(கோயம்புத்தூரில் கம்யூனிச கல்வி இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் 'கருத்துப் பரப்பல், அணிதிரட்டலில் சமூக வலைத்தளங்களின் பங்கு' என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் விரிவான வடிவம்)

முந்தைய பகுதிகள்: 

யாருக்காக வேலை பார்க்கிறோம்?

நாம் அனைத்துக் காலகட்டங்களிலும் இன்னொருவருடைய நிகழ்ச்சிநிரலுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறோம். அந்த இன்னொருவர் அரசாகவோ, வலதுசாரிகளாகவோ இருக்கிறார்கள். அவர்கள் ஏதாவது ஒன்றைச் செய்கிறார்கள் அல்லது சொல்கிறார்கள். நாம் அதற்கு எதிர்வினையாற்றுகிறோம். ஒருநாள் நிகழ்வாக அல்ல... தொடர்ந்து இப்படித்தான் நடக்கிறது. கூடங்குளத்தில் அணுஉலை என்ற அரசின் திட்டம் நடைமுறைக்கு வரும்போது, நாம் அதை எதிர்த்து களத்தில் இறங்குகிறோம். இரண்டு மாதம் அதன்பின்னே ஓடுகிறோம். பின்னர் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை வருகிறது. கூடங்குளத்தை விட்டுவிட்டு, முல்லைப் பெரியாறு பின்னே ஓடுகிறோம். அடுத்து மூவருக்குத் தூக்கு அறிவிப்பு வருகிறது. எல்லோரும் மரண தண்டனைக்கு எதிராக வேலை செய்ய ஆரம்பிக்கிறோம். அடுத்து பாலச்சந்திரன் படுகொலைப் படம் வெளியாகிறது. அனைத்தையும் விட்டுவிட்டு, ஈழப்பிரச்சினையைக் கையில் எடுக்கிறோம். இப்படியாக எதிர்வினைகளை மட்டுமே பெரும்பாலான நேரங்களில் செய்து கொண்டிருக்கிறோம்.

social media

சில நேரங்களில் அவற்றில் நாம் வெற்றி பெறவும், அதனூடாக நமது கருத்துப் பரப்பலை செய்யவும் முடிகிறது. ஆனால், ஆக்கப்பூர்வமான வேலைகள் நடக்கின்றனவா? அணுஉலைக்கு எதிரான தொடர்ப் பிரச்சாரம் செய்கிறோமா? மரண தண்டனைக்கு எதிராக கருத்துப் பரப்பல் தொடர்ச்சியாக நடக்கிறதா? ஈழப்பிரச்சினையில் channel 4 அடுத்து ஒரு வீடியோ பதிவை வெளியிடும்வரை நாம் என்ன செய்கிறோம்? முறையே சுப.உதயகுமார், அற்புதம் அம்மாள் மற்றும் தமிழ்த் தேசியர்களிடம் விட்டுவிட்டு, அடுத்து ஒரு பிரச்சினையின் பின்னால் ஓடுகிறோம்.

வீட்டில் நாய் வளர்ப்பவர், நாய்க்கு ஒரு பிஸ்கட் துண்டை ஒருபக்கம் வீசி எறிவார். நாய் அந்தப் பக்கமாக ஓடும். பின்னர் அதற்கு எதிர்பக்கமாக இன்னொரு பிஸ்கட்டை எறிவார். நாய் அந்தத் திசையிலும் ஓடும். அந்த நாய்க்குத் தெரியாது, ஒவ்வொரு திசையாக ஓடுவதைவிட, கையில் இருக்கும் பிஸ்கட் பாக்கெட்டைக் கைப்பற்றினால் போதுமென்பது. அதேபோல் நாமும், நம்மீது பிரச்சினைகளைத் திணிக்கும் அரசுக்கு எதிராக செயல்படுவதை விட்டுவிட்டு, பிரச்சினைகளுக்கு எதிராக மட்டுமே பெரும்பாலும் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.

இதே நடைமுறைதான் சமூக வலைத்தளங்களில் இன்னும் மோசமாக இருக்கிறது. பாஜகவின் எச்.ராஜா ஏதாவது விஷமத்தனமாக சொல்லிவிட்டார் என்றால், இரண்டு நாட்களுக்கு அதற்கான எதிர்வினைகள் குவிகின்றன. சீமான் ஏதாவது உளறி வைக்கிறார் என்றால் அதற்கு எதிர்வினையாக இரண்டு நாட்கள் எழுதிக் குவிக்கிறோம். ஜெயமோகன், சோ, லிங்குசாமி, ராமதாஸ் என நமக்கு எதிரானவர்களுக்கும் பஞ்சமில்லை; நமது எதிர்வினைகளுக்கும் பஞ்சமில்லை.

