தமிழ்த் தேசிய அரசியலை எதிர்க்கும் இரு அரசியல் கோட்பாடுகளான ஆரியம், திராவிடம் ஆகிய இரண்டும் வெவ்வேறு வழிகளில் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளன. ஆரியம், அரச அதிகாரத்தில் இருந்துகொண்டும் தமிழ்த் தேசியத்தின் உள்ளே ஊடுருவியும் ஆரியச் சார்பை அதிகரிக்கச் செய்து தமிழ்த் தேசியத்தை நீர்த்துப் போக வைக்கிறது. அல்லது தமிழியத்தின் அசைக்கவியலா கூறுகளை ஆரியம் தமதாக்கிக்கொண்டு தமிழிய அடையாளங்களை அழிக்கிறது. திராவிட தேசியக் கோட்பாடோ, தமிழியத்தைக் களங்கப்படுத்தியே தமது நோக்கத்தை நிறைவேற்றத் துடிக்கிறது

இவ்விரண்டு எதிர்க் கருத்தியல்களுடனும் போராடுவதுதான் தமிழ்த் தேசிய மீட்பின் இன்றைய கடமையாக உள்ளது. திராவிடக் கோட்பாடுகளின் ஆசான், தந்தை பெரியாருடைய தேசிய இனக் கோட்பாடு முன்னுக்குப் பின் முரண்கள் நிறைந்தது. தமிழ்த் தேசியத்தை அவர் தொடர்ந்து விமர்சித்து வந்தார். அதேவேளை, ’தனித் தமிழ்நாடு வேண்டும்’ என்றும் முழங்கினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். ‘தமிழ் காட்டுமிராண்டி மொழி’ என்றும் அறிவித்தார். ஆங்கிலத்தை உயர்த்திப் பிடித்தது தந்தை பெரியாரின் மொழிக் கொள்கை.

‘வீட்டில் வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்தில் உரையாட வேண்டும்’ என்றும் கூறினார் பெரியார். ’தமிழில் உருப்படியாக எதுவும் இல்லை’என்றார். ’தமிழர்களுக்குத் தமிழ்ப் பைத்தியம் பிடித்திருக்கிறது’ என்றார். ’தமிழ் எழுத்துக்களையே ஆங்கில வரிவிடிவில் எழுதுவது நல்லது’ என்றார்.

பெரியாரது மொழிக் கொள்கையை அடியொற்றித்தான், இன்றைய திராவிட இய க்கங்கள் அனைத்தும் இரு மொழிக் கொள்கையைக் கடைபிடிக்கின்றன. இதேவேளை, தமிழ் மொழியைப் பாதுகாப்பதற்காக பெரியார் பேசிய பேச்சுகளையும் ஏராளமாக மேற்கோள் காட்டலாம். இந்த முரண்கள் தந்தை பெரியாரிடம் உண்டு. தந்தை பெரியாரின் தேசிய இனக் கொள்கையை விமர்சிக்கும்போதெல்லாம், பெரியாரின் கோட்பாட்டு வழித் தோன்றியோர் எதிர்க் கணைகள் வீசுவதற்கு ஏதுவாக இருப்பவை இந்த முரண்பாடுகளே ஆகும். அதாவது, தமிழ் மொழி பற்றியும் இனம் குறித்தும் தந்தை பெரியார் கொண்டிருந்த பிழையான கருத்துகளை நாம் முன் வைத்தால், அவரது அரசியல் வழித் தோன்றல்கள், பெரியார் தமிழுக்கு ஆதரவாகப் பேசிய மேற்கோள்களை முன்வைப்பர். இது வழமையாக நடந்துகொண்டுள்ளது.

எனவேதான், பெரியாரின் தேசிய இனக் கொள்கை குழப்பமானதுuot;contentpane">, தமிழ்த் தேசியத்திற்கு முரணானது என்கிறேன். பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்பு ஆகிய இரண்டில் மட்டுமே தந்தை பெரியார் இறுதிவரை குழப்பமின்றி இயங்கினார். இவ்விரு துறைகளிலும் அவர் வாழ்ந்த காலத்திலேயே நல்ல மாற்றங்களையும் நிகழ்த்திக் காட்டினார். தேசிய இனவிடுதலை என்ற தளத்தில் தந்தை பெரியாரை அப்படியே வழிமொழிவது குழப்பத்திற்கே இட்டுச் செல்லும்.

தமிழ்த் தேசியத்திற்குப் பதில் திராவிட தேசியத்தை முன்வைப்பதற்குக் காரணமாக, தந்தை பெரியார் தொடங்கி இன்றைய திராவிடக் ‘கோட்பாட்டளர்கள்’ வரை கூறும் காரணம், ’தமிழர் என்றால் பார்ப்பனர்கள் வந்துவிடுவார்கள். திராவிடர் என்றால் பார்ப்பனர்கள் வரமுடியாது’ என்பதாகும். தந்தை பெரியார் உறுதியாகக் கடைப்பிடித்த கொள்கையும் இதுவாகும்.

இது எந்தவிதமான, வரலாற்றுச் சான்றுகளும் தர்க்க அணுகுறைகளும் இல்லாத வாதமாகும்.

இக் கூற்றை விரிவாகக் காண்போம். தமிழர் மரபில் சாதியத்திற்கான அடிப்படைகள் இருக்கவில்லை என்பதைக் கடந்த இதழில் கண்டோம். தமிழர் மரபு,

1. அரசு உருவாக்கம் நிகழ்ந்த பரப்பில் நால்வகைத் தொழில் பிரிவுகளாகவும்

2. அரசு உருவாக்கம் நிகழாத அல்லது அரசின் தாக்கம் குறைவாக இருந்த பரப்புகளில் ஐந்திணை வாழ்வியல் பிரிவுகளாகவும் இருந்தது.

