தமிழகம், அதன் மக்களுக்குத் தெரியாத, ஆனால் அச்சுறுத்துகின்ற இக்கட்டில் இருக்கின்றது.

water privatization 233கொள்ளை போகும் அதன் வளங்களைப் பற்றி மக்கள் அறிந்தும், அறியாமலும் இருக்கின்றனர். இதுவரை கொள்ளைபோன வளங்களைவிட அடுத்து கொள்ளை போக காத்திருக்கும் வளம் தான் நம்மை புரட்டி எடுக்கப் போகிறது.

இது வரையில்………

@ மலைகளை கல் பலகைகளாக மாற்றி ‘தொழில்வள்ர்ச்சி’ கண்டனர். அனுமதி இல்லாமலே மலையையே முழுங்கினார்கள். மலை முழுங்கிக்கு நடுவண் அரசு பாராட்டும் வழங்கியது. விழுப்புரம் மாவட்டம் 'குன்னம்' பகுதியின் கற்களே உலகில் விலை உயர்ந்தவை. கனமீட்டர் 800 அமெரிக்க டாலர் ஆகும். கிருஷ்ணகிரியில் கற்களை தனியாருக்கு விடக்கூடாது என்ற முந்தய அரசுகளின் முடிவும் இருந்ததாம். கணக்கில் வராமல் காணாமல் போன மலைகளின் மதிப்பு 10 லட்சம் கோடிக்கு மேல் ஆகும்.

@ தாது மணலை வெள்ளையர்கள் நமக்கு அதன் மதிப்பு அறியா காலத்தில் கொள்ளை கொண்டு போயினர். இன்று நாம் தேர்வு செய்த அரசியலாரே இந்த காரியத்தைச் செய்கின்றனர். காணமல் போன தாதுமணல் 12 லட்சம் கோடியாம். அவர்கள் அழித்த கடல் வளத்திற்குத் தான் கணக்கு இல்லை.

@ கடல், மலை, தாதுமணலுக்கு அடுத்தது ஆற்று மணல். அள்ள, அள்ளக் குறையாது என்று அடி மண் வரை சுரண்டி விடுகிறார்கள். தமிழகம் முழுவதுக்கும் ஒரே ஒருவர் தான் ஒப்பந்ததாரர். ஆட்சியளர்கள் மாறினாலும் ஆள் மாறாத அதிசயம். மாநிலத்தின் எந்த மூலையில் மணல் அள்ளினாலும் இவருக்கு கப்பம் வரும். ஊரைப் பிரித்து, கோஷ்டி உண்டக்கி, மோதலை வளர்த்து, தங்கள் மணல் கொள்ளையை கூசாமல் நடத்தும் கூட்டம். அரசும் காவல்துறையும் இவர்களுக்கு மக்களிடமிருந்து 'பாதுகாப்பு' அளிக்கும். மாலே தீவுக்கு கூட மணல் விற்கின்றனர். தண்ணீர் வராத ஆற்றில் மணல் இருந்து என்ன செய்யப் போகிறது? அள்ளி விற்றால் அடுத்த தேர்தலுக்கு ஆகும். 2000 ஆம் ஆண்டிலிருந்து கொள்ளை போகும் மணலின் மதிப்பு அடுத்து ஒரு 10 லட்சம் கோடியைத் தாண்டுகிறது.,

@ அடுத்து நிலம். விவசாயின் நிலத்தை 'தொழிற்சாலை'களுக்கு கொடுப்பதுதான் விவசாய தர்மம் என்கிறது நடுவண் அரசு; மாநில அரசோ 'ஆமாம் சாமி' போடுகிறது.. அதானியும் மற்றவர்களும் அவர்கள் விரும்பும் நிலத்தை வாங்கிக் கொள்ளலாம். வெள்ளைக்காரர்கள் விதித்தச் சட்டத்தை நடுவண் அரசும், நம் மாநில அரசும் விவசாயிகள் மீது திணிக்கப் பார்க்கின்றது. பாலஸ்தீனியத்தில் இஸ்ரேல் திணிக்கப்பட்டது போல. இனி நிலமும் சொந்தமில்லை - மாநிலமும் சொந்தமில்லை.

