(முந்தைய பகுதி - பொதுவுடைமை தான் என்ன?)
இது வரைக்கும் மக்கள் அனைவரும் ஒரே வர்க்கமாக வாழ்ந்த, பொதுவுடைமைச் சமூகமாக இருந்த மனித சமூகம், உழைக்கும் வர்க்கம், சுரண்டும் வர்க்கம் எனப் பிரிந்து, வர்க்க சமூகமாக மாறியது. இச்சமூகத்தில் மனித குலத்திற்கு வேண்டிய அனைத்துப் பொருட்களையும் அடிமைகளே விளைவித்தனர். ஆனால் அனைத்தின் மீதும் ஆண்டைகள் உரிமை கொண்டனர். அடிமைகளுக்கு, அவர்கள் உயிர் வாழ்வதற்கும், உற்பத்திப் பணிகள் தடங்கல் இல்லாமல் தொடர வாரிசுளைப் பெற்று, வளர்த்துத் தருவற்கும், தங்களை அனைத்து விதங்களிலும் மகிழ்விப்பதற்கும், எவ்வளவு பொருட்கள் தேவைப்படுமோ அவ்வளவே தந்தனர்.
தங்களுடைய பொழுது போக்கிற்காக, சேவல் சண்டையைப் போல, அடிமைகளை மோத விட்டு, அதை ரசித்தனர். அவ்வாறு சண்டையில் ஈடுபடுத்தப்படும் அடிமைகளுக்கு, பலி ஆட்டைக் கொழுக்க வைப்பது போல, நல்ல உணவை அளித்து திடகாத்திரமாக வளர்த்தனர். அவ்வாறு நல்ல உணவு உழைக்கும் மக்களுக்குக் கிடைக்காததைச் சுட்டிக் காட்டி அவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்று கூறினர்; உழைக்கும் மக்களிடம் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வேலைகளை மட்டும் தருவதைச் சுட்டிக் காட்டி உழைக்கும் அடிமைகளே அதிர்ஷ்டசாலிகள் என்று அவர்களிடம் கூறினர்.
அடிமைச் சமூகம் ஏற்பட்டு, சில தலைமுறைகள் சென்ற பின், முன்னால் சுதந்திரமாக வாழ்ந்ததைப் பற்றி அறியாத மக்களிடையே, வாழ்க்கை என்றால் இப்படித் தான் இருக்கும் என்ற கருத்து படர்ந்து விட்டது. இக்கட்டுப்பாட்டை மீற முனையும் அடிமைகளை ஒடுக்குவதற்கு அரசு எனும் ஓர் அமைப்பு இச்சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டது. இது சமூக ஒழுங்கைக் கட்டிக் காப்பதற்குத் தேவை என்ற கருத்தும் பரப்பப்பட்டது.
அடிமைகளிடையே உள்ள கணவன், மனைவி, குழந்தைகளில் ஒருவரை அல்லது சிலரை, ஒரு ஆண்டை இன்னொரு ஆண்டைக்கு விற்று விடலாம். ஆண்டைக்கு அதற்கு முழு உரிமை உண்டு. அது மட்டும் அல்ல; ஆண்டை நினைத்தால் அடிமைகளைக் கொல்லவும் செய்யலாம். அடிமைகள் இதற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது. இப்படிப்பட்ட சமூகத்தில் அடிமைகள் நிம்மதியாக இருக்க முடிந்தது இல்லை. அதற்கு எதிராகப் போராட்டம் வெடிக்கவே செய்தது. அதற்குத் தலைமை தாங்கியவர் ஸ்பாரர்டகஸ் என்பவர் ஆவார். அவர் தான் இவ்வுலகம் தெரிந்து கொண்ட முதல் சுதந்திரப் போராளி. ஒழுங்கமைந்த பயிற்சி பெற்ற இராணுவத்தின் முன்னால் பயிற்சியே இல்லாத ஸ்பார்டகஸும் அவருடைய தோழர்களும் தோல்வி அடைய நேர்ந்தது. அனைவரும் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் அடிமைகளின் இந்த எழுச்சி ஆண்டைகளை கதிகலங்க வைக்கவே செய்தது.
சில ஆண்டைகள் அச்சத்தில் அடிமைகளுக்குக் கொடுமைகள் இழைப்பதைக் குறைத்துக் கொண்டனர். காலப் போக்கில் இவர்களுடைய அடிமைகள். உச்ச பட்சக் கொடுமைகளை இழைக்கும் ஆண்டைகளின் அடிமைகளை விட அதிக பொருட்களை உற்பத்தி செய்ய முடிவது தெரிந்தது. இதனால் இவர்களின் கை ஓங்கியது. இதுவும் அடிமைகளின் ஓயாத போராட்டமும் அடிமைச் சமூகம் தொடர்ந்து இயங்க முடியாத நிலைக்குக் கொண்டு சென்றது.
அடிமைகளை இனி முழு உடைமையாக வைத்துக் கொள்ள முடியாது என்று ஆண்டைகள் உணர்ந்தார்கள். இனி ஆண்டைகளுக்கு வேண்டிய பொருட்களை உற்பத்தி செய்து தந்து விட்டு, மிகுந்த நேரத்தில் அடிமைகள் தங்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து கொள்ளலாம் என்ற ஏற்பாடு செய்து கொள்ளப்பட்டது. இதன்படி இனி ஆண்டைகள் சட்டப்படி அடிமைகளைக் கொல்ல முடியாது. ஆனால் உழைப்பை இலவசமாகப் பெற முடியும். இப்படித் தோன்றிய சமூகம் தான் நிலப் பிரபுத்துவச் சமூகம்.
(தொடரும்...)
- இராமியா