தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்.
தூய தமிழரை தமிழ்கொண்டெழுப்பினோம்.
தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்.
செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்.

-பாரதிதாசன்.

பறை ஒரு வீரியமிக்க தமிழிசைக் கருவி. அது இன்று இரண்டு வகையான தீண்டப்படாதவர்களிடம் மட்டுமே இருந்து கொண்டிருக்கிறது. ஒன்று காலாகாலமாக அதை வேறு வழியில்லாமல் ஆதிக்க சாதிகளின் தேவைக்காக, பொருளாதார நோக்கத்திற்காக காத்துவரும் தலித்துகளின் வசம். இன்னொன்று சமூக மாற்றம் பேசும் புரட்சிகர அரசியல் உணர்வாளர்களின் கைகளின் வசம்.ஆக பறையும் ஒரு தீண்டப்படாத இசைக்கருவியாக ஆக்கப்பட்டுவிட்டது.

parai 340ஏன்? அது தோல் கருவி என்பதாலா? செத்த மாட்டின் தோலாலானது என்பதாலா? மாடு தின்று கொழுத்து வளர்ந்த பார்ப்பனர்கள் இடையில் புல்லும்,பூண்டும் தின்று திடீர் புனிதம் அடைந்து விட்டதாலா? அப்படியானால் மிருதங்கம், மத்தளம், தவில், உடுக்கை, இடக்கை, செண்டை...... என ஏராளமான இசைக்கருவிகள் தோலால் ஆனதுதானே! இவையனைத்தும் பார்ப்பனர்களால் வழிபாடு நடத்தும் கோவில்களிலும், பார்ப்பன சடங்குகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனவே! பின்னர் ஏன் பறை மட்டும் விலக்கி வைக்கப்பட்டுள்ளது?

பறை என்றால் சொல் என்றுதான் பொருள். ஆனால் அது மென்மையின் உச்சரிப்பல்ல. ஓங்கி அறைந்து சொல்லுதல் என்பதே பறையின் குறியீடு. அது செய்தி அறிவித்தலுமாகும். பறை கற்காலம் முதல் தகவல் தொடர்பு சாதனமாக இருந்திருக்கிறது. கற்காலத்தில் யாருக்கு யார் தகவல் பரிமாறினார்கள்? வேட்டையாடி உயிர்வாழ்ந்த இனக்குழுவுக்குள் பரிமாறிக்கொள்ள என்ன தகவல் இருந்திருக்கும்? ஒரு இனக்குழுவின் வாழ்வாதார நிலைமைகளுக்குள் இன்னொரு இனக்குழு தலையிட்டிருக்கும். கடும் மழை - வெயிலென இயற்கையோ, பலம்வாய்ந்த மிருகமோ அச்சுறுத்தியிருக்கும், பட்டினித்துன்பமோ - சாவுகளோ அச்சுறுத்தியிருக்கும், எல்லாவற்றையும் வென்றதாலோ அல்லது வெல்வதற்கோ அவர்கள் இயற்கையிடமும், இறைவனிடமும் முறையிட வேண்டியிருந்திருக்கும். இப்படி அனைத்தையும் பூமியதிர சொல்வதில் பறை மிகப் பெரிய பங்காற்றியிருக்கிறது.

பறையடித்து சொந்த மக்களை அழைத்திருக்கிறார்கள். பறை கொண்டே வழிப்பட்டிருக்கிறார்கள். பறையுடனே எதிரிகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். இந்த பறைதான் பின்னர் போர்முரசாகவும் வெளிப்பட்டிருக்கிறது. கொண்டாட்டமோ, கொதிநிலையோ பறை அடிப்பதோடு நிற்கவில்லை, அது ஆட்டத்தோடும் இணைந்தேயிருக்கிறது. அதுவே பறையாட்டம் என்றிருக்கிறது. ஆட்டமும், தாளமும் பாட்டின்றி இருந்திருக்குமா? அந்தப் பாடல்கள் என்னவானது?

அதைத்தான் கண்டறிய வேண்டும். வரலாறுகள் அனைத்தும் பாடல்களாக, கலை - இலக்கியங்களாகத்தான் பதியப்பட்டிருக்கிறது.

இதுநாள்வரையிலும் இவ்வுலகில் மனிதகுலம் உருவாக்கியிருக்கும் அனைத்துமே இயற்கையுடனான மனிதனின் இடைவிடாத போராட்டங்களின் விளைவினால் உண்டானவைகளே ஆகும். அது நம்முன் அறிவியல் கண்டுபிடிப்புகளாக.. கலை-இலக்கிய.. தத்துவங்களாக பரந்து விரிந்து கிடக்கின்றது. இதில் இசையும், பாடல்களும் அடக்கம். பண்டைய இனக்குழு காலக் கட்டங்களிலிருந்து தற்போதுள்ள நவீன காலகட்டம் வரையிலும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு வகைப்பட்ட மக்கள் சமூகங்கள் தங்களது ஒவ்வொரு சிறிய மாற்றங்களையும் இசைக் கருவிகளின் வாயிலாகவும், பாடல்கள், வழக்காறுகளின் வாயிலாகவும் பதிவு செய்தே கடந்து வந்திருக்கின்றன என்று சொன்னால் அது மிகையல்ல. இப்படிப் பதியப்பட்ட பாடல்களைக் கண்டறிந்தால் பார்ப்பனியம் பறையை விழுகிய நிலையறியலாம்.