நம்மிடம் எந்த சிறுபத்திரிகையும், இணையதளங்களும் இல்லாதபோது பெரிய இலக்கியவாதிகளாக கட்டமைக்கப்பட்டவர்கள்தான் சுந்தரராமசாமி, ஜெயமோகன், சாருநிவேதிதா வகையறாக்கள். இப்போது இணையம் என்னும் சக்திவாய்ந்த ஊடகம் இருக்கிறது. ஆனாலும் அதேகூட்டம்தான் இலக்கியவாதிகளாக இன்னும் பீடத்தில் இருக்கின்றனர். நமக்கான எழுத்தாளர்கள் யாரும் இல்லையா? அவர்கள் எதுவும் எழுதவில்லையா? இருக்கிறார்கள், எழுதுகிறார்கள். அவர்களைக் கண்டுகொள்ள நமக்கு நேரம் எங்கே இருக்கிறது? நாம்தான் ஜெயமோகனுக்கும், சாருநிவேதிதாவுக்கும் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறோமே!

மாதொரு பாகன் பிரச்சனை பெரியளவில் விவாதிக்கப்பட்டது. இது எப்படி நிகழ்ந்தது? காலச்சுவடுக்கு ஒரு வலைப்பின்னல் இருக்கிறது. காலச்சுவடு என்பது ஒரு பதிப்பகமாகவும், சிற்றிதழாகவும் இருக்கிறது. அதில் எழுதுபவர்களும், எழுத நினைப்பவர்களும், காலச்சுவடு கண்ணனின் பிரச்சனையை தங்கள் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு பேசினார்கள்; அதை ஒரு பெரிய பிரச்சினையாக பூதாகரப்படுத்தினார்கள். தமிழ்நாட்டில் கருத்துச் சுதந்திரம் போய்விட்டது என்று குய்யோ, முறையோ என்று கூக்குரலிட்டார்கள்.

இவர்கள் ஏன் துரை.குணாவிற்காகவும், ஈழப் போரின்போது பிரச்சாரம் செய்ததற்காக காவல்துறையினரால் அடக்குமுறைக்குள்ளான பெரியார் திராவிடர் கழகத் தோழர்களுக்காகவும் போராடவில்லை? ஏனென்றால், அவர்களிடம் பதிப்பகம் இல்லை. இருந்தால்கூட இவர்கள் எழுதும் குப்பை இலக்கியங்கள் அதில் பிரசுரமாகாது.

இவர்களின் உள்ளரசியல் தெரியாமல் நமது தோழர்களும் இவர்களுக்காக வீதிக்கு வந்து போராடுகிறார்கள். அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள், கருத்துச் சுதந்திரம் பெருமாள் முருகனுக்கு மட்டும்தான், தோழர் கொளத்தூர் மணிக்கு அல்ல என்பதில்.

ஒவ்வொரு பதிப்பகமும் இதுபோல் அல்லக்கை இலக்கியவாதிகளை தங்கள் வசம் வைத்துள்ளன.  இவர்களுக்கான பிரச்சினையை பொதுமக்களுக்கான பிரச்சினையாக மாற்றுகிறார்கள். நம்மைப் போன்றவர்கள் தேவையில்லாமல் இதில் தலையிட்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். நம்முடைய வேலைகளை விட்டுவிட்டு, அவர்களுடைய நிகழ்ச்சிநிரலுக்கு  நாம் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அவர்கள்  பேசும் எந்த ஒரு விஷயத்திற்கும் தீர்மானகரமான ஓர் இலக்கு இருக்காது. அவர்களது பிரச்சினை முடிந்தவுடன், நம்மை வீதியிலேயே விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். எந்தவொரும் இலக்கும் இல்லாமல் இயங்குபவர்களாலேயே தங்களது பிரச்சினையை பொதுப்பிரச்சினையாக மாற்ற முடிகிறது என்றால், தெளிவான இலக்கோடு மக்களுக்காக இயங்கும் நம்மால் திட்டமிட்டபடி ஒரு செய்தியைக் கொண்டு செல்ல முடியாதா?

சமூக வலைத்தளங்கள் - நமக்கான  ஆயுதங்களே!