இந்த இரு வகைகளுமே சாதிகள் அற்றவை.

இவற்றில், ஐந்திணை வாழ்வியலே தமிழர் மரபின் ஆகச் சிறந்த நாகரிகக் கூறாகும். சமத்துவச் சமூகத்தின் முன்மாதிரியாக திணைமச் சமூகங்கள் திகழ்ந்தன.

அரசு உருவாக்கம் நிகழ்ந்த பகுதிகளில் நிலவிய நால்வகைப் பகுப்பில், வர்க்க ஏற்றத் தாழ்வுகள் தோன்றின.

அரசர் - சமூகத்தின் முதல் படிநிலையிலும் அந்தணர், வணிகர், வேளாளர் ஆகியோர் அடுத்த படிநிலைகளிலும் இருந்தனர். இந்த நால்வகையினரில், எந்தப் பிரிவினரும் வேறு எந்தப் பிரிவுக்கான தொழிலையும் மேற்கொள்ளலாம். பிறப்பின் அடிப்படையில் தொழில் பிரிவு தீர்மானிக்கப்படவில்லை. ஆகவேதான், அப்பிரிவுகள் சாதிகள் இல்லை என்கிறோம்.

ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்ட இயற்றப்பட்ட ஆவணமான மனுநீதி, நால்வருணக் கோட்பாட்டை நிறுவியது. ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தொழிலை வரையறுத்தது. இந்த வரையறையை மீறும் சாதிகளுக்குக் கடும் தண்டனைகள் வழங்கியது. சூத்திரர் என்றொரு பிரிவை ஏற்படுத்தி, அம்மக்களைச் சமூகத்தின் பிற பிரிவினருக்கான அடிமைகள்போல் நடத்தியது ஆரியப் பார்ப்பனியம்.

சாதியம் ஐந்து அடிப்படைகளைக் கொண்டது;

1. பிறப்பு அடிப்படை

2. குறிப்பிட்ட சாதியினர் குறிப்பிட்ட தொழில்தான் செய்ய வேண்டும் என்ற விதி

3. பிற பிரிவினருடன் கலவாமை ஃ தனித்துவம் காத்தல்

4. தீண்டாமை

5. இவற்றை மீறுவோருக்குக் கடும் தண்டனைகள்

தொல்காப்பிய நால்வகைத் தொழிற்பிரிவுகளில் இந்த ஐந்து அடிப்படைகளுமே இல்லை. மேலும், தொல்காப்பியர் மிகத் தெளிவாகப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்;

’ஊரும் பெயரும் உடைத் தொழிற் கருவியும்

` யாருஞ் சார்த்தி அவைஅவை பெறுமே’

-இதன் பொருள், ’ஊர், பெயர்,தொழிற் கருவி ஆகியவை அவரவருக்கு ஏற்ப அனைவருக்கும் உரிமையுடையவையே’ என்பதாகும். எந்தப் பிரிவினர் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பது திணிக்கப்பட்ட ’தர்மம்’ அல்ல என்பதை இந்த விதி விளக்குகிறது.

அந்தணர் என்போர் யார்?

தமிழர் மரபில் அந்தணர், ஐயர், பார்ப்பனர் ஆகியோர் யாவர் என்ற கேள்விக்கு விடை கண்டால், திராவிடம் கூறி வரும் ’பார்ப்பன எதிர்ப்பு’ குறித்த தெளிவு கிடைத்துவிடும்.

ஐயர் என்ற சொல் ’தலைவர் 002F சமூகத் தலைவர்’ எனும் பொருளைக் குறிப்பதாகும்.

’பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். கற்பு மணத்தைச் சமூகத் தலைவர்கள் உருவாக்கினர் என்ற பொருளிலேயே இச்சொல் கையாளப்பட்டுள்ளது. ஐயர் என்பது, பார்ப்பனரில் ஒரு பிரிவினரைக் குறிப்பதாகப் பின்னாட்களில் அப் பார்ப்பனர்களாலேயே மாற்றிக்கொள்ளப்பட்டது.

அந்தணர் என்னும் பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் அறிவாளர்கள் ஆவர். அரசு உருவாக்கத்தின்போது, அரசர்களுக்கான அறிவுரைகள் வழங்கியும், மெய்யியல் துறைகளில் ஈடுபட்டும் வந்தவர்கள் அந்தணர் ஆவர். இவர்கள் தமிழர்களே.

சான்றாக, பதிற்றுப் பத்து தொகை நூலில் இரண்டாம் பதிகம் பாடிய குமட்டூர் கண்ணனார் ஒரு அந்தணர்(பதிற்றுப் பத்து தெளிவுரை - புலியூர் கேசிகன்). இவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் எனும் சேரப் பேரரசரின் அவையில் இருந்தவர். குமட்டூர் கன்ணனார் பாடிய பதிகங்களைப் படித்தாலே, அக்காலத் தமிழரின் ஆரிய எதிர்ப்பின் வீரியம் விளங்கும்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், இமையம் வரை படையெடுத்துச் சென்று ஆரிய மன்னரைக் கண்டவிடத்தில் எல்லாம் அழித்து வெற்றி வாகை சூடியவன். இவ்வரலாற்றை கூறும் பதிகத்தில், இமயவரம்பன் ஆளும் நாட்டின் எல்லையை, ‘இமிழ்கடல் வேலித் தமிழகம்’ என்று குறிக்கிறார் கண்ணனார். இமயவரம்பன் இமயம் வரை சென்று ஆரியரை வென்றாலும் அவனது நாடு தமிழகம் என்பது தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆரிய அரசர்கள் தமிழ் அரசனான இமயவரம்பனுக்கு அடிபணிந்து கப்பம் கட்டிய செய்திகளையும் குமட்டூர் கண்ணனார் பதிவு செய்துள்ளார்.

