kandhamal victim

2002 குஜராத் கலவரத்திற்குப் பிறகு, ஒரிஸ்ஸாவில் கந்தாமலில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 2008ல் நடத்தப்பட்ட மிகப்பெரும் வகுப்புக் கலவரம் சங்பரிவார்களின் கோரமுகத்தை உலக அரங்கில் மீண்டும் வெளிப்படுத்திக் காட்டியது.

குஜராத்தில் 2002ல் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்திற்குக் காரணமாக கரசேவகர்கள் எரிக்கப்பட்டார்கள் என்று பொய்யான காரணத்தைக் கூறி முஸ்லிம்களைக் கொன்றொழித்து, பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தி, கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடினார்கள் சங்பரிவார்கள்.

கந்தாமலில் வலுக்கட்டாயமாக இந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினார்கள் என்று பொய்யான கருத்தை அங்குள்ளவர்களிடம் விதைத்து, கிறிஸ்தவர்களைக் கொன்றொழித்தார்கள். இதுதான் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு. கந்தமாலில் ஆகஸ்டு 25, 2008ல் நடந்த வகுப்புக் கலவரம் ஒட்டுமொத்த இந்திய மக்களையும் நிலைகுலையச் செய்தது. கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வாழும் மாநிலங்களில் ஒரிஸ்ஸாவும் ஒன்று.

அங்குள்ள கந்தமால் சங்பரிவார்கள் ஏற்படுத்திய கிறிஸ்தவர்களுக்கு எதிரான மிகப்பெரும் தாக்குதலில் 350 சர்ச்சுகள் மற்றும் வழிபாட்டுத்தளங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. ஆதிவாசி கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் கிறிஸ்தவர்களின் 6,500 வீடுகள் இடிக்கப்பட்டு, அங்குள்ளவர்கள் சொந்த மாநிலத்தை விட்டே விரட்டியடிக்கப்பட்டனர். இந்தக் கலவரத்தில் மட்டும் 90 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். 40 பெண்கள் மானங்கப்படுத்தப்பட்டனர். கிறிஸ்தவர்கள் நடத்தி வந்த பல்வேறு பள்ளிக்கூடங்கள், சமூக சேவை மையங்கள் மற்றும் மருத்துவ உதவி மையங்கள் சூறையாடப்பட்டு, இடித்துத் தள்ளப்பட்டன.

இந்தத் தாக்குதலில் 56,000 பேர் தங்களுடைய வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். கடந்த மூன்று நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையில் ‘கந்தமால்’ முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. இந்தக் கலவரம் ஒரிஸ்ஸாவைத் தாண்டி சில மாநிலங்களிலும் பரவியது. ஆனால், பெரிய அளவில் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. ஏழு வருடங்களைக் கடந்துவிட்ட நிலையில் அங்குள்ளவர்களின் மனநிலையில் இருந்து, சங்பரிவார்களின் தாக்குதல்கள் மறையவில்லை.

இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கு உரிய இழப்பீடு, நிவாரணம் என குறைந்தபட்ச அளவுக்குக்கூட அரசு அங்குள்ளவர்களுக்கு வழங்கவில்லை என்பதுதான் இன்றும் நமக்குக் கிடைக்கக்கூடிய தகவல்கள்.

நிவாரணம் மற்றும் இழப்பீடே பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை என்றபோது, நீதி எங்கு கிடைக்கப் போகின்றது? இதில், இந்தியா ஒரு மிகப்பெரும் ஜனநாயக நாடு என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றது. பெயரளவில்தான் ஜனநாயக நாடு என்பதை கடந்த கால கலவரங்களின் பட்டியல்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

kandhamal victim houseஅதுவும், இந்த ஒரு வருட மோடியின் ஆட்சி இன்னும் கூடுதலாகவே இருக்கின்றது. சங்பரிவார்களுக்கும், அவர்களின் துணை அமைப்புகளுக்கும் கலவரம் செய்யவும், தாங்கள் விரும்பும் நபர்களைக் கொலை செய்யவும் முறையான ‘லைசென்ஸ்’ வழங்கி கவுரவித்துள்ளது மோடி அரசு.

