சாதி என்பது காலத்தாலும், சூழலாலும், தொழில் மாறுதலாலும் கூட மாற்ற முடியாத நிரந்தர சமூக அடிப்படை அடையாளமாக இன்று வரை இருந்து வருகின்றது. அரசியல் இயக்கங்கள், தன்னார்வ அமைப்புகள், சாதி மறுப்பு இயக்கங்கள், பார்ப்பனீய எதிர்ப்பு இயக்கங்கள் என எத்தனையோ இயக்கங்கள் பெரும் புயல்களாய் இந்தியாவை குறுக்கும், நெடுக்குமாய் சுழன்றடித்துக் கொண்டிருக்கும் சமகாலச் சூழலிலும் கூட சாதியின் தீவிரம் அகலவில்லை. தொழில் ரீதியான அதன் அடையாளங்களும் மாறிடவில்லை. ஒவ்வொரு சாதிக்கும் கொடுத்திருக்கின்ற சமூகத்தகுதி அல்லது தகுதியின்மை என்னும் தீராச்சான்று இன்றும் பெருமளவிற்கு மாற்ற முடியாதவையாகவே இருக்கிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்திய தாக்குதல்களும், தீண்டாமை வன்கொடுமைகளும் அதற்கெதிரான எதிர்ப்புக் குரல்களும் தொடர்ந்து நடந்த வண்ணமாய் இருந்து கொண்டிருக்கின்றது.

“சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றிலும் விசம் பரவட்டும்” என்றார் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள். தீண்டாமை வன்கொடுமைக்கு எதிராக சட்டம் இயற்றிய மாமேதையை இன்று சாதி இந்துக்கள் மத்தியில் வெறுத்து ஒதுக்கப்படுபவராக, தீண்டத்தகாதவராக திட்டமிட்டு அடையாளப்படுத்துகிறார்கள். அம்பேத்கர் என்னும் பெயரை தாழ்த்தப்பட்டவர்கள் குறிப்பிட்டாலோ அல்லது தாழ்த்தப்பட்டவர்களுக்காக இயங்குகின்ற அமைப்பின் பெயர்களோ, கட்சிக் கொடிகளையோ தாழ்த்தப்பட்டவர்கள் உயர்த்திப் பிடித்தால் அவர்களை கொலை செய்வதிலும், வன்புணர்ச்சியில் ஈடுபடுவதிலும் முனைப்போடு செயல்படுவதோடு மட்டுமின்றி ஒட்டுமொத்த கிராமத்தையே எரித்து நாசமாக்கி அம்மக்களின் பொருளாதாரங்களை சூறையாடுவதற்கும், சொத்துக்களை சேதப்படுத்துவதற்கும் சாதி இந்துக்கள் தயங்குவதில்லை.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் பரளிப்புதூர் கிராமத்தில் சுமார் 84 பறையர் குடும்பங்களும், 600 முத்தரையர் குடும்பங்களும் இருந்து வருகின்ற சூழலில் நடக்கவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக தாழ்த்தப்பட்ட மக்கள் சார்ந்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கொடியினை அம்மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள நீர் தேக்கத் தொட்டியின் மீது கட்டிய மூன்று நாட்களுக்குப் பிறகு முத்தரையர் சிங்கச் சின்னம் பொருத்திய முத்தரையர் சாதிச் சங்கக் கொடியினை தாழ்த்தப்பட்ட மக்கள் பகுதியில் கட்டப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி மீதே கட்டினார்கள். மேலும் சாதி இந்துக்களே அவர்கள் கொடியின் மீது செருப்பினைக் கட்டி தொங்கவிட்டதோடு தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராக பிரச்சினையை ஏற்படுத்த காத்துக் கொண்டிருந்தார்கள்.