’அந்தணர் என்போர் ஆரியப் பார்ப்பனர்தான். தொல்காப்பியம் குறிப்பிடும் அந்தணர் எனும் பிரிவு ஒன்றே, தமிழர் மரபில் பார்ப்பன ஆதிக்கம் இருந்தது என்பதை நிறுவும் சான்று’ என்று ஒரு கற்பிதம் தமிழகத்தில் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. அக் கற்பிதத்தை மறுக்கவே இந்தச் சான்று முன் வைக்கப்படுகிறது.

குமட்டூர் கண்ணனார் எனும் அந்தணர், ஆரியர் அழிவுற்ற காட்சிகளைப் பின்வருமாறு விவரிக்கிறார்:

‘இமயவரம்ப மன்னனே, நீ படையெடுத்துச் சென்ற நாடுகள் எப்படி அழிந்தன தெரியுமா? இமைய மலைச் சாரலிலே கவரி மான்கள் தாம் உண்ட நரந்தம் புல்லைக் கனவில் எண்ணிப் பார்த்தபடிப் படுத்திருக்கும். (அதுபோல செம்மாந்து இருக்கும்) ஆரியர் நிறைந்த பகுதிகளையும் பிற பகுதிகளையும் தாக்கி அழித்தாய். மரணம் வந்து தாக்கிய பிறகு பிணமானது, ஒவ்வொரு நொடியும் அழிந்து கொண்டேயிருக்குமே, அதேபோல் தமது தலைவர்களை இழந்த நாடுகள் கணத்துக்குக் கணம் அழிந்துகொண்டிருந்தன. வயல்கள் எல்லாம் பாழ்பட்டு அங்கே காட்டு மரங்கள் வளரத் தொடங்கிவிட்டன. அவர்களது கடவுள்கள் எல்லாம் காட்டுக்குள் சென்றுவிட்டன. காடுகளின் ஓரங்களில், உனது படையினர் இளம் பெண்களோடு வெற்றிக் களிப்பில் ஆடி மகிழ்கின்றனர்’

அந்தணர் எல்லாரும் ஆரியப் பார்ப்பனர் என்றால், ஆரியர் அழிந்த நிகழ்வை இவ்வளவு உற்சாகத்துடன் பாடியுள்ள குமட்டூர் கண்ணனார் ஆரியரா?

தாம் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர் என்பதைக் குமட்டூர் கண்ணனார் குறிப்பிடுகிறார்.

‘எமது ஆடைகள் பருந்தின் நனைந்த இறக்கைகள் போலக் காணப்பட்டன. எம் உடைகளை மண் தின்று கந்தலாக்கியிருந்தது. அப்படி வந்த எமக்குப் பட்டாடைகள் கொடுத்தாய் அரசே. வளைந்த மூங்கில் போலத் தோன்றும் எம் பாணர் மகளிர் அனைவருக்கும் ஒளிவீசும் அணிகலன்கள் வழங்கினாய்’ என்ற வரிகளிலிருந்து குமட்டூர் கண்ணனார் பாணர் குலத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது.

பாணர்கள் என்போர், இசை, கூத்து ஆகிய கலை நிகழ்வுகளின் வல்லுநர்கள். ஆயினும், அவர்கள் நேரடி உற்பத்திசாராத மரபினர் என்பதால், அவர்கள் வறுமையில் வாடியதும் உண்டு. அரசுருவாக்கம் நிகழத் தொடங்கிய பின்னர், அரசர்களைப் பாடியும் அவர்களுக்கு அரசு நடத்தும் முறைமை கற்றுக் கொடுத்தும் தமது இருத்தலை உறுதிப்படுத்தினர் பாணர்கள். விறலியர், கூத்தர் ஆகிய பிற பிரிவினரும் இதே நிலையை ஒத்தவர்களே.

இதேவேளை, பாணர் உள்ளிட்ட உற்பத்தி சாரா பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் வர்க்க நிலையில் பின் தங்கியே இருந்தனர். உற்பத்தியில் ஈடுபட்ட வேளாண் மாந்தரும் அவரையொத்த பிறரும் வர்க்க நிலைமையில் மேம்பட்டிருந்தனர். பின் தங்கிய வர்க்கத்தினராக இருந்தாலும், பாணர்களைத் தமிழ் அரசர்கள் தமக்கு நெருக்கமாக வைத்துப் போற்றினர்.

எனது இக்கூற்றை மெய்ப்பிக்கும் தொல்காப்பிய விதி ஒன்றைக் காண்போம். அகத்திணையியலில் தலைவனது சமூகப் பங்களிப்புகளாகக் கூறப்பட்டுள்ளவை;

‘கல்வி கற்றல், போர்ப் பயிற்சி பெறல், சிற்பக் கலை கற்றல், இவற்றிற்காக வெளியூர் செல்லுதல், முரண்பட்ட இரு அரசர்களிடையே பகை நீக்குதல், அரசர்களிடையே தூதராகச் செல்லுதல், அரசர்களுக்குத் தூதாகச் செல்லும்போதே அரசரது வலிமை, செய்யப் போகும் வேலையின் தன்மை, துணையாக வருவோரின் வலிமை ஆகியவற்றை ஆராய்தல்....’ உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளன (அகத்திணையியல் 44).

இவ்விதியில், ‘தலைவன்’ என்ற சொல் இருப்பதால் இவ்விதி அரசனுக்கானது என்று பொருள் கொள்ளல் தவறு. தலைவன் எனும் சொல்லைத் தொல்காப்பியர் அனைத்துப் பிரிவினருக்கும் கையாண்டுள்ளார். அரசு உருவாக்கத்தின்போதும் சமத்துவச் சமூக அமைப்பின் கூறுகளை முன்னிறுத்தியவர் நம் தமிழர் என்பதற்கான சான்று மேற்கண்ட தொல்காப்பிய விதி.

