“நான் மேற்கொள்ள உள்ள பௌத்தம் பகவான் புத்தர் போதித்த கொள்கைகளின்படி இயங்கும். பண்டைய பௌத்த மதப் பிரிவுகளான ஹீனயானம், மகாயானம் ஆகியவற்றிற்கு இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாட்டில் என் மக்களை ஈடுபடுத்த மாட்டேன். என்னுடைய பௌத்த சமயம் ஒருவகையான புதிய பௌத்தமாக அல்லது 'நவயான' (Neo-Buddhism)வாக இருக்கும்"

- டாக்டர் B.R.அம்பேத்கர் 

budda 465இந்து மதம் தலித் சமூகத்தைத் தீண்டாமையின் பெயராலான வன்கொடுமைகளால் தொடர்ந்துத் துன்புறுத்தி வருவதுடன் அச்சமூகத்தின் அரசியல், சமூகவியல், பொருளியல் வகைப்பட்ட மேம்பாடுகளுக்கும் பெரும் தடையாக உள்ளது என்பதும் நாமறிந்ததே. கல்வி உரிமை, சொத்துரிமை, ஆயுதம் வைத்திருக்கும் உரிமை ஆகியவற்றை மறுத்து தலித் மக்களை தொடர்ந்து கீழ்மட்டத்திலேயே வைத்திருக்க விரும்புகிறது இந்து மதம் என்ற அம்பேத்கர், இன்னும் ஆழம் பாய்ந்து தலித் மக்களுக்கு அறம் சார்ந்த, உளவியல் சார்ந்த விடுதலையை வழங்கும் தகுதி ற்றதாய் இருக்கிறது என்றும் சாடினார். தலித் மக்கள் எதிர்பார்க்கும் அறம் சார்ந்த, உளவியல் சார்ந்த விடுதலையை அளிக்கவல்ல மதமாக பவுத்தம் விளங்குமென்று அச்சமயத்தை தலித் மக்களுக்கு முன்மொழிந்தார். அவர் மொழிந்த பவுத்தம் என்பது இதுவரைக்கும் நம்முன் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ள பவுத்தத்திலிருந்து மாறுபட்டது மற்றும் ஏற்றத்தாழ்வுகள் மீது கட்டமைக்கப்பட்டுள்ள இன்றைய சமூகக் கட்டமைவுகளை மாற்றியமைத்து சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த சமதள பாதையில் செலுத்த முற்படும் சமூக இயக்க மனப்பான்மை உடையதாகும். ஆம், கிட்டத்தட்ட புத்தரின் கொள்கைகளுக்கு அரசியல் வடிவம் கொடுத்து, சமகாலச் சூழலுக்கு ஏற்ற வகையில் அம்பேத்கரால் கண்டெடுக்கப்பட்ட அப்பௌத்தம் நவயான பௌத்தம் (Neo-Budhdhism) என்று அழைக்கப்படுகிறது. 

புத்தரின் போதனைகளும் அம்பேத்கரும்: 

அம்பேத்கர் முன்மொழிந்த நவயான பவுத்தம் குறித்துப் பேச முற்படுமுன், பவுத்த சமயத்தின் பால் அவர் பெரிதும் ஈடுபாடுகொள்ள பகவான் புத்தரின் கீழ்வரும் கொள்கைகள் காரணங்களாக விளங்கின என்பதை அறிந்துகொள்ளல் நலம்: 

