“கருணை என்னும் கதவுகள் திறக்கப்படவே!

அடைக்கப்பட அல்ல”

-           என்ற இந்த வரிகள் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விஷயத்தில் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

muslim prisonஇந்தியாவில் முஸ்லிம் இளைஞர்கள் வெளியில் இருப்பதைவிட, சிறையில் இருப்பவர்கள்தான் அதிகம் என்று ஒரு ஆய்வு கூறுகின்றது.

கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பில் பழங்குடியின மக்களைவிடவும் மிகவும் முஸ்லிம்கள் பின்தங்கிய நிலையில் இருக்கின்றார்கள் என்று சச்சார் கமிஷன் அறிக்கை கூறி, அதற்கு ஒரே தீர்வு இடஒதுக்கீடு தான் என்பதையும் தெளிவாகக் கூறினார் சச்சார்.

ஆனால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை சிறைச்சாலையில்தான் தருவோம் என்று அரசு கூறுகின்றது.

சிறையில் இருப்பவர்களுக்கு கருணை அடிப்படையில் விடுதலை வழங்குங்கள் என்று கூறும்பொழுது, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு மட்டுமல்ல, கருணை என்பதும் கிடையாது என்பதை அரசு ஒவ்வொரு வருடமும் நிரூபித்து வருகின்றது.

செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பத்து ஆண்டுகள் மற்றும் ஏழு ஆண்டுகள் கழித்த சிறைவாசிகளை விடுதலைச் செய்யக்கோரி முஸ்லிம் சமூகம் மட்டுமின்றி, மனித உரிமையை மதிக்கக்கூடிய ஒவ்வொருவரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஆனால், ஆளும் அரசோ முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு சிறிதளவும் செவிசாய்ப்பதில்லை. சிறை என்பது ஒரு மனிதனை ஒழுக்கமுள்ளவனாக மாற்றக்கூடிய ஒரு இடமாக இருக்க வேண்டும். ஆனால், இன்றைய சூழல் அப்படி இல்லை. அதிகளவில் மனநோயாளிகளை உற்பத்தி செய்யக்கூடிய இடமாக மாறுகின்றது.

சிறையில் இருக்கக்கூடிய ஒருவரின் மூலம், அவனுடைய ஒட்டுமொத்த குடும்பமுமே வெளியில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றது. தவறு செய்யும் ஒருவனை திருந்துவதற்காகத்தான் சிறைத்தண்டனையை தவிர, அவனை மனநோயாளியாக மாற்றுவதற்கு அல்ல என்பதை அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு மனிதனுக்கு அவனுடைய தவறுக்கு ஏற்றவாறு தண்டனை வழங்கி, ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளில் அந்தத் தவறை அவன் உணர்ந்தபிறகு விடுதலை செய்வது என்பதுதான் அவன் மீது காட்டும் கருணையாகும். ஆனால், அதைக்கூட முஸ்லிம் சமூகத்துக்கு வழங்க முன்வருவதில்லை என்பதை அன்றாட நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

இந்த நாட்டுக்காக, நாட்டு விடுதலைக்காக தங்கள் சதவிகிதத்தை வி அதிகமாக உயிர்த்தியாகம் செய்த சமூகத்தின் வாரிசுகளுக்கு, தரப்படக்கூடிய இடமோ சிறைச்சாலை. அவர்களுக்கு வழங்கப்படக்கூடிய பெயரோ தீவிரவாதி. இதுதான் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை.

“இந்தியாவில் வாழும் முஸ்லிமாக இருந்தால் நீங்கள் சிறையில் இருக்கும் அபாயம் இரண்டு மடங்கு அதிகம். ஆளுங்கட்சி மதச்சார்பற்றது என்பது கூட முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தரவில்லை.” (இந்தியா டுடே வார இதழின் களஆய்வு அறிக்கை, டிசம்பர் 26,2012)

இந்திய தேசத்தின் விடுதலைக்காக, தன் தேகத்தையே அர்ப்பணித்த காந்தியடிகள் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்வு நாம் மறந்துவிட முடியாது. ஆனால், இந்த பயங்கரவாத செயலைச் செய்தவர்கள் முஸ்லிம்கள் அல்ல. ஆனாலும், இன்று முஸ்லிம்களுக்கு சுதந்திரம் இல்லை.

