முல்லைப் பெரியாறு அணை உரிமையும், பராமரிப்பும் தமிழ்நாடு வசம் உள்ளது. அதிகாரமும், காவல் உரிமையும் கேரள அரசிடம் உள்ளது. கேரள அரசின் காவல்துறை அணையைக் காவல் காக்க தமிழக அரசு சம்பளம் தரவேண்டும். தமிழக அதிகாரிகள் அணைப்பகுதிக்குச் செல்ல கேரளக் காவல்துறை அனுமதிக்க வேண்டும். புதிதாக வாங்கப்பட்ட படகும், பிளாஸ்டிக் இருக்கைகளும் அணைக்கு எடுத்துச் செல்ல கேரள அதிகாரிகள், காவல்துறை அனுமதிக்கவில்லை. வினோதமான அதிகாரம். சாவி உன்னிடம். அனுபவிக்கும் பாத்தியதை எனக்கு. எத்தனை நாளைக்கு இது நீடிக்கும்? தமிழகத்தை ஆண்ட, ஆளும் கட்சிகளின் வீரவசனங்கள் நீதிமன்றத்தில் வழக்காடி, வாதாடியதற்கு, நீரின் உயரத்தை பெறுவதற்கு மட்டுமே!

mullaiperiyar dam 620கேரளத்தின் ஆளும் வர்க்கக் கட்சிகளான காங்கிரஸ், பா... மற்றும் இடது முன்னணிக் கட்சிகளின் நிலை ஒரே நிலைதான். ஏன் புரட்சிகர மா - லெ இயக்கங்கள் வரை வேறுபாடு எதுவும் இல்லை. முல்லைப்பெரியாறு அணை உடையும் நிலையில் இருக்கிறது என மக்கள் மத்தியில் பீதியூட்டினர். அணை உடைவது போல் ஒளிப்படக் குறுந்தகடுகள் வெளியிட்டு பரப்புரை செய்தனர். மார்க்சிஸ்ட் கட்சிக் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோதே முல்லை பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும், புதிய அணை கேரளப்பகுதியில் கட்டப்பட வேண்டும் இயக்கங்களை முன்னெடுத்தனர். அப்படியிருந்தும் கேரளாவில் தங்கள் ஆட்சியைத் தக்கவைக்க முடியவில்லை. காங்கிரஸ் கேரள ஆட்சியைக் கைப்பற்றியவுடன் அதே பல்லவியைப் பாடினர். பா... உள்ளிட்ட அனைத்து கேரள அரசியல் அமைப்புகளும் இன்றும் அதே பல்லவியைப் பாடி வருகின்றனர். இவர்கள் அனைவரின் முழக்கமும் ஒன்றே! ”கேரள மக்களுக்குப் பாதுகாப்பு. தமிழகத்திற்குத் தண்ணீர்.” ஒரே தீர்வு. முல்லைப் பெரியாறு அணைத் தகர்ப்பு, புதிய அணை கட்டுவது.

மிகப் பல ஆண்டுகளுக்குப் பிறகு "முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருக்கிறது, எனவே 124 அடியிலிருந்து 142 அடியாக அணையில் நீரைத் தேக்கிக் கொள்ளலாம்" என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தற்போது முல்லைப் பெரியாறு அணை பற்றிய விவாதத்தை விடாமல் பிடித்துக் கொண்டு, கேரள காங்கிரஸ் முதலமைச்சர் உம்மன்சாண்டி புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகள், திட்டமிடல், மத்திய அரசிடம் அனுமதி பெறுவது என்பதன் மூலம் அச்சுறுத்தலைத் தொடங்கியுள்ளார்.

 அணைக்கு வரும் தண்ணீரைத் தடுத்து புதிய அணை கட்டப்படுமானால் முல்லைப் பெரியாறுக்கு வரும் நீர் தடுக்கப்பட்டு நீர் வரத்து குறையத் தொடங்கும். பாசனத்திற்கும், குடிநீருக்கும் நம்பியிருக்கும் ஏழு மாவட்ட மக்களின் நிலை என்னவாகும். கேரளாவிலும், கர்னாடகாவிலும் வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு தேர்தல் அரசியலில் விளையாடும் காங்கிரசும், பா...வும் தமிழக மக்களின் நீர் உரிமையில் விளையாடுகின்றனர். தமிழ்நாட்டில் காலியாகியுள்ள காங்கிரசும், அடித்தளமில்லாத பா..கவும் தமிழக மக்களுக்குத் துரோகம் செய்கின்றனர். தென் மாவட்டங்களில் வாழும் விவசாயிகள், உழைக்கும் மக்களை மையப்படுத்தி தமிழக நலனை முன்னிறுத்தி போராட்டங்கள் எழ வேண்டிய அவசியம் உள்ளது. முல்லைப் பெரியாறு அணை உரிமைப் போராட்டமும், தேவாரம் நியூட்ரினோ ஆய்வுத் திட்ட எதிர்ப்பும் இணைத்து எடுத்துச் செல்லப்பட வெண்டும்.