  • கடவுள், ஆன்மா, மறுபிறப்பு போன்ற நம்பிக்கைகள் குறித்து பிற மதங்கள் பேசிக்கொண்டிருக்க, புத்த மதம் மூடநம்பிக்கையையும் இயற்கைக்கு அப்பாற்பட்டதையும் எதிர்க்கும் பிரக்ஞையை, கருணை(அன்பு)யை, சமதா(சமத்துவம்)வைப் போதிக்கிறது. 
  • முகம்மதுவும் இயேசுவும் தங்களை கடவுளால் அனுப்பப்பட்ட இறைத் தூதுவர்களாக உரிமைக் கொண்டாடினர். புத்தரோ, தான் சுத்தோதனருக்கும், மகாமாயாவிற்கும் பிறந்த இயல்பான மனிதர் என்பதற்கு மேலாக எந்த உரிமையையும் அவர் கோரவில்லை. தன் சமயத்துக்கு வெளியே தன்னை நிறுத்திக்கொண்ட புத்தர், தமது மதம் கடவுளின் மதம் என்று உரிமைக் கொண்டாடவில்லை. 
  • புத்தர் தனக்கோ, தன் தம்மத்திற்கோ தெய்வீகம் இருப்பதாகக் கோரவில்லை. அது மனிதனுக்காக மனிதனால் கண்டெடுக்கப்பட்டது. அது இறை வெளிப்பாடல்ல. 
  • மதத்தின் நோக்கம் உலகத்தின் தோற்றத்தை விளக்குவது, புத்த தம்மத்தின் நோக்கமோ உலகை புனரமைப்பது. 
  • அழுத்தப்பட்ட, பரிதாபத்துக்குரிய மக்களை துயரத்திலிருந்து விடுவிப்பதே புத்த மதத்தின் கோட்பாடு. புத்தரது போதனைகள் பல சித்தாந்தங்களின், சமூக சீர்த்திருத்தங்களின் திரட்சியாகும். 
  • புத்த மதம் என்பது மக்கள் மீது வலிந்துத் திணிக்கப்பட்ட ஒரு மதமுமல்ல; புத்தரின் சிந்தனைகளை ஆராய்ந்து சரி என்று உணரும் பட்சத்தில் மட்டுமே தன்னை ஏற்றுக்கொள்ள முன்வருமாறு கோருகிறது. 
  • இந்து மதம் சதுர்வர்ணத்தையும் சாதி அமைப்பு முறையையும் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் புத்த மதத்தில் சதுர் வர்ணத்துக்கும் சாதி அமைப்பு முறைக்கும் இடமில்லை. 
  • தன் போதனை குறைவற்றது என்று புத்தர் உரிமை கொண்டாடவில்லை...யாரும் கேள்விகளால் பரிசீலிக்கவும், எவ்வளவு தூரம் அதில் உண்மையிருக்கிறது என்று அறியவும் கூடிய வகையில் தன் போதனை வெளிப்படையானது என்றார். 

அம்பேத்கரின் தேர்வாக பவுத்தம் அமைந்ததற்குக் காரணமாக இருந்த கொள்கைகள் யாவற்றையும் ஒரு கட்டுரையில் சொல்லிவிட முயற்சிப்பது முடியாத காரியம்தான். இருந்தாலும் குறிப்பிடத்தக்க சிலவற்றையேனும் தொட்டுக் காட்டாமல் கடந்துப் போவதும் நமது வாதத்திற்கு வலு சேர்க்காது என்பதால் மேற்கண்டவற்றை கோடிட்டுக் காட்ட நேர்ந்தது. 

அதேவேளை, சமயப் புரட்சியாளர் அம்பேத்கர் இந்து மதத்தைக் கைவிட்டு பௌத்தம் தழுவியது என்பது ஒரு தற்செயலான காரியம்போல் நடந்த ஒன்றல்ல. இருபதாண்டுகாலம் மேற்கொண்ட சமயம் சார்ந்த ஆய்வுகள் மற்றும் தலித் மக்களின் உடனடித் தேவைகளை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகும். அம்முடிவு இன்றைய உலகுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் புதிய செயல் திட்டங்களை வகுத்து, பாகுபாடு / வேற்றுமை / பாரபட்ச உணர்வுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்து மதத்துடனான தமது அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டு பூர்வ மதமான பௌத்தத்தை நோக்கி அம்பேத்கரை உந்தித் தள்ளியது எனலாம். 

"நாங்கள் ஒரு புதிய பாதையைக் கண்டுபிடித்துக் கொள்வோம். இது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. இது மேம்பாட்டுக்கும் முன்னேற்றத்துக்கும் இட்டுச் செல்லும் பாதை. இந்தப் பாதை எங்கிருந்தும் இரவல் பெறப்பட்டதல்ல. இது இங்கிருந்து பெறப்பட்டதே. இது முழுக்க முழுக்க இந்தியப் பாதை" என்று பௌத்தத்தின்மீது தமக்கிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்திய கையோடு, ஒரு மதம் என்பதை சமூக அணுகுமுறை சார்ந்து, ஆன்மீக அணுகுமுறை சார்ந்து என இரு வகைகளில் பார்க்கப்பட வேண்டும் என்ற அம்பேத்கர் "மதம் சமுதாயத்தை புத்தெழுச்சி கொள்ளச் செய்வதற்கான ஒரு ஆன்மீக சக்தி என்றால் அதனை மக்கள் செவிகளில் அடிக்கடி ஒலிக்கச் செய்ய வேண்டும்" என்றும் விளக்கம் கொடுத்தார். 