அரசியல் தளத்தில் தன்னுடைய ஆளுமைத் தன்மையை பறைசாற்றி வந்த இந்திரா காந்தியை சுட்டுப் பொசுக்கினார்கள். இந்த தீவிரவாதச் செயலை செய்தவர்கள் முஸ்லிம்கள் இல்லை. ஆனாலும், இங்கு முஸ்லிம்களுக்கு நீதி இல்லை.

இந்திரா காந்தியின் அருமைப் புதல்வரும், இந்தியாவின் இளம் பிரதமருமான ராஜீவ் காந்தியை சிதறடித்துக் கொன்றனர் தீவிரவாதிகள். இந்தச் செயலை செய்ததிலும் முஸ்லிம்களுக்கு சம்மதம் கிடையாது. ஆனாலும், முஸ்லிம்களுக்கு இன்று இந்தியாவில் பாதுகாப்பு கிடையாது.

இப்படி, இந்தியாவின் அரசியல் தலைவர்களையும், முக்கியமானவர்களையும் கொன்றொழித்தவர்கள் இன்று மதிக்கப்படுகிறார்கள். இந்த நாட்டின் விடுதலைக்காக தன்னுயிரை நீத்து, சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த வாரிசுகளின் நிலைமை இன்று மிகவும் மோசமான நிலைக்கு சென்றுக் கொண்டிருக்கின்றது. அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்வதிலும் அரசு தன்னுடைய மனசாட்சியை திறக்க மறுக்கிறது.

சட்ட நூல்களின்படி ஆயுள் தண்டனை எனப்படுவது ஆயுள் முழுவதற்குமானதாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதே சட்டத்தில்தான் பொது மன்னிப்பிற்கான வழிவகையும் செய்யப்பட்டுள்ளது.

எந்த மனிதாபிமானத்தின் அடிப்படையில் சட்டம் பொது மன்னிப்பிற்கு வழிவகை செய்கிறதோ, அதே அடிப்படையில்தான் 7 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணைக் கைதிகளாக இருக்கும் முஸ்லிம் சிறைக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முஸ்லிம்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாள் விழா

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் வந்துவிட்டாலே முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்கான போராட்டங்களும், கோரிக்கைகளும் முஸ்லிம் அமைப்புகளிடம் இருந்து தொடங்கி விடும். அரசிடம் விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் பிரதான கோரிக்கையாக இருக்கும்.

 அதுபோல் தான் இந்த வருடமும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் விழாவை தமிழக அரசு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் குடும்பங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம் இளைஞர்கள் விசாரணைக் கைதிகளாக இன்றும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள் என அரசு நமக்கு கருணை காட்டும் என்ற எதிர்பார்ப்புடன் வருடா வருடம் தங்களுடைய கோரிக்கைகளை ஆட்சியாளர்களிடம் முறையிட்டு வருகின்றனர்.

ஆனால், ஒவ்வொரு வருடமும் அரசு தன்னுடைய பாரபட்சத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. அது கடந்த தி.முக. ஆட்சியாக இருந்தாலும் சரி, நடந்து கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் சரி, இரண்டும் முஸ்லிம்களின் விஷயத்தில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டில் தான் இருக்கின்றார்களே தவிர, சிறிதும் மாற்றம் இல்லை.

தண்டனை வழங்குவது ஒருவனுக்காக இருந்தாலும், அந்தக் கஷ்டத்தை அனுபவிப்பது அவனுடைய ஒட்டுமொத்த குடும்பம் தான் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியத் திருநாட்டில் முஸ்லிம்களாக வாழ்வது என்பது கடினமான ஒன்று தான் என்பது தற்போது நடைபெற்றுவரும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நிரூபித்து வருகின்றன. முஸ்லிம்கள் என்றால் அனைத்து விஷயத்திலும் பாரபட்சம் என்பதை மத்திய அரசும், மாநில அரசுகளும் உண்மைப்படுத்தி வருகின்றன.

