jallikattu 480

ஜல்லிக்கட்டு தென்தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டாக நமக்கு அறிமுகமாகியிருந்தாலும், விவசாயம் தற்சார்புகளுக்கான எளிய, ஆனால் நுணுக்கமான செயல்வடிவமாகும். இந்நாட்டில் விவசாயிகளை விடவும் மாடுகள் மீது அதிகம் கரிசனம் கொண்டவர்கள் யாராக இருந்திட முடியும் என்பதை கொஞ்சம் அறிவுக்கண் திறந்து பார்த்தால், ஆய்வு செய்தால் ஜல்லிக்கட்டு பிரச்சனையில்லை என்பது நமக்குப் புரியும். விவசாயக் குடும்பங்களில் தவிர்க்கவே முடியாத ஒரு உறுப்பினர் தான் மாடுகள். ஆண்டு முழுதும் மாடுகளுடனும், சாணியுடனும் உழலும் விவசாயிகளை விட, வேறு யாருக்கு மாடுகளைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை இருக்க முடியும்?

ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகள் எல்லாம் பொலிச்சல் காளைகள் தான். அதாவது இனவிருத்திக்காக வளர்க்கப்படும் காளைகள். கன்று பிறக்கும் போதே கூறு தெரிந்து விடும். ஒரு விவசாயி இதை தன் அனுபத்தில், பாரம்பரிய அறிவில் கண்டு கொள்வான். இத்தகைய மரபணு ரீதியாக வீரியமிக்க காளைகளை தான் பொலிச்சலுக்கும், ஜல்லிக்கட்டுக்கும் பயன்படுத்திட முடியும்.

வீரியமிக்க காளைகளை ஊருக்கு காட்சிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு ஜல்லிக்கட்டு. (பல பொருள்களுக்கான கண்காட்சியாக “பொருட்காட்சி” வியாபார நோக்கில் நடப்பதை நாம் காண்கிறோம். விமான கண்காட்சியில் விமானங்கள் சாகசங்களை செய்வதை நாம் அறிகிறோம். ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் இருசக்கர, நான்குசக்கர வண்டிகளின் கண்காட்சி, ரேஸ் போன்றவற்றை நடத்தி தங்கள் கண்டுபிடிப்புகளின் திறனை- உயிரியல் மொழியில் மரபணு- தொழில்நுட்ப மொழியில் விஞ்ஞான மொழியில் பேசி நம்மை வாங்க வைப்பதைக் காண்கிறோம்)

ஜல்லிக்கட்டை தடுத்து விட்டால், உள்ளூர் மாட்டின் மீதான பிடிப்பை, விவசாயிகள் காலப்போக்கில் கைவிடுவர் என்று பன்னாட்டு வணிக பால் நிறுவனங்களும், இவற்றோடு கைகோர்க்கும் உள்ளூர் பெருமுதலாளிகளும் கணக்கிடுகின்றனர். இதற்காக அரசு நிறுவனங்களும், அரசு சாரா நிறுவனங்களும் கைகோர்த்துக் கொண்டு ஜல்லிக்கட்டை தடை செய்ய முனைகின்றன. இதன் விளைவு, பெரும் முதலாளிகளுக்கு சாதகமாகும் என்பதை இவர்கள் உணர்வதாக தெரிவதில்லை. “முதன்முதலாக ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் 15-01-2008-ல் தடை விதித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில், உச்சநீதிமன்றம் போட்ட பல நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டை நடத்த ஏற்பாடு செய்து ஜல்லிக்கட்டை நடத்தினோம்.” என்கிறார் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி.பிரபாகர். (தி இந்து 09-01-2016, மதுரை)

சென்ற ஆண்டு (2016) ஜல்லிக்கட்டு விவகாரம் சிக்கலாக்கப்பட்டு விட்டது. இதற்குக் காரணம் இரு தேசியக் கட்சிகளும் ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக் கொண்டதே.

ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று விலங்குகள் ஆர்வலர்களும், ஜல்லிக்கட்டு நடத்துபவர்களும் இணைந்து செய்த முயற்சியால் மத்திய பா.ஜ.க. அரசு ஓர் அரசு ஆணை மூலமாக_1960-ல் இயற்றப்பட்ட விலங்குகள் கொடுமை தடுப்பு சட்டத்தை திருத்தாமலேயே- ஜல்லிகட்டை அனுமதிக்கின்றது. (தி ஹிந்து 09-01-2016).

பல சட்டங்களை இயற்றும் அதிகாரம் கொண்ட, அனுபவம் கொண்ட அதிகாரிகள் சூழ ஆட்சி செய்யும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு, ஓர் அரசாணை மூலம் ஜல்லிகட்டை நடத்திட முடியவே முடியாது என்பது தெரியாமலா இருந்தது?

