கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த பெருமழை சென்னைப் பெருநகர் மக்களை ஒரு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த அதிர்ச்சி வைத்தியம் நம் சமூகத்தைப் பீடித்து உள்ள அறியாமை, அக்கறையின்மை, சரியான திசையில் சிந்தியாமை என்ற நோய்களை அகற்றி உள்ளதா என்று ஆராய்ந்தால் மகிழ்ச்சியான முடிவுக்கு வர முடியவில்லை.

   chennai flood 338  வரலாறு காணாத அளவுக்குப் பெய்த மழையினால் சென்னைப் பெருநகரின் பல பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்தது. சில பகுதிகளில் தரைத் தளம், முதல் தளம் மூழ்கி இரண்டாம் தளம் வரையிலும் வெள்ளம் வந்தது. தாம்பரம், பெருங்களத்தூர்,முடிச்சூர் ஆகிய பகுதிகள் அவற்றுள் சில. அப்படி இரண்டாம் தளம் வரை வெள்ளம் வந்த தாம்பரம் முடிச்சூர் பகுதிக்கு அடுத்து உள்ள, 100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட செம்பாக்கம் ஏரி இப்பெருமழைக்குப் பிறகும் கிட்டத்தட்ட வறண்ட நிலையிலேயே உள்ளது என்று அப்பகுதி மக்கள் 18.12.2015 அன்று கூறி உள்ளனர். அது மட்டும் அல்ல. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 912 ஏரிகளில் 865 ஏரிகளில் மட்டுமே நீர் முழு அளவிற்கு நிரம்பியது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 335 ஏரிகளில் 293ஏரிகளில் மட்டுமே நீர் முழு அளவிற்கு நிரம்பியது.

     உலக அளவில் பேசப்படும் செய்தியாகும் அளவிற்கு மழை பெய்து இருந்தும், இரண்டாம் தளம் வரையிலும் வெள்ளம் வந்திருந்தும், அதே பகுதிகளில் பல ஏரிகளில் முழு அளவிற்கு நீர் நிரம்பவில்லை என்பது வெட்கித் தலை குனிய வேண்டிய செய்தியாகும். இப்படிப்பட்ட இழி நிலைக்குக் காரணம் திட்டமிடுதலில் உள்ள குறைபாடா அல்லது திட்டங்களைச் செயல் படுத்துவதில் உள்ள குறைபாடா என்று சிந்திக்க வேண்டும். ஆனால் நாம் அப்படிச் செய்கிறோமா?

     மழை மையம் (Rain Centre) என்ற அமைப்பு இவ்வளவு மழை பெய்து இருந்தும், சென்னையில் உள்ள கோயில் குளங்கள் நிரம்பவில்லை என்று தன் கவலையைத் தெரிவித்து உள்ளது. இதைப் பற்றித் தீவிரமாக ஆராய்ந்து, அதன் முடிவுகளை நீர்ப் பாதுகாப்புக் குழுவிற்கு (Water Security Mission) அனுப்பப் போவதாக இவ்வமைப்பு 31.12.2015 அன்று தெரிவித்து உள்ளது. பல ஏரிகளில் முழு அளவிற்கு நீர் நிரம்பவில்லை என்பதைப் பற்றியோ, சில ஏரிகள் கிட்டத் தட்ட வறண்ட நிலையிலேயே இருப்பதைப் பற்றியோ கவலைப்படாமல், கோயில் குளங்கள் நிரம்பாததற்குக் கவலைப்படும் போக்கு நிச்சயமாக மகிழ்ச்சிக்கு உரியது அல்ல.

     சரி! இப்பெரு மழை பெரும் சேதங்களை ஏற்படுத்தியதற்கான காரணங்களையும், நீர் நிலைகளின் பராமரிப்பு பற்றியும் யாரும் யோசிக்கவே இல்லையா? அப்படி எல்லாம் இல்லை. மிக மிகப் பெரும்பாலான மக்கள் நீர் நிலைகளையும் நீர் வழித் தடங்களையும் பராமரிப்பதில் அரசு ஒழுங்காகத் திட்டமிடவில்லை என்று குறை கூறி விட்டனர். மழை வெள்ளம் மிகவும் பாதித்த பகுதிகளில் ஒன்றான வேளச்சேரி வாழ் மக்கள் தூர்க்கப்பட்ட நீர் வழித் தடங்களை மீண்டும் அமைக்க வேண்டும் என்றும், வருவாய்த் துறையின் கிராம வரைபடத்தில் நீர் நிலைகளாகவும், நீர் வழித் தடங்களாகவும் காட்டப்பட்டு உள்ள இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தாலும், தூர்க்கப்பட்டு இருந்தாலும் அவற்றை அகற்றி, பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் 6.1.2016 அன்று கோரி உள்ளனர். இதே போன்ற கருத்தை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் மட்டும் அல்லாது மிகப் பெரும்பாலான மக்களும் கூறி வருகின்றனர்.