இதுநாள்வரையிலான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட வடிவங்களில் அனைத்திலும் இசையின் பங்கு அளப்பரிய அடங்கியுள்ளது.அதிகார வர்க்கங்கள் திணிக்கும் அடக்குமுறைக்கெதிராகவும், பண்பாட்டு அழித்தொழிப்பிற்கெதிராகவும் தங்களது கலாச்சார மேன்மையை உயர்த்தி பிடிக்கும் வகையிலும், அதிகாரத்தின் கொடூரமான முகத்திற்கெதிராக உண்மையை உரக்கப் பேசும் விதத்திலும்.. ஒரு வடிவம் என்ற முறையில் அவர்கள் இசையை வரலாறு நெடுகிலும் பயன்படுத்தியே வந்திருக்கின்றனர்.

அப்படி பார்க்கும்போது இசையானது வெறுமனே கருவிகள் சார்ந்த ஒன்றாகவோ, பொழுதுபோக்கு சார்ந்த ஒன்றாகவோ அல்லது மூளையை மழுங்கடிக்கும் தேவாலய இசைப் போன்றோ.. தேவார இசைப் போன்றோ நம் கண்களுக்கு தெரிவதில்லை. அவைகள் உழைக்கும் மக்களின் வாழ்க்கையை,உணர்ச்சிகளை துயரத்தை, மீட்சியை வெளிப்படுத்தும் ஆகச்சிறந்த அனுபவமாகவே நம் கண்களுக்கு தெரிகிறது. அவர்களின் ஆதிகால சடங்கு, சம்பிரதாய கலை வடிவங்களிலிருந்து நாட்டுப்புற பாடல்கள் வரை அதைத்தான் பெரும்பாலும் நிரூபித்தும் காட்டுகிறது.

இங்கே இந்தியாவிலோ அல்லது இன்னும் சுருக்கமாக சொன்னால் தமிழகத்தில், மேலே சொல்லப்பட்டது போலவே ஒடுக்கப்பட்ட மக்களின் இசைமரபு பல்வேறு காலகட்டங்களில் தன்னை பல்வேறு வழிகளில் அதிகாரத்திற்கெதிராக வெளிப்படுத்திக் கொண்டே வந்துள்ளது. அதிலும் உழைக்கும் மக்களுக்கான இசையை உள்வாங்கிக் கொண்டு அதை தனக்கேற்றது போல் மாற்றி.. அதிலிருந்து அம்மக்களை ஒதுக்கி வைத்தும் அல்லது அந்த இசையை இழிவாக்கி.. அதை தீண்டத்தகாததாக மாற்றியும் பார்ப்பனியம் செய்த கொடுரங்களுக்கு எதிராக அது செயல்பட்டுள்ளது..

மார்க்ஸின் மொழியில் சொன்னால், "இயற்கையின் மன்னனான மனிதனை ஹனுமனான குரங்கின் முன்னும், பசுவான சாபாலன் முன்னும் மண்டியிட வைத்து, துதிபாடி அதையே வணங்கும்படிச் செய்து தனது இழித்தன்மையைக் வெளிப்படுத்திக் கொண்ட" பார்ப்பனியத்திற்கு எதிராகவே அது கூடுதல் செயல்பட்டுள்ளது.

அப்படி பார்ப்பனியம் இழிவாக்கிய இசைக் கருவிகளில் பறையானது முதல் இடத்தைப் பிடிக்கிறது. எப்படி உழைக்கும் மக்களை இறந்த மாடுகளை புதைக்கவும், அதன் இறச்சியை உண்ணவும் வைத்து தீண்டாமையை கட்டிக் காப்பாற்றிய அதே பார்ப்பனியம்தான்.. தமிழர்களின் இசைக் கருவியை.. பறையை இறந்த வீட்டில் அடிக்கும் ஒன்றாகவும்.. இழவு செய்தியை அறிவிக்கும் ஒன்றாகவும் மாற்றி தனது ஆதிக்க வெறியை தக்க வைத்துக் கொண்டது எது ஒருவனின் சுயமரியாதை உணர்வை மேலோங்க வைக்குமோ அது மொழியானாலும் சரி.. இசையானாலும் சரி அதை இழிவுபடுத்துவதன் மூலம்.. அதை ஒதுக்கி வைப்பதன் மூலம் தன்னுடைய இழிவை உயர்வானதாக்கிக் கொள்வதில் பார்பனியத்திற்கு நிகர் அது மட்டும்தான்.