உதாரணத்திற்கு ஒரு செய்தியை எடுத்துக் கொள்வோம். ஸ்டாலின் ஒரு மிகப்பெரிய சர்வாதிகாரி என்று ஒரு விமர்சனம் தொடர்ந்து வலதுசாரிகளால் வைக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய சர்வாதிகரிகளான ஹிட்லர், முசோலினி ஆகியோருக்கு அடுத்து ஸ்டாலின்தான் என்று முதலாளித்துவ ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. இப்படியான ஓர் உருவாக்கத்தை நம்மால் தமிழ்நாட்டளவில் சரிசெய்துவிட முடியாதா? ஒரு 50 பேர் கொண்ட குழுவால் எளிதாக செய்துவிடமுடியும். அந்த 50 பேரும் அவர்களது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டாலின் பிறந்த நாளில் அவருடைய படத்தை முகப்பு படமாக வைத்துக் கொள்வோம். ஸ்டாலின் வெளியிட்ட கருத்துகளில் சிலவற்றை வெளியிடுவோம். நான் வெளியிடும் ஸ்டாலின் குறித்தான செய்திக்கு மற்றவர்கள் Like கொடுக்க வேண்டும்; பகிர்வுக்கு கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக இந்த 50 பேர் மட்டுமே ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருக்கக்கூடாது.  

இரா.முருகவேளின் ஃபேஸ்புக் நண்பர்கள் வட்டத்தில் குறைந்தது 5,000 பேராவது இடம்பெற்றிருக்க வேண்டும். அவர் கோவையைச் சேர்ந்தவர். அந்த வகையில் கோவையைச் சேர்ந்தவர்கள் 1000 பேர் அவர் ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருக்க வேண்டும். வழக்குரைஞர் என்பதால் அந்தத் துறை சார்ந்த நண்பர்கள் 1000 பேர் அவருக்கு நண்பர்களாக இருக்க வேண்டும். அவரது வாசகர்கள், கல்லூரி நண்பர்கள், பள்ளி நண்பர்கள் என 3000 பேர் இருக்க வேண்டும். இவர்களுடன் இந்த 50 நண்பர்களும் இணைந்திருக்க வேண்டும். இரா.முருகவேள் அவரது ஃபேஸ்புக்கில் ஸ்டாலின் படத்தை வெளியிடுகிறார் என்றால் அந்தப் படத்தை ஒரு 5000 பேர் பார்க்கிறார்கள். அதில் நமது நண்பர்கள் 50 பேரைக் கழித்தால்கூட 4950 பேர் பார்க்கிறார்கள்.  அவர்கள் “யார் இந்த ஸ்டாலின்?” என்று யோசிக்கிறார்கள் இல்லையா?

மற்ற 49 நபர்களுக்கும் இதேபோல் 4950 பிரத்யேக நபர்கள் நட்புவட்டத்தில் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 50 × 4950 என்று கணக்கிட்டால் 2,47,500 பேர்களிடம் எந்தவொரு செலவும் இல்லாமல் ஸ்டாலின் பற்றிய ஒரு செய்தியைக் கொண்டு செல்கிறோம். தொடர்ந்து ஸ்டாலின் குறித்து நேர்மறையான கருத்துக்களைப் பதிவு செய்துகொண்டே இருந்தால், ஸ்டாலின் பற்றிய உண்மையான சித்திரத்தை தமிழக மக்களிடம் கொண்டு சேர்த்துவிட முடியும்.

ஆனால், உண்மையில் நமது நட்பு வட்டம் எப்படி இருக்கிறது? தோழர் இரா.முருகவேளின் பேஸ்புக் நட்பு வட்டத்தில் இருக்கும் அதே 500 பேர்தான், தோழர்கள் திருப்பூர் குணா, ஹீரா, அ.கா.ஈஸ்வரன் ஆகியோரின் நட்பு வட்டத்திலும் இருக்கிறார்கள். இப்படி இருந்தால், நமது கருத்துக்கள் நமக்குள்ளேயே தான் சுற்றிக் கொண்டிருக்கும்.

‘மாதொரு பாகன்’ பிரச்சினையை தமிழகத்தின் பெரிய பிரச்சினையாக பல்வேறு தரப்பினர் பேஸ்புக்கில் விவாதிக்கும் அளவுக்கு அதில் சுவாரசியமான செய்திகள் என்னென்ன இருந்தனவோ, அதைவிட அதிகமாக ‘பின்நவீனத்துவம்’ தொடர்பாக திருப்பூர் குணா எழுதியதில் இருக்கிறது.