@ வற்றி கிடக்கும் ஏரிகளின் வண்டல் மண் இப்போது வாரியெடுக்கப்படுகிறது. ஏரியைத் தூர் வாருகிறோம் என்கின்றனர். முன்னாள் மணல் வியாபாரிதான் இந்நாள் மண் வியாபாரியாம். அணைகளை ஆழப்படுத்த அடுத்த ஒப்பந்தம் தயாராகும். விவசாயிக்குத்தான் தேவை வண்டல் மண். ஏரியோ, குளமோ, அணைகட்டுகளோ விவசாயிடம் கொடுத்தால் அரசுக்கு எந்த செலவும் இல்லாமல் தூர் வாரப்பட்டுவிடும். வண்டலின் தேவை வியாபாரிக்கு அல்ல.

@ அரியலுர் பகுதியில் சுண்ணாம்புப் படிமங்கள் நிறைய உண்டு. தமிழகத்தின் தனிச்சொத்து. இங்கே டால்மியாவிலிருந்து அரியலூர் வரை ஐந்து மிகப்பெரிய சிமெண்ட் நிறுவனங்கள் உள்ளன. இங்கேயும் லாரிகளில் சுண்ணாம்புக்கல் கடத்தப்படுகிறது.

@ நாட்டின் மொத்த பழுப்பு நிலக்கரி இருப்பு 39,897 மில்லியன் டன். தமிழகத்தில் மட்டும் 31,975 மில்லியன் டன் இருக்கிறது. நெய்வேலி மின்நிலையம் ஆண்டொன்றுக்கு 24.6 மில்லியன் டன் நிலக்கரியைப் பயன்படுத்தி 2615 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. இதில் பாதியளவுக்கே 1322 மெகா வாட் தான் தமிழகத்துக்கு. தண்ணீர் எங்கள் வளம்; தமிழகத்துக்குத் தரமாட்டோம் என்கிற கர்நாடகத்திற்கும், கேரளத்திற்கும் முறையே 419, 227 மெகாவாட் பங்கு வைக்கப்படுகிறது. ஆனால் தூத்துகுடி, வடசென்னை, மேட்டூர், வல்லுர், எண்ணூர் மின் நிலையங்களுக்கு வடமாநிலங்களிலிருந்து ஆண்டுக்கு தோரயமாக 23 மில்லியன் டன் நிலக்கரியை கடல் மூலம் கொண்டு வருகிறோம்.. இறக்குமதியாகும் கரி விலை டன் ரூ 1400 என்றால் கொண்டுவரும் கூலி ரூ2000 ஆகிறது. இதுதான் மின்சாரத்தின் விலையாக மாறுகிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் நடுவண் அரசு மின் உற்பத்தி 6,055 மெகாவாட். இதில் பாதியான 2,910 மெகாவாட்டை பிற தென் மாநிலங்களுக்கு கொடுத்து விடுகிறோம். மற்ற தென் மாநிலங்களிலிருந்து வெறும் 1,154 மெகாவாட் மட்டும் தான் நமது பங்காகப் பெறுகிறோம்.

@ எரிக் காற்று அரியவளமாகும். ராஜஸ்தானுக்கு அடுத்து தமிழகத்தில் தான் காவேரி மற்றும் வைகை ஆற்றுப்படுகையில் எரிக்காற்று கிடைக்கிறது. குறைந்த சுற்றுச் சுழல்பாதிப்பு, குறைந்த விலை, விரைவில் நிறுவ முடிந்தது, உடனே உற்பத்தி தொடங்க முடிந்தது என் பல வசதிகள் கொண்ட இந்த வளத்தில் 416 மெகவாட் அளவுக்கு தனியாரிடம் கொடுத்துவிட்டு 397 மெகாவாட்டைத்தான் மாநில அரசு பயன்படுத்துகிறது. இந்த தனியாரிடமிருந்துதான் யூனிட் ரூ 3.15 விலையுள்ள எரிக்காற்று மின்சாரத்தை யூனிட் ரூ6.40க்கும், ரூ5.50க்கும் அரசு வாங்குகிறது.

@ பழமை வாய்ந்த 44,000 சதுரக் கிலோமீட்டர் தஞ்சை உணவுச் சமவெளியை அழித்துவிட்டு மீத்தேன் எரிக்காற்று எடுக்கப்போகிறார்கள். வரப் போகும் தேர்தல்தான், தற்போதைக்கு இதனை தள்ளி வைத்துள்ளது. மக்களிடம் ஓட்டு வாங்கியவுடன் இது திரும்பவும் வரும். அதனால்தான் மாநில அரசு நிலப்பறிப்புச் சட்டத்தை ஆதாரிக்கிறது. சாமிநாதன் அறிக்கை இன்னமும் வரவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

@ கடற்கரையை அழித்து தனியார் மின் உற்பத்திநிலையங்கள், அணு உலைகள் கடலின் வளத்தை காவு வாங்குகின்றன.