     "பரவாயில்லையே! பெரும்பாலான மக்கள் சரியான தீர்வைப் பற்றிக் கூறி இருக்கிறார்களே!" என்று நினைக்கத் தோன்றுகிறதா? அவசரப்பட வேண்டாம். இந்த யோசனைகள் எல்லாம் புதியவை அல்ல. ஏற்கனவே அரசின் சிந்தனையிலும், திட்டத்திலும், விதிமுறைகளிலும் உள்ளவை தான். நீர் நிலைகளை ஆக்கிரமிக்கக் கூடாது என்ற விதிமுறை இருக்வே செய்கிறது. ஆனால் பெருமுதலாளிகள் நீர் நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டிடங்களைக் கட்டும் போது அவற்றை அரசினால் அகற்ற முடிவது இல்லை. அப்படி அகற்றாமல் இருப்பதற்கு நீதிமன்றங்களின் வழக்கு முறை மிகப் பெரிய காரணமாக இருக்கிறது.

     பெருமுதலாளிகளின் ஆக்கிரமிப்பை ஒப்பிடுகையில் பரப்பளவிலும், பொருளாயத அளவிலும் பொருட்படுத்தவே முடியாத அளவில் தங்கள் உறைவிடங்களை நீர் நிலைகளுக்கு அருகில் அமைத்து உள்ள குடிசைவாசிகளை அப்புறப்படுத்துவதில் அரசு தன் வீரத்தைக் காட்டும். ஆனால் அவர்களுடைய வீரம் மிகக் குறுகிய காலத்திலேயே மறைந்து விடும். காரணம் அக்குடிசைவாசிகளுக்கு மாற்று இடத்தை அளிக்க முடியாது. அக்குடிசைவாசிகள் இல்லை என்றால் மாளிகைவாசிகளுக்கு வீட்டு வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். வீராவேசத்துடன் தொடங்கிய ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கை காற்று போன் பலூன் போல தொய்ந்து விடும்.

     ஏற்கனவே உள்ள ஆக்கிரமிப்புகளை விட்டு விடுவோம். புதிதாக ஆக்கிரமிப்புகள் நடவாமல் பார்த்துக் கொள்ள முடியுமா? புதிதாக மனைப் பிரிவுகள் அமைக்கப்படும் பொழுதும், புதிதாகப் பெரிய கட்டிடங்களைக் கட்டும் பொழுதும் நீ வழித் தடங்களில் நீர்ப் போக்குவரத்துக்குத் தடை ஏற்படா வண்ணம் சிறுபாலங்களைக் (Culvert) கட்ட வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகள் நிபந்தனைகளை விதிக்கவே செய்கின்றன. ஆனால் மனைப் பிரிவு, கட்டிட விற்பனை முதலாளிகள் அவற்றைச் சற்றும் மதிப்பதில்லை.

     உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு இதைக் கண்காணிக்காமல் விட்டு விடுகிறார்கள் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஊடகங்களும், நீதிமன்றங்களும் இதைக் கடுமையாகச் சாடுகின்றன. ஆனால் இது முழு உண்மை அல்ல; அடிப்படைக் காரணமும் அல்ல. இதற்கு அடிப்படைக் காரணம் முதலாளித்துவ உற்பத்தி முறை தான்.

     மனைப் பிரிவை அமைக்கும் போதும், கட்டிடங்களைக் கட்டும் போதும் நீர் வழித் தடங்களில் நீர்ப் போக்குவரத்துக்குத் தடை ஏற்படா வண்ணம் சிறுபாலங்களைக் கட்டுவதை முதலாளிகள் ஏன் தவிர்க்கின்றனர். அப்படிக் கட்டினால் முதலீடு அதிகமாகி இலாப விகிதம் குறைந்து விடும்.

     அரசு அதிகாரிகள் இம்முதலாளிகள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பது இல்லை? அப்படி நடவடிக்கைகளை எடுப்பதற்குப் போதிய அளவில் ஊழியர்கள் இல்லை என்பது தான் இதற்கு அடிப்படைக் காரணம். போதிய எண்ணிக்கையில் ஊழியர்களை அமர்த்தினால் அரசுக்குச் செலவினங்கள் மிகும். செலவினங்கள் மிகுந்தாலும் பராவாயில்லை என்று விதிமுறைகளைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த முனைந்தால், இத்தொழிலில் இலாபம் குறைகிறது என்று கூறி முதலாளிகள் மூலதனத்தை வேறு தொழிலுக்கு மாற்றி விடுவார்கள்.

     இப்பிரச்சினை மனைப் பிரிவு, கட்டிட விற்பனைத் தொழிலுக்கு மட்டும் அல்ல; எல்லாத் தொழில்களிலும் உண்டு. ஆகவே முதலாளித்துவ உற்பத்தி முறையில் அரசு தன் விதிகளைச் செயல்படுத்தியே தீருவது என்று கண்டிப்பாக இருக்கவே முடியாது.

     இலாபத்திற்காக உற்பத்தி செய்யும் முதலாளித்துவ முறையைக் காவு கொடுத்து விட்டு, மக்கள் நலனுக்காக உற்பத்தி செய்யும் சோஷலிச உற்பத்தி முறையைக் கைக்கொள்வது தான், இப்பெருமழையினால் எழுந்துள்ள பிரச்சினை மட்டும் அல்ல; மக்கள் அல்லல் படும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைத் தேட முடியும் ஒரே வழியாகும்.

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.1.2016 இதழில் வெளி வந்துள்ளது)

Pin It