facebook warமாதொருபாகன் பிரச்சினையில் திருவாளர் பொதுஜனத்திற்கு சுவாரசியமான விஷயம் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கட்டுப்பாடற்ற பாலியல் உறவு. அந்த இடத்தில் நின்று பொதுமக்கள் அதுகுறித்து பேசுகிறார்கள். அதேபோல் இந்துப் பண்பாட்டை தவறாக சித்தரித்து விட்டார்கள் அல்லது  இந்துப் பெண்களைக் கொச்சைப்படுத்தி விட்டார்கள் என்று இந்துத்துவா கும்பல் பேசுவதற்கும், கருத்துச் சுதந்திரம் என்று முற்போக்காளர்கள் பேசுவதற்கும், இந்துத்துவப் பண்பாடு பெண்கள்மீது எப்படி ஒரு கட்டாயத்தைத் திணித்திருக்கிறது என்று பெரியாரிஸ்டுகள் பேசுவதற்கும் அதில் ஓர் இடம் இருக்கிறது. காலச்சுவடு கும்பல் அதை ஒரு அஜண்டாவாக மாற்றும்போது, எல்லா தரப்பும் பேசுகிறார்கள்.

அதைவிட பல மடங்கு இடம் தோழர் குணா எழுதிய பின்நவீனத்துவ விமர்சனக் கட்டுரைகளில் இருக்கிறது. கட்டற்ற பாலியல் சுதந்திரம் குறித்து பின்நவீனத்துவக் கும்பல் மீதான விமர்சனத்தை திருவாளர் பொதுஜனம் ‘குதூகலமாய்’ விவாதிக்கலாம். சாதிவெறியர்களுடன் கூட்டணி, ஈழ எதிர்ப்பு, கிறித்துவ மிஷனரிகள் தொடர்பு, என்.ஜீ.ஓ. ஆதரவு, மார்க்சிய எதிர்ப்பு என பின்நவீனத்துவவாதிகள் செய்த அட்டூழியங்கள் எல்லாம் திருப்பூர் குணா கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுகுறித்து விவாதிப்பதற்கு தலித் அமைப்புகள், பெரியாரியவாதிகள், இடதுசாரிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் அதில் ஓர் இடம் இருக்கிறது. ஆனால் நாம் இதை ஒரு விவாதமாக மாற்றவில்லை. நாம் கடுமையாக உழைக்கிறோம். ஆனால், நமது ஊடக முயற்சிகள் குறைவாக இருப்பதனால், நமது கருத்துக்கள் பெருந்திரளைச் சென்று சேர்வதில்லை.

நமது கைபேசியில் தமிழில் தட்டச்சு  செய்ய முடியும். எந்தவொரு செய்தி குறித்தும் நமது கருத்தை நாலு வரியில் பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போதே தட்டச்சு செய்துவிட முடியும். தொலைக்காட்சி விளம்பர இடைவேளைகளில், யாருக்காவது காத்திருக்கும் நேரத்தில், தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நாம் ஒரு கருத்தை பேஸ்புக்கில் அப்டேட் செய்ய முடியும். அப்படியிருக்கையில் நம்முடைய அஜெண்டாவை மற்றவர்களின் அஜெண்டாவாக ஏன் மாற்றமுடியாது?

முதலில் கூட்டத்தோடு கோவிந்தா போடுவதை நிறுத்துவோம். நமக்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்போம். அதை விவாதப் பொருளாக்குவோம். உதாரணத்திற்கு எளிமை என்றால் அதற்கு உதாரணமாக காந்தி, கலாம்தான். அதைவிட எளிமையானவர்கள் பெரியார், ஜீவா, ஆர்.நல்லகண்ணு மாதிரியான எண்ணற்ற இடதுசாரிகள் என்பதை நம்மால் விவாதப் பொருளாக்க முடியும்.

வலைப்பூக்கள், பேஸ்புக், ட்விட்டர் தாண்டி இப்போது வாட்ஸ்அப் வந்திருக்கிறது. ஃபேஸ்புக்கைக் காட்டிலும் வாட்ஸ்அப்பில் இன்னும் நெருக்கமாக செயல்பட முடியும். நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் வாட்ஸ்அப்பில் குழுமமாக இயங்க முடியும். பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் நாளை எதை விவாதப்பொருளாக்கலாம் என்பதை வாட்ஸ்அப்பில் முடிவு செய்ய முடியும். இலண்டன், மும்பை, பாரிஸ், நியூயார்க், சென்னை, கோவை, நெல்லை, தேனி என உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும் நமது நண்பர்கள் இருக்கலாம். நமது கைபேசியில் இணைய வசதி இருந்தால்போதும், வாட்ஸ்அப் மூலமாக எளிதில் தொடர்பு கொண்டு விவாதிக்கலாம். ‘உலகமயத்தால் இந்தியாவில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து நாளை விவாதிக்கலாம்’ என்று வாட்ஸ்அப்-ல் முடிவெடுத்துவிட்டோம் என்றால், மறுநாள் காலையில் சென்னை, கோவை, நெல்லை, தேனியில் இருக்கும் நண்பர்கள் அதுதொடர்பான விவாதத்தைத் தொடங்குவார்கள். அதை இந்தியாவின் பிற பகுதிகளில் இருக்கும் நண்பர்கள் தொடர்வார்கள். இலண்டனில் இருப்பவர்கள், நமது மதிய நேரத்திற்குப் பின், அதாவது அங்கு காலை நேரத்தில் – அதைத் தொடர்வார்கள். அமெரிக்க நாடுகளில் இருப்பவர்கள் அவர்களது காலை நேரத்தில் இதே வேலையைச் செய்வார்கள். ஒருமணி நேரம் நாம் அனைவரும் உழைத்தால் போதும், அப்பிரச்சினையை பொதுமக்கள் கையில் எடுத்துக் கொள்வார்கள்.