பறையர் சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துவார்டு உறுப்பினர் பஞ்சுவிடம் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் நல்லியப்பன் விடுதலைச் சிறுத்தைகள் கொடியை அவிழ்த்துவிடுங்கள் என்று எச்சரித்துச் சென்ற சிலமணி நேரத்திற்குள் பரளிப்புதூரைச் சுற்றியிருந்த முத்தரையர் கிராமங்களுக்கு சாதிசங்கக்கொடி அவமதிக்கப்பட்டதாகக் செய்தி பரப்பப்பட்டு 06.02.2011-ந் தேதி இரவு 7 மணியளவில் முத்தரையர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதோடு 15 வாகனங்களில் சுமார் 300 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல், கம்பு, கடப்பாரை ஆகிய ஆயுதங்களோடு பறையர் குடியிருப்பிற்குள் நுழைந்து ஓட்டுவீடுகளையும் கான்கிரீட் வீடுகளையும் அடித்து நொறுக்கினர். கூரைவீடுகள் பெட்ரோல் ஊத்தி எரிக்கப்பட்டன. வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும், சைக்கிள்களும் கொளுத்தப்பட்டன. வீடுகள்தோறும் பாத்திரங்கள், டிவி. பீரோ, கட்டில்கள் உடைக்கப்பட்டன. விடுதலைச் சிறுத்தைகளின் கொடிக்கம்பம் இரண்டாக உடைக்கப்பட்டது.

ஆண்கள் இல்லாத வீடுகளில் நின்றிருந்த தாழ்த்தப்பட்ட பெண்களிடம் முத்தரையர் சமூகத்து ஆண்கள் நிர்வாணமாக நின்று ஆபாசமாகப் பேசியதோடு தவறாக நடப்பதற்கும் முயற்சி செய்துள்ளார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டு நாட்களாகியும் எந்தவித நிவாரணமும் அளிக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதல் நடத்திய 300க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. SC/ST Act (1989) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்படவில்லை.

தாழ்த்தப்பட்டோரிடம் சாதிஇந்துக்கள் எதைச் செய் என்று சொல்கிறார்களோ அதை செய்யாமலிருப்பதும், எதை செய்யக்கூடாது என்று சொல்கிறார்களோ அதைச் செய்வதும் சமகாலச்சூழலில் தாழ்த்தப்பட்டோரிடையே எதிர்ப்புணர்வாக வெளிப்பட்டு வருகின்றது. ஆகையால் தாழ்த்தப்பட்ட மக்கள் சாதிஇந்துக்களை எதிர்த்து நிற்கும்போதும், எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் போதும் அல்லது சாதிஇந்துக்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் போதும், சாதிஇந்துக்கள் தாங்கிக்கொள்ள முடியாமல் எதிர்ப்பவர்களையும், செயல்படுகிறவர்களையும், கொலைசெய்யத் துணிவதோடு அவர்களது சொத்துக்களை சூறையாடவும் தயங்குவதில்லை.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சாதி குறித்து கூறிய வார்த்தைகள் இன்றைய சூழலிலும் எவ்வளவு பொருத்தமுடையதாக உள்ளதென்பதை சமீபத்தில் நடந்த வன்முறை சாட்சியாக நிற்கிறது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம் சாலைமரைக்குளம் கிராமத்தில் 170 தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பறையர் குடும்பங்களும், 600 அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களும், இசுலாமியர், கோனார், நாடார், மருத்துவர், வண்ணார் போன்ற சமூகத்தினர் மிகக்குறைவான எண்ணிக்கையிலும் வாழ்ந்து வருகின்றார்கள். இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் கிறித்தவர்களாகவும், குறைவான எண்ணிக்கையில்இந்துக்களாகவும் வாழ்ந்து வருகின்றார்கள்.

இங்கு சாதி தொடர்பான பெரும் மோதல்களும், வெளிப்படையான பிரச்சினைகளும் இதுவரையிலும் நடக்கவில்லை என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிடமுடியாது. அவ்வப்போது இரு சமூகத்தினருக்கும் இடையே சிறுசிறு பிரச்சினைகள் எழும்பி கலவரமாய் மாறுவதற்குள் தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள் தாழ்த்தப்பட்ட மக்கள். அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்த திருமதி.பழனிச் செல்வி என்பவர் தான் சாலைமரைக்குளம் பஞ்சாயத்து தலைவர் ஆவார். இவரது கணவர் ராம்பிரசாத். தனது மனைவி பஞ்சாயத்து தலைவர் என்பதனை ஆயுதமாகக் கொண்டு பினாமியாக செயல்பட்டு வரும் இவர் தாழ்த்தப்பட்ட மக்களை பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் மேலெழும்பவிடாமல் தொடர்ந்து அடக்குமுறையை ஏவிவிடுவதோடு சாதி ரீதியான ஒடுக்குதல்களையும் நிகழ்த்தி வருகிறார்.

