Fire Accident Of Kerala

ஏன் இந்த மனிதர்கள் இப்படி முட்டாள்களாய் இருக்கின்றார்கள்? தன்னுடைய சொந்த வாழ்க்கையின் மீது முடிவெடுக்கும் திராணியில்லாத இந்த நவீன அடிமைகள் தன் வாழ்க்கையின் மீது மேலாதிக்கம் செய்யச் சொல்லி ஒவ்வொரு கடவுளாக ஒவ்வொரு கோயிலாக மன்றாடிக் கிடக்கின்றார்கள். தனக்கான விடியலை கோயிலில் இருக்கும் பல உருவங்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் மூலம் பெற முடியும் என அவனது ஆன்மீக உணர்வு அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கின்றது. சக மனிதன் வறுமையாலும், அந்த வறுமை அவனுக்குள் கட்டமைத்துள்ள மன நெருக்கடிகளாலும் அவதியுறும் போது அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு அவனுக்கு எந்த உதவியும் செய்யாத ஒரு இந்துவின் ஆன்மீக மனம் எங்கோ ஒரு தூர தேசத்தில் உள்ள ஒரு கடவுளுக்குத் திருவிழா என்றால் உடனே அவனை விரைந்து ஓடச் செய்கின்றது. அதற்காக தன்னுடைய வருமானத்தில் ஒரு கணிசமான பகுதியைச் செலவிடமும் அவனை தூண்டுகின்றது.

  நேர்மையும், நாணயத்தையும்,  தன் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதாய் சொல்லிக் கொள்ளும் ஒரு இந்து அதற்கான மன வலிமையை இந்துக் கடவுள்கள் தனக்கு அளிப்பதாய் நம்புகின்றான். அப்படி தனக்கு நேர்மையும், நாணயத்தையும் கற்றுக் கொடுத்த அந்தக் கடவுளுக்குத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என எண்ணுகின்றான். ஆன்மீக வாழ்வே தன்னை இந்த உலகத்தில் இருக்கும் அனைத்துவிதமான தீமைகளில் இருந்தும் விடுபட வைக்கும் நிவாரணி என உளப்பூர்வமாக நம்புகின்றான். காலையில் இருந்து இரவு படுக்கப்போகும் வரை ஏதோ வடிவில் தன்னுடைய ஆன்மீக தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கின்றான்.

  அவனுக்கு எல்லாமே பிடித்திருக்கின்றது. ஒரு பல்துறை மருத்துவமனையில் ஒவ்வொரு உடல்பாகத்தையும் சிறப்பாக கவனிக்க தனி மருத்துவர்கள் இருப்பது போன்று அவனது ஒவ்வொரு பிரச்சினைகளையும் சிறப்பாக கவனிக்க தனி தனி கடவுள்கள் அவனுக்குத் தேவைப்படுகின்றார்கள். உடல்நோய்களை தீர்க்க, செல்வம் கொடுக்க, தேர்வில் வெற்றிபெற, திருமணம் நடக்க, குடும்பப் பிரச்சினைகளை தீர்த்து வைக்க, தான் செய்த பாவங்களை (கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நம்பிக்கை மோசடி…..) கழுவ, அப்புறம் தனது எதிரிகள் ஒழிந்துபோக அவர்களுக்கு செய்வினை வைப்பது, பில்லி சூனியம் வைப்பது என அனைத்துச் செயல்களுக்கும் அவனுக்குத் தனி தனி கடவுள்கள் தேவைப்படுகின்றார்கள். அப்படி அந்தத் தனிச்சிறப்பு வாய்ந்த கடவுள்கள் எத்தனை மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் அதனைத் தொழுவதற்குப் புனித பயணம் மேற்கொள்கின்றார்கள்.

