2016 ஆம் ஆண்டானது தமிழக சட்டமன்றத்தின் பதினைந்தாவது தேர்தல் ஆண்டு என்னும் பெருமையோடு பிறந்திருக்கிறது. இவ்வாண்டின் முதல்பாதி முழுவதுமே அரசியல் மாநாடுகள்,தேர்தல் பரப்புரைகள், காரசார விவாதங்கள், பரஸ்பர சாடல்கள், கூட்டணி குழப்பங்கள் என்றுவிறுவிறுப்பான அரசியல் காட்சிகளால் நிறைந்து வழியப்போகிறது. தேர்தல் என்றாலே இதெல்லாம் இல்லமலா. 

இதற்கும் மேலாக ஓட்டுக்கு பணம் பட்டுவாடா, கருத்துக் கணிப்புகள், வாக்குப்பதிவு தில்லு முல்லுகள் உள்ளிட்ட இத்யாதி அரசியல் தில்லாலங்கிடி காட்சிகளும்கூட வெகு இயல்பானவைபோல நடந்தேறத்தானேப் போகின்றன! இதில் ஆச்சரியம் கொள்வதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கலாம். 

இவற்றையெல்லாம் தவிர்த்தும் இன்னும் ஏதோ ஒன்று இம்முறைஇருப்பதுபோல்தான் தெரிகிறது. அதாவது,  கடந்த பத்தாண்டுகால தமிழ்நாட்டின் அரசியல் இயக்கப் போக்கை உற்று நோக்குங்கால் புதியதோர் அரசியல் சார்ந்த சிந்தனை இச்சுழற்சிக்குள் மெலிதாக இழைந்தோடுவதுபோல் தென்படுகிறது. அது யாதெனில், திமுக மற்றும் அஇஅதிமுக ஆகியஇரண்டு திராவிட அரசியல் கட்சிகளும் அல்லாத அரசியல் தலைமையின் மீதான விருப்பம் மக்கள் மத்தியில் துளிர்த்திருப்பது சார்ந்ததாகும்.

நீதிக்கட்சியின் தோற்றத்திலிருந்துத் தொடங்கும் திராவிடக்  கட்சிகளின் அரசியல் வரலாறு தந்தை பெரியார் அவர்களால் நிறுவப்பட்ட சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் என்று முறையே பரிணாம வளர்ச்சிக்கண்டு சி. என். அண்ணாதுரை தலைமையின் கீழ் 1949 இல் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) என்னும் அரசியல் கட்சியாக பிறப்பெடுத்தது. அக்கட்சி முதன் முதலாக 1967 ஆம் ஆண்டு நான்காவது சட்டமன்றத் தேர்தலில் வென்றதும் தமிழக முதல்வராக அமர்ந்தார் அண்ணாதுரை. அவரைத் தொடர்ந்து மு.கருணாநிதி திமுகவிற்கு தலைமையேற்க 1976வரைக்கும் திமுக கட்சியே தமிழகத்தை அரசாண்டது. 

திமுக கட்சிக்கு மாற்று கட்சியாக அதிமுகவை 1972 இல் நிறுவிய எம்ஜிஆர், திமுகவின் அரசியல் கனவில் சிம்ம சொப்பனமாய்த் தோன்றியதுடன் கருணாநிதியின் எதிர்கால அரசியல் நிம்மதிக்கு ஊறு விளைவிக்கும் சக்தியாகவும்எழுந்தருளினார். பெரியாரின் கடவுள் மறுப்பு, பகுத்தறிவுவாதம், சாதிமத எதிர்ப்பு, மூட நம்பிக்கைகள் ஒழிப்புப் போன்ற உயிர்ப்பான கொள்கைகள்மீது எம்ஜிஆருக்கு பெரும் மதிப்பும் ஆர்வமும் இருக்கவில்லை என்றாலும் அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புரிந்துகொண்டு அவற்றின்மீது உடனடியாக செயலாற்றும் அதிரடி ஆளுமையாக தன்னை வரிந்துகொண்டார்.

எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுகவானது 1977 ஆறாவது சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறவே எம்ஜிஆர் முதல்வரானார். அதுமுதல் 1987 வரை அவரது தலைமையிலான அஇஅதிமுக கட்சியே தமிழ்நாட்டை அரசாட்சி செய்து வந்தது. சத்துணவுத் திட்ட கதநாயகன் எம்.ஜி.ஆர் 1987இல் இயற்கை எய்திடவே மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றது. அதன்பிறகு அஇஅதிமுக தலைமை ஜெயலலிதாவின் கைக்கு இடம்பெயர்ந்துவிட காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து 1991தேர்தலைச் சந்தித்த ஜெயலலிதா அத்தேர்தலில்  அமோகமாக  வென்று  பத்தாவது தமிழகமுதல்வரானார். இப்படி 1967 முதல் இன்று வரைக்கும் திமுக மற்றும் அஇஅதிமுக ஆகிய இவ்விரு திராவிட அரசியல் கட்சிகள்தான் மாறி மாறி தமிழகத்தை அரசாட்சி செய்து வருகின்றன.

    இவ்விரு திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்குட்பட்ட தமிழக அரசியல் வரலாற்றின் முதல் அரைபாகம் அப்படியொன்றும் மோசமான காலக்கட்டமாக இருந்ததென்றும் சொல்ல முடியாது.குறிப்பாக திமுக கட்சியின் நிறுவனரான அண்ணாதுரை, பெரியாரின் அரசியல் பள்ளியில் பயின்றவர் என்பதாலேயே பகுத்தறிவுவாத தாக்கம் பெற்றவராய் விளங்கினார். ஒன்றே குலம்,ஒருவனே தேவன் என்று முழங்கிய அண்ணா, பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை அரசியல் வசதிக்காக   கைவிட்டார் என்றாலும்    பிராமணிய  /  வருணாசிரம எதிர்ப்பு, சாதி மறுப்பு,தீண்டாமை எதிர்ப்பு முதலிய சமூகச் சீர்திருத்தங்கள்மீது ஈடுபாடே கொண்டிருந்தார் எனலாம்.. 

சமூக நீதிக்கு வழி வகுக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம், இடஒதுக்கீடு ஆகிய கொள்கைகளை உயர்த்திப் பிடித்ததுடன், பிராமணிய சடங்குகள் அல்லாத சீர்திருத்தத் திருமணங்களுக்கு ஆதரவாகசுமரியாதைத் திருமணச் சட்டம், கலப்புத் திருமண தம்பதியினருக்கு தங்கப் பதக்கம் வழங்கும் திட்டம் மற்றும் அனைத்துச் சாதியினரும் அர்ச்சராகும் சட்டம், வரதட்சணை ஒழிப்புச் சட்டம்,பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை தொடங்கப்பட்டது, 69 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவந்ததுவரைக்குமான  திராவிடக்  கட்சிகளின் அரசியல் சாதனைகள் தமிழக அரசியல், சமூக, கலாச்சார,பண்பாட்டுத் தளங்களில் உண்டு பண்ணிய தாக்கங்களைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாதுதான்.

மேற்கண்ட சமூகச் சீர்திருத்தக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் பெரியார் / அண்ணாவின் வழித்தோன்றலாய் எழுந்த மு.கருணாநிதியின் பங்களிப்பும் போற்றுதற்குரியது. விவசாயத்திற்கு இலவச மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி, வேளாண் கல்லூரிகள் / கால்நடைப் பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டது உள்ளிட்ட அரசியல் சாதனைகளுக்கு உரியவர் மு.கருணாநிதியே ஆவார். பஞ்சாலைக் கழகம் துவக்கியது, கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளை மேம்பாடடைய செய்தது, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் அமைத்தது என்று நீள்கின்றன திராவிடக் கட்சிகளின் தொழில் வளர்ச்சிச் சாதனைகளும்.

ஆனாலும் கர்மவீரர் காமராசரின் வெறும் ஒன்பதரையாண்டுகால ஆட்சி சாதனைகளுடன்திராவிடக் கட்சிகளின் ஐம்பதாண்டுகால சாதனைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது சலிப்பே மிஞ்சுகிறது நமக்கு. அவர் தமது குறுகிய (15-4-1954 to 2-10-1963) ஆட்சி காலத்திலேயே செயல்படாமல் முடங்கிக் கிடந்த 15303 தொடக்கப் பள்ளிகளுக்கு உயிர்ப்பூட்டியதுடன் புதிதாக 11397தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி வைத்தார். 890 உயர்நிலைப்பள்ளிகள், 11 பயிற்சிக் கல்லூரிகள், 3உடற் பயிற்சிக் கல்லூரிகளைப் புதிதாகக் கட்டமைத்து ஏழை எளியவர்களின் கல்விக் கண் திறந்து கர்மவீரர் ஆனாரென்றால், மின் திட்டம், நூற்பாலைகள் என்று 35 தொழிற் சாலைகள் நிறுவி தமிழகத்தின் தொழிற்துறை வளர்ச்சிக்கு வித்திட்டு பெருந்தலைவருமானார். 