இவ்வரசாணை மத்திய வன மற்றும் சுற்றுசூழல் அமைச்சகத்தின் மூலம் வெளியிடப்பட்டது. இந்த அமைச்சகத்தின் அமைச்சர் பா.ஜ.க.-வைச் சார்ந்தவர். இவரின் அதிகாரத்தின் கீழ் தான் விலங்குகள் நல வாரியம் இயங்குகின்றது. இவ்வரசாணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 13-1-2016 அன்று தடை உத்தரவு வாங்கி, ஜல்லிகட்டை நடத்தவிடாமல் செய்ததில் பெரும் பங்கு இந்த வாரியத்திற்கு உண்டு எனில், மத்திய பா.ஜ.க. அரசின் இரட்டை வேடத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, சோத்தாங்கையில் கொடுத்து பீச்சாங்கையில் பிடுங்கிக் கொண்டார்கள் பாஜக நாடகதாரிகள்.

விலங்குகள் நல வாரியம் அரசாணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகும் போது, அக்கறையுடையவர்களாக காட்டிக் கொள்ளும் பா.ஜ.க. என்ன செய்திருக்க வேண்டும்.? அவசர சட்டத்திற்கான தயாரிப்புகளை செய்திருக்க வேண்டும். ஆனால் தெரிந்தே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது.

இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். 2008-ல் நடந்த ஜல்லிக்கட்டு, நீதிமன்ற உத்தரவுக்கு அடுத்த நாளிலேயே விரைவில் நடத்தப்பட்டது. ஒரு நாள் வித்தியாசம் தான். ஒரு நாள் வித்தியாசத்திலேயே நம்மால் நடத்த முடிந்திருக்கின்றது என்பதைப் புரிந்துக்கொண்டு, மத்திய பாஜக அரசு, தனது அரசாணையை ஒரு நாள் முன்பு, அதாவது 14-01-2016- அன்று வெளியிட்டிருக்கலாம். அவ்வாறு நடந்திருந்தால் 15-01-2016 அன்று ஜல்லிக்கட்டு நடந்திருக்கும்.

ஆனால் எதிர்ப்பாளர்களுக்கு கால அவகாசம் கிடைக்கும் விதமாக அரசாணையை முன்னதாகவே மோடி அரசு வெளியிட்டது, ஜல்லிக்கட்டை தடுப்பதற்காகத் தான் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்கு காரணம் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களே. எப்படி எல்லாம் நாம் ஏமாற்றப்படுகிறோம். இதில் இந்துத்துவா அமைப்புகள் வடக்கத்தியர்களின் மேளதாளங்களுக்கு ஆடிப்பாடி நம்மை அதன் வாய்க்குள் சிக்க வைத்து விட்டார்கள்.

இந்த ஒரு அரசாணைக்கே, இந்த வருடப் பொங்கலை மோடி பொங்கலாக நடத்த விருப்பம் தெரிவித்தார், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய பா.ஜ.க. அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். இது கலாச்சார ஆக்கிரமிப்பாகும். காலங்காலமாக யாருடைய தனிப்பட்ட பெயரில் அல்லாமல் மொத்த தமிழ் மக்களின் வரலாற்று நடைமுறையாக இருந்து வருகிறதோ, அதை தனிநபர் வழிபாடாக, அதுவும் மோடியின் பெயரால் நடத்த வேண்டும் என்று கூறும் அவர் தமிழனா? 'வாடிவாசல்' என்றுமே 'மோடி வாசல்' ஆகாது!

கிரிக்கெட்டில் ஐ.பி.எல் போட்டி போன்று, இவர்களுக்கு பணம் கொழிக்கும் விளையாட்டாக ஜல்லிக்கட்டு இருந்திருந்தால், அப்பொழுது மட்டும் இவர்கள் எல்லா சட்டங்களையும் அதற்கு ஏதுவாக மாற்றுவார்களா? டெல்லி கிரிக்கெட் வாரிய ஊழல் புகழ் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியிடம் இதனைக் கேட்க வேண்டும்.