ஒவ்வொரு நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் சிறைகளில் இருப்பவர்களை நல்லெண்ணத்தின் அடிப்படையில் விடுதலை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. தவறு செய்து சிறையில் இருப்பவர்கள் திருந்துவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

அந்த அடிப்படையில் சிறைவாசிகள் அவர்கள் இருக்கும் காலங்களில் நடவடிக்கைகளில் மாற்றம், ஒழுக்கத்தில் முன்னேற்றம், தவறை உணர்ந்து ஒரு புதிய வாழ்க்கை முறையை எதிர்பார்த்தல், தன்னுடைய தவறை உணர்தல் என்ற அடிப்படையில் விடுதலை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல், நாட்டில் முக்கியமான தலைவர்களின் பிறந்த நாள், நாட்டின் முக்கிய விசேஷமான நாட்களில் சிறைகளில் இருப்பவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்வது வழக்கம். அதேப்போன்று தான் தமிழகத்திலும் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்தாள் அன்று சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

2009ம் ஆண்டில் 10 பேர் விடுதலை

2009ம் ஆண்டில் 10 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதிலும் முஸ்லிம்கள் ஒருவர்கூட இல்லை. முஸ்லிம்கள் வழக்கம் போல் ஏமாந்து போயினர்.

2010ம் ஆண்டில் 13 பேர் விடுதலை

2010ம் ஆண்டு அதே தி.மு.க ஆட்சியில் 5 வருடங்கள் கழிந்த சிறைக்கைதிகள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதிலும் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை. வழக்கம்போல் தி.மு.க. அரசு தன்னுடைய பாரபட்சத்தை வெளிப்படுத்தியது. இதற்கெதிராக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகள் பல்வேறு சமூகத் தலைவர்களை அழைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியது.

அ.தி.மு.க. பதவியேற்பு

இப்படி தி.மு.க அரசு முஸ்லிம்களுக்கு தன்னுடைய பாரபட்சத்தை காட்டியது. அடுத்து 2011ம் ஆண்டு அ.தி.மு.க அரசு பொறுப்பேற்றது. அ.தி.மு.க. அரசும் முஸ்லிம் சிறைவாசிகளின் விஷயத்தில் மூன்று ஆண்டுகளும் எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்த வருடம் அ.தி.மு.க. அரசு 32 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி லாசர் என்பரை கருணை அடிப்படையில் விடுதலை செய்துள்ளது வரவேற்கக்கூடிய விஷயமாகும்.

இந்த அரிய தருணத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பல ஆண்டுகளாக சிறையில் வாடிவரும் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையையும் பரிசீலிக்க வேண்டும்.

சிறைச்சாலை என்பது சம்பந்தப்பட்ட மனிதர்களை நெறிப்படுத்திடவும் அதேபோல் அவர்கள் திருந்தி சமூகத்தோடு வாழ்ந்திட வழி செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலும் அமைந்திட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.

அந்த அடிப்படையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறைகளில் வாடிவரும் முஸ்லிம் சிறைவாசிகளையும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் விடுதலை செய்ய ஆவண செய்ய வேண்டும்

அதுமட்டுமல்லாமல், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி உட்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

சிறை இன்றைக்கு மன நோயாளிகளை அதிக அளவு உற்பத்தி செய்யக்கூடிய இடமாக இருந்து வருகிறது. தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல என்ற நிலையை ஏற்படுத்தி விடாமல், சிறைவாசிகளின் விடுதலை விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பாரபட்சமில்லாமல் முடிவெடுக்க வேண்டும். தமிழக அரசின் அறிவிப்பை எதிர்பார்த்த வண்ணம் அவர்களுடைய குடும்பங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் அரசு மனம் இரங்க வேண்டும் என்பதே பொது சமூகத்தின் எதிர்பார்ப்பாகும். 

- நெல்லை சலீம்

Pin It