  அப்படி தனக்கான ஆன்மீக தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள காடுகளையும், மலைகளையும், கடல்களையும் கடந்து செல்லும் அவனைக் காப்பாற்ற வேண்டிய முழுப்பொறுப்பும் அவன் இருப்பதாய் நம்பும் அந்தக் கடவுள்களையே சாரும். ஆனால் நிஜத்தில் தன்னை நம்பிவரும் அந்தப் பக்தர்களை அந்தக் கடவுள்களே கொத்துக்கொத்தாய் படுகொலை செய்தால் அந்தச் சர்வவல்லமை பொருந்திய சக்தியின் மீது நாம் தாக்குதல் தொடுப்பதைத் தவிர நம்மைப் போன்ற சாமானிய மக்களுக்கு வேறு என்னதான் மாற்றுவழி இருக்கின்றது?

  கேரள மாநிலம் கொல்லம் புட்டிங்கல் தேவி கோயிலில் நடந்த திருவிழாவில் (ஏப்ரல் 10, 2016) பட்டாசு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டு ஏறக்குறைய 110க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இத்தனை மக்கள் கொடூரமாக சாவதற்கு யார் காரணம்? நிச்சயமாக மக்களுடைய முட்டாள் தனமும், அந்த முட்டாள் தனத்திற்குள்  குடிகொண்டு இருக்கும் கடவுளுமே காரணமாகும். மாவட்ட ஆட்சியர் பட்டாசு வெடிக்க அனுமதி மறுத்த போதும் கோயில் நிர்வாகம் கொடுத்த அனுமதியின் பேரில் கடவுளை திருப்தி படுத்த தடையை மீறி போட்டி போட்டுக்கொண்டு பட்டாசு வெடித்துள்ளனர். இதன் காரணமாகவே பெரும் தீவிபத்து ஏற்பட்டு அதிகப்படியான உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கின்றது. 

  ஆன்மீக உணர்வானது அனைத்தையும் விட கடவுளையே பெரிதாக பார்க்கின்றது. அதனால் அதை திருப்திபடுத்த சட்டத்தை மீறினால் தவறில்லை என்ற மனநிலைக்கு அது வந்துவிடுகின்றது. கடவுளின் பெயரால் உயிரையும் எடுக்கலாம், கடவுளின் பெயரால் உயிரையும் கொடுக்கலாம் என்பதுதான் ஒரு ஆன்மீகவாதியின் கொள்கையாக இருக்கின்றது. எத்தனை பிணங்கள் விழுந்தாலும் அதை ஒரு ஆன்மீகவாதி கடவுளின் செயலாகவே எடுத்துக் கொள்கின்றான். கடவுள் ஏதோ ஒன்றை இந்த உலகத்திற்கு சொல்ல வருவதாக அர்த்தப்படுத்திக் கொள்கின்றான். மனிதன் ஒழுக்கமில்லாமல் நடப்பதாலேயே சுனாமி முதல் சூறாவளி வரை அனைத்தையும் கடவுள் கொண்டு வருவதாக கூப்பாடு போடுகின்றான்.

  2005 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள மந்தர் தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 340 பேர் உயிரிழந்தனர், 2008 ஆம் ஆண்டு ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள நைனாதேவி கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 123 பேர் உயிரிழந்தனர். 2010 ஆண்டு உத்திரபிரதேச மாநிலத்தில், உள்ள கிருபால் மகராஜ் ஆசிரமத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர், 2011 ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 109 பேர் உயிரிழந்தனர், 2015 ஆம் ஆண்டு கோதாவரி புஷ்கரம் கூட்ட  நெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழந்தனர். மேலும் அதே ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள துர்காதேவி கோயிலில் நவராத்திரி விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் உயிரிழந்தனர்.

  இதுதான் கடவுள்களின் உண்மையான வலிமை. தன்னை நம்பி வந்த மக்களைக் காப்பாற்ற திராணியற்ற இந்தக் கடவுள்கள் தான் இந்த முட்டாள் மனிதர்களின் வழிகாட்டிகளாக அவர்களின் வாழ்க்கையைப் பிறப்பு முதல் இறப்புவரை கட்டுப்படுத்துபவர்களாக உள்ளனர்.

