பள்ளி பருவங்களில் நிகழும் இனிமையான உணர்வுகளில் தன் நண்பர்களுக்குப் ‘பட்டப்பெயர்’ வைத்து அழைப்பதும் ஒன்று. நாம் நம் நண்பர்களுக்கு வைத்தால் பதிலுக்கு அதைவிட மோசமான பெயரை நமக்கு இட்டு வெறுப்பேற்றுவார்கள்.

எங்கள் பள்ளி காலங்களில் பட்ட கணேஷ், மூக்கன், செர்ரி, கருப்பட்டி, அண்டா போன்ற பட்டப்பெயர்கள் மிகவும் பிரபலம். சில அசிங்கமான பெயர்களும் ஆசிரியர்களுக்கு தெரியாமல் பள்ளிகளுக்குள் புழங்கும். இயற்பெயரை வைத்து அழைக்காமல் இது மாதிரியான பட்டப்பெயர்களை வைத்துதான் அழைப்பார்கள்.

சிலரின் இயற்பெயர் முற்றிலுமாக மறைந்து ஏட்டளவில் மட்டுமே மிஞ்சும். பள்ளி பருவத்தில் நண்பர்கள் விளையாட்டாக வைத்த பெயர் அவர்களின் கண்ணீர் அஞ்சலி படங்கள் வரையும் கூட பலருக்கு இருந்ததுண்டு.

இந்த இனிமையான தருணங்களை நினைத்து மகிழ முடியவில்லை. காரணம், இந்த விளையாட்டுச் செயல் தமிழ்ச் சமூகத்திலும் தீவிரமாக பரவியுள்ளதை நினைத்து வெட்கபட வேண்டிய தருணத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள்.

சங்ககாலங்களில் தொடங்கி சென்ற நூற்றாண்டு வரையும் கூட பட்டப்பெயர்களுக்கு என்று ஒரு மதிப்பிருந்தது. திருவள்ளுவர், தொல்காப்பியர், கார்மேகபுலவர் என்று இதற்கு பல உதாரணங்கள் கூறலாம்.

தமிழ் மண்ணின் உரிமைக்காகப் போராடிய குறுநில மன்னர்கள், தளபதிகள், படை வீரர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் போன்றோர்களுக்கு வீரன், மாவீரன் பட்டங்களை கொடுத்து மகிழ்ந்தோம்.

ஆனால் இன்றோ தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் எத்தனை எத்தனையோ வள்ளல், வாரி வள்ளல், எதற்கும் அஞ்சா மாவீரன் என வளைவுகள் உள்ளன. இந்த மாவீரர்கள் எந்த சமூக பிரச்சனைகளிலும் அக்கறை கொண்டவர்களோ, கட்டுக்கோப்பான உடற்கட்டு கொண்டவர்களோ இல்லை. தொந்தி பெருத்தவர்கள்.

பெண்களுக்கு என்று ஏதேனும் வளைவுகள் இருந்தால் கூட ஆறுதல் அடையலாம். ஆனால் அதுமாதிரியான வளைவுகளை நான் இதுநாள் வரையிலும் கண்டதில்லை.

தமிழ் மொழியின் நல்ல சொற்களை அழிக்கும் செயலாகவும் இதை கருத வேண்டியிருக்கிறது. தமிழ் மொழியின் மீது தமிழர்களே போர்த் தொடுக்கும் செயல்தான் இது.

அரசியல் அரங்கில் இதன் நிலை உச்சத்தை தொட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒருசில அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தான் அவர்களுக்கான பட்டங்கள் பொருத்தமாக உள்ளது. அதற்கு அவர்களும் முழுமையான தகுதி உடையவர்களாக இருந்தனர். காமராஜர், அண்ணா, பெரியார் போன்றோரை குறிப்பிட்டு சொல்லலாம். இவர்கள் எதையும் கேட்டுப் பெறவில்லை.

இன்றைக்கு இருக்கும் கலைஞர், அம்மா, புரட்சி கலைஞர், இளைஞர்களின் எழுச்சி நாயகன் போன்ற பட்டங்களைக் கொண்டவர்கள் அதற்கு முற்றிலும் பொருத்தமில்லாதவர்கள். இளைஞர் என்ற வயது வரம்புக்குள்ளேயே வராதவர்கள்.

இதில் சிலர் அடம்பிடித்து, அடாவடித்தனம் செய்து சில பெயர்களை தங்களின் இயற்பெயரை போலவே மாற்றி கொண்டனர். அதற்காக அவர்களின் கைக்கூலிகளும் துணைப் போனார்கள். தங்கள் தலைவரை அவரின் பெற்றோர்கள் வைத்த பெயரை சொல்லி அழைத்தால் கோவம் வருமாம்.