நவயான பௌத்தம் (NAVAYANA BUDDHISM): 

மரபார்ந்த பவுத்தச் சாராம்சங்களிலிருந்து நழுவி புத்தரின் பிறப்பு மற்றும் கொள்கைகள் மீது தெய்வீகத் தன்மையை ஏற்றிவிட்ட தேரவாதம், மகாயானம், வஜ்ராயானம் எனப்படும் பவுத்த மதப் பிரிவுகளிலிருந்து மாறுபட்டதும் முற்போக்கானதுமான ஒரு பவுத்தப் பிரிவை நிறுவினார் அம்பேத்கர். சித்தார்த்தர் என்ற மனிதர் ஞானம் பெற்று, புத்த நிலையை அடைந்தபின் அருளிய மார்க்க(தம்மம்)த்தின் அடிப்படைகளுக்கு சிறு சேதாரமும் நேராத வகையில், அவர் கண்டெடுத்தப் பிரிவு ' நவயான பவுத்தம் ' என்பதாகும். நவயானா என்பதன் பொருள் புதிய வாகனம் (New Vechile) எனப்படுகிறது. 

தாழ்த்தப்பட்ட / பழங்குடி மக்களின் உரிமைகளுக்கும் விடுதலைக்கும் ஆதரவான நிலைப்பாடும், தற்கால அரசியல் / சமூக அவலங்கள் குறித்துக் கவலைக் கொள்ளும் ஓர் சமூகவியல், அரசியல் (Socio-Political Movement) பண்பையும் கொண்டுள்ளது அம்பேத்கரின் இப்புதிய பிரிவு என்றால் அது மிகையாகாது. புத்த மதக் கோட்பாடுகள் சார்ந்து, தலித் மக்களின் நாட்பட்ட துன்பத் துயரங்களுக்கு நிரந்தர தீர்வு காண உதவும்படியான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நவயான பவுத்தம் புத்தரின் பிறப்பு முதற்கொண்டு அவரது துறவு வாழ்க்கை, ஞானம் பெற்றமை வரைக்குமான வரலாற்றை இயக்க இயல்வாத அடிப்படையில் முன்வைத்தது எனலாம். ஒருபுறம் புத்தரின் போதனைகள் மீது இந்து மதம் உள்ளிட்ட பிற மதங்களால் பூசப்பட்டிருந்த தெய்வீக (புத்த மதத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சிச் சார்ந்த வரலாற்றை தமிழகத்தில் பரவலாக்கிய தமிழறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களும் கூட "பகவான் புத்தருடைய சரித்திரமும், சமய சம்பிரதாய முறையில் பார்க்கும்போது, தெய்வீகச் செயல்களையும் அற்புத நிகழ்ச்சிகளையும் கொண்டுள்ளது" என்றார்) அரிதாரத்தை களைந்துகொண்டே இன்னொருபுறம் இந்து மதத்தின் எழுச்சிக்கும் இருப்புக்கும் பெரும் சவாலாக எழுந்தது நவயான பவுத்தம். மேலும், இந்துத்வா சித்தாந்தம் ஈன்றெடுத்த சாதி அமைப்பு (Caste System) எனும் சிறுமையை எள்ளி நகையாடியவாறே அக்கட்டமைப்பின் அழித்தொழிப்பு மீது சகோதரத்துவ உணர்ச்சி மிகுந்த சமத்துவ சமுதாய அமைப்பைக் கட்டியெழுப்பவதை தனது செயல்திட்டமாகக் கொண்டும் இயங்கத் துவங்கியது. 