    அவர்கள் ஒரு போதும் தீமையின் வடிவமாக கடவுளை ஏற்றுக் கொள்வது கிடையாது. அதனால் தான் இன்னும் அவர்களின் மனங்களில் அந்தக் கடவுள்களால் ஆழமான செல்வாக்கு செலுத்த முடிகின்றது. ஒரு நல்லது நடக்கும் போது அது கடவுளின் செயல் என அகமகிழும் ஒரு ஆன்மீகவாதி ஒரு தீய செயல் நடக்கும் போது அதுவும் கடவுளால்தான் நடைபெறுகின்றது என சொல்வதில்லை. உதாரணத்திற்கு ஒரு கொலை நடைபெறும் போது ‘பார் எவ்வளவு அழகாக கொலை செய்கின்றான். கடவுள் துணை இல்லாமல் இப்படி எல்லாம் செய்யமுடிமா?' என்றோ, ஒரு பாலியல் பலாத்காரம் நடைபெறும்போது 'கடவுள் எல்லாத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார். அவன் இப்படி செய்வது கடவுளின் விருப்பம்' என்றோ சொல்வதில்லை. காரணம் நாம் எப்போதும் கடவுளை நல்ல செயல்களுடன் தொடர்புபடுத்தியே பார்க்க கற்றுக் கொடுக்கப்பட்டிருக் கின்றோம்.

  அதனால் தான் நாட்டில் நடக்கும் எல்லாவிதமான அராஜக செயல்களுக்கும் காரணம் மனிதன் தான் கடவுள் கிடையாது என கடவுளை குற்றச்செயல்களில் இருந்து விடுதலை செய்து விடுகின்றோம். அதனால் நல்லது நடப்பதற்கு  மனிதனை நம்புவதைவிட கடவுளை நம்புவதே சிறந்தது என முன்மொழிகின்றோம்.

 ஒரு ஆன்மீக முட்டாள் எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் தன்னுடைய குற்றத்தை செய்கின்றான். அவனைப் பொறுத்தவரை அதற்கு அதற்கு உண்டான கடவுள்களிடம் குறிப்பிட்ட காணிக்கைகளைக் கொடுத்துக் கடவுள்களை சாந்திப்படுத்தி விடலாம் என அவன் உளப்பூர்வமாக நம்புகின்றான். தான் பார்க்காத, தன்னால் நிரூபிக்க முடியாத கடவுளை தன்னுடைய குழந்தைகளையும் நம்பும்படி கற்றுக்கொடுகின்றான். அதன்மூலம் சுயமாக சிந்திக்க திராணியற்ற ஒரு முட்டாளை இந்தச் சமூகத்திற்கு உருவாக்கி தனது சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்துகின்றான்.

  இந்த மக்களை இப்படி முட்டாள் தனத்தில் இருப்பதையே பெருமையான ஒன்றாக  நம்பச் சொல்லிக் கொடுக்கும் அற்பப்பிறவிகளான மதவாதிகள் இது போன்ற சமூக அவலங்களுக்குப் ஒருபோதும் பொறுப்பேற்றுக் கொள்வதில்லை. நாமும் இத்தனை பேரின் சாவுக்கு நீயும் தான் காரணம் என அவனின் சட்டையைப் பிடித்து கேள்விகேட்கப் போவதில்லை. அந்தத் தைரியத்தில்தான் அவர்கள் தொடர்ச்சியாக உங்களிடன் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுகின்றார்கள். பல வகையான கடவுள்களைப்பற்றி தன்னுடைய மூளையில் தோன்றிய குப்பைகளை எல்லாம் கூச்சமே இல்லாமல் உங்கள் முன் வாந்தி எடுக்கின்றார்கள். அதன்மூலம் தனக்கும் கடவுள்களின் அருள் இருப்பதாக காட்டிக் கொள்கின்றார்கள். ஆன்மீக முட்டாள்களோ சாவோம் என தெரியாமல் அவர்கள் சொல்லும் கோவிலுக்கு பய பக்தியோடு குடும்பத்துடன் புறப்பட தயாராகின்றனர். அவர்களுக்கு எப்போதுதான் புரியுமோ கடவுளை அடையும் வழி என்று சொல்லப்படும் இந்த வழி முழுவதும் வெறும் மனித பிணங்களை மட்டுமே கொண்டுள்ளது என்று.

- செ.கார்கி