Jaitley Jayalalitha

நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது அல்லது நீதி தலைகுனிந்திருக்கிறது, தோற்றுப்போய் இருக்கிறது......... அப்படி பொத்தம்பொதுவாக ஒன்றுமில்லை. காரணம் காலத்துக்கும் மாறாத நிலைநிறுத்தப்பட்ட நீதியென்று ஒன்றுமில்லை. ஆண்டான் – அடிமை காலத்து நீதிக்கும், தற்போதைய நீதிக்கும் இடையிலான நீதி வேறுபாட்டை நாம் பேச வேண்டியதில்லை. அது கம்யூனிஸ்டுகளின் அறிவியல் கண்ணோட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாதவர்களை முணுமுணுக்க வைக்கும். ஆனால் வெள்ளையர் காலத்து நீதி இன்று அப்படியே இல்லைதானே!

ஆகவே, வர்க்கத்திற்கு ஏற்ற நீதிதான் உள்ளது; அதை அந்தந்த வர்க்கங்கள்தான் பயன்படுத்த முடியும்.

ஏற்கனவே ஜெயலலிதா தண்டிக்கப்பட்டபோது “ஜெயலலிதாவுக்கு தண்டனை – கார்ப்பரேட்டுகளின் விளையாட்டு – ஆளும்வர்க்க கூட்டு” என்ற கட்டுரையை எழுதியிருந்தோம். அது குறித்து முகநூலில் எழுந்த விவாதத்தில் ஜெயலலிதா ஒரேயடியாக தண்டிக்கப்பட்டு தூக்கி வீசப்படவில்லை; கண்டிக்கப்பட்டிருக்கிறார்; ஒரு சுமூகமான விட்டுக்கொடுத்தல்களுக்குப் பிறகு அவர் மீண்டு வருவார் என்று சொன்னோம். கடந்த வாரம் ஒரு பத்திரிகை நண்பரிடமும் அதையே சொன்னபோது சான்ஸே இல்லையென்று கடுமையாக மறுதலித்தார்.

இப்போது ஜெயலலிதா விடுதலையாகிவிட்டார்.

எழுத்தாளரும், வழக்குரைஞருமான தோழர் இரா. முருகவேள் “யாருக்கும் தலை வணங்காத ஒரு நீதிபதி. ஒருதீர்ப்பு.கண்டிப்பும் கறாருமான இன்னொரு நீதிபதி. இன்னொரு தீர்ப்பு. இடைக்காலத்தில் ஒரு சட்டம் நிறைவேற ஆதரவு.......” என்று சொல்கிறார். எப்படி கம்யூனிஸ்டுகளால் மட்டும் இப்படி உண்மைகளை போட்டு உடைக்க முடிகிறது?

ஒரு சின்ன கணக்கு பார்க்கலாம்!

தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் சொத்துடைய வர்க்கங்களுக்கு என்ன தேவையிருக்கிறது? நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் போன்ற எண்ணற்ற சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்; ஒரு ஈவு இரக்கமற்ற சுரண்டலை வேகமாக நடத்த வேண்டும்; எதிர்ப்புகளை தயவுதாட்சண்யமின்றி நசுக்க வேண்டும்; அதற்கேற்ற நபர்களை, கட்சிகளை மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதுதானே?

இந்த கணக்குபடி தமிழ்நாட்டிற்குப் பொருத்தமானவர் யார்?

ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, மாறன் சகோதரர்கள் என பல செல்வாக்குள்ள முதலாளிகளும், அந்த முதலாளிகளுக்கிடையேயான அதிகாரப் போட்டிகளுமாக சீரழிந்து கொண்டிருக்கிற தி.மு.க பொருத்தமானதில்லை.

அரசியல் விளையாட்டுகளுக்குப் பொருத்தமாக தன்னை வளர்த்துக்கொள்ள இயலாத தே.மு.தி.க விஜய்காந்தும் பொருந்தவில்லை.

பகுத்தறிவு, பொதுவுடமை மற்றும் தேசிய இன அரசியலில் முன்னேறிய தமிழ்நாட்டைப் புரிந்துக்கொள்ளாத பி.ஜே.பி. வடமாநிலங்களில் செயல்படுவதுபோல் எதையாவது செய்ய முயல்வதும், தொடக்கத்திலேயே பலமான எதிர்ப்புகளை சந்திப்பதும் வாடிக்கை. எனவே அதுவும் பொருத்தமில்லை.

ஆகவே ஆளும்வர்க்கத்தின் தேவையை நிறைவு செய்ய இன்றைக்கும் பொருத்தமானவராக ஜெயலலிதா மட்டுமே இருக்கிறார். அணு உலைகளுக்கெதிரான கூடங்குளம் மக்களின் போராட்டத்தை எவ்வளவு தந்திரமாக ஒடுக்கி ஆளும்வர்க்கத் தேவையை நிறைவேற்றித் தந்தார். பிறகு ஏன் இடையில் ஜெயலலிதா நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டார்?

இன்னொரு கணக்கைப் பார்ப்போம்!

முதலாளிகளும், முதலாளித்துவ கட்சிகளும் ஆளும்வர்க்கத்திற்குள் இருக்கும் சகப்பிரதிநிதிகள்தான். அதேநேரத்தில் அதற்குள் சின்ன வேறுபாடுகளும், அதற்கேயான முரண்பாடுகளும் இருக்கிறது. அந்த முரண்பாடுகளை தேவைக்கேற்ற வகையில் தீர்த்துக்கொள்கிறது.

முதலாளிகளுக்கு, கிடைப்பதையெல்லாம் அந்த நொடியிலேயே கொள்ளையடிக்க வேண்டுமென்ற லாபவெறி. ஆகவே அவர்கள் தனது சேவகர்களான ஆட்சியிலிருப்பவர்களை அதற்கேற்ற மூர்க்கத்துடன் நிர்பந்திக்கிறார்கள்.

ஆனால் ஆட்சியிலிருப்பவர்களுக்கு இன்னொரு நிர்பந்தமும் இருக்கிறது. அது மக்களை சமாதானப்படுத்துவது. இல்லையென்றால் மக்கள் அடுத்த தேர்தலில் தங்களை நிராகரித்து விடுவார்கள் என்ற பயம். தங்களது ஆட்சியாதிகாரம் நீடிக்க வேண்டுமென்றால் சில சீர்த்திருத்தங்களையாவது செய்தாக வேண்டுமென்கிற கட்டாயம்.

இந்த நிலையில் முதலாளிகள் சொல்வதையெல்லாம் ஆட்சியிலிருக்கும் முதலாளித்துவ கட்சி அப்படியே செய்துவிட முடியாதென்பதுதான் முரண்பாடு. இந்த முரண்பாடுகள் எப்படியெல்லாம் தீர்க்கப்படுகிறது என்பதுதான் ஜெயலலிதா வழக்கும், தீர்ப்பும்.

இப்போது ஜெயலலிதா விட்டுக்கொடுத்தாரா?அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட் போன்ற ஓட்டுக்கான சீர்த்திருத்தங்கள் கைவிடப்படுகின்றனவா?

அல்லது அவைகளைப் பின்னால் பார்ப்போம், தற்போது நிலம் கையகப்படுத்தலுக்கான அவசர சட்டங்கள் போன்றவற்றை நிறைவேற்றி தந்தால்போதும் என முதலாளிகள் விட்டுக்கொடுத்துள்ளனரா?

நீதிமன்றங்களுக்கே வெளிச்சம்!

- திருப்பூர் குணா

Pin It