கடந்த 05.02.2015-ந் தேதியன்று தங்கதுரை மகன் கார்த்திக் என்பவருக்கும், அய்யாவு மகள் விமலாதேவி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மேற்படி திருமணம் நிகழ்ச்சிக்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பிளக்ஸ் பேனர் அடித்து ஊரின் முகப்பிலேயே வைக்கத் திட்டமிட்டிருந்தார்கள். ஊரின் முகப்பு என்பது காலனிக்குள் நுழையும் பகுதியாகும். அதற்குமுன் பிளக்ஸ் பேனர் வைப்பதற்காக காவல்நிலையம் சென்று அனுமதி கடிதம் கொடுத்துள்ளார்கள். காவல் ஆய்வாளரோ நாங்கள் அனுமதி கொடுப்பதைவிட நீங்கள் ஊர் பிரசிடென்டின் கணவர் ராம்பிரசாத் அவர்களிடம் அனுமதி வாங்கிவிட்டு பிளக்ஸ்பேனரை வைக்குமாறு அனுப்பி வைத்துள்ளார்கள். இங்கு காவல்துறையும் ராம்பிரசாத்தின் கைப்பொம்மைகளாக இருப்பதோடு, சாதி இந்துக்களுக்கே ஆதரவாக இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

மேற்படி இளைஞர்களும் காவல்ஆய்வாளர் சொன்னதற்கு மறுப்பு தெரிவிக்காமல் ராம்பிசாத்தை சந்தித்து அனுமதி கேட்டபோது திருமணத்திற்கு முதல் நாள் மாலை 4 மணிக்கு வைத்து மறுநாள் நான்கு மணியளவில் பேனரை எடுத்துவிடுமாறு உத்தரவு போட்டுள்ளார். அதன்படியே திருமணத்திற்கு முதல் நாள் மாலை நான்கு மணியளவில் ஊர் எல்லையில் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கும் பகுதிக்குச் செல்லுகின்ற பாதையில் தான் பிளக்ஸ் பேனரை வைத்துள்ளார்கள். திருமணம் நடந்து முடிந்ததும் பிளக்ஸ் பேனரை அவிழ்ப்பதற்காக நின்று கொண்டிருந்த இளைஞர்கள் வினோத்குமார் மற்றும் ரேவிந்த் மீது ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் பெண்கள் உள்பட ஒன்றாகக்கூடி விளக்குமாறாலும், கம்பாலும் அடித்து கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்கள். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் மேற்படி இளைஞர்கள் புகார் கொடுத்துள்ளார்கள்.

சம்பவத்தை கேள்விப்பட்டு 16.02.2015ம் தேதி 4.00 மணியளவில் காரியாப்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்டாச்சியர் தலைமையில் வருவாய் வட்டாச்சியர், நரிக்குடி காவல் ஆணையாளர், அ.முக்குளம் காவல் சார்புஆய்வாளர், மண்டல துணை வட்டாச்சியர், முடுக்கன்குளம் காவல் சார்புஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இரண்டு சாதியிலும் பத்து, பத்து பேர் சமாதானக்கூட்டத்தில் பங்கேற்கும்படி கூறியுள்ளார்கள். இருபிரிவினரும் அமர்ந்து பேசுகையில் ஆதிக்கசாதியைச் சேர்ந்த பிரதிநிதிகள் இனிமேல் நாங்கள் எந்தவித பிரச்சினையும் செய்யமாட்டோம் என்று மன்னிப்பு கேட்பது போல் கேட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராக சில நிபந்தனைகளையும் வைத்துள்ளார்கள்.