இந்த வகையிலேயே குமட்டூர் கண்ணனார் உள்ளிட்ட எண்ணற்ற அறிவாளர்கள் அரசருக்கு நெருக்கமாக இருந்தனர்.

ஆரியரது அரசக் கோட்பாடுகளோ இதற்கு நேர் எதிரானவை.

‘அரசாட்சி நடத்துவது என்பது உதவியாளர்களை வைத்துக்கொண்டால்தான் சாத்தியமாகும். அரசன் அமார்த்யாயர்களை அமர்த்திக்கொள்ள வேண்டும்.அவர்கள் அபிப்ராயங்களைக் கேட்க வேண்டும்’ என்றான் சாணக்கியன். அமார்த்தியாயர்கள் என்போர் ஆரியப் பார்ப்பனர் ஆவர். அவர்களிலும் வர்க்கத்தால் மேம்பட்டோர் ஆவர். அர்த்த சாத்திர விதிகளின்படி, ’அரசன் அமார்த்தியாயருக்குத் தெரியாமல் எதுவும் செய்யக் கூடாது. அரசனுக்கு உணவு அளிக்கும் உரிமை அரசிக்குக் கூட இல்லை. அமார்த்யாயர்களின் மேற்பார்வையில்தான் உணவு அளிக்கப்பட வேண்டும். அரசன் தன் வாரிசுகளுடன் கூட நெருக்கமாக இல்லாதவாறு பல விதிகள் விதிக்கப்பட்டன.

எல்லாவற்றிற்கும் மேலாக, அரசருக்கும் மக்களுக்குமான உறவு வெகு தொலைவில் இருந்தது. அமார்த்யாயர் எனப்பட்ட ஆரியப் பார்ப்பனரே, உண்மையான ஆட்சியாளர்களாக இருந்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேதம், கடவுள் ஆகியவற்றின் பெயரால் ஆரியப் பார்ப்பனர்கள் செய்து முடித்தனர்.

இந்தக் காலத்தில்தான், தமிழர் மரபு சமூகத்தின் கடைநிலை மாந்தரையும் அரசருக்கு ஆலோசனை சொல்லும் உரிமை உடையவராக அங்கீகரித்தது. அர்த்த சாத்திரம் எழுதப்பட்ட காலம் தொல்காப்பியத்திற்குப் பிந்தியது என்றாலும், அர்த்த சாத்திரத்தின் கூறுகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே ஆரியரிடையே வழக்கத்தில் இருந்தனவே.

ஆரியப் பார்ப்பனரான அமார்த்தியாயர் தமது சிறப்புத் தகுதிகளாகக் கூறிகொண்டவற்றில் ’நிமித்தம் பார்க்கும் திறன்’ ஒன்றாகும். அரசருக்கு நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்துச் சொல்வது இதன் முக்கியப் பணி.

நிமித்தம் என்பது வானியல் அறிவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இந்த வானியல் அறிவும் தமிழரிடமிருந்து ஆரியர் திருடியதே. இது குறித்த ஆழமான ஆய்வு நூல், அறிஞர் குணா எழுதிய ‘வள்ளுவத்தின் வீழ்ச்சி’ ஆகும். தமிழர் அறிவைத் தமது பிழைப்புக்காக மூட நம்பிக்கையாக மாற்றியவரே ஆரியப் பார்ப்பனர் என்பதை உணர்த்துவதற்காகவே இதை இங்கே குறிப்பிடுகிறேன். ஆயினும், பார்ப்பார் குறித்த இக்கட்டுரைக் கருத்துகளை குணா மீது ஏற்றவில்லை.

சங்ககாலத்தில் நிமித்தம் பார்ப்பதைப் பிழைப்பாகக் கொண்டு செயல்பட்டோரும் தமிழகத்தில் ‘பார்ப்பார்’ என்று அழைக்கப்பட்டனர். இப் பார்ப்பாரில் ஒரு பகுதியினர், தொல்காப்பியர் காலத்திலும் சங்க காலத்தின் பிற்பாதிக் காலம் வரையிலும் சமூகத்தின் கடைநிலை மாந்தராகவே இருந்தனர். ஆரியப் பார்ப்பனர், அரசதிகாரத்தின் மறைமுகத் தலைவர்களாக விளங்கினர். தமிழகப் பார்ப்பார் இதற்கு நேர் எதிர் நிலையில் இருந்தனர். இதற்கான சான்றுகளைக் காண்போம்.

பார்ப்பாரின் சமூகச் செயல்பாடுகளாகத் தொல்காப்பியர் கூறுபவை:

‘தலைவன் (கணவன்) தலைவியைப் (மனைவியை) பிரிந்து செல்லும்போது அவனிடம் சென்று ‘நீ பிரிந்து சென்றால் தலைவியின் வேட்கை மிகும்’ எனக் கூறுதல், தலைவன் செல்வதற்கு வாய்ப்பான நிமித்தம் பார்த்துக் கூறல், தலைவியிடம் சென்று ’தலைவன் பிரிந்து சென்றான்’ எனக் கூறல், இவை போன்ற பிற செயல்கள் அனைத்தும் பார்ப்பாருக்கு உரியனவாகும்’ - (தொல்காப்பியம், கற்பியல்-36)

அகநானூற்றுப் பாடல் ஒன்று பார்ப்பாரைப் பற்றிப் பின்வருமாறு விவரிக்கிறது:

‘உப்பு வணிகரின் பொதிகளைச் சுமக்கும் கழுதைகளைப் போல் பாறைகள் கிடக்கும் இடத்தின் வழியாக, தூது செல்வதையே பல காலமாகத் தொழிலாகக் கொண்டுள்ள பார்ப்பான் (‘தூதொய் பார்ப்பான்’) செல்கிறான். அப் பார்ப்பான், மடியிலே வௌ;ளிய ஓலைச் சுவடியை வைத்திருக்கிறான். அவன் வருவதைப் பார்க்கும் மழவர்கள் ’இவன் கையில் வைத்திருப்பது பொன்னாக இருக்கலாம்’ எனக் கருதுவர்.அப்போதே அவனைக்கொன்றும் வீழ்த்துவர். இறந்துகிடக்கும் அப்பார்ப்பானுடைய ஆடைகள் கந்தலாக இருப்பதைக் கண்டதும் அம் மழவர்கள், வெறுப்பில் தம் கைகளை நொடித்தபடியே செல்வர்’- (அகநாநூறு 337)

குறுந்தொகைப் பாடல் ஒன்று பார்ப்பாரை வம்புக்கு இழுக்கிறது.

‘பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருங்க மரத்தின் தடியில் கமண்டலத்தை உடைய, நோன்பிருந்து உண்ணும் வழக்கமுடைய பார்ப்பன மகனே, உங்களுடைய எழுத்து வடிவம் இல்லாத கல்வியாகிய வேதத்தில் (’எழுதாக் கற்பு’) உள்ள இனிய உரைகளில், பிரிந்து சென்ற தலைவன் தலைவியை மீண்டும் புணரச் செய்யும் மருந்து உள்ளதா?’--(குறுந்தொகை 156)

பார்ப்பார் எனப்பட்டோர் தூது செல்வதற்கும் அதற்கேற்ற நிமித்தம் பார்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டனர் என்பவற்றை இப்பாடல்கள் விளக்குகின்றன. மேலும் அவர்களைப் பிற சமூகத்தினர் இழிவாக நடத்தியமையும் இப்பாடல்களிலிருந்து புலனாகின்றன. குறிப்பாக, குறுந்தொகைப் பாடல், வேதத்தைக் கேலி செய்கிறது என்றே கொள்ளலாம். தமிழ் மொழி தொன்மை இலக்கணங்களுடன் செம்மாந்து இருக்கும்போது, பார்ப்பாரின் வேதங்கள் எழுத்து வடிவம் கூட இல்லாமல் வெறும் வாய்வழியாகவே வேதங்கள் பாடி பரப்பபட்டதை அப்பாடல் குத்திக் காட்டுகிறது. மேலும், வேதங்களின் அடிக் கருத்தியல் மறுபிறப்புக் கொள்கையைக் கொண்டவை. இப்பிறப்பில் இன்பம் இல்லை என்பவை. அக வாழ்க்கையை எதிர்த்தவை. ஆதலால்தான், ’பார்ப்பான் மகனே...உன் வேதம் புணர்ச்சிக்கு உதவுமா?’ எனக் கேட்கிறார் புலவர்.

இப்பாடல்களில் குறிப்பிடப்படும் பார்ப்பார் அனைவரும் ஆரியர் அல்லர். குறுந்தொகைப் பாடலில் வரும் ’பார்ப்பான் மகன்’ மட்டும் ஆரியப் பார்ப்பானாக இருக்கலாம். அல்லது ஆரியப் பார்ப்பாரது கருத்தியலைத் தழுவிய தமிழராகவும் இருக்கலாம்.

பார்ப்பாரில் ஆரியக் கருத்தியலைக் கலந்தனர் ஆரியர்கள். தமிழ்ப் பார்ப்பார்கள் தமது வானியல் அறிவால் அரசருக்கு நெருக்கமாக இருந்தனர். இந்த இடத்தைப் பிடிக்க ஆரியர் போட்டியிட்டனர். இதன் விளைவாகவே, பார்ப்பார் குலம் ஆரியச் சார்புடையதாக மாறியது. வானியலை ஆரியர் சோதிடம் ஆக்கினர். வான சாஸ்திரம் என்றனர்.

நான்கு வேதங்களை முன்னிறுத்தல், வேள்விகள் நடத்தி ஆரியக் கடவுள் கோட்பாட்டைத் தமிழ் அரசரிடம் பரப்புதல், நோன்பு இருத்தல், நிமித்தம் என்ற பெயரில் சோதிடக் கருத்துகளை அதிகரித்தல், இல்லறத்தை வெறுக்கச் செய்து மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தல் ஆகியவை ஆரியர் மேற்கொண்ட திட்டமிட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளாகும். இப் படையெடுப்பில் தமிழ்ப் பார்ப்பாரும் அந்தணரும் நேரிடையாகப் பாதிக்கப்பட்டனர். அரச உருவாக்கம் ஆரியரது பண்பாட்டுப் படையெடுப்பை விரைவுபடுத்தியது.

ஆகவே, பார்ப்பார் எனும் சாதி முற்றும் முழுதாக ஆரிய இறக்குமதி அல்ல. அதேவேளை, தமிழ்ப் பார்ப்பார்கள் வானியல் அறிவாளர் குலத்தினராக இருந்து ஆரியபள் பார்ப்பனர் வருகையினால் முக்கியத்துவம் இழந்து சிதைந்தவர் எனலாம்.

‘மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்’ - என்றார் திருவள்ளுவர்.

‘கல்வியை மறந்தாலும் கற்றுக்கொள்ளலாம். பார்ப்பாரது பிறப்பு ஒழுக்கம் குறைந்தால் கெட்டுவிடும்’ என்பது இக்குறளின் நேரிடைப் பொருள். இக்குறளில், பார்ப்பானது பிறப்பு ஒழுக்கம் என்பது என்ன?