வணிக ஊடகங்கள் வெளியிடத் தயங்கும் காணொளிப் பதிவுகளை youtube-ல் நம்மால் வெளியிட முடியும். ஸ்மார்ட்போனில் படமெடுத்து, இலவச மென்பொருள்களில் அதை படத்தொகுப்பு செய்து சிறுசிறு காணொளிகளாக வெளியிட்டுவிடலாம். அதை பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தி, அதற்கான பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்துவிட முடியும்.

இவ்வளவு நாட்களும் தமிழ்நாட்டு மக்களிடம் மட்டுமே நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், நம்முடைய செய்திகளை வெளி மாநிலங்களுக்கு, வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவை இருக்கிறதா இல்லையா?

முல்லைப் பெரியாறு  பிரச்சனை வந்தபோது கேரள மக்களின் குரல்தான் இந்தியா முழுக்கவும் ஒலித்தது. நமது குரல் தமிழ்நாட்டில்தான் ஓங்கி ஒலித்தது; இந்திய அளவில் மிகவும் பலவீனமாக இருந்தது. “இவ்வளவு பழைய அணை எப்படி பாதுகாப்பானதாக இருக்கும்?”, “ஆயிரம் ஆண்டுகளுக்கு எப்படி ஓர் அணையை லீசுக்கு விட முடியும்?” என்ற மலையாளிகளின் கருத்தைத்தான் பெரும்பாலான இந்தியர்கள் பிரதிபலித்தார்கள். காரணம் மலையாளிகள் தங்களது கருத்துக்களை முக்கிய ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஆங்கிலத்தில் பதிவு செய்து கொண்டிருந்தார்கள்.

ஈழப்பிரச்சனையில் கூட  இந்தியாவிலிருக்கும் அறிவுஜீவிகள் மத்தியில் நம்முடைய கருத்துகளை நம்மால் கொண்டு செல்ல முடியவில்லை.  இந்தியாவிலிருக்கும் அறிவுஜீவிகள் எல்லோரும் ஃபேஸ்புக், ட்விட்டர் என்று எல்லா தளங்களிலும் செயல்படுகிறார்கள். ஆனால், நாம் இன்னமும் தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கிடையில் மட்டும், அதுவும் பழைய வழிமுறைகளான துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், தெருக்கூட்டங்கள் மூலமாக மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய செய்திகளை வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்ல வேண்டிய தேவை இருக்கும்போது, அதை சமூக வலைத் தளங்கள் வாயிலாக எளிதாக சாதித்துவிட முடியும் என்பதை நாம் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

social media revolution 1

வழக்கமான பிரச்சார வழிமுறைகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை அரசு கற்றிருக்கிறது. அவை ஒவ்வொன்றிற்கும் அரசின் அனுமதி தேவை. அரசு அனுமதிக்காக அலைந்து திரிந்து, பின்னர் அனுமதி கிடைக்காமல் நீதிமன்றக் கதவுகளைத் தட்டி, எத்தனை சிக்கல்களை சந்திக்கிறோம்? சமூக வலைத்தளங்களில் இந்த சிக்கல் இல்லை. இப்போதைக்கு இது பொதுமக்கள் கையில் உள்ளது. அதுவுமில்லாமல் இணையம் என்பது இறுதிப்படுத்தப்பட்ட வடிவங்களை உடையது அல்ல. கொஞ்ச நாட்களுக்கு முன்பு வலைப்பூக்கள், நேற்று பேஸ்புக், ட்விட்டர், இன்று வாட்ஸ்அப், நாளை வேறொன்று வரும். Open source, copyrights என்பன குறித்து உலக அளவில் ஆரோக்கியமான விவாதங்களும், மாற்றங்களும் நடந்து வருகின்றன. எனவே, அரசாங்கம் இணையத்தைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு இலகுவான செயல் அல்ல.