இலவச மதிய உணவுத் திட்டம், வேளாண்மை வளர்ச்சிக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்தும் நல்லெண்ணத்துடன் 11அணைகள் கட்டுவித்தது உள்ளிட்டு அப்பெருந்தலைவரின் மேற்படி சாதனைகள் ஒவ்வொன்றும் தமிழகத்தின் நீண்ட நெடுங்காலத்து  வளர்ச்சிக்கான அடிப்படைகளாக நின்று பேசும் தன்மைக் கொண்டவை என்றால் அது மிகையாகாது. 

தேசம் பொருளாதார ரீதியில் வலுவற்று, வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பதற்குத் தடுமாறிக் கொண்டிருந்தக் காலக்கட்டத்திலேயே இச்சாதனைகள் காமராசரால் சாதரணமாக நிகழ்த்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தகுந்தது.காமராசரின் இக்கல்வித்துறை சாதனைகளைத் தாங்கி நிற்கும் முட்டுக் கால்களைத் தட்டிவிடும் விதமாக நர்சரி , மெட்ரிகுலேசன் / ஹையர் செகண்ட்ரி என்னும்  பெயர்களில் அடிப்படைக் கல்வியையும் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வியையும் தனியார் வசம் ஒப்படைத்துவிட்டு மது விற்பனையை அரசு முன்னின்று நடத்தும் அவல நிலைக்கு தமிழகத்தை ஆளாக்கிய பெருமை இவ்விரண்டு திராவிடக் கட்சிகளையே சாரும்.

திராவிடக் கட்சிகளின் ஐம்பதாண்டுகால அரசியல் வாழ்வை இரண்டாக வகுத்து, பிந்தைய அரைபாகத்தை எம்ஜிஆருக்குப் பிந்தைய திமுக ஆட்சி என்றும் எம்ஜிஆருக்குப் பிந்தைய ஜெயலலிதா தலைமையின் கீழான அஇஅதிமுக என்றும் வகைபடுத்திப் பார்க்கும்போது இக்காலக்கட்டம் ஊழல் மலிந்த, குடும்ப அரசியல் சாயம் படிந்த, ஜனநாயக மாண்புகளை அழுத்தித் தேய்த்துவிட்ட, மன்னராட்சி காலத்தை நினைவூட்டும்படியான அகம்பாவ அரசியல் மனோபாவம் மேலோங்கிய அரசியல் காலக்கட்டமாகத்தான் தோற்றமளிக்கிறது.

இக்கட்சிகளின் கரங்களில் ஐன்பதாண்டுகாலமாக பிழைப்பு நடத்தும் தமிழக சட்டமன்றத்தை வென்றெடுக்கும் மாற்று அரசியல் சிந்தனையானது ஒற்றை நாடி ஆளாக தமிழகத்தில் ஆங்காங்கே உலவிக்கொண்டு இருந்தது என்றாலும் அதன் மென்குரல் வெகுமக்களின் செவிகளை நெருடாமலேயே இருந்தது. இந்நிலையில்  மேற்படி கட்சிகளின் தொடர் அரசியல் துரோகங்களால் அக்கட்சிகளுக்கு உள்ளும் வெளியேயும் காயம்பட்டுப்போன வை.கோ. பொன்ற அரசியல் ஆளுமைகள் அங்கிருந்து வெளியேறி தனிப்பட்ட அரசியல் இயக்கங்களாகத் திரளும் முயற்சிகள் ஒருபுறம் நடந்தேறின. இன்னொருபுறம் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை முன்னிறுத்திய சாதிய சங்கங்களின் தோற்றமும் திராவிட அரசியல் இயக்கங்களுக்கு சவாலாகவே எழுந்தன. 

