கோவையில் இந்து முன்னணி இயக்கத் தலைவர் கொலை செய்யப் பட்டிருப்பது கண்டிக்கப்படவேண்டியது. இக்கொலைக்குக் காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் நாம் வலியுறுத்த வேண்டியதுதான். இந்திய அரசியல் சட்டமும் கூட குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றே கூறுகிறது. இச்சட்டங்களை நிலைநிறுத்தவே நாம் நீதி மன்றங்களை உருவாக்கி சட்டத்தின் ஆட்சியை செயல்படுத்தி வருகிறோம்.

இந்நிலையில் கோவையில் இக்கொலைக்குப் பின் மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் இந்திய ஒன்றியத்தின் இறையான்மைக்கு விடுக்கும் சவாலாக உள்ளது. ஒரு மத அரசியல் இயக்கத்தலைவர் இறந்தால் அப்பகுதியில் உள்ள பிற மத மக்கள் தாக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும். மதப்பூசல்களை உருவாக்கும் இதுபோன்ற செயல்களை மாநில அரசு அனுமதிக்கக்கூடாது. மதத்தைச் காரணம் காட்டி நடத்தப்படும் வன்முறையாளர்கள் மீது சட்டத்தின் பிடி இறுக வேண்டும்.

"மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்" என்பது வள்ளலாரின் அருள்மொழி.

மதம்பிடித்த மனிதன் அன்பென்னும் உணர்வை இழப்பான் என்பது உண்மையிலும் உண்மை. உலக நிகழ்வுகள் நமக்கு மனிதநேயமற்ற மதவெறிச் செயல்களைக் காட்டிக்கொண்டே இருக்கிறது. மானுட வாழ்வின் நெறிகளை மனிதர்களுக்கு புகட்ட வந்த மதங்கள் மானித சமுதாயத்தை பிரித்து மனித நேயமற்ற அறமற்ற செயல்கள் செய்ய தூண்டும் போதைப் பொருளாகப் மாறிப்போனதுதான் அவலத்தின் உச்சம்.

'அறம் மறந்த அறநிறுவனமாய்' சமய நெறிக்கூடங்கள் மாறிவருகிறது. அரசியல் பிழைக்க உலகம் எடுத்துக்கொண்ட பொருளாய் இன்று மதம் உள்ளது. மதம் பிடித்த மனிதனின் உணர்வைத் தூண்டி ஆதாயம் காண "உலக அரசியல்" காய்களை நகர்த்தி வருகிறது. மனிதர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் விரைவுக் கருவியாக மதம் இன்று உள்ளது. பிரிவினையின் ஊடே அரசியல் செய்வது எளிதாக இருப்பதால் அரசியல் பிழைக்கும் அறமற்ற மனிதர்களின் கைகளில் பாவையாக மதம் மாறிப்போய் விட்டது.

மனம் மயக்கும் ஒட்டுமொத்த போதைப் பொருளாக மதம்தான் உள்ளது. போதைப் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் கூட சிறிது நேரத்திற்குள் நிதான நிலைக்கு திரும்பிவிடலாம். மதபோதை தலைக்கேறியவர்களால் விரைவில் நிதான நிலைக்கு திரும்பிவிட முடிவதில்லை. சக மனிதர்களை உறவுப்படுத்துவதற்குப் பதிலாக; மனிதர்களைத் தனித்து அடையாளப்படுத்தும் வேலையை மதங்கள் செய்து வருகிறது. மக்களின் விழிப்புணர்வுக்காக தோன்றியதாகக் கூறிக்கொள்ளும் மதங்கள் இன்று மக்களை அறியாமை நிலையில் வைத்திருக்கும் இருள் பொருளாக மாறிவிட்டது.

கொலைவாழ்வுக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ளும் அளவுக்கு மனிதனை மாற்றிவிடுகிறது மதம். சக மனிதர்களின் குருதி கொட்டும் நிலை கண்டும் மனம் மகிழும் குரூரத்தனம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் மனங்களில் மனித நேயம் செத்து மடிவதற்கு மதங்களைப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் பெருகி வருகிறார்கள்.

இத்தீவிரவாதிகளிடமிருந்து மக்களைக் காக்கும் பொறுப்பு மனித நேயம் மிக்க மனிதர்களிடம் குவிக்கப்பட்டுள்ளது.

· மானுட நேயத்தையே "மரணமில்லா பெருவாழ்வாக" வள்ளலார் கூறி இருக்க முடியும்,

· மனித நேயமே இயேசு கிறித்துவின் "நற்செய்தி பரப்புரை" யாக இருந்திருக்க முடியும்.

· மனித நேயமே "சகோதரத்துவம்" பேணும் நபிகளாரில் வாய்மொழியாக இருந்திருக்கும்.

· கடவுளை மறுத்த மாமனிதர் பெரியாரோ "மனிதனை நினை" என்றே கூறினார்.

· உலகத்திற்கே பொது நெறி தந்த வள்ளுவரும் கூட

"அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்(243)",

என்று கருனையை வலியுறுத்துகிறார்.

நாம் நேசிப்பது இவர்கள் காட்டிய நெறியை என்றால்

நம்மால் அன்பையும், மனித நேயத்தையும் மட்டுமே நேசிக்க முடியும். தான் பிழைக்க மதவெறியைத் துண்டும் மதவெறி கும்பலை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து விலக முடியும்.
இனம் கண்டு கொள்வோம்...!

· நமது அருகிலேயே அவர்களும் இருப்பார்கள்...!

· நம் மதத்தையே பின்பற்றுவதாகச் சொல்வார்கள்...!

· நம் கடவுள்தான் அவர்களுக்கும் கடவுள் என்பார்கள்...!

· நம்மோடு சேர்ந்து ஆலயங்களுக்கும் வருவார்கள்...!

· நாம் அணிந்து கொள்வதைப்போலவே அவர்களும் மத அடையாளங்களை அணித்திருப்ாபர்கள்...!

· நம்மின் மறை நூல்களையே அவர்களும் வைத்திருப்பார்கள்...!

· நாம் போற்றும் சமய நெறியாளர்கள் படங்களை அவர்களும் வைத்திருப்பார்கள்....!

நம் அருகில் இருந்துகொண்டே உண்மைக்கு மாறாகச் செயல்படும் இவர்களை இனம் கண்டு கொள்வோம்... இவர்களும் நம்மவர்கள்தான் என்று ஏமாந்து ஏற்றுக்கொண்டுவிட்டால் நம்மையும் மதம் என்னும் பேய் பிடித்தாட்டுவதை யாராலும் தடுத்துவிட முடியாது.

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று(எமன்).." என்னும் சிலப்பதிகாரத்தின் வரிகள் நம் மனதில் நிலைத்திருக்கட்டும்.

"மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில் (1071)"

(குணத்தில் ஒருவர் கயவராக இருப்பார். ஆனால், தன்னை நல்லவரைப் போலவேக் காட்டுக்கொண்டு நடிப்பார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும் என்பதுதான் இக்குறளின் பொருள்.)

என்ற திருக்குறளையும் மறவாதிருப்போம்.

- நா.வெங்கடேசன், ஆசிரியர், மெய்ச்சுடர் இதழ்.

Pin It