சமூக வலைத்தளங்களை ஊடுருவும் அரசுகள்

கட்டுப்படுத்த முடியாது என்ற நிலையில், அரசுகள் அதற்குள் ஊடுருவவும், அதுகுறித்த எதிர்மறைப் பிரச்சாரங்களை செய்யவும் தொடங்கியிருக்கின்றன. Social Media Marketing என்பதை வலதுசாரிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களது நலன் சார்ந்து பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. அதே நேரத்தில், பொதுமக்களிடம் ‘சமூக வலைத்தளங்கள் குடும்ப உறவுகளை சிதைக்கின்றன; இளைஞர்கள் facebook addict, twitter addict-களாக மாறிவிட்டார்கள்; அப்பாவிப் பெண்கள் முகம்தெரியாத நபர்களிடம் ஏமாந்து விட்டார்கள்’ என்று எதிர்மறைப் பிரச்சாரங்களை வணிக ஊடகங்கள் மூலமாக செய்து வருகின்றன. அங்கொன்றும், இங்கொன்றுமாக நடப்பதை இவர்கள் பூதாகரப்படுத்துகிறார்கள். ஏனெனில் இவற்றிலிருந்து மக்களை அந்நியமாக்க வேண்டிய தேவை இவர்களுக்கு இருக்கிறது.

எதிர்ப்பிரச்சாரத்தின் மூலம் சமூக வலைத்தளங்களுக்குப் புதிதாக வருபவர்களைத் தடுக்கிறார்கள். அதே நேரத்தில் ஏற்கனவே அங்கு இருப்பவர்களை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதையும் அரசுகள் செய்யத் தொடங்கியிருக்கின்றன. மோடியின் ஒரு வருட ஆட்சியில் நாடு நாசமாகப் போய்க் கொண்டிருந்தாலும், அதை மறைக்கும் வேலையில் மோடியின் பிரச்சாரகர்கள் ஈடுபடுகிறார்கள்.

மோடியின் ஓராண்டு ஆட்சி நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதத்தில், ‘SaalEkShuruaatAnek’ (One Year, Many Initiatives) என்ற hashtag  மூலமாக ட்விட்டரில் இலட்சக்கணக்கான நிலைத்தகவல்கள் பதியப்பட்டன. ட்விட்டரில் எங்கு பார்த்தாலும் மோடியின் ‘சாதனைகள்’ பேசப்பட்டன. இது எப்படி நடந்தது? மோடியே இதைத் துவக்கி வைத்தார். இந்த hashtagல் தன்னுடைய ஆட்சி பற்றிய தங்களது கருத்துக்களைப் பதிந்தால், அதற்கு தன்னிடம் இருந்து தனிப்பட்ட பதில் வரும் என்று அறிவித்தார். பிரதமரிடம் இருந்து தனிப்பட்ட பதில் வரும் என்றால் போதாதா? மக்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்.

2009ம் ஆண்டில் ட்விட்டரில் மோடி நுழைந்ததே, சமூக வலைத்தளங்களின் வலிமையை உணர்ந்துதான். இன்றுவரை அதைத் திறமையாக கையாண்டு வருகிறார். அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அடுத்தபடியாக பேஸ்புக்கில் அதிக Like வாங்கியவராக (28 மில்லியனுக்கும் அதிகமாக) மோடி இருக்கிறார். ரஜினியை மோடி சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் மட்டும், 2.2 மில்லியனுக்கும் அதிகமாக Likes வாங்கியுள்ளது. பேஸ்புக், ட்விட்டர் மட்டுமல்ல, எந்த சமூக வலைத்தளமாக இருந்தாலும், அங்கு மோடியை விற்பதற்கு அவரது மார்க்கெட்டிங் டீம் வேலை பார்க்கிறது. Google+ல் நுழைந்த முதல் இந்திய அரசியல்வாதி மோடிதான் என்று பத்திரிக்கை செய்திகள் சொல்கின்றன. மோடி சீனா சென்றபோது, சீனாவில் பிரபலமாக இருக்கும் Weibo என்ற சமூக வலைத்தளத்திலும் ஒரு கணக்கைத் தொடங்கினார். அதில், சீனப் பிரதமருடன் தான் எடுத்த செல்பி படத்தை பதிவேற்றினார். ஒரு வாரத்திற்குள் அந்த Weibo கணக்கை 31 மில்லியன் மக்கள் (பெரும்பாலும் சீனர்கள்) பார்த்திருக்கிறார்கள்.

