modi 404

நிலம் கையகப்படுத்தும் மசோதா எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் கால தாமதம் ஆவதால் பா.ஜ.கவினர் தங்களுடைய வரலாற்றுத் திறமையான புளுகு வேலைகளை ஜோராக ஆரம்பித்து விட்டார்கள். நிலம் கொடுத்தால் வேலை கிடைக்கும், நிலம் கொடுத்தால் பணம் கிடைக்கும் என்று விவசாயிகளிடம் ஏகத்துக்கும் புருடா விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். அப்படி ஒரு புருடா தான் தமிழிசை சவுந்திரராஜன் தமிழ் இந்து நாளேட்டில் விட்டிருக்கும் புருடா

 “நாட்டின் வளர்ச்சிக்கு நிலம் தேவை. அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை அனைவருக்கும் கழிப்பறை இவையெல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் நிலம் வேண்டும்.சிறு, பெரு நகரங்களில், கிராமங்களில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிலம் தேவை. நீர்ப்பாசானத் திட்டங்கள், நெடுஞ்சாலைகள், இருப்புப் பாதைகள், தொழிற்சாலைகள் அமைக்க நிலம் தேவை. கிராமங்களின் வளர்ச்சியின் மூலம் மக்களின் இடம் பெயர்தலைத் தடுக்க நிலம் தேவை”

 இந்தியா சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகளாக கோடிக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாக, கல்வி அறிவு அற்றவர்களாக, வேலை வாய்ப்பு அற்றவர்களாக, இயற்கை உபாதைகளை கழிப்பதற்குக் கூட கழிப்பிடம் அற்றவர்களாக வாழ்கிறார்கள் என்றால் அதற்கு தமிழிசை சொல்லும் ஒரே காரணம், யாரும் நிலம் கொடுக்கலீங்க, கொடுத்திருந்தாங்கனா இந்நேரம் மோடியே வந்து கக்கூச கட்டிக்கொடுத்துட்டு அதை கையோட திறப்புவிழாவும் பண்ணிட்டு போயிருப்பாரு. நமக்கு வரும் கோபத்தில் பி.ஜே.பி காரங்களைப் பார்த்து விஜயகாந்தைப் போல சொல்லத் தோன்றுகின்றது ‘தூக்கி அடிச்சுப்புடுவேன் பாத்துக்க’

பி.ஜே.பி காரங்க இப்படி பொய் பொய்யா பேசி ஊர ஏமாத்திக்கிட்டு இருக்கிற இந்த சமயத்தில அவுட்லுக் பத்திரிக்கை இவர்களை அம்பலப்படுத்தி கவர்ஸ்டோரி வெளியிட்டு இருக்கின்றது. அதிலே வந்த சில முக்கியமான தகவல்களை மட்டும் தருகிறேன்.

1) 1947-ல் இருந்து இதுவரை 6.1 கோடி ஏக்கர் நிலம் இந்தியாவில் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஏறக்குறைய 60 மில்லியன் மக்கள் இடப்பெயர்ச்சி அடைந்து இருக்கின்றார்கள். இவர்களில் 40% மக்கள் பழங்குடிகள், 20% தலித்துகள், 20% மற்ற பிற்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள்.

2) அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடா போன்ற நாடுகளின் அரசாங்கங்கள் தனியாருக்கு நிலம் கையகப்படுத்தும் செயலில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வது கிடையாது. தனியார் நிறுவனங்கள் நிலம் வேண்டும் என்றால் அவர்களாகவே வாங்கிக்கொள்ள வேண்டியதுதான்.

3) மகாராட்டிரம், ஆந்திரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்திரப்பிரதேசம் போன்ற ஐந்து மாநிலங்கள் மட்டும் 5.67 லட்சம் ஏக்கரை நிலத்தை கையகப்படுத்தி இருக்கின்றன. இதில் 2014 வரை 2.55 லட்சம் ஏக்கர் அதாவது 45% நிலத்தை இன்னும் தொழிற்சாலைகளுக்கு ஒதுக்காமல் வைத்துள்ளன.

4) மகாராட்டிரத்தில் மட்டும் ஏறக்குறைய 100000 ஏக்கர் நிலம் 2014 வரை தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்படாமல் உள்ளது. அதேபோல குஜராத் 50000 ஏக்கரும், ஆந்திரம் 73000 ஏக்கரும் 2012 வரை ஒதுக்காமல் வைத்துள்ளன.

5) கோத்ரெஜ் நிறுவனம் மும்பையில் 28000 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தாமல் வெறுமனே வைத்துள்ளது. அதேபோல பெங்களூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனம் 1.4 சதுர கி.மீ. நிலத்தைப் பயன்படுத்தாமல் வைத்துள்ளது.1000 கோடி மதிப்பிலான 13 திட்டங்கள் மட்டுமே நிலப்பிரச்சினையால் நிலுவையில் உள்ளன.

6) சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக 2006 முதல் 2013 வரை 150000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அப்படி கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் 14 சதவீத நிலம் பின்னால் வேறு வணிக பயன்பாட்டிற்கு திருப்பிவிடப்பட்டன. மேலும் இதுவரை அனுமதி அளிக்கப்பட்ட 576 சிறப்பு பொருளாதார மண்டலங்களில் வெறும் 152 மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

7) 45 லட்சம் ஏக்கர் நிலம் உபரியாக அரசு நிறுவநங்களிடம் உள்ளது. குறிப்பாக பாதுகாப்பு படைகளுக்குச் சொந்தமாக 265000 ஏக்கரும், துறைமுகங்களுக்குச் சொந்தமாக 258000 ஏக்கரும் விமான நிலையங்களுக்குச் சொந்தமாக 50000 ஏக்கரும் உள்ளது.