@ அற்புதமான மேற்கு தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ திட்டம் மூலம் அணுக் கழிவை கொட்டபோகிறார்கள். 1967 ம் ஆண்டிலிருந்து கோலர் தங்கவயலில் 2217மீட்டர் ஆழத்தில் இருந்த நியூட்ரினோ திட்டம் ஏன் கைவிடப் பட்டது? "தங்வயல் மூடப்பட்டதால் கைவிட்டோம்" என்கின்றனர். தங்கவயல் கைவிடப்பட்டால் நியூட்ரினோ திட்டத்திற்கு மிகவும் சாதகம் தானே!! நியூட்ரினோவின் அணுக் கழிவு ஏற்படுத்திய கதிர்வீச்சுதான் கோலர் தங்க வயலை மூடவைத்திருக்கும் என்பதுதானே சரியாக இருக்க முடியும்.

@ எஞ்சிய கொங்கு மண்டலத்தின் நடுவில் கெயில் குழாய் பதிக்கப்போகிறது.

இதில் எதனையும் மாநில அரசு தடுத்து நிறுத்தாது; தலையிடாது. ஏனெனில் இவர்கள் இதனின் பங்குதாரர்கள்.

இவைகள் இயற்கை வளங்கள்!!!

மனித வளம் வேறு விதமானது!!! கல்வி, சுகாதாரம் இவை இரண்டும் தான். இவைகள் தனியாரின் லாப ஆசைக்காக விற்கப்பட்டு விட்டன.

மலைகள், கடல், மணல், தாதுமணல், வண்டல் மண், சுண்ணாம்புக் கல், நிலம், நிலக்கரி, எரிக்காற்று, மின்சாரம், மக்களுக்கான கல்வி, சுகதாரம் எல்லாம் விற்றது போதாது என இறுதியாக கொள்ளை போகப் போவது 'தண்ணீர்'. ஏற்கனவே தண்ணீர் விற்பனைக்கான பொருளாக மாநில அரசு மாற்றிவிட்டது. வெறும் 22 பைசா செலவாகும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு அரசே ரூ10 வசூலிக்கிறது. தண்ணீரை வாங்கித்தான் ஆக வேண்டுமென்ற சித்தாந்தத்தை நடுத்தர மக்களிடம் விற்று நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. எஞ்சி நிற்கும் ஏழைகளின் குரலை அரசு எளிதாக நெறித்து விடும்.

தண்ணீர் கூட வாங்க முடியாதவன் இருந்தால் என்ன? இறந்தால் என்ன? என்று சந்தைப் பொருளாதாரம் கேள்வியையும் எழுப்பும். ஒவ்வொறு சொட்டு நீரும் இனி பணம் அதுவும் தனியாருக்கான பணம். முழுவீச்சில் இந்த வணிகம் தொடங்கிவிட்டால் கொள்ளை போகும் வளங்களின் மதிப்பை நாம் கணக்கிடவே முடியாது. கர்நாடகத்தில் முன்னதாகவே இந்த பிரச்சனை பெரிய மக்கள் போராட்டத்தை வரவழைத்து விட்டது.

2016 தேர்தலுக்குப் பின் நடக்கபோகும் இந்த விளையாட்டு நம்மைப் புரட்டி போட்டுவிடும். போராடினால் 'நக்சாலைட்', 'மாவோயிஸ்ட்', 'இஸ்லாமிய தீவிரவாதி' என கைது செய்யும். அல்லது 'திருடர்கள்' என சுட்டுக் கொல்லும். எதுவும் இதுவரை நடக்காதது அல்ல.. புதிதும் அல்ல.

தண்ணீருக்கான போரட்டம் தான் மக்களின் கடைசிப் போரட்டமாகவும் இருக்கும். தண்ணீர் தவிர்த்து காணாமல் போன மக்களின் சொத்தான வளங்களின் தோராய மதிப்பு 30 லட்சம் கோடி எனக் கணக்கிடலாம். தமிழகத்தில் உள்ள 7.76 கோடி மக்களுக்கும் இதனை பங்கிட்டால் தலைக்கு 3.87 லட்சமாகும். குடும்ப அட்டை மற்றும் மக்கள் தொகைக் கணக்குப் படி குடும்பத்திற்கு நால்வர் என்றாகிறது. ஒவ்வொறு குடும்பத்திற்குமான சொத்து 15.5 லட்சமாகும். (தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைகள் 1.9829 கோடியாகும். இதில் உணவுப் பொருள்கள் வாங்குவோர் 1.8703 கோடியாகும்)