முல்லைப் பெரியாறு அணைப் பயன்பாடு கேரள அரசின் எந்தவித அதிகாரத் தடையுமில்லாமல் தமிழக மக்கள், தமிழக அரசு அனுபவிக்க ஏற்ற சூழல் உருவாக்கப்படுவதை நோக்கி நமது சட்டவழி மற்றும் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். கேரளா அதிகாரிகள், மற்றும் காவல்துறை தடைகளைப் பின்வாங்க கேரள அரசு தயாராக இல்லை. தமிழக அரசு தான் சந்திக்கும் தடைகளை முன்வைத்து சமீபத்தில் அணைப் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்புப் படையினரை பணியமர்த்த உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. கேரள அரசு தேவையில்லை என அறிவித்தது.

உச்சநீதிமன்றத்தில் பா... மோடியின் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், "முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரைப் பணியிலமர்த்தத் தேவையில்லை. சட்டம் ஒழுங்குப் பிரச்சனை மாநில அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே கேரள அரசு கோரினால் அணைக்கு மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படையை பணியில் அமர்த்துவது தொடர்பாகப் பரிசீலிக்கப்படும்என்று தெரிவித்துள்ளது. இதற்கு எதற்கு ஒரு மத்திய அரசு? நமது வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கவா? கனிவளங்களைச் சூறையாடவா? கேரளக் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழகத்தின் முல்லைப்பெரியாறு அனைப்பகுதியைத் தமிழக அரசின் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு கேரளக் காவல்துறை பாதுகாக்கின்றது. பணியில் திருப்தியில்லை. நம்பிக்கையில்லை. எதிர்நிலையெடுக்கும் கேரள அரசின் காவல்துறை வேண்டாம். மத்திய அரசின் தொழிலகப் பாதுகாப்புப் படையை நிறுத்தலாம் என முறையாகக் கேட்டால் கேரளக் காங்கிரஸ் அரசின் அதே பதிலை உச்சநீதிமன்றத்தில் மத்திய பா... அரசு அளிக்கிறது என்றால் இவர்களுக்குள் என்ன வேறுபாடு? இனி யாரிடம் போவது? இந்த உரிமையைத்தான் ஆண்ட தி.மு..வும், ஆளும் .தி.மு..வும் நமக்குப் பெற்றுத் தந்துள்ளனர்.

124, 132, 142, 152 அடி நீர்த் தேக்கும் உரிமை மட்டுமல்ல, முல்லைப்பெரியாறு அணையைப் பராமரிக்கும், காவல்காக்கும், பயன்படுத்தும் அணைத்து உரிமைகளையும் தமிழகம் பெறவேண்டும். அதற்கான சட்டப்படியான நிலைகளைப் பெறுவதை நோக்கி நமது கோரிக்கைகள், போராட்டங்கள் அமைய வேண்டும். ஏற்கெனவே கடலில் வீணாகும் நீரைப் பயன்படுத்தாத கேரளா வாக்குவங்கி அரசியலுக்காக புதிய அணைகட்டுவோம் என கேரள மக்களைத் திசை திருப்புவதுடன், தமிழக மக்களை அச்சுறுத்துகிறது.

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில், "முல்லைப் பெரியாறு அணைக்கு விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களால், நக்சல்பாரிகளால், தேச விரோத அமைப்புகளால் ஆபத்து உள்ளது," எனக் குறிப்பிட்டுள்ளது. முல்லைப் பெறியாறு அணை உரிமைக்காக தென் மாவட்ட மக்களோடு இணைந்து நின்று, புரட்சிகர மா-லெ கம்யூனிஸ்ட் அமைப்புகளும், தமிழ்த் தேசிய அமைப்புகளும், பெரியாரிய-அம்பேத்காரிய அமைப்புகளும், சிறுபான்மை இசுலாமிய இயக்கங்களும் கடுமையாகப் போராடியுள்ளனர். முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குத் துணை நின்ற இந்திய அரசுக்கு ஆதரவாகத் தேர்தல், வாக்கு வங்கி அரசியலுக்காக ஆளும், ஆண்ட கட்சிகள் அரசியல் விளையாட்டு விளையாடுகின்றன. எதிர்காலச் சந்ததியினருக்கு முல்லைப் பெரியாறு அணை உரிமைக்காகப் போராடிச் சாவு! எனவோ, கேரள இனவாத அரசியல் கட்சிகளுடன் மோதி நீயும் இனவாதியாக மாறு! எனவோ, நாம் காரணமாக மாறிவிடக் கூடாது. ஏற்கெனவே விவசாயத்தை திட்டமிட்டு அழிக்கும் பன்னாட்டுச் சார்பு அரசியல் மீத்தேன், நியூட்ரினோ என நம்மை இடம் மாறச்செய்ய வைக்கிறது. தென்தமிழகம் நீரின்றி சுடுகாடாக மாறாமல் தடுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இந்திய அரசை, தமிழ்நாட்டை ஆளும், ஆளத் துடிக்கும் கட்சிகளை நோக்கி நமது குரல் ஓரணியில் ஓங்கி ஒலிக்க வேண்டும். மக்கள் இயக்கமாக நாம் மாறவில்லையெனில் முல்லைப் பெரியாறு அணை உரிமையை தமிழகம் இழப்பது உறுதி. விழித்துக் கொள்வோம்!

- மீ.த.பாண்டியன்

Pin It