(1) திருமணத்தின் போது பொது இடங்களில் பிளக்ஸ்பேனர் வைக்கக்கூடாது, அப்படியே வைப்பதாக இருந்தால் அவரவர் வீட்டின் முன்பு அல்லது அவரவர்களின் பட்டா இடத்தில் தான் வைக்கவேண்டும். (2) இப்பிரச்சினை தொடர்பாக மீண்டும் புதிய பிரச்சினை எழாமலிருக்க வேண்டுமெனில் யாரெல்லாம் சாதி இந்துக்களுக்கெதிராக செயல்பட்டு வருகிறார்களோ அவர்களின் (தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள்) பத்து பெயரைக் குறிப்பிட்டு இனிமேல் எந்தப் பிரச்சினையிலும் மேற்படி இளைஞர்கள் தலையிடக்கூடாது, அவர்கள் தலைமையில் எந்த நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்தக்கூடாது என்று எழுதி அம்மனுவில் கையெழுத்து பெற்று வருமாறு கூறியுள்ளார்கள். மேற்படி நிபந்தனைக்கு ஆதிக்கசாதியினர் மட்டுமல்ல மேற்படி அரசாங்க அதிகாரிகளும் சம்மதம் தெரிவித்துள்ளது வெட்கக்கேடான செயலாகும்.

தாழ்த்தப்பட்டவர்களின் சார்பாக சமாதானக் கூட்டத்தில் பங்கேற்ற பத்து பிரதிநிதிகளும் சாதி இந்துக்களுக்கு ஆதரவாக சம்மதம் தெரிவித்து தீர்மானத்தாளை எடுத்துக்கொண்டு மேற்படி தீர்மானத்தில் குறிப்பிட்டிருந்த பத்து இளைஞர்களிடம் சென்று கையெழுத்திடுமாறு வற்புறுத்தியுள்ளார்கள். ஆனால் மேற்படி பத்து இளைஞர்களும் அம்மனுவில் கையெழுத்திட மறுக்கவே சமாதானக்கூட்டம் பாதியில் நின்றுவிட்டது. சாதிஇந்துக்கள் நினைத்தது நடக்காமல் போக இனியும் இவர்களை விட்டுவைத்தால் நாம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தமுடியாது என்கிற சாதிவெறியில் மேற்படி சாதிஇந்துக்கள் ஒன்றாகக் கூடி ஊர்க்கூட்டம் போட்டு பறையர் சமூகத்தினர் மீது தாக்ககுதல்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள்.

மறுநாள் 17.02.2015 அன்று காலை வழக்கம்போல் சாதிஇந்துக்கள் குடியிருக்கும் பகுதியிலுள்ள டீக்டையில் ஜெயராஜ் மற்றும் பால்ராஜ் ஆகிய இருவரும் தேனீர் குடிப்பதற்காக சென்றுள்ளார்கள். டீக்கடையில் தேனீர் கொடுக்க மறுத்துவிட்டார்கள். எதற்காக நமக்குத் தேனீர் கொடுக்க மறுக்கிறார்கள் என்பது அப்போது அவர்களுக்குப் புரியவில்லை. பக்கத்து ஊர்களுக்கு வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் பேருந்தில் ஏற முயற்சிக்கும் போது பேருந்தில் ஏறவிடாமல் தடுத்துள்ளார்கள். பேருந்தில் ஏறியவர்களை இருக்கையில் அமரவிடாமல் தடுத்து நிறுத்தியதோடு தாக்குதல் நடத்துவோம் என்றும் மிரட்டியுள்ளார்கள்.

