான ஒரு பிரச்சனையைப் பெரிதாக்குகின்றனர்.

அரசின் அதிகாரத்துவத்தை எதிர்த்து, மக்களின் மாறிவரும் பண்பாட்டு போக்கை ஆதரிப்பதற்கு மாறாக பண்டைய மாண்பில் குளிர் காய நினைக்கிறார்கள்.

மக்களின் உணர்வு நிலையைப் பயன்படுத்தி ஆட்சிக் கட்டிலுக்குப் பாதை போடும் முதலாளித்துவ கட்சிகளுக்குத் துணையாக இருக்கின்றனர்.

ஆனால், துடிப்பும் அறிவாற்றலும் கொண்ட இளைய சமூகம், உணர்வு அரசியலிலிருந்து உணவு அரசியலுக்கு மாறிவரும்.

ஜல்லிக்கட்டுக்கான மல்லுக்கட்டில் இளைஞர்களைத் தள்ளி புதைக்க நினைப்பவர்களுக்கு அச்சமேற்படுத்தும் வகையில் இளைஞர்கள் புதிய அவதாரம் எடுப்பார்கள்.

- சி.மதிவாணன்

Pin It