மோடி அமெரிக்கா சென்றபோது, ட்விட்டரில் #ModiInAmerica என்ற hashtag உருவாக்கப்பட்டது. அதில் மோடியின் அமெரிக்கப் பயணம் தொடர்பான செய்திகள் பகிரப்பட்டன. மோடியின் மார்க்கெட்டிங் டீம் வேலை பார்க்கும் வேகத்தைப் பார்த்தால், அவர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்குக்கூட நிற்கலாம் போலிருக்கிறது.

இன்று பெரும்பாலான அரசியல்வாதிகள் நேரடியாகவோ அல்லது கட்சி அமைப்புகளின் வழியாகவோ சமூக வலைத்தளங்களில் இயங்குகிறார்கள். கருணாநிதி, ஸ்டாலின், சுப்ரமணியன்சாமி, அன்புமணி இராமதாஸ், வைகோ உள்ளிட்ட அரசியல்வாதிகளின் சமூக வலைத்தளக் கணக்குகளை பின் தொடர்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ட்விட்டர் கணக்கை, அமெரிக்க மக்கள் தொகையில் பத்து சதவீதத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வது என்றால், அமெரிக்க வாக்காளர்களில் பத்தில் ஒருவரை ஒபாமா தனது பிரச்சார வலைக்குள் எப்போதும் வைத்திருக்கிறார்.

social media obama

(அமெரிக்க அதிபர் தேர்தலில் சமூக வலைத்தளங்களின் தாக்கம்)

அரசியல்வாதிகளைத் தாண்டி, அரசு நிறுவனங்களும் இப்போது சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றன. இந்தியாவில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இந்த செயல்பாடுகள் இருந்தாலும், மேற்குலக நாடுகளில் அரசு நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் பேஸ்புக், ட்விட்டரைப் பயன்படுத்துவது சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது.

உதாரணமாக அமெரிக்கா, கனடா, செக் குடியரசு, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, ஈக்வடார், சிலி நாடுகளின் அதிபர்/பிரதமர் அலுவலகங்கள் தங்களுக்கென ட்விட்டர்/பேஸ்புக் கணக்கை வைத்துள்ளன. அதுமட்டுமன்றி, உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை, சுகாதாரம், இராணுவம், பொருளாதாரம் என அரசுத் துறைகள், அமைப்புகள் சமூக வலைத்தளங்களில் இயங்குகின்றன.

மோடியின் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின்போதும், அவரது மார்க்கெட்டிங் டீம் சமூக வலைத்தளங்களில் பரப்பும் செய்திகளைப் பார்த்து, நாடு அசுரவேகத்தில் வளர்ச்சி அடைந்து வருவதாக நம்பி நம் மக்கள் like-ம், share-ம் செய்கிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. நம் நாட்டிலும் அனைத்து அரசு அமைப்புகளும் இதேபோல் இயங்கத் தொடங்கிவிட்டால், மக்களிடம் எத்தனை பொய்ச் செய்திகள் பரப்பப்படும்? சென்னையில் சாக்கடையே இல்லை என்று சென்னை மாநகராட்சி செய்தி பரப்பும்; கோவில்பட்டியில் குடிநீர்த் தட்டுப்பாடு தீர்ந்துவிட்டது என கோவில்பட்டி எம்.எல்.ஏ அலுவலகம் பொய் கூறும்; மதுரை அமைதிப் பூங்காவாக இருக்கிறது என மதுரை காவல் துறை துணிந்து நிலைத்தகவல் போடும். எது உண்மை, எது பொய் எனத் தெரியாமல் மக்கள் மீளாமுடியாத மயக்கத்திற்குள் ஆழ்ந்து விடுவார்கள்.

இணையவெளி மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள்

முன்பெல்லாம் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைக் கண்காணிக்க உளவுத்துறையினர் அவர்கள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பின்தொடர்ந்து செல்வார்கள். ஆனால், இன்று அவ்வாறு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்களது கைப்பேசி எண், பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் வழியாக மிக எளிதாக உட்கார்ந்த இடத்திலிருந்தே அக்கண்காணிப்பை செய்ய முடியும். நம்மை அறியாமலேயே நமது பேஸ்புக், வாட்ஸ்அப் குழுமங்களில் அவர்களால் ஊடுருவ முடியும். நமது நடவடிக்கைகளை மிகத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் அரசியல் செயற்பாட்டாளர்கள் தங்களது குழுமங்களில் புதுநபர்களை அனுமதிக்கும்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