ஆனால் அரசு மக்களுக்கு ஆண்டு தோறும் செய்யும் செலவு எவ்வளவு?? பொது விநியோகமாக உணவுப் பொருள்களுக்கு 5,300 கோடியை 1.8703 கோடி குடும்ப அட்டைகளுக்கு செலவிடுகிறது. ஒருநாளைக்கு ஒருவரின் உணவுக்கு ரூ1.94 செலவிடுகிறது. பெண்கள் நல்வாழ்வுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் (876+ 2,390) 3,266 கோடி.
ஒருவருக்கு ஒருநாளைக்கு ரூ1.19

சுகாதாரத்துறைக்கு 8174 கோடி
ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ2.99

பள்ளிக் கல்விக்கு 17,731 கோடி -1,33,65,140 மாணவர்கள். ஒரு மாணவனுக்கு ஒரு நாளைக்கு ரூ 36.34. ஒரு குடும்பத்தில் ஒரு மாணவன் என்பதால் சமபங்கிட்டில் 36.34/ 4 = ரூ9.08. ஒரு குடும்பத்தில் நால்வர் என்றும் 1.8703 கோடி குடும்ப அட்டைகளுக்கு கணக்கிடப்பட்டுள்ளது.

புள்ளி விபரங்கள் மானியக் கோரிக்கையிலிருந்து பெறப்பட்டுள்ளன. ஆக அரசு ஒவ்வொருவருக்கும் உணவுக்காக, கல்விக்காக, மருத்துவத்திற்காக செலவழிக்கும் பணம் (1.94 + 1.19 + 2.99 + 9.08) = ரூ 15.20

ஆனால், 'டாஸ் மாக்' அரசின் வருமானம் 32,000 கோடி. இது மொத்த விற்று வரவில் 35%மாகும். டாஸ்மாக்கில் விற்றுவரவு 91,428 கோடியாகும். ஒவ்வொறுவரும் ஒரு நாளைக்கு செலவிடும் பணமாக கணக்கிட்டால் ரூ. 32.28 ஆகிறது. அரசு 15.2 ரூபாய் செலவழித்துவிட்டு, 32.28 ரூபாயை 'குடிமக்களி'டமிருந்து வசூலித்தும் விடுகிறது.

ஆனால், அரசு இட்லி ஒரு ரூபாய், சப்பாத்தி மூன்று ரூபாய், பொங்கல் மூன்று ரூபாய் என்றும், கலர் டிவி, லாப் டாப், மிக்சி என்றும் விளம்பரம் செய்கிறது. ஆண்ட கட்சி, ஆளும் கட்சிக்கு இடையே உள்ள ஒப்பந்தமும் போட்டியும் அடுத்த ஐந்தாண்டு கொள்ளை உனக்கா? இல்லை எனக்கா? என்பதில் மட்டும்தான். நிச்சயமாக இதில் மட்டுந்தான்.

இரண்டு காபிக்கு சமமான ரூபாய்க்கு முழுத் தமிழகத்தையும் விலையாகக் கொடுத்துவிட்டோம். அதனையும் கூட 'குடிமக்களி'டம் இரு மடங்காக அரசு சாமர்த்தியமாக வசூலித்து விட்டது. நாம் என்ன செய்யப் போகிறோம்?

பாதிக்கு மேற்பட்ட மக்கள் 'டாஸ்மாக்' மயக்கத்தில் கிடக்கிறனர். இளைய சமுதாயம் 'தமிழ் சினிமா'வில் அடைக்கலமாகிவிட்டது. எஞ்சிய நடுத்தர மக்கள் விளம்பரத்திற்காகவே நடக்கும் ஊடகத்தில் தம் அறிவை வளர்க்க பாடுபடுகிறது. விற்பனைக் கல்வி, விற்பனை வைத்தியம், விளம்பர விற்பனை பொருள்கள் - இவை அனைத்திலும் மூழ்கிப் போய்விட்டது. இவர்களை நம்பித் தான் இத்தனை வணிகமும் நடக்கின்றன.

வெறும் 200 ரூபாய்க்கு மக்கள் ஆதரவை ஓட்டாக விலைக்கு வாங்குகிறார்கள். நல்ல லாபம் தரும் அரசியல் வியாபாரம்; களவு போனதோ தமிழகம். கையில் கிடைத்ததோ 'ப்ரூ காபி'க்கான காசு. எப்படி மீட்பது தமிழகத்தை?

- சா.காந்தி

Pin It