நவயான பௌத்தத்தின் புத்தர்: 

அம்பேத்கர், புத்தரின் பிறப்பை ஓர் அவதாரப் புருஷராக அல்லாமல் மனிதரின் பிறப்பாகவும், புத்தர் இல்லறம் துறந்து துறவறம் ஏற்ற நிகழ்வை சந்தர்ப்பச் சூழல் கொடுத்த நெருக்கடியால் வனம் புக நேரிட்ட சம்பவமாகவும், அவரது கொள்கைகளை மனிதனின் துக்கம் / துக்கக் காரணம் / துக்கம் துடைக்க வழி / துக்க நிவாரணம் என வகைப்படுத்தி அத்துக்கத்தினின்று விடுதலை பெறுவதற்கான போதனைகளாக புத்த தம்மத்தை நம்முன் வைத்தார். 

ஒருநாள் பூஞ்சோலைக்கு உலாவச் செல்லும் வழியில் சித்தார்த்த கண்ட நான்கு காட்சிகள் (முதுமை, நோய், மரணம், துறவு) அவர் துறவறம் மேற்கொள்ள காரணங்களாக அமைந்தன என்றும் அதனால் இல்வாழ்க்கை மேல் பிடிப்பற்றுபோய் தந்தை சுத்தோதனர், அன்பு மனைவி, மகன் இராகுலன் உள்ளிட்ட யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் நள்ளிரவு வேளையில் அரண்மனை வாழ்க்கையை விட்டு இரகசியமாக வெளியேறினார் என்றும் புனையப்பட்டுள்ள சித்தார்த்தர் வாழ்வை யதார்த்த வாழ்வியலுக்கு நெருக்கமான வகையில் சொன்னார் அம்பேத்கர். 

அதாவது, சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் இடையில் ரோஹினி நதிநீரை முறைவைத்துப் பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினை எழுந்தது. இதனை முன்வைத்து கோலியர்கள்மீது போர்த்தொடுக்க வேண்டுமென சாக்கியர்களின் சங்கம் எடுத்த முடிவை எதிர்த்து வாக்குவாதம் செய்தார் சித்தார்த்தர். இதனால் சங்கத்தால் அறிவிக்கப்பட்ட மூன்று வகை தண்டனைக (படையில் சேர்ந்து பணிபுரிவது, தூக்கிலிடப்படவோ, நாடு கடத்தப்படவோ சம்மதிப்பது, குடும்பத்தை சமூக பகிஷ்காரம் செய்து, சொத்துக்களைப் பறிமுதல் செய்வது) ளுள் ஏதேனும் ஒன்றை சித்தார்த்தர் அனுபவித்தே ஆகவேண்டும் என்ற நிலை உருவானது. தன் பொருட்டு தன் குடும்பம் தண்டனைக்குள்ளாகி துன்பத்தில் ஆழ்வதை விரும்பாத சித்தார்த்தர், தாம் வனம் புகுந்து துறவறம் ஏற்க இசைந்தார். தம் குடும்பத்தினருடன் கலந்தலோசித்து, மனைவி யசோதரையின் சம்மதம் பெற்றபின்தான் வனம் புகுந்தார் என்று சித்தார்த்த கௌதமரின் வாழ்க்கை வரலாற்றை லோகாயதவாதக் கண்ணோட்டத்தில் விளக்கினார் அம்பேத்கர். 

நவயான பௌத்தக் கொள்கை: 

இந்து மதத்திற்கு மாற்றாக புத்த மதத்தை நவீன வடிவத்தில் மீட்டுருவாக்கம் செய்து அதற்கான கோட்பாடுகளை வகுத்தளித்ததுடன் புத்தரது வாழ்க்கை மற்றும் அவரது அறநெறி போதனைகளை எடுத்தியம்ப 'புத்தரும் அவர் தம்மமும்' என்றொரு நூலையும் வடிவமைத்துக் கொடுத்தார். வேதநூலுக்கு நிகராகப் போற்றப்படும் அந்நூல் புத்தரின் தோற்றம், துறவு வாழ்வு, ஞானமெய்துதல், போதனைகள் சமகாலத்தவருடன் உறவு, இறுதிப் பயணம் ஆகியவற்றைப் பகுத்தறிவு வாதப் பாதையில் நின்றுகொண்டு பேசுகிறது. 

