bose bjp

மாவீரன் நேதாஜியின் மூத்த சகோதரரும், தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரருமான சரத் சந்திர போஸின் கொள்ளுப்பேரன் சந்திரன் போஸை, ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. கும்பல் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் களமிறக்கியிருக்கிறது. மேற்கு வங்க மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு நேதாஜியிடம் அளவுகடந்த ஆழ்ந்த அனுதாபமும், அன்பும், பாசமும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள்.

மாமேதை அம்பேத்கர், மாவீரன் பகத்சிங், மகாகவி பாரதி, வீரத்துறவி விவேகானந்தர் ஆகியோருக்கு மக்களிடையே இருக்கும் செல்வாக்கையும், புகழையும் சங்பரிவார் பயன்படுத்தத் துவங்கியிருக்கிறது. அதே தந்திரத்துடனும் யுக்தியுடனும் தான் மேற்கு வங்க அரசியலில் நோதாஜியின் புகழ்மிக்க வரலாற்றையும், பாரம்பரியத்தையும் தங்கள் குறுகிய சுயநல அரசியலுக்கு பி.ஜே.பிக்காரர்கள் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள்.

கார்பரேட் முதலாளிகளின் கையாட்கள், மதவெறி பாசிஸ்ட்கள் கும்பலோடு தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம் சந்திரன் போஸ் தனது புகழ்மிக்க மூத்த தலைமுறைக்கு துரோகம் இழைத்திருக்கிறார். நேதாஜியின் அரசியல், பொருளாதார லட்சியங்களும், மதவெறி பி.ஜே.பி.யின் லட்சியங்களும் கொள்கைகளும் ஒன்றுதானா?

1938 ல் நேதாஜி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் நேருவின் தலைமையில் ஒரு திட்டக்கமிஷனை நியமித்தார். நாடு சுதந்திரம் பெற்றவுடன், தொழில் வளர்ச்சி மற்றும் விவசாய உற்பத்திக்கு சோவியத் யூனியன் மாடலில் ஐந்தாண்டு திட்டங்கள் தீட்டி சுதந்திர அரசாங்கம் செயல் பட வேண்டும் என்றும் இரும்பு, உருக்கு மற்றும் சுரங்கம் மற்றும் அனைத்து கனரகத் தொழில்கள் அனைத்தும் பொதுத்துறையில் மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் நேரு கமிசன் காங்கிரஸ் தலைமைக்கு அறிக்கை தாக்கல் செய்தது. காங்கிரஸ் தலைவர் நேதாஜி, நேரு கமிஷன் அறிக்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டு அதை காங்கிரஸ் செயல்திட்டத்துடன் இணைத்துக் கொண்டார்.

சுதந்திர இந்தியாவில் பொதுத்துறையை பலப்படுத்தவேண்டும் என்று கனவு கண்ட நேதாஜியும், பல்லாயிரம் கோடி லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களைக் கூட அன்னிய நாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலையில் விற்றுவரும் மோடியும் ஒன்றா ?

வாழ்நாள் முழுவதும் நேதாஜி தனது அரசியல் வாழ்விலும், சொந்த வாழ்க்கையிலும், மதச்சார்பின்மையை தனது உயிர்மூச்சான கொள்கையாக, லட்சியமாகக் கொண்டு செயல்பட்டார் என்பது வரலாறு. சிறுபான்மை இஸ்லாம், கிறித்தவர்கள் மற்றும் சீக்கிய இன மக்களுக்கு தனது இந்திய தேசீய ராணுவ இயக்கத்தில் மிக முக்கியமான பொறுப்புகளை பகிர்ந்து கொடுத்து சமவாய்ப்புகளுடன் உற்சாகத்துடன் செயல்பட வழிகாட்டியவர் நேதாஜி.

இந்திய தேசீய ராணுவத்தின் தலைமை தளபதி நேதாஜி ( சுப்ரிம் கமாண்டர்) அடுத்த மூன்று தளபதிகளாக பிரேம்குமார் ஷஹீல் ( பின்னர் கேப்டன் வட்சுமியின் கணவர்), ஜி.எஸ்.தில்லோன் ( சீக்கியர்), ஷா நவாஸ்கான் ( முஸ்லீம்) ஆகியோரை நியமித்துக் கொண்டார். இந்த மூன்று இந்து, முஸ்லீம், சீக்கிய தளபதிகள்தான் பின்னர் கைது செய்யப்பட்டு டெல்லி செங்கோட்டையில் ஆங்கிலேய அரசால் சதி வழக்கு நடத்தப்பட்டது.