இதேபோல் நல்ல தண்ணீர் குடிக்கக்கூடாது, ரேசன் கடைக்கு வரக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பெரும்பாலும் சாதிஇந்துக்கள் குடியிருக்கும் பகுதியில் தான் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறது அரசாங்கம். ஊருக்குப் பொதுவான இடத்தில் வைத்திருந்தாலும் அதை ஆதிக்கம் செய்யக்கூடியவர்கள் சாதி இந்துக்களாகவே இருக்கிறார்கள். அதனால்தான் சாலைமரைக்குளம் கிராமத்திலும் சாதிஇந்துக்கள் பறையர் சமூகத்தினருக்கு எதிராக செயல்பட்டுள்ளார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பறையர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் காவல்நிலையத்திற்குச் சென்று எங்களுடைய எல்லா அடிப்படைத் தேவைகளுக்கும் ஆதிக்கசாதி மக்கள் குடியிருக்கும் பகுதியிலேயே இருப்பதால் எங்களை ஊருக்குள் வரக்கூடாது என்றும், வந்தால் கொலைசெய்யவும் தயங்கமாட்டோம்; என்று மிரட்டுகிறார்கள். ஆகவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று புகார்மனு கொடுத்துள்ளனர். புகார்மனுவை பரிசீலித்த பின்னர் காவல்துறை துணை கண்காணிப்பாளர், RDO, தாசில்தார் ஆகியோர் நேரில் வந்து தேனீர் கடைக்கு அழைத்துச் சென்று தேனீர் அருந்தச் செய்து சமாதானமாக இருக்கும்படி எச்சரித்துச் சென்றார்கள். ஆனால் ஆதிக்கசாதியினர் விடுவதாக இல்லை. இதே ஊரில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இரட்டைக்குவளை முறையும், தீண்டாமைக் கொடுமைகளும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கடந்த 24.02.2015 அன்று ரூபன்ராஜின் சகோதரர் ஒருவர் இறந்துவிட்டார். இழவுச்செய்தியை விசாரிப்பதற்காக ஆதிக்கசாதியைச் சேர்ந்த ஒருவர் காலனிக்குள் வந்த போது தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் உள்ளே வரவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். ரூபனும் நீங்கள் வரவேண்டாம் என்று தடுத்துள்ளார். இச்சம்வத்தைப் பார்த்த, கேள்விப்பட்ட ஆதிக்கசாதியினரால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. காலனிக்குள் இருக்கின்ற எந்த இளைஞர்களையும் நிம்மதியாக இருக்கவிடக்கூடாது, நம்மை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதை காலனிகாரர்களுக்கு நாம் உணர்த்தவேண்டும் என்கிற சாதிவெறியில் தொடர்ந்து கலவரத்தை தூண்டிவிட சரியான தருணம் பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக ரூபன்ராஜ் மற்றும் அய்யாவு மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தவும் திட்டமிட்டிருந்தார்கள். ஏனென்றால் இவ்விருவரின் தலைமையிலேயே மற்ற இளைஞர்கள் செயல்படுகிறார்கள் என்கிற ஆத்திரமே காரணமாகும். ரூபன்ராஜ் LIC ஏஜென்ட்டாகவும் “தலித் விடுதலை இயக்கத்தில்” மாவட்டச் செயலாளராகவும் இருந்து வருகிறார். அய்யாவு அ.தி.மு.க கட்சியில் அப்பகுதிச் செயலாளராகவும் இருந்து வருகிறார்கள்.

முதல்கட்ட நடவடிக்கையாக ரூபன்ராஜின் மனைவி கனிமொழியைப் பற்றியும், அவரைப் பற்றியும் தெருச்சுவர்களில் ஆபாசமான வார்த்தைகளையும், ஓவியங்களையும் எழுதிப்போட்டு அசிங்கப்படுத்தியுள்ளார்கள். சாதிஇந்துக்கள் கலவரம் ஏற்படுத்துவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த ரூபன்ராஜ் அமைதியாக இருந்துள்ளார்.