புத்த மதம் பிற மதங்களினின்று மாறுபட்டது, பகுத்தறிவு வயப்பட்டது, முற்போக்குக் குணாதிசயம் கொண்டது, மூட நம்பிக்கைக்கு எதிரானது என்பற்கு உதாரணமாக 'புத்தரும் அவர் தம்மமும்' என்னும் நூலில் இடம்பெற்றுள்ள " கடவுள், ஆன்மா, பிரார்த்தனை, தொழுகை, சடங்குகள், பூசைகள், பலி யாகங்கள் ஆகியவைகைளை மட்டுமே உடையது மதம், ஆனால் புத்த தம்மத்தில் இவற்றுக்கெல்லாம் இடமில்லை, இவற்றின் இடத்தில் ஒழுக்கம் மட்டுமே இருக்கிறது" எனும் வாசகத்தையே குறிப்பிடலாம். 

கர்மா விதி என்பது குறித்த பிராமணக் கொள்கையை மறுத்து "மனிதப்பிறப்பு மரபியல் சார்ந்தது என்கிறார் புத்தர்" என்று அறிவியல் பூர்வமாக விளக்கமளித்த அம்பேத்கர் "கடந்தப் பிறவியின் கர்மம் பெறப்படுகிறது எனக் கூறுவதற்குப் பதிலாக, கடந்த பிறவியின் கர்மம் வாரிசுரிமையாகச் சுவீகரிக்கப்படுகிறது என்று கூறுவது சிறப்பாயிருக்கும்" என்றார். அம்பேத்கர் அருளிய வேத நூலின் (புத்தரும் அவர் தம்மமும்) 2912 வது வசனமானது இன்னும் தெளிவாக "விஞ்ஞானத்தின்படி, ஒரு குழந்தை தன் பெற்றோர்களின் பண்புகளை வாரிசு மரபுரிமையாய்ப் பெறுகிறது " என்கிறது. 

நன்மை செய், தீயன கைவிடு, பழிச்செயல் புரியாதே, அவாவும் காமமும் இன்னலையும் அச்சத்தையும் தருவன. துன்பம் இழைக்காதே, தீய விருப்பம் கொள்ளாதே, சினத்தைத் / பகைமையைத் தவிர்த்து அன்பால் பகைவனையும் வென்றிடு. அறிவாயிரு, நீதியாயிரு, நல்லோரோடிணங்கு, ஆழ்ந்த சிந்தனையோடும், நற்கவனமுடனும் இரு, விழிப்பாயிரு, அக்கறையாயிரு, நல்வழியைத் தெரிவு செய் என்பனப்போன்ற அறங்களின் வழி நடப்பதாக பவுத்த வாழ்முறை அமைய வேண்டும் என்றும் இல்லறத்தா (உபாசகர்) ரும், பிக்குகளும் பின்பற்றப்பட வேண்டிய அறநெறிகளை / கடமைகளை கண்ணியம் கலந்த கண்டிப்புடனும் போதிக்கிறது அம்பேத்கரின் நவயான பௌத்தம். 

1956, அக்டோபர் 14ம் நாள் அம்பேத்கர் 6 இலட்சம் மக்களுடன் பௌத்தம் தழுவியபோது நடந்த மதமாற்ற சடங்குகளினூடாக எடுத்துக்கொண்ட 22 சூளுரைகளே அம்பேத்ர் வடிவமைத்த பௌத்தப் பிரிவுக் கோட்பாடுகளின் ஒரு பகுதியாக.வும் தென்படுகின்றன. பிரம்மா, விஷ்ணு, மகஷ்வரனிடம் எனக்கு நம்பிக்கை இல்லை; அவர்களைத் தொழுது வழிபடவும் மாட்டேன் என்று துவங்கி, பிராமணர்களைக் கொண்டு எந்த சமய சடங்குகளையும் செய்யவுமாட்டேன் என்பது உள்ளிட்டு, நான் ஒரு புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதாகக் கருதுகிறேன், புத்தரின் போதனைகளின்படி இனி நடப்பதென இப்போது முதல் உறுதி மேற்கொள்கிறேன் என்பது வரைக்கும் இந்து மதம், பார்ப்பனியம் என்னும் பாசிச மையங்களுடன் முரண்பட்டு, புத்தரின் அறநெறிகளை ஏற்று நடக்க இருப்பதாக தமது செயல் திட்டத்தை அறிவித்தது நவயான பௌத்தம். 