அம்பேத்கர் நூற்றாண்டை முன்னிட்டு தொண்ணூறுகளுக்குப் பின்பு தலித் மக்கள் மத்தியில் மேலெழுந்த அரசியல் விழிப்புணர்வு மட்டம், அவர்களை அமைப்பு ரீதியான திரட்சிக்குள்ளும் செலுத்தவே அவ்வகை தலித் அரசியல் இயக்கங்களின் எழுச்சியும் திராவிட அரசியல் கட்சிகளின் அடித்தளத்தை அசைக்கும்படியாகவே அமைந்துவிட்டது.  இவ்வரிசையில் 2005இல்  விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சியானது திராவிட கட்சிகளைப் பார்த்து அலுத்தும் சலித்தும்போன தமிழக இளைஞர்களை தம்பக்கம் கவர்ந்திழுத்துக் கொண்டதுடன் தனக்கென ஒரு நிரந்தர ஓட்டு வங்கியையும் உருவாக்கிக்கொண்டது. 

நான் கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லிக்கொண்டு கிளம்பிய கேப்டன் இப்போது நாக்கைத் துருத்திக் காட்டி, எச்சரிக்கை விடும்படியாக ஆள்காட்டி விரலை அசைத்தும் திராவிடக் கட்சிகளை எந்தத் தியாகம் செய்தும் ஆட்சிக்கு வரவிடாமல் செய்வேன் என்று சங்கல்பம் கொண்டு தமிழகமெங்கும் அலைந்துத் திரிவதை அலட்சியப்படுத்தினால் அது உடனடிப் பிரச்சினையாக மாறப்போவது இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளுக்குத்தான். 

இன்றைய நிலையில் தமிழக அரசியல் கட்சிகளின் அனைத்துக் காய் நகர்த்தல்களும் வரவிருக்கும் 2016 சட்டமன்ற தேர்தலை நோக்கியதாகவே மட்டுமே அமைந்திருக்க திராவிடக் கட்சிகளை பொது எதிரிகளாக பாவிக்கும் மனப்பான்மையும் மற்றபிற கட்சிகளிடம் கருக்கொண்டுள்ளது.  பாமகவும் தேமுதிகவும் ஏற்கனவே திராவிட கட்சிகளைப் புறக்கணியுங்கள் மக்களே என்று வீதிவீதியாக முழங்கியவாறு வலம் வந்துகொண்டிருக்க,  இப்போது அவ்வரிசையில் மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் ஒருங்கிணைந்து மக்கள் நலக் கூட்டணி என்று திரண்டுள்ளது. 

மக்கள் நலக்  கூட்டணியில் தேமுதிகவும் இணைந்துவிடும் பட்சத்தில் இக்கூட்டணி மேலும் வலுப்பெறும் வாய்ப்புகளும் கனிந்துகொண்டிருக்க காங்கிரஸ், பாஜக ஆகிய தேசிய கட்சிகள் வெற்றி வாய்ப்புகள் மிகுந்த அரசியல் கட்சி அல்லது அரசியல் கூட்டணியுடன் இணைந்து சிற்சில இடங்களைக் கைபற்றிக்கொள்ளும் சாதகமான சூழல் கனிந்து வரட்டுமென்று காத்திருக்கின்றன என்றே சொல்லலாம். எது எப்படியென்றாலும் இம்முறை இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளுக்கும் எதிரான மனநிலை தமிழக அரசியல் தளத்திலும் மக்கள் மத்தியிலும் உறுதியாக கால் கொண்டுவிட்டது என்பதுவே நிதர்சனம்.

நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை, ஈழப் பிரச்சினை ஆகியவை நீண்ட நெடுங்காலமாக தீர்வுக் காணப்படாமல்,  நிரந்தர பிரச்சினைகளாக கிடப்பிலேயே உள்ளன; ஒரு கட்சி ஊழலுக்கும் குடும்ப அரசியலுக்கும் பேர்போனது என்றால் மற்றொன்று ஊழல் வழக்கில் சிக்கி சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்ததுக் குறித்த குற்ற உணர்வே இல்லாமல் அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்டு கட்சி பிரமுகர்கள் யாவரையும் அடிமைகள் போல் நடத்தும் ஓர் அராஜக அமைப்பாக தன்னை நிறுவிக் கொள்வதில் பெருமைக் கொள்வதாய் இருக்கிறது. 