அந்த வகையில் இசையை விட இறப்பிற்கு அதிகம் பயன்பட்ட பறை தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதை உணர்வை மீட்டெடுப்பதற்கு பதில் அதைப் புதைக்குழியை நோக்கி தள்ளப் பயன்பட்டதுதான் வரலாற்றின் தலைகீழ் முரண்.. பறையை இறப்பிற்கோ, தண்டோரா போடுவதற்கோ பயன்படுத்த மாட்டோம் என இதுவரை எத்தனையோ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.. போராட்டங்கள் நடந்துள்ளன.. 1985ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தியதி பறையை இழிதொழிலுக்கு பயன்படுத்த மாட்டோம் என போராடிய காட்டுமன்னார்குடி அருகிலுள்ள கிராமத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.. அதில் பாண்டியன் என்கிற பட்டதாரி இளைஞர் கொல்லப்பட்டார்.

இன்றும் அரசின் அறிவிப்பை தண்டோரா போடுவதில் தாழ்த்தப்பட்ட மக்களே பெரும்பாலும் பயன்படுத்தப் படுகின்றனர்.. ஆதிக்க சாதியினரின் மிரட்டலுக்கு பயந்து இன்றும் பெரும்பாலான கிராமங்களில் பறை அடிக்கப்படுகிறது என்பது நீளும் துயரம்.

ஆனால் இப்படிப்பட்ட சூழல்களுக்கு நடுவிலும் நிலைமை கொஞ்சம் நம்பிக்கை ஊட்டுவதாக மாறியுள்ளதாகவே தோன்றுகிறது.. உண்மையான சமூக மாற்றத்திற்காக போராடும் புரட்சிகர இயக்கங்கள்.. அமைப்புகள் பல கலைக் குழுக்களை கட்டி அதில் பறையை முதன்மையான இசைக் கருவியாக மாற்றியுள்ளனர்..

ஆதிக்க சாதியின் அடக்குமுறைக்கு அடிபணிந்து கிடந்த பறை இப்போது அதை தகர்க்க பயன்படுவது கவனிக்கதக்கது. மாற்றத்திற்கான செய்தி பறை மூலம் இப்பொழுது அறிவிக்கப்படுகிறது.. ஆனால் சாதியை காப்பாற்ற பயன்பட்ட பறை வேறு.. அதை உடைக்க பயன்படுத்தும் பறை வேறு என்பதை அறியாத தலித்திய ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொண்ட சிலர் பறை முற்றிலும் அழித்தொழிக்கப்பட வேண்டிய ஒன்று கூறுவது மொன்னைத்தனமான வாதமாகும். ஆந்திரப் புரட்சிப் பாடகர் கத்தாரின் கைகளில் இருக்கும் பறையை விடவா வேறு ஒன்று ஆதிக்க சாதியின் குலையை நடு நடுங்க வைத்து விடப்போகிறது.

முடிவாக, இந்தியாவில் இப்போது மோடியின் காலம். இந்திய வரலாற்றை பிற்போக்காளர்கள் கையில் எடுத்துள்ள காலம். போராடுபவர்களை அவர்கள் கடலில் குதிக்க பரிந்துரை செய்கிறார்கள். இங்கு எல்லாவற்றிற்கும் மதச்சாயம் பூசப்படுகிறது. நாம் என்ன பேச வேண்டும்.. சிந்திக்க வேண்டும்.. உண்ண வேண்டும் என அவர்கள் தீர்மானிக்கும் காலம்..

தமிழகத்திலோ, அதே போன்று சிந்தனையுடைய தன்னை இந்துத்துவத்தின் பிரதிநிதியாக அறிவித்துக் கொண்ட ஜெயாவின் காலம். அவர்கள் நடத்தும் போராட்டங்கள்.. பொதுக்கூட்டங்கள் என அனைத்துமே மதவடிவில் நடக்கிறது.. பால்குடம் எடுப்பது.. யாகங்கள் வளர்ப்பது.. அலகு குத்துவது தொடங்கி அனைத்தும் காவிமயமாக மாறிவரும் காலம்..

இன்னொரு புறம் திரையிசையோ மக்களை கொஞ்சம் கூட சிந்திக்க விடாமல்.. கவர்ச்சியிலும்.. போதையிலும்.. வக்கிரத்திலும் அவர்களை தொடர்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில் இன்று பறை மட்டுமல்லாது.. உழைக்கும் மக்களின் பண்பாட்டு சிந்தனைகளை தூக்கிப் பிடிக்கும் அனைத்தையும் நாம் கலாச்சார தளத்தில் பயன்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

- பாவெல் சக்தி

Pin It