8) இந்தியாவில் 2014 ஆண்டு கணக்கீட்டின் படி 40 மில்லியன் தரிசு நிலங்கள் உள்ளதாகத் தெரிகின்றது. 2003-ல் இது 55 மில்லியனாக இருந்தது.

9) ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழிற்துறையின் பங்களிப்பு 21.5% ஆகும். விவசாயத் துறையின் பங்களிப்பு 13.5% ஆகும். ஆனால் வேலை வாய்ப்பை எடுத்துக் கொண்டால் தொழிற்துறை 20% பேருக்கும் விவசாயத்துறை 50% பேருக்கும் வேலை வாய்ப்பை வழங்குகின்றது.

 உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க எந்த ஆதாரமும் இல்லாமல் பி.ஜே.பி பொய்யர்கள் நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றார்கள். உண்மையிலேயே இவர்களுக்கு நாட்டு மக்கள் மீது அக்கறை இருந்தால் உண்மையான பொருளாதார வளர்ச்சிக்கு ஏதாவது செய்து இருப்பார்கள். ஆனால் செய்தது என்ன? கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை 51% விதமாக அதிகப்படுத்தியது; வங்கித்துறை, இன்சூரன்ஸ் துறை என்று அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீட்டுக்கு திறந்துவிட்டது. இதன் மூலம் பன்னாட்டு பெரு நிறுவனங்களின் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் இவர்கள் சொல்வதுபோல் இங்கே ‘மேட் இன் இந்தியா’வெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. 2014 ஆண்டில் மட்டும் உள்நாட்டில் நடந்த இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளில் 93% அந்நிய தொழில் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டவை. உள் நாட்டில் இதன் பங்கு 620 கோடி டாலரில் இருந்து 1620 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இந்திய தொழிற் நிறுவனங்களை பல பன்னாட்டு கம்பெனிகள் வாங்கிக் கொண்டிருக்கின்றன. இப்படி இந்திய நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனங்களை விற்பதற்குக் காரணம் இந்திய ஆளும் வர்க்கங்களின் ஏகாதிபத்திய சார்பு பொருளாதாரக் கொள்கையே ஆகும். உள்நாட்டுத் தொழில்களை காப்பாற்ற வக்கில்லாத இந்த வெட்கம் கெட்ட பேர்வழிகள் தான் உலகம் பூராவும் சுற்றி இந்தியாவை கூட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

 மோடி பதவி ஏற்று ஏறக்குறைய ஓர் ஆண்டு நிறைவடையப் போகின்றது. உலகம் பூராவும் சுற்றி அந்நிய முதலாளிகளை இந்தியாவில் தொழில் தொடங்க அழைக்கின்றார். அப்படி அழைத்ததன் விளைவை இன்றைய நாளேடுகளைப் பார்த்தால் தெரியும். இருபது மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்திருக்கின்றது. 2013 செப்டம்பரில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.25 ஆக இருந்தது. இப்போது மீண்டும் அது 64.23 ஆகி இருக்கின்றது. மோடியின் ஒரு வருட ஆட்சியின் யோக்கியதை இதுதான்.

மோடியின் செல்லக்குழந்தைகளான அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 13500 கோடி மதிப்புடைய பங்குகளை விற்று விட்டு ஓடிவிட்டார்கள். மேலும் கடன் சந்தையில் இருந்த முதலீடுகளை வேறு தொடர்ந்து விற்று வருகின்றார்களாம். ஏற்கெனவே மரணப்படுக்கையில் கிடக்கும் இந்தியத் தொழிற்துறை சர்வ நிச்சயமாக மண்டையை போடப்போகின்றது. இதன் பாரிய விளைவுகளால் மிகப்பெரிய அளவில் வேலை இழப்புகள் ஏற்படப் போகின்றது .இறக்குமதியை சார்ந்திருக்கும் பல தொழிற்நிறுவனங்கள் இதனால் கடும் வீழ்ச்சியை சந்திக்கப் போகின்றன. இந்திய மக்கள் அனைவரையும் நடுத்தெருவிலே நிறுத்தி அழகுபார்க்கும் வரை மோடியின் பயணங்கள் முடியப் போவதில்லை.

 இதிலே கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால் இப்படிப்பட்ட சூழ்நிலை உருவாவதற்கு நிலம் ஒரு காரணமாக இருக்கவில்லை என்பதுதான். ஆடத்தெரியாதவன் மேடையை கோணல் என்று சொன்னது போல்தான் உள்ளது மோடியின் செயல்பாடு. ஏற்கொனவே இருக்கும் பொருளாதாரத்தைக்கூட காப்பாற்றத் துப்பில்லாமல் அதை நாசம் செய்த மோடி வகையாறாக்கள் பழியைத் தூக்கி அடுத்தவன் தலையில் போடுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.

 ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட லட்சக்கணக்காண ஏக்கர் விவசாய நிலங்களில் தொழிற்தொடங்க ஒரு நாய்கூட வரவில்லை என்பதே உண்மை நிலவரம். மோடி கையைப் பிடித்து அழைத்து வரும் எல்லோரும் பங்குசந்தை சூதாடிகள். அவர்களின் நோக்கம