இவ்விரண்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சாதிய மோதல்கள், தீண்டாமை வன் கொடுமைகள், கௌரவக் கொலைகள், குற்றச் செயல்கள் இயல்பான காரியங்கள்போல் நடந்தேறுகின்றன. ஏழை / எளிய மக்கள் நிறைந்த பெரும்பான்மைச் சமூகங்களாக விளங்கும் பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்ட சமூகங்களே டாஸ்மாக் மதுபானத்தால் பெருமளவில் சீரழிகிறது என்னும் நிலையில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்க்கமான செயல்திட்டம் இவர்களிடம் இல்லவே இல்லை.

2015 நவம்பர்- டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழை சென்னை மாநகரத்தை மூழ்கடித்து மக்களை தண்ணீரில் தத்தளிக்கவிட்ட நிகழ்வு இவ்விரு கட்சிகளின் தொலைநோக்குப் பார்வையற்ற மற்றுமொரு அரசியல் முகத்தையும் வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது. முன்னேற்றம் / வளர்ச்சி என்னும் பெயர்களில் உருவான வானாளவிய கட்டிடங்களை / குடியிருப்புகளை ஏரிகளிலும்,ஆறுகளிலும் , குளங்களிலும் கட்டிக்கொள்வதற்கு கண்மூடித்தனமாக அரசு அனுமதியளித்ததன் விளைவாக போக்கிடமற்றுப்போன மழைநீர் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் வாழ்விடங்களில் தஞ்சம் புகுந்து தேங்கி நின்றது ; இது இயற்கைப் பேரிடரினால் விளைந்த நாசமல்ல ; மனிதத் தவறுகளினால் விளைந்த நாசமாகும் என்று விவாதம் புரிந்தன ஊடகங்களும்.மாறி மாறி தமிழகத்தை அரசாட்சி செய்து வந்த திராவிடக் கட்சிகளின்  ஐம்பதாண்டுகால ஊழல் நிர்வாகம் தோற்றுவித்த பேரிடர் இதுவென்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மணற்கொள்ளை, கிரானைட் ஊழல் போன்ற பகாசூர ஊழல்கள் ஒரு பக்கம் பேயாட்டம்போட்டுக்கொண்டிருக்க, தமிழகம் தொழிற்துறை, விவசாயம், கட்டுமானம் உள்ளிட்டத் துறைகளில் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை என்னும் குறைபாடுகளைப் பட்டியலிட்டும் சுட்டிக்காட்டியும், இவ்வளவுக்கும் காரணம் மாறி மாறி தமிழகத்தை ஆட்சிபுரிந்த இவ்விரண்டு பெரிய திராவிடக் கட்சிகளே என்று முழங்கும் திராவிட எதிர் அரசியல் பேச்சுக்கள் சில நேரங்களில்/ விசயங்களில் மிகையாகத் தோன்றினாலும் நிச்சயமாக பொய்யானக் கூற்றுகளாகத் தோன்றவில்லை. 

இதுவரைக்கும் சொல்லப்பட்ட அரசியல் அம்சங்களுடன் வறுமை ஒழிப்பு, விலைவாசிக் கட்டுப்பாடு, சுகாதாரம்,  வேலைவாய்ப்பு, மீனவர் பிரச்சினை, வேளாண்மை வளர்ச்சி,மதச்சார்பு அரசியலுக்கு எதிரான போர்க்குணம் முதலிய  அம்சங்கள் மீது இரண்டு திராவிடக் கட்சிகளிடமும் கவர்ச்சிகரமான வார்த்தைகள் உள்ளனவே தவிர்த்து  திடமான செயல்திட்டம் இல்லை என்றே சொல்லலாம்.. தங்களது அனைத்து அரசியல் வெற்றிகளையும் சாதுர்யங்களையும் ஊழல் வழக்குகளிலிருந்துத் தப்பித்துக் கொள்வதற்கும், குடும்ப அரசியலைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் பயன்படுத்துகின்றனவே தவிர்த்து மக்கள் முன்னேற்றத்திற்கான வளர்ச்சி நடவடிக்கைகள் மீது அக்கறைக் காட்டுவதற்கு  நேரம்  இருப்பதில்லை இக்கட்சிகளுக்கு என்பதை மனதில் நிறுத்தியும் மேற்படி அம்சங்கள் அனைத்தையும் கணக்கில் கொண்டும் பார்ப்போமேயானால் வரவிருக்கும் 2016 சட்டமன்றத் தேர்தலில் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளுக்கும் எதிரான அரசியலின் குரலுக்கு மக்கள் மதிப்பளிப்பார்கள் என்றே தோன்றுகிறது.

வெ.வெங்கடாசலம்

Pin It