மாணவர்களுக்கு இயற்பெயரை சொல்லாமல் பட்டப்பெயரை சொல்லி அழைத்தால் கோவம் வரும். ‘அம்மா வச்ச பேரு இருக்குடா’ ‘அப்பா வச்ச பேரு இருக்குடா’ என்பார்கள். ஆனால் இந்த அரசியல் தலைவர்களுக்கோ பட்டப்பெயரை சொல்லித்தான் அழைக்க வேண்டுமாம். இவர்களில் யார் அறியாச் சிறுவர்கள், முட்டாள்கள் என்றே தெரியவில்லை.

வருங்காலங்களில் தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள ஒரு படிக்காத சாதாரண மனிதன் கூட தன் தாயை ‘மம்மி’ என்றோ அல்லது ‘அம்மே…’ போன்ற வேற்று மொழியில் அழைக்கும் சூழ்நிலை வந்தால் ஆச்சரியம் தேவையில்லை.

தமிழன்னையின் வீரப்புதல்விகளான குயிலி, வேலுநாச்சியார், செங்கொடி போன்றோர்களை எந்தவித வயது வித்தியாசமும் பாராமல் ‘அம்மா’ என்ற பட்டத்துடன் எந்த பத்திரிக்கையிலும், சுவரொட்டிகளிலும் காணவில்லை.

ஆதிமுதற் கொண்டே தமிழர்கள் கலையுடன் ஒட்டி வந்தவர்கள் என்பார்கள். கலையையும், வாழ்வையும் பிரித்து பார்க்காதவர்கள் தமிழர்கள் என்ற பெருமை தமிழனுக்கு உண்டு. அத்தகைய கலையை உருவாக்கிய பல கலைஞர்களை தமிழன்னை பெற்றிருக்க, ‘கலைஞர்’ என்ற சொல் மட்டும் ஒருத்தருக்கு சொந்தமாகிவிட்டது.

இப்பொழுதும் கிராம புறங்களில் மேடை நாடகங்களும், கூத்துகளும் நடைபெறுவதுண்டு. எத்தனையோ கலைநயம் மிக்க எழுத்தாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். சிறப்பான நடிகர்கள் உள்ளனர். ஆனால் இவர்களையெல்லாம் அருமையான கலைஞர் என்று பேச்சுக்காகக் கூட பாராட்ட முடிவதில்லை. அதையும் மீறி கலைஞர் சொல்லை பயன்படுத்தினால் ‘இவர் அந்தக் கட்சிக்காரரோ’ என்கிறார்கள்.

புரட்சி கலைஞர் எந்த நாட்டில் புரட்சி செய்தார் என்பதும், தளபதி எந்த படையில் இருந்தார் என்பதும் யாரும் அறியாதது. அறியப்படாதது. அறியவும் முடியாதது.

ஆயிரமாயிரம் தன்னலமில்லாத வீரர்களுக்கு தலைமை தாங்கிய பிரபாகரன் அவர்களை கூட விடுதலை ‘புலிகளின் தலைவர் பிரபாகரன்’ என்றுதான் அழைக்கிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் போராடிய சேகுவேராவையும், மண்டேலாவையும் எவரும் பட்டப்பெயர்கள் வைத்து அழைப்பதில்லை. அவர்களும் இதை கேட்கவில்லை. இந்த அற்ப தனத்துக்காக அவர்கள் போராடவுமில்லை.

இது போன்றோர்களை தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களும், திரைப்பட நடிகர்களும் உணர்கிறார்களோ இல்லையோ அவர்களுக்கு பெயர் வைக்கும் பட்டபெயர் குழு உணர வேண்டும்.

இந்த பட்டப்பெயர் வைக்கும் மானங்கெட்ட கூத்து தமிழ் திரைப்படங்களையும் விட்டு வைக்கவில்லை. முதல் படத்திலேயே பட்டங்களோடு வந்து பட்டமாக பறந்து போய்விடுகிறார்கள்.

‘நடிகர் திலகம்’ என்ற பெயருக்கும் ‘சிவாஜி’ என்ற பெயருக்கும் கணேசன் அவர்கள் மிகவும் பொருத்தமாக இருந்தார். அவரை போல பட்டங்களுக்குக் கச்சிதமாக பொருந்துவர்களை தமிழ் திரைப்படத்தில் தேடிதான் பார்க்க வேண்டும். அப்பட்டங்களிலும் பல ஆங்கிலத்தில்.

இந்தப் பட்டப்பெயர் கலாச்சாரம் பள்ளிகளோடு நிறைவடைந்தால் நல்லது. அதைவிடுத்து அரசு விளம்பரங்களிலும், ஏடுகளிலும் வருவது தவிர்க்கப்பட வேண்டும்.

அமெரிக்காவில் மாடு ‘ம்மா…’ என்று தமிழில்தான் கத்தும் என்று விளையாட்டாக பள்ளிகளில் தமிழின் பெருமை பேசுவோம். இப்பேச்சு தனி ஒரு அரசியல் கட்சிக்கும், தனிப்பட்ட நபருக்கும் சாதகமாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்வது தமிழனின் கடமையாகும்.

Pin It