farmer 580

அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், செயற்கை உரங்களைப் புறக்கணிப்பது என்றும் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துவது என்றும் சில ஆண்டுகளுக்கு முன் முடிவெடுத்து அதன்படி செயல்பட்டனர். அப்படிச் செயல்பட்டதின் விளைவுகளைப் பற்றி விவாதிக்க அரியலூருக்கு அருகில் உள்ள சோழமாதேவி என்ற கிராமத்தில் 17.7.21015 அன்று ஒரு கருத்தரங்கை நடத்தினர். அதில் செயற்கை உரங்களால் பாழ்பட்டுப் போயிருந்த மண் வளமும், நிலத்தடி நீரின் தரமும் மேம்பட்டு இருப்பதை அவர்கள் மகிழ்வுடன் தெரிவித்தனர். ஆகவே மேலும் மேலும் விவசாயிகள் செயற்கை உரங்களைப் புறக்கணித்து விட்டு, இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அப்படிச் செய்தால் நச்சுத் தன்மை இல்லாத, தரமான விவசாய விளைபெருட்களை மக்களுக்கு வழங்க முடியும் என்றும் அவர்கள் கூறினர். மேலும் போதிய அளவு கூடுதலான எண்ணிக்கையில் விவசாயிகள் செயற்கை உரங்களைப் புறக்கணிக்கத் தொடங்கினால், தரமான, விவசாய விளைபொருட்களைச் சந்தையில் குவிக்க முடியும் என்றும், செயற்கை உரங்களின் மூலம் விளையும் நச்சுத் தன்மை வாய்ந்த உணவுப் பொருட்களைப் பின்னுக்குத் தள்ளி விட முடியும் என்றும் அவர்கள் கூறினர்.

இது கிராம அளவில் நடந்த பரிசோதனையில் கிடைத்து இருக்கும் படிப்பினை.

இந்திய நாடு முழுமைக்கும் இந்திய அரசின் அதிகார பூர்வமான நாடாளுமன்றக் குழுவினாலும் இது போன்ற ஓர் ஆய்வு நடக்கவே செய்துள்ளது. அதற்குப் பா.ஜ.கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான முரளி மனோகர் ஜோஷி தலைமை தாங்கி உள்ளார். அவர் அக்குழுவின் ஆய்வு முடிவுகளை நாடாளு மன்றத்தில் அளித்த பின், அது 16.8.2015 அன்று மக்ளுக்குத் தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. இவ் ஆய்வும் அரியலூர் விவசாயிகளின் கருத்தை அப்படியே ஆமோதித்து உள்ளது. அது மட்டும் அல்ல; எங்கெங்கு செயற்கை உரங்களால் விளைச்சல் அதிகமாகி உள்ளது என்று சொல்லப்பட்டதோ, அங்கெல்லாம் மண்ணின் தரமும் நிலத்தடி நீரின் தரமும் மிகவும் மோசமாகப் பாழ் பட்டு இருக்கிறது என்பதும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் எங்கெல்லாம் செயற்கை உரங்களைப் புறக்கணித்து விட்டு இயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறதோ, அங்கெல்லாம் மண்ணின் தரமும் நிலத்தடி நீரின் தரமும் மேம்பட்டு உள்ளது என்பதும், செயற்கை உரங்களைப் பயன்படுத்தும் போது அவற்றில் 40% மட்டுமே பயிர்களுக்குப் பயன்படுகிறது என்றும், மீதம் 60% மண்ணையும் நிலத்தடி நீரையும் பாழ் படுத்தவே பயன்படுகிறது என்பதும் இக்குழுவின் ஆய்வில் தெரிய வந்து உள்ளது.

சரி! ஒரு சிறு கிராம அளவில் நடந்த சிறு விவசாயிகளின் ஆய்வும், பெரிய அளவில் நாடாளுமன்றக் குழுவினால் நடத்தப்பட்ட ஆய்வும் இயற்கை உரங்கள் நன்மை பயக்கின்றன என்றும், செயற்கை உரங்கள் தீமை பயக்கின்றன என்றும் ஒரே முடிவையே தெரிவிக்கின்றன. ஆகவே அது உண்மையாகத் தான் இருக்க வேண்டும் என்பதை மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லாமல் ஒப்புக் கொள்ளலாம்.

ஆனால் இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு, நம் நாட்டில் செயற்கை உரங்களை முற்றிலும் தடை செய்து விடலாம் அல்லவா? இதைப் பற்றி யோசிக்கவே அரசு மறுக்கிறதே! ஏன்?

அட போங்கய்யா! செயற்கை உரங்களுக்குத் தடை விதித்து விட்டால், அத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள மூலதனத்தை எங்கு திருப்பி விடுவது? ஏற்கனவே, பொருளாதார நெருக்கடியின் காரணமாக மூலதனத்தை இலாபகரமாக ஈடுபடுத்தக் களம் கிடைக்காமல் மரபு மாற்றுப் பயிர் போன்ற மலட்டு விவசாய முறைகளை விவசாயத் துறையில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அதனால் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதையும் கண்டு கொள்ள முடியாத நிலையில் இருக்கும் போது, செயற்கை உரங்களைத் தடை செய்தால் விளைவுகள் என்னாகும்?

மண்ணின் தரமும், நிலத்தடி நீரின் தரமும் கெட்டுப் போனால் போகட்டுமே! விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் செய்து கொள்ளட்டுமே! அவற்றைக் கவனிப்பதா முக்கியம்? மூலதனத்தை இலாபகரமாக ஈடுபடுத்துவதற்குக் களத்தை ஏற்படுத்திக் கொடுப்பது அல்லவா ஒரு முதலாளித்துவ அரசின் தலையாய கடமை?

சரி! முதலாளித்துவ அரசு தன் கடமையைச் செவ்வனே செய்யட்டும். அதைக் காவு கொடுத்து விட்டு மக்களின் நலன்களை முன்னெடுக்கும் சமதர்ம (சோஷலிச) அரசை அமைப்பது மக்களின் கடைமை அல்லவா? அதற்கு மக்கள் எப்போது அணியம் ஆகப் போகிறார்கள்?

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.8..2015 இதழில் வெளி வந்துள்ளது)

Pin It