சமூக வலைத்தளங்கள் குறித்த அச்சம் அரசுகளுக்கு அதிகரித்திருக்கிறது. இதர ஊடகங்களின் மீது தனக்கிருக்கும் கட்டுப்பாட்டை சமூக வலைத்தளங்கள் மீதும் கொண்டுவர அவை திட்டமிடுகின்றன. துருக்கியில் நீதிமன்றங்களை விட அதிக அதிகாரங்கள் இணைய ஆணையத்திற்கு (Internet Authority) அளிக்கப்பட்டுள்ளது. இரஷ்யாவில் இதர ஊடகங்களுக்கு இருக்கும் சட்டதிட்டங்கள் இணையத்திற்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முபாரக் வீழ்ச்சிக்குப் பின் அமைந்த முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் ஆட்சிக்கு எதிராக, எகிப்து இராணுவம் தனது ஆதரவாளர்களை சமூக வலைத்தளங்களில் இறக்கிவிட்டது. முஸ்லிம் சகோதரத்துவக் கட்சிக்கு எதிராக இலட்சக்கணக்கான கையெழுத்துக்கள் இணையத்தில் சேகரிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர். முபாரக் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் எந்தவிதமான பிரச்சாரத்தை மேற்கொண்டார்களோ, அதேவிதமான பிரச்சாரத்தை முஸ்லிம் சகோதரத்துவக் கட்சிக்கு எதிராக இராணுவத்தின் ஆதரவாளர்கள் மேற்கொண்டனர். ஆட்சியிலிருந்து இறங்கக் கோரி, அவர்களும் விடுதலை சதுக்கத்தில் போராட்டம் நடத்தினர். சில நாட்களுக்குப் பின், இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

இணையக் குற்றங்களை குண்டர் சட்டத்தின்கீழ் விசாரிக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாவை கடந்த ஆண்டு சட்டசபையில் அதிமுக அரசு தாக்கல் செய்தது. இதன்படி, பேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ நீங்கள் இடும் ஒரு பதிவை ‘இணையக்குற்றம்’ என்று வகைப்படுத்தி, ஓராண்டு தடுப்புக் காவலில் வைக்கும் அதிகாரம் காவல் துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

சமூக வலைத்தளங்கள் மக்களுக்கு அளித்திருக்கும் கருத்துச் சுதந்திர வெளியைக் கண்டு அரசுகள் அஞ்சுகின்றன. அவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தவோ அல்லது அவற்றில் செயல்படுபவர்களை அச்சுறுத்தவோ முயல்கின்றன.

நாம் செய்ய வேண்டியது…

அரசுகள் அஞ்சுகின்ற ஒரு விஷயத்தை நாம் கைப்பற்ற அவசியம் இருக்கிறதா இல்லையா? இந்தியச் சூழலில் சமூக வலைத்தளங்கள் அவற்றிற்குரிய வீச்சுடன் இதுவரை முழுமையாகப் பயன்படுத்தப் படவில்லை. அரபு நாடுகளில் நடந்த கிளர்ச்சி இந்தியாவில் உடனடி சாத்தியமா என்றால் இல்லைதான். அதற்கான சமூகச் சூழலும், அரசியல் கொந்தளிப்பும் இங்கு இல்லைதான். அந்தக் கொந்தளிப்பு ஒரு நாளில் ஏற்படாது. நாம் செய்ய வேண்டிய கருத்துப் பரப்பல் வேலை மிக அதிகமாக இருக்கிறது. மோடியின் பிம்பம் கடைக்கோடி கிராமத்து இளைஞன் வரைக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இப்போது அந்த இளைஞனிடம் உண்மை என்ன என்பதை சொல்ல வேண்டியிருக்கிறது. அந்த உண்மை புரிந்தால் மட்டுமே நாம் அறைகூவல் விடுக்கும்போது அவன் வீதிக்கு வருவான்.

தோழர்களே! செலவு குறைவான, அதே நேரத்தில் வலிமையான இந்த ஊடகத்தை நாம் விரைந்து கைப்பற்றுவோம். அமைப்பாக நமக்குள் திட்டமிட்டு, கருத்துப் பரப்பலை வீச்சுடன் கொண்டு செல்வோம். இந்திய அறிவுஜீவிகளுக்கு, உலக அறிவுஜீவிகளுக்கு தமிழர்கள் தரப்பு நியாயத்தைக் கொண்டு செல்வோம். மக்களுக்கு எதிரான மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். வணிக ஊடகங்களை, அரசியல்வாதிகளை நமது நிகழ்ச்சி நிரலுக்குத் திருப்புவோம். சமூக வலைத்தளங்கள் மூலமாக இது சாத்தியமே! உணர்ந்து செயல்படுவோம்! வெல்வோம்!!

(முற்றும்)

- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It