பிறப்பு ஒழுக்கம் என்பது ஒருவரது பிறப்பிலிருந்து தோன்றி வரும் ஒழுங்காகும். மரபு அறிவு, கலை முதலியவை அந்தந்த மரபு சார்ந்த குலத்தினருக்கே வழி வழியாக வருபவை. ஆனால், கல்வி என்பது பிறரால் கற்றுக் கொடுக்கப்படுவது. இந்த முரணையே, திருவள்ளுவர் இக்குறளில் முன்வைக்கிறார்.

’பார்ப்பான் தனது மரபு அறிவைக் குன்றச் செய்தால் அது கெட்டுவிடும். கல்வி அப்படிப்பட்டதல்ல, அதை மறந்தாலும் கற்றுக்கொள்ளலாம்’ என்கிறார். பார்ப்பாரது பிறப்பு/மரபு அறிவு எது? வானியல் அறிவே!

இக்குறளில் திருவள்ளுவர் பார்ப்பான் என அழைப்பது, ஆரியப் பார்ப்பனரையே எனக் கருதும் போக்கும் உள்ளது. அது சரியல்ல. ஆரியப் பார்ப்பார் என நாம் அழைக்கும் பிரிவினரின் ஒழுக்கத்தை வள்ளுவர் ’ஆசாரம்’ என்ற சொல்லால் வேறு ஒரு இடத்தில் குறிக்கிறார்.

’கயமை’ எனும் அதிகாரம் ஆரியப் பார்ப்பனரின் கருத்தியல்களைக் கடுமையாகச் சாடுகிறது.

‘தாம் கேட்ட வேதத்தைப் பிறருக்குக் கற்றுக் கொடுத்துப் பரப்புவோர் கயவர்’ என்கிறார் வள்ளுவர்.

’அறைபறை அன்னர் கயவர் தாங்கேட்ட

மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்’ என்பது அக்குறள்.

‘அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது’-எனும் குறளில், ‘கீழ்மக்களது ஒழுக்கம் (ஆசாரம்) அச்சம்தான். அதைத் தவிர வேறு ஏதேனும் ஒழுக்கம் உண்டு என்றால் அது ஆசைப்படுவதுதான்’ என்கிறார்.

ஆரியப் பார்ப்பனர் துவக்கம் முதலே, வாழ்வைக் கண்டு அச்சப்படுபவர்தான். தமது அச்சங்களைப் போக்கவே எதற்கெடுத்தாலும் கடவுளிடம் வேண்டும் வழக்கம் அவர்களிடையே தோன்றியது. ஆனால், ஆசைப்படுவதில் அவர்கள் சளைத்தவர்கள் அல்லர். துணிந்து செய்ய அச்சப்படுவது, ஆசைகளைப் பெருக்கிக்கொண்டே போவது ஆகிய இரு முரண்கள்தான் ஆரியப் பார்ப்பனியத்தின் அனைத்து ஊழல்களுக்குமான அச்சாணிகள்.

இதே மனநிலை, அரசதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் இருப்பதுண்டு. அச்சம், ஆசை ஆகிய இவ்விரண்டு பலவீனங்களைக் கொண்டுதான் ஆரியப் பார்ப்பனர், தமிழ் அரசர்களைத் தம்போக்குக்கு வளைத்தனர். இப்போக்கை வள்ளுவர் மேற்கண்ட குறளில் குறிக்கிறார்.

‘தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்’

-என்பதும் ’கயமை’ அதிகாரக் குறளே.

‘தேவர்களும் கயவர்கள்தான். ஏனெனில் அவர்களும் கயவர்கள் போல, தாம் விரும்பிய அனைத்தையும் செய்கின்றனர்’ என்பது இதன் பொருள். ஆசைப்படட அனைத்தையும் செய்வது கயமை என்கிறார். ஆதலால் ‘தேவர்கள்’ கயவர் என்கிறார். இது ஆழ்ந்து நோக்கத்தக்க குறள். ஆரியக் கருத்தியல்கள் மீது வள்ளுவர் வீசிய கணைகள் இவை.

இந்த அடிப்படையில், ’மறப்பினும்...’ குறளில் உள்ள ‘பார்ப்பான்’ எனும் சொல்லை ஆய்ந்தால்தான் முழு விளக்கம் கிடைக்கும். பார்ப்பார் குலத்தினர், தமிழ் மரபில் வந்தோர். அவர்களது குல அறிவான வானியலை ஆரியப் பார்ப்பனர் திருடிக் குன்றச் செய்தபோது வள்ளுவர் இயற்றிய குறள் அது எனக் கொள்ளலாம். இதிலிருந்து, பார்ப்பாரது அறிவையும், அங்கீகாரத்தையும் ஆரியப் பார்ப்பனர்கள் அரசதிகாரத் துணையுடன் தமதாக்கிக் கொண்டனர் என்பது மேலும் உறுதிப்படுகிறது.

ஆரியப் பார்ப்பனர், அரசதிகாரத்துடன் நெருங்கி அடைந்த ஆதாயங்கள் எண்ணிலடங்காதவை. இறையிலி நிலங்கள், பிரமதேய நிலங்கள் ஆகிய பெயர்களில் ஆரியப் பார்ப்பனர்களுக்கு தமிழ் அரசர்கள் வழங்கிய கொடைகள் அனைத்திற்கும் ஆதாரமாக இருந்த வழக்கம் ஒன்றை இங்கே காண்போம்.

குமட்டூர் கண்ணானாருக்கு இமயவரம்பன், 500 கிராமங்களையும் தென் தமிழகத்தில் தனக்கு வரும் அரசு இறையில் ஒரு பங்கினையும் வழங்கினான் என்கிறது பதிற்றுப் பத்து. தமிழ் அந்தணர்களுக்குத் தமிழ் அரசர்கள் இவ்வாறான இறையிலி வழங்கும் வழக்கம் இருந்ததை இச் சான்று உணர்த்துகிறது. இந்தத் தமிழ் அந்தணர்களின் ஃ அறிவாளர்களின் இடத்தைத்தான் ஆரியப் பார்ப்பனர்கள் பிடித்தனர்.