நவயான பவுத்தத்தின்பால் ஈடுபாடு கொள்ளாததன் விளைவு: 

"இந்து மதம் என்னுடைய வர்க்கத்திற்கு ஒத்துவரவில்லை. என்னுடைய சுயமரியாதைக்கு ஏற்றதாக இல்லை", என்றும் "உங்களை மனிதர்களாகவே நடத்தாத அந்த மதத்தில் ஏன் இன்னும் இருக்க வேண்டும்?" என்று தலித் மக்களை நோக்கி வினா எழுப்பியும் "அமைப்பு ரீதியாகத் திரள வேண்டுமானால் மதம் மாறுங்கள். வலிமை பெற வேண்டுமானால் மதம் மாறுங்கள். சமத்துவம் கிடைக்க வேண்டுமென்றால் மதம் மாறுங்கள். விடுதலையடைய வேண்டுமானால் மதம் மாறுங்கள். உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டுமானால் மதம் மாறுங்கள்" என வேண்டுகோள் விடுத்த அம்பேத்கர்.. 

"இந்து மதத்தில் இருப்பதன் மூலம் எவரும் எவ்வகையிலும் வளமுற இயலாது, நலமுற முடியாது. இந்து மதத்தில் அடுக்கமைவு முறை நடைமுறையில் இருந்துவருவதால் உயர் வருணத்தவர்களும் சாதியினரும் தான் நலமுறுகின்றனர், வளம் பெறுகின்றனர். ஆனால் மற்றவர்களின் நிலை என்ன? கதி என்ன?" என்ற அம்பேத்கர், இதற்கான தீர்வாக பௌத்தம் ஏற்குமாறு ஒட்டுமொத்த தலித் மக்களுக்கும் அறைகூவல் விடுத்து "பௌத்தம் சமூக உயர்வுக்கான ஒரு தத்துவம் என உணரத் தொடங்கி விட்டால், பௌத்த மறுமலர்ச்சி என்பது நீடித்து நிலைபேறு உடையதாக ஆகிவிடும்" என்றும் குறிப்பிட்டார். 

அவரது அறைகூவலை அலட்சியம் செய்து வரும் துர் அனுபவத்தின் வயது அறுபதாண்டுகளை அநாயசமாகக் கடந்து நடைபோட்டு வருகிறது. அம்பேத்கர் சிந்தனைகளை முன்வைத்து நடைபோடும் தலித் சமூகவியல், அரசியல் இயக்கங்கள் கூட புத்தரை ஓர் அலங்கார அடையாளமாகப் பயன்படுத்தி வருகின்றனவே தவிர்த்து, முழுமனதோடு தலித் மக்களை பௌத்த அடையாளத்தின் கீழ் திரட்டி ஒரு வலிமை மிக்க சமூகமாக தலித் சமூகத்தை சமைக்க விரும்பிய அம்பேத்கரின் செயல் திட்டத்தின் மீது அக்கறைக் காட்டுவதில்லை. இதன் விளைவு இன்று, இந்து மதப் பயங்கரவாதத்தின் கொடுங்கரம் இந்திய அரசியல் அதிகார மையம் வரைக்கும் நீண்டு தலித் சமூக மேம்பாட்டு / பாதுகாப்பு / வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகள் முதலியவற்றை நீர்த்துப் போக செய்யவும்; வேலைவாய்ப்பு, உயர்கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீடு, சமூக பொருளாதார நிலைமைகளில் வாய்ப்புகள் வழங்கும் சலுகைகள் போன்றவற்றை முடக்கவும் துணிந்துவிட்டது. இன்றைய இந்திய அரசியலில் நேரடியாகக் கலந்துவிட்ட இந்து மதவாத சிந்தனை தலித் மக்களின் உணவு உரிமை வரைக்கும் தன் மூக்கை நுழைத்து மாட்டுக்கறி உண்போர் என்ற பேரில் தலித் மக்களை அடித்தேக் கொல்கிறது. அதாவது, இன்றைய தீண்டாமை என்பது நவீன வடிவங்களில் அரசின் மறைமுக அங்கீகாரம் பெற்றுவிட்ட திமிரோடு நடைபோடுகின்றன என்றே சொல்லலாம். அம்பேத்கரோ, இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு தாம் நினைத்தது நடவாமல் போன விரக்தியில் வீதிதோறும் உறைந்துபோய் நிற்கிறார் சிலையாக.

- வெ.வெங்கடாசலம்

Pin It