பாஜக அரசு ஆட்சியேற்றப் பிறகு அடிக்கடி விவாதிக்கப்படும் ஒரு பொருளாக மாட்டுக்கறி இருந்து வருகிறது. மாடுகள் வெட்டத் தடை, மாட்டுக்கறி விற்கத் தடை என்பதில் ஆரம்பித்து மாட்டுக்கறி தின்றதாக சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கொல்லப்படுகிற காட்டுமிராண்டித்தனம் வரையில் சென்று முடிந்திருக்கிறது இந்த மாட்டுக்கறி அரசியல்.

மாடு என்பது இந்துக்களின் புனிதமான ஒன்று. அதனால் கொல்லக் கூடாது என்கிறார்கள் இந்துத்துவவாதிகளும், இந்துத்துவவாதிகள் கட்டமைத்த பொய்யை நம்பி ஏற்றுக் கொண்டவர்களும். இந்துக்கள் யார் என்கிற கேள்விக்கே இன்னும் உருப்படியான பதில் இல்லை. அப்படி இருக்கையில் மாடு என்பது இந்துக்களின் புனிதம் என்று யார் கற்பித்தது இவர்களுக்கு? மாட்டுக்கறி தின்றால் பூகம்பம் வரும் என்று அரிய கண்டுபிடிப்பு நடத்திய அறிவாளிகள் அல்லவா இவர்கள்! இவர்கள் சொல்வதையா இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் நம் மக்கள்??

உழவுக்குப் பயன்படுவதால் மாடுகள் மீது வேளாண் குடிகளான தமிழர்கள் ஒருவித பாசம் வைத்திருப்பது உண்மை. இது எவ்வகையானப் பாசம்? வீட்டில் நாய் வளர்ப்பவர் எந்த நாயைப் பார்த்தாலும் பாசம் காட்டுவார். ஆடுகள் வளர்ப்பவர் எந்த ஆட்டைப் பார்த்தாலும் பாசம் காட்டுவார். அதுபோலவே மாடுகள் வளர்ப்பவர்கள் மாடுகள் மீது பாசம் காட்டுவார். ஆனால் இந்தப் பாசத்திற்குப் புனிதம், கடவுள் என இந்துத்துவ சாயம் பூசுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

மாடுகள் வளர்க்கும் நம்மவர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. பசு மாடாக இருந்தாலும் சரி, காளை மாடாக இருந்தாலும் சரி கைமாற்றி விட்டுக் கொண்டே இருப்பார்கள். அதிக நாள் தொடர்ந்து தங்கள் கவனிப்பில் வைத்திருக்க மாட்டார்கள். ஆக மாடுகள் மீதான பாசம் என்பதும் ஒருவகையில் பொய்.

இன்னொரு விசயம்: பால் தந்து கொண்டிருக்கும் மாட்டையோ, உழவுக்குப் பயன்படும் மாட்டையோ யாரும் இறைச்சிக்காக வெட்டுவதில்லை. வயதாகி, வேறு எந்தப் பயனும் இல்லாத மாடுகள்தான் வெட்டப்படுகின்றன. விவசாயிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதே பெரிது! இப்படி இருக்கையில் பயனில்லா மாடுகளை எப்படி பாதுகாக்க முடியும்? தவிடு, புண்ணாக்கு, வைக்கோல் என பல உணவுகள் மாடுகளுக்கு வழங்க வேண்டியுள்ளது. மாடுகள் மீது அக்கறை கொண்டவர்கள் மாடு வளர்க்கும் எங்களுக்கு மானியம் வழங்கலாமே! அல்லது தாங்களும் மாடுகள் வாங்கி வளர்க்கலாமே! யாரும் முன்வர மாட்டார்கள்..

அதற்காக விவசாயிகள் மாடுகளை விற்கிறார்கள் என்றோ, விற்க வேண்டும் என்றோ நாம் சொல்லவில்லை. ஒரு மாட்டை விற்றப் பணத்தில் விவசாயிகள் நாங்கள் மாட மாளிகைகள் கட்டிவிடுவதில்லை. இன்னொரு மாட்டையோ, சில ஆடுகளையோ வாங்கி வளர்க்கிறோம். எனவே மாடுகள் வளர்ப்பது பற்றி எங்களுக்கு யாரும் அறிவுரை வழங்கத் தேவையில்லை.

ஆனால் மாட்டுக்கறிக்கு எதிராகப் பேசுபவர்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். சென்னை நகரில் உள்ள தெருக்களில் மாடுகள் பேப்பரையும், பிளாஸ்டிக் பொருட்களையும் உண்கின்றன. சாணம் போடாமல் பீ போடுகிறது. என்ன ஒரு அவல நிலை! இதை யார் தடுத்து நிறுத்துவது? எங்கே போனார்கள் ப்ளூ க்ராஸ் அமைப்பினர்? "பார்ப்பனியக் காமாலை" நோயால் பாதிக்கப்பட்ட அவர்களின் கண்களுக்கு இதெல்லாம் தெரியாது.

ஆக இங்கு பலர் மாடுகள் மீது காட்டும் புனிதம் என்பது பச்சைப் பொய். மாடு வளர்க்கும் நாங்கள் மாடுகள் மீது காட்டும் பாசமே மெய். நாங்கள் சொல்கிறோம்! பயன் ஏதும் இல்லாத மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதில் எந்தத் தவறும் இல்லை.

நான் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை எந்த மதவாத அமைப்புக்கும் இல்லை. இன்று மாட்டுக்கறியை எதிர்ப்பவர்கள் நாளை ஆட்டுக்கறி, மீன்கறி என அசைவ உணவு அனைத்தையும் எதிர்ப்பார்கள். இதனை நம் மக்கள் இப்போதே புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும். "ஆடு, கோழி போல மாடு என்பது ஒரு மிருகம். ஆட்டுக்கறி, கோழிக்கறி போல மாட்டுக்கறி என்பதை மற்றுமொரு உணவு" என்கிற உண்மையை சிந்தித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதைப் போல முற்போக்கு நண்பர்களுக்கு ஒரு விசயம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மாட்டுக்கறி என்பது இஸ்லாமியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் உண்ணும் உணவு என்கிற பிம்பம் தொடர்ந்து கட்டமைக்கப்படுகிறது. இதில் உண்மை இல்லை. மாட்டுக்கறி என்பது நல்ல ஆரோக்கியமான உணவு, விலை குறைவாகக் கிடைக்கும் உணவு என பிரச்சாரம் செய்வதே இந்துத்துவவாதிகள் கட்டமைத்த பிம்பங்களை உடைத்தெறிய உதவும். மாட்டுக்கறி என்பது இஸ்லாமியர்களின் உணவு என திரும்பத் திரும்ப சொல்வது இந்துத்துவவாதிகளின் பிரச்சாரத்திற்கு மறைமுகமாக உதவும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

அமெரிக்காவில் அணு உலைகள் அதிகம் இருக்கின்றன என காவிகள் நமக்கு அறிவுரை சொல்வதுண்டு. அவர்கள் பாணியில் நாமும் ஒரு பதில் கொடுப்போம். அமெரிக்காவில் கர்ப்பிணிப் பெண்கள் நான்காம் மாதத்தில் மாட்டுக்கறி உண்ண அறிவுறுத்தப்படுகிறார்கள்.

- குருநாதன் சிவராமன்

Pin It