அடுத்தகட்டமாக கிராமப்பொதுச் சொத்துக்கள் மீது பறையர் சமூகத்தினர் எவ்வித உரிமையும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதில் தெளிவாக இருந்துள்ளார்கள். சாலைமரைக்குளம் கிராமத்தில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் சுமார் 750 பசுமாடுகள் உள்ளன. பெரும்பாலான வீடுகளில் குறைந்தது 50 மாடுகளாவது வைத்து ஜீவனம் செய்து வருகிறார்கள். எனவே மேற்படி மாடுகளை எப்போதும் மேய்ச்சலுக்காக விடும் பகுதிக்கு மாடுகளை ஓட்டிச் செல்லும் போது சாதிஇந்துக்கள் மாடுகளை விரட்டி அடித்துள்ளனர். மேலும் மாடுகளை ஓட்டி வரும் பெண்களையும் தகாத வார்த்தைகளால் திட்டியும் ஆண்களை அடித்தும் விரட்டியடித்துள்ளனர் மேலும் மாட்டை ஓட்டிச்சென்ற சோலையப்பனைப் பார்த்து “பறத்தேவிடியா மகனே யாருடைய வயல்லடா மாட்ட மேய்க்கிறீங்க ஒங்கள நாங்க என்ன செய்யுறோம்னு பாருங்கடா, எங்க தருசு நிலங்கள்ள மேய்க்கனுமுன்னா ஒங்க பொண்டாட்டி புள்ளைகள எங்களுக்கு கூட்டி விடுங்கடா என்று சொல்லிக்கொண்டே யோசோப்புவை கீழே தள்ளிவிட்டார். உடனே சோலையப்பன் “இது ஒன்னும் ஒங்க நிலமில்ல கவுருமெண்ட் நிலம், நீங்க என்ன எங்க மாடுகள் மேய்க்க வேணாண்ணு சொல்றது” என்று எதிர்த்து பேச “இனிமேல் எங்க நிலங்களில் ஒங்க மாடுகளை மேய்க்க ஓட்டிட்டு வரக்கூடாது. மீறி வந்தால் எந்த மாடும் உயிரோட வீடு போய் சேராது, ஒங்களையும் சேர்த்துதான் சொல்றோம்” என்று மிரட்டிச் சென்றுள்ளனர். மேற்படி பாராவில் குறிப்பிட்டுள்ளது அனைத்தும் குற்றஎண்:32/15-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்குதான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், சாதிஇந்துக்களுக்குமிடையே பிரச்சினை எழுகிறது. கிராமத்தில் கிராம பொதுச் சொத்து என்று 48 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலமானது இருசமூகத்தினருக்கும் பொதுவான நிலமாகும். ஆனால் இந்நிலங்கள் அனைத்தும் அகமுடையர் சமூகத்தைச் சேர்ந்த சுப்பையா, முத்தையா மற்றும் ராமராஜன் போன்ற சுமார் 19 பேரின் கைவசம் உள்ளது. அவர்கள் மட்டுமே இதுவரை அனுபவித்து வந்துள்ளார்கள். நிலத்தின் பட்டா எண்:84, சர்வே எண்:146/2 புஞ்சை(1909.5 ஏர்ஸ்-47.18ஏக்கர்) இதற்கிடையில் மேற்படி ஆதிக்கசாதியினர் 17 ஏக்கர் நிலத்தை மருத்துமனை கட்டுவதற்கும், பள்ளிக்கூடம் கட்டுவதற்குமென 23.04.2007ம் தேதியன்று தான செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்துள்ளனர். ஆனால் அரசாங்மோ மருத்துவமனை கட்டுவதற்கோ, பள்ளிக்கூடம் கட்டுவதற்கோ பொருத்தமில்லாத இடம் என்று கூறி அவ்விடத்தை வேண்டாமென்று பதிலளித்துள்ளது. எனவே மேற்படி 48 ஏக்கர் நிலங்களையும் மேற்படியினரின் பராமரிப்பிலே வைத்து அனுபவித்து வந்த நிலையில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் மாடுகளை அந்நிலங்களில் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தி வந்த நிலையில் மேற்படி தொடர் பிரச்சினையின் காரணமாக மாடுகளை உள்ளே விடக்கூடாதென்று கூறியதும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்றாக சேர்ந்து 23.03.2015-ந் தேதியன்று காவல்நிலையத்தில் புகார்கொடுக்க, 11.04.2015-ந் தேதியன்று வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் வருவாய் வட்டாச்சியர், நரிக்குடி காவல் ஆய்வாளர், அ.முக்குளம் காவல் சார்புஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சமாதானக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் “ஆதிதிராவிட சமூகத்தினருக்கு சொந்தமான ஆடு, மாடுகள் அகமுடையர் சமூகத்தினருக்கு சொந்தமான சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலங்களில் மேய்க்கக்கூடாது. சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் ஆடு, மாடுகள் மேயும் பட்சத்தில் இரு தரப்பினரும் சுமூகமாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டியது, இதுபோன்ற சம்பவம் நடந்தால் ஆதிதிராவிடர் சமூகத்தினர் உடனடியாக தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் எதுவும் செய்யக்கூடாது என்கிற முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு” சமாதானக்கூட்டம் நிறைவு பெற்றது. இச்சமாதானக் கூட்டத்திற்குப் பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது மாடுகளை மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டிச் சென்றுள்ளனர். மேய்ச்சலுக்கு விடப்பட்ட மாடுகளில் 125 மாடுகள் காணாமல் போய் 75 மாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் மீதி 50 மாடுகள் எங்கிருக்கின்றன எனறே தெரியவில்லை. திருடு போன மாட்டை கண்டுபிடித்துக் கொடுக்கும்படி 24.03.2015ம் தேதி காவல்நிலையத்தில் புகார் கொடுத்து பெயர் தெரிந்த 16பேர்கள் மற்றும் பெயர் தெரியாத அடையாளம் தெரிந்த 10பேர்கள் வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. குற்றஎண்: 32/15 இதுவரை காவல்துறையினர் காணாமல் போன மாடுகள் குறித்து எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் தொடர்ந்து ஆதிக்கசாதியினரை நேருக்கு நேர் சரிசமமாக குரல் கொடுப்பதையோ, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதையோ தாங்கமுடியாத சாதி இந்துக்கள் இரண்டு காலமாதமாக அமைதியாக இருப்பது போல இருந்துகொண்டு சாலைமரைக்குளம் கிராமத்தில் வாழும் பறையர் சமூக மக்களுக்கெதிராக கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் கடந்த 11.06.2015 வெள்ளி அன்று ஆதிக்கசாதியினர் ஊருக்குள் நுழைந்து தாழ்த்தப்பட்ட இளைஞர்களை தாக்கியதோடு மட்டுமின்றி பெண்களின் மீது கல் வீசி தாக்கியுள்ளார்கள். மேலும் அப்பகுதியில் சர்ச் மூலமாக இயங்கி வந்த தொடக்கப்பள்ளி மீதும் கற்களை வீசியும் பள்ளிக்கூரையை கம்பால் அடித்து உடைத்ததோடு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்காக சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவையும் கீழே கொட்டியுள்ளார்கள். குறிப்பாக தாழ்த்தப்பட்ட குழந்தைகள் சிலரை கையைப் பிடித்து பள்ளியிலிருந்து வெளியே வீசியெறிந்துள்ளார்கள்.