அது மட்டுமல்ல, சிங்கப்பூரில் நேதாஜி தனது அந்தரங்க செயலாளராக ஹபிபூர் ரஹ்மானை நியமித்துக் கொண்டார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் 1857 ல் பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டு, மாண்டலே சிறையிலேயே மடிந்த இந்தியாவின் கடைசி மன்னன் பகதூர் ஷா கல்லறைக்கு 1943 செப்டம்பர் 16 ம் நாள் சென்று மரியாதை செலுத்தினார். 1857 ம் ஆண்டு முதலாவது சுதந்திரப் போரில் இந்திய சிப்பாய்களுக்கு தலைமை தாங்கி பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து நின்ற பகதூர் ஷாவை “பாரதநாடு பெற்றெடுத்த மாவீரன்” என்று பர்மா குடியரசு தலைவர் டாக்டர் பா.மா. தலைமை தாங்கிய அந்த நிகழ்ச்சியில் புகழஞ்சி செலுத்தினார்.

1943 அக்டோபர் 21 ம் நாள் சிங்கப்பூரில் சுதந்திர இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும், இந்திய தேசீய ராணுவத்தின் சுப்ரிம் கமாண்டராகவும் பதவி ஏற்றுக் கொண்ட அந்த நிகழ்ச்சியில், முதல் சுதந்திரப் போரில் ( 1857) தலைமை தாங்கி வீரமரணம் அடைந்த ஜான்ஸி ராணி, தாந்தியா தோப், நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தியதுடன், பிரிட்டிஷாரை இறுதிவரை எதிர்த்து நின்ற ஹைதர் அலி மற்றும் திப்புசுல்தான் மன்னர்களை போற்றிப் புகழ்ந்தார்.

1943 அக்டோபர் 21ம் நாள் சுதந்திர இந்தியாவின் தேசீய கீதமாக தாகூரின் “ஜனகனமன” பாடலை தேர்ந்தெடுத்துக் கொண்டார் நேதாஜி. பின்னர் 1945 ஜூலை மாதம் “ஜனகனமன” தேசீய கீதத்துக்கு சிங்கப்பூரில் புகழ்பெற்ற இசைமேதை ஜனாப் ஹீசைன் மூலம் இசையமைக்கச் செய்தார். அற்புதமாக இசையமைத்துக் கொடுத்த அந்த இசைமேதை ஜனாப் ஹீசைனுக்கு இந்திய தேசீய ராணுவ அணிவகுப்பு கூட்டத்தில,; லட்சக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் முன்னிலையில் “ஒரு வெள்ளிப் பேழையில் ரூபாய். 1க்கான காசோலையை வைத்து” பரிசாக வழங்கிப் பெருமைப்படுத்தினார்.

இஸ்லாமியருக்கு இவ்வளவு சிறப்பு செய்த நேதாஜி எங்கே? “வீட்டில் மாட்டுக்கறி வைத்திருந்தார்” என்று புரளியைக் கிளப்பி உ.பி. மாநிலத்தில் முஸ்லீம் பெரியவர் முகமது இத்தலாக்கை அடித்தே கொன்ற பி.ஜே.பி.க்காரர்கள் எங்கே?

முஸ்லீம் மக்களை இரண்டாந்தர மக்களாக அவமானப்படுத்திவரும் மோடிக்கு நேதாஜியின் பெருமையைப் பேசுவதற்கு தகுதியுண்டா? நேதாஜி பற்றிய ரகசிய கோப்புகளை வெளியிட்டதன் மூலம் தங்களுக்கு மேற்குவங்க மக்களிடையே பெருத்த செல்வாக்கும், ஆதரவும் இருப்பதாக மோடியும் அவரது பரிவாரங்களும் மனப்பால் குடிக்கிறார்கள்.

செக்குக்கும், சிவலிங்கத்துக்கும் வித்யாசம் தெரியாத சந்திரன் போஸையும், பி.ஜே.பியையும் மேற்கு வங்க மக்கள் முறியடிப்பார்கள். எவரெஸ்ட் சிகரம் அருகே இருக்கும் குப்பை மேடுகள் எவரெஸ்ட் சிகரமாக முடியாது. உடலில் வரிக் கோடுகள் இருப்பதாலேயே பூனை புலியாக முடியாது. நேதாஜி பரம்பரையில் பிறந்ததாலேயே சந்திரன் போஸ் போன்ற நபர்கள் நேதாஜியின் உண்மை வாரிசுகளாக முடியாது.

- கே.சுப்ரமணியன், மாநில சட்ட ஆலோசகர், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்

 

Pin It