‘கர்வாப்சி’ என்ற பெயரில் சிறுபான்மை மக்களுக்கெதிரான வெறுப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்மூலம் வலுக்கட்டாயமாக மக்களை இந்துக்களாக மதம் மாற்றும் வேலைகளை சங்பரிவார்கள் அமைப்புகள் செய்து வருகின்றனர்.

கந்தமாலிலும் இந்தப் பிரச்சாரம் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றது. மதம் மாற மறுப்பவர்களை கொலை செய்து விடுவோம் என்றும் இந்துத்துவா அமைப்புகள் மிரட்டுகின்றனர். இன்னொரு முழக்கத்தையும் இந்துத்துவா அமைப்புகள் வெளிப்படுத்துகின்றனர். “மோடியின் ஆட்சி 2025ம் ஆண்டு வரை இருக்கும்பட்சத்தில், ஒரிஸ்ஸா ஒரு இந்து மாநிலமாக இருக்கும்” என்று கொக்கரிக்கின்றன இந்துத்துவா அமைப்புகள்.

அதோடு, கலாச்சார ரீதியாகவும், வரலாறுகளை மாற்றுவதில் இந்துத்துவா அமைப்புகள் முழு மூச்சாக செயல்படுகின்றன. கந்தமாலில் திட்டமிட்டே கிறிஸ்தவர்களின் கல்வி நிலையங்களையும், கல்லூரிகளையும் இடித்துத் தள்ளினர். கன்னியாஸ்திரிகளையும் கூட்டுக் கற்பழிப்புக்கு ஆளாக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கந்தமால் வகுப்புவாத வன்முறையின்போது, 3,300 புகார்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து காவல்துறையினரிடம் அளிக்கப்பட்டுள்ளது. 820 புகார்களுக்கு மட்டும்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதியுள்ள புகார்கள் எதுவுமே பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யப்பட்ட புகார்களில் வெறும் 518 வழக்குகள் மட்டும்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீதியுள்ள அனைத்துப் புகார்களும் தவறாக அளிக்கப்பட்டுள்ளது என்று கூறி காவல்துறையினர் நிராகரித்து விட்டனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 518 வழக்குகளில் 247 வழக்குகள் முடிந்துள்ளது. மீதமுள்ள வழக்குகள் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன் நிலுவையில் உள்ளன. முடிக்கப்பட்ட வழக்குகள் அனைத்திலும் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பதுதான் உண்மையாகும்.

பாதிக்கப்பட்டவர்களை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். ஆனால், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் எவரும் உரிய தண்டனை பெறவில்லை என்பதே நிதர்சனமாகும். சுருக்கமாகச் சொன்னால், கொலைகாரர்களும், பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்களும், கலவரத்தின்போது கொள்ளையில் ஈடுபட்டவர்களும் சுதந்திரமாக வீதிகளில் சுற்றித் திரிகின்றனர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களோ நிவாரணமும் கிடைக்காமல், நீதியும் கிடைக்காமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

மதச்சார்பற்றவர்களிடம் முன்வைக்கக்கூடிய கோரிக்கை என்னவென்றால், நாட்டில் ஜனநாயகமும் அமைதியும் நிலவ வேண்டுமென்றால், ஆகஸ்டு 25, 2008ம் ஆண்டை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஃபாசிஸ்டுகளின் கோரமுகத்தை அடையாளப்படுத்த முடியும்.

இல்லையென்றால், 2002 குஜராத்தும் 2008 கந்தமாலும் 2011 முஸஃபர் நகரும் மறுபடியும் நம்மை நோக்கி வரும்மென்பதில் சந்தேகம் இல்லை. சங்பரிவார்களுக்கெதிராக கொள்கை ரீதியாகப் போராட வேண்டிய தருணம் என்பதை உணர்ந்து, அதற்கான முயற்சிகளைத் தொடங்க வேண்டும் என்பதே காலத்தின் கட்டாயமாகும்.

- நெல்லை சலீம்

Pin It