சம்பவம் நடந்த அதே நாளில் (11.06.2015) ரூபன்ராஜ் தனது வேலை தொடர்பாக பக்கத்து ஊர்களுக்குச் சென்று பாலிசிதாரர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும்போது ஆதிக்க சாதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் ரூபன்ராஜை வழிமறித்து “இவனும், அய்யாவுந்தாண்டா எல்லா பிரச்சினைக்கும் காரணம் இவனுகள உயிரோட விட்டோம்ன்னா நாம இங்க நிம்மதியா வாழமுடியாது” என்று சொல்லியபடியே ரூபன்ராஜைத் தாக்க ஆரம்பித்தார்கள். ரூபன்ராஜ் அப்பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் நுழைந்துள்ளார். தப்பிக்க வழியின்றி போக மேற்படி 40 பேரும் சுற்றி வளைத்து தடியாலும், இரும்பிக் கம்பியினாலும் அடித்ததோடு மட்டுமின்றி மண்வெட்டியால் தலையில் ஓங்கி அடித்துவிட்டு ஓடிவிட்டார்கள்.

மேலும் ருபன்ராஜ் வைத்திருந்த இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கியதோடு அவரது பையில் வைத்திருந்து 15000 மதிப்புள்ள போன், LIC பணம் ரூ27700- யும் எடுத்துக்கொண்டு ஓடி விட்டார்கள். ரூபனோ எதற்கும் தயங்காமல் அவ்வழியே சென்ற அரசு பேருந்து முன்பு அமர்ந்து கொண்டு நியாயம் கிடைக்காமல் இந்த இடத்தைவிட்டு செல்லமாட்டேன் என்று பிடிவாதமாக தலையிலிருந்து இரத்தம் சொட்ட சொட்ட மயங்கிய நிலையில் தனியொருவராக அமர்ந்துள்ளார். விசயம் தெரிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.வேல்முருகன், தாசில்தார் ரூபன்ராஜை சமாதானப்படுத்தி அதிகாரிகளின் வண்டியில் ஏறும்படி கட்டாயப்படுத்தியும் ரூபன்ராஜ் எந்த அதிகாரிகளின்
வண்டியிலும் ஏறாமல் அரசு மருத்துவமனையிலிருந்து 108 வண்டி வந்த பிறகுதான் நான் போவேன் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். மயங்கிய நிலையில் ரூபன்ராஜை ஏற்றிக்கொண்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்த்துள்ளார்கள். தலையின் உச்சியில் 8 தையல் போட்டு இன்று வரை சிகிச்சையில் இருந்து வருகிறார்.

மேற்படி ரூபன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் குற்றஎண்:53/15 U/S 147,148, 341, 294(b), 323, 324, 427, 379 (NP) of 506(i) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரையிலும் மேற்படி எதிரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல் 11.06.2015-ந் தேதியன்று ஊருக்குள் நடத்திய தாக்குதலில் கருப்பு (எ) கருப்பசாமியை இரும்புக் கம்பியால் பலவந்தமாக தாக்கியதில் கருப்பசாமியின் கால் உடைந்து காரியாபட்டி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்து வருகிறார். பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக கருப்பசாமி என்பவர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் குற்றஎண்:50/15, U/S 294 (b), 323, 324, 506 (ii), IPC r/w 3 (1)(x), 3(2)(x)a Sc/St Act-ல் சாதி இந்துக்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இதுவரை சாதி இந்துக்கள் மீது வெவ்வேறு குற்ற எண்ணின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் இதுநாள் வரையிலும் மேற்படி எதிரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்விரு தாக்குதல்களும் ஒரே நாளில் ஊருக்குள் காலை 10.00 மணியளவிலும், ரூபன் மீது நடந்த வன்முறையானது 1.30 மணியளவில் என வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நேரத்தில் இரண்டு கும்பலால் நடத்தப்பட்ட கலவரம் ஆகும். தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட கலவரமானது பலமாதங்களாக வெவ்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி, ஏற்படுத்தி திட்டமிட்டு நடந்த கலவரம் ஆகும். ஆனால் காவல்துறையும், சாதிஇந்துக்களும் சேர்ந்து திட்டமிட்டு பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பொய் வழக்கு குற்றஎண்: 51/15, U/S 147,148,294(b) and 506 (ii)of IPC கீழ் கருப்பு மகன் செல்வம், ராஜேந்திரன் மகன் சத்யாராஜ், பால்ராஜ் மகன் அய்யாவு, ஜெயராஜ் மகன்களான அன்பு ராஜ் மீதும், பிரபுதேவா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இரண்டு தரப்பினரும் தவறுகள் செய்துள்ளதாக வழக்கினை பதிவு செய்வது பாதிக்கப்பட்ட தரப்பை மீண்டும் தண்டிப்பதாகவும், சாதிஇந்துக்கள் மீதான குற்றத்தை தப்பிக்கச் செய்து அவர்களைக் காப்பாற்றுவதாகவும் உள்ளது.

பரிந்துரைகள்:

• மனைவி பஞ்சாயத்து தலைவி என்பதனை பயன்படுத்தி பறையர் சமூக மக்கள் மீது அவ்வபோது தாக்குதல்கள் நடத்தி வரும் சாலைமரைக்குளம் பஞ்சாயத்து தலைவி பழனிச்செலவியின் கணவர் ராம்பிரசாத் மீது மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

• பாதிக்கப்பட்ட பறையர் சமூகத்தைச் சார்ந்த ரூபன்ராஜ் குடும்பத்தினருக்கும், கருப்பு குடும்பத்தினருக்கும் தகுந்த இழப்பீடும், பாதுகாப்பும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ரூபனிடமிருந்து களவாடிச்சென்ற பணத்தையும், இருசக்கரவாகனத்தையும் மற்றும் அவருடைய செல்போனையும் மீட்டுக்கொடுக்க வேண்டும்.

• தாழ்த்தப்பட்ட மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்கினை ரத்து செய்யவேண்டும்.

• ரூபன்ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றஎண்:53/15-ல் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை பதிவுச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. ஆகவே உடனடியாக தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை பதிவுச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும்.

- வழக்கறிஞர் நீதிமலர், மதுரை

Pin It