நாடு பிடித்தல், சுரண்டுதல், ஏற்றத் தாழ்வுகளை அதிகரித்தல் ஆகியவை ஆரியரது கொள்கைகள். மனுநீதியும் அர்த்த சாத்திரமும் இவற்றையே வலியுறுத்தின. தமிழர் மரபு இந்தச் சுரண்டல் கோட்பாடுகளை எதிர்த்து வந்தது.

தொல்காப்பியம் முதல் வள்ளலார் பாடல்கள் வரை இந்த ஆரியக் கோட்பாட்டு எதிர்ப்பு ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீடிப்பதைக் காணலாம். ஆரியம் என்பது சாதியம் மட்டும் அல்ல; அது தமிழின ஒழிப்புக் கோட்பாடு. ஆரிய எதிர்ப்பு என்பது சாதிய எதிர்ப்பு மட்டும் அல்ல; தமிழ் உரிமையை நிலைநாட்டும் போராட்டம்; தமிழர் தாயகத்தைக் காக்கும் போராட்டம்; தமிழர் மரபுவழி அறிவாற்றலை மீட்டெடுக்கும் போராட்டம். இந்தப் புரிதலும் தெளிவும் தமிழ்த் தேசியர்களுக்கு அடிப்படையாகும்.

இந்தப் போரட்டத்தையே தமிழர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆரியருக்கு எதிரான நேரடி போர்கள் நடத்தி, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் உள்ளிட்ட பேரரசர்கள் வெற்றிவாகை சூடினர்.

தமிழரது போர் மறத்தின் முன் நிற்கவியலாத ஆரியர், தமிழர் நாகரிகத்தில் கலந்து அதைச் சீரழிக்க முற்பட்டனர். இதோடு நில்லாமல், தமிழரது அறிவாற்றலைத் தமதாக்கிக் கொண்டனர். தமிழரது உழைப்பாற்றலைச் சுரண்டிக் கொழுத்தனர். இதுவே ஆரியர் நம்மீது நடத்திய பண்பாட்டுப் படையெடுப்பாகும்.

இது மிக நீண்ட வரலாறு. எனினும், ஆரியம் தமிழ் மன்னரைத் தம் கோட்பாட்டாளராக மாற்றிய அவ் வரலாற்றிலிருந்து ஒரு சான்றைக் காண்போம்.

ஆரியரைப் படையெடுத்து அழித்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பற்றிக் கண்டோம். அவன் தம்பி, பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்பான். இவன் ஆரிய மரபில் வந்த அல்லது ஆரியரான பாலை கௌதமனார் என்ற அந்தணரை ஆதரித்தவன். இம்மன்னனுக்கான பதிற்றுப் பத்துப் பதிகத்தைப் பாலை கௌதமனாரே பாடியுள்ளார்.

இது குறித்த வரலாற்றுக் குறிப்புகளில்,

‘பாலை கௌதமனார் தானும் தன் மனைவியாகிய ‘பார்ப்பனத்தியும்’ சுவர்க்கம் புக வேண்டும் என்றார். பல்யானைச் செல்குழு குட்டுவன் ‘அதற்கு என்ன வழி?’ எனக் கேட்டான். ‘அதற்கு ஒன்பது பெருவேள்விகள் செய்ய வேண்டும்’ என்றார். அதன்படியே மன்னனும் செய்தான்’

-என்ற விவரம் உள்ளது.

பாலை கௌதமனார் இயற்றிய பதிகங்களில், ’பரத்துவாசர் மரபில் தோன்றிய பாரதாயனார் எனும் முனிவரின் அடியொற்றி, பல்யானைச் செல்கெழு குட்டுவன் துறவு பூண்டு காடு சென்றான்’

‘அந்தணர் ஒழுக்கங்கள் ஆறு. அவை, கற்றல், கற்பித்தல், வேள்வி செய்தல், செய்வித்தல், ஈதல், ஏற்றல்’ உள்ளிட்ட பல கருத்துகள் காணப்படுகின்றன. இவை அனைத்துமே ஆரியப் பார்ப்பனியத்தின் கோட்பாடுகளின் அடிப்படையில் உள்ளவை ஆகும். மேலும் துறவறம் பூண்டு காடு செல்லும் வழக்கம் தமிழர் மரபிற்கு நேர் எதிரானது. தமிழர் மரபில் அறம் எனப்படுவதே ‘இல்வாழ்க்கை’தான்.

ஆரியப் பார்ப்பனியம் இவ்வாறு அரசதிகாரத்திற்கு நெருக்கமாகி, தமிழ் மரபில் ஆரியப் பார்ப்பனியக் கூறுகளைக் கலந்தது. இதில், நான் அழுத்தம் திருத்தமாகக் கூற விரும்பும் சேதிகள் இரண்டு.

1. தமிழர் மரபு ஆரியப் பார்ப்பனியத்திற்கு எதிரானது. இதற்கான சான்றுகளை முன்னர் கண்டோம். இனியும் காண்போம்.

2. அரசதிகாரத்தின் துணையுடன் தான் ஆரியப் பார்ப்பனியம் தமிழர் மரபுக்கு எதிரான சீர்குலைவுகளைச் செய்தது.

திராவிட தேசியத்தில் பிராமணர் இருக்க மாட்டார்கள். தமிழ்த் தேசியத்தில் பிராமணர் ‘நாங்களும் தமிழர்தான் என்று வந்துவிடுவார்கள்’ என்று திராவிடம் கூறுகிறது.

1. ஆரியப் பார்ப்பனர்கள் திராவிட இனங்கள் என்று அழைக்கப்படும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றில் இல்லவே இல்லையா?அதாவது, திராவிட தேசியம் என்று சொன்னால், ’மலையாளப் பார்பனர்கள், தெலுங்குப் பார்ப்பனர்கள், கன்னடப் பார்ப்பனர்கள் எல்லாரும் ’நாங்கள் ஆரியர்கள்’ என்று அறிவித்து அந்த அந்த தேசிய இனங்களிலிருந்து வெளிநடப்பு செய்துவிடுவார்களா?

2. தமிழர் என்றால் பார்ப்பனர்கள் வருவார்கள் என்றால், அதே வாதத்தைப் பிற ’திராவிட’ தேசிய இனங்களில் முன் வைக்காதது ஏன்?

3. ஆரியப் பார்ப்பனர்கள் தமது நோக்கங்களை அரசதிகாரத்திற்கு நெருக்கமாக இருந்துதான் நிறைவேற்றினர். இன்றும் இதுவே நடைமுறை. மேலும், அரசு உருவாக்கம் என்பதில் ஆரியக் கருத்தியல்கள்தான் ஆதிக்கம் செலுத்தின. திராவிட தேசியம் முன்வைக்கும் அனைத்து அமைப்புகளுமே, அரசதிகாரத்திற்கு நெருக்கமான அமைப்புகளாகவே இருப்பது எப்படி? இன்றைய இந்திய - தமிழக அரசுகளும் ஆரியப் பார்ப்பனிய நலன்களுக்கானவையே. இதில் கட்சி வேறுபாடு இல்லை.

திராவிட இயக்கங்கள் அன்று முதல் இன்றுவரை தேர்தல் அரசியலில்தான் நீடிக்கின்றன. இந்திய - தமிழக அரசுகள் அமைவதற்கான அடிப்படைப் பணிகளை மேற்கொள்கின்றனவே தவிர, அந்த அரசுகளை அகற்றுவதற்கோ அல்லது அந்த அரசுகளுக்கான மாற்று அரசுக் கோட்பாடு உருவாக்குவதற்கோ எந்த முயற்சியையும் எந்தத் திராவிட இயக்கமும் செய்வதில்லை.

4. ஆரியப் பார்ப்பனியத்தை விலக்குவதற்காகவே ‘தமிழர் என்று கூறாமல் திராவிடர் என்று கூறும் திராவிட இயக்கங்கள் ‘பார்ப்பன’ ஜெயலலிதாவுக்கு வாக்குக் கேட்டு அரசியல் செய்வது என்ன விந்தை? தமிழர் என்ற அடையாளத்தையே நிராகரிக்கச் செய்யும் ‘பார்ப்பன எதிர்ப்பு’ தேர்தல் நேரங்களில் மட்டும் ‘பார்ப்பன ஆதரவாக’ உருமாறுவது எப்படி?

இக் கேள்விகளுக்கு விடையளிக்காமல் ‘திராவிடம்தான் உயர்ந்தது’ ‘தமிழ்த் தேசியம் பார்ப்பனர்களுக்கு வாய்ப்பானது’ என்று பேசுவதும் எழுதுவதும் முறையாகுமா?

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, எப்போதும் அரசதிகாரத்தை எதிர்க்கிறது. தேர்தல் அரசியலை எதிர்க்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் ’யாருக்கும் வாக்களிக்காதீர்கள்’ என்று பரப்புரை செய்கிறது. நிலவும் அரசமைப்பு, ‘பெருமுதலாளிகள் தலைமையிலான முதலாளிய - பார்ப்பனிய - இந்தி ஆதிக்க சக்திகளின் அரசமைப்பு’ என்று வரையறுக்கிறது. அந்த வரையறுப்பிற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்கிறது. நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது ஈழத்தின் அசாதாரண சூழல் கருதி, ’காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்’ என்றது த.தே.பொ.க. அப்போதும் ‘அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களியுங்கள்’ எனக் கேட்கவில்லை. அக்கூட்டணிக்காகத் தேர்தல் வேலையும் பார்க்கவில்லை.

ஆக, கடந்த மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே ஆரிய எதிர்ப்பு என்பது அரசதிகாரத்தை எதிர்ப்பது என்பதாகும். இதை விடுத்து, ‘அரசுக்கு நெருக்கம் ஆரியத்துக்குப் பகை’ என்றால், அது உண்மைக்கு எதிரானது.

ஆரியத்தை எதிர்த்து வெற்றி கொள்ளத் துடிக்கும் அனைவரும் நமது தமிழ் முன்னோரின் ஆரிய எதிர்ப்புப் போராட்டங்களை அறிந்துகொள்ள வேண்டும். அந்தப் போராட்டங்களின் வெற்றி தோல்விகளே நமக்கான பாடங்கள். அதைவிடுத்து, ‘தமிழில் என்ன இருக்கிறது? தமிழ் என்றாலே அது சாதிதான்;. பார்ப்பனியம்தான்’ என்றெல்லாம் பேசுவது அடிப்படை அறியாமை.

· ’தமிழர் என்றால்தான் ஆரியப் பார்ப்பனர் அஞ்சுவர். திராவிடர் என்றால் ஆரியப் பார்ப்பனருக்குக் கொண்டாட்டமே’ - இதுவே வரலாறு காட்டிச் சென்றுள்ள உண்மை. எப்படி?

· சாதியத்தை இன்றுவரை எதிர்ப்பது தமிழர் மரபுதான். சாதியத்தை இறுதிக்கும் இறுதியாக ஒழிக்கப் போவதும் தமிழியம்தான். இதற்கான வரலாற்று விளக்கங்கள் யாவை?

(தொடரும்)

- ம.செந்தமிழன்

Pin It