மத்திய அரசு மூலம் 11-07-2011ல் காட்சிப்படுத்தக்கூடாத பட்டியலில் உள்ள விலங்கினங்களுடன் காளைகளையும் சேர்ந்து அறிவிக்கை வெளியிட பல்வேறு முயற்சிகளை செய்தவர் பாஜக MPயாக இருந்த விலங்குகள் நல வாரிய நடிகை ஹேமாமாலினி என்பது குறிப்பிடத்தக்கது. ( தி இந்து 09-01-2016 பக்.4)

விலங்குகள் பிரச்சனையில் இந்துத்துவாவின் சிந்தனையாளராக தன்னை காட்டிக்கொள்ளும் பாஜகவின் மேனகா காந்தியோ ஒரு படி மேல்சென்று, ”ஜல்லிக்கட்டு என்பது மேற்கத்திய சிந்தனை” என்கிறார். வெள்ளையர்களின் கலாச்சாரமாம். இது எப்படி இருக்கு? பாஜக ஜல்லிக்கட்டை எதிர்க்கிறது என்று பாஜக சார்பாக அறிக்கை வெளியிட்டார். ( தி இந்து 18,ஜனவரி,2015, மதுரை)

எல்லா உள்குத்து வேலைகளையும் செய்துவிட்டு, மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்த உடன் இந்துத்துவா அமைப்புகள், சாலை மறியல், போஸ்டர் எதிர்ப்பு, அறிக்கைகள் என்று எல்லாவிதத்திலும் அதிருப்தியைக் காட்டுவதாக நடந்துகொண்டதை மக்கள் மறக்க மாட்டார்கள்.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் தனித்தன்மை கொண்டது. மொழி,கலாச்சாரம், பண்பாடு, புவியியல் அமைப்பு, மழைவளம், மண்வளம், மக்களின் பழக்க வழக்கங்கள் இவைகளில் எல்லாம் வேறுபாடு இருக்கிறது. அதனால் அவரவர் பிரச்சனைக்கான தீர்வை அவரவர் சொந்த சூழலில் இருந்தே கண்டடைய வேண்டும்.

இதற்கு மாறாக ஒற்றைக் கலாச்சாரத்தை கட்டமைக்கும் நோக்கத்துடன் பன்முகம் கொண்ட இந்திய மக்களின் பிரச்சனைகளையும் தேவைகளையும் தீர்க்க, பன்முக கலாச்சாரத்தின் அடிப்படையான மொழியையே அறியாத மத்திய அரசை ஆளுபவர்களாலும், நீதிபதிகளாலும் முடியாது. இதற்கொரு உதாரணம் மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா ஒருமுறை “மக்களின் சக துக்கத்தோடு பின்னி பிணைந்திருப்பது மாநில அரசுதானே தவிர, மத்திய அரசு அல்ல. அதிகாரம் தேவைக்கு அதிகமாக மைய அரசிலே குவிந்து விட்டதால் என்ன நடக்கிறது? நான் அண்மையில் டெல்லி உணவு அமைச்சர் ஷிண்டே உடன் தொலைபேசியில் பேசினேன். கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலையில் இருந்து சர்க்கரையை வெளிக்கொணரும் உத்தரவு டெல்லியில் இருந்து வராததால் பெருத்த நஷ்டம் உருவாகும் சூழல் உருவாகியிருப்பதை அவருக்குக் கூற முயன்றோம். கள்ளக்குறிச்சி என்ற பெயரே அவர் புரிந்து கொள்ள 15 நிமிடம் ஆயிற்று. பெயரைப் புரிந்து கொள்ள முடியாததற்காக நான் அவர் மீது குற்றம் சாட்டவில்லை. சர்க்கரை ஆலை இங்கே தமிழ்நாட்டில்; அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அங்கே டெல்லியில் என்று அதிகாரத்தைப் பிரித்துத் தந்தார்களே அவர்களே குற்றவாளிகள்.” என்று முரண்பாட்டை சுட்டிக் காட்டினார். (ஆதாரம் – தி இந்து 18-09-2016, மதுரை பக்.9)

இதே போன்று தான் ஜல்லிக்கட்டு நிலையும். டெல்லியை ஆளுபவர்களும் நமது உயர்நீதிமன்றத்திற்கு வாய்த்த நீதிபதிகளும் ஜல்லிக்கட்டு என்ற வார்த்தையை எப்படியெல்லாம் வாசித்தார்களோ! கற்காத பிற மொழி வார்த்தையை வாசிக்கவே தடுமாறும் நிலையில் பிற கலாச்சார வீர விளையாட்டுகளை தடுக்கத்தான் செய்வார்கள்.

“இந்தியாவில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன, வெவ்வேறு மதங்கள் பின்பற்றப்படுகின்றன. வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம். இதுதான் நமது கலாச்சாரம். அதை கட்டிக் காப்பது நமது கடமை. மற்றவர்களின் பாரம்பரியங்களை மதித்து நடக்காவிட்டால் என்னவாகும்?" என்று பேசினார் பிரதமர் மோடி. (தி இந்து 13-01-2016 பக்-14).

பிறகு ஏன் ஜல்லிக்கட்டை அனுமதிக்க அவசர சட்டத்தைக் கொண்டு வரவில்லை? ஏன் தமிழ் கலாச்சாரத்தை மதிக்கவில்லை.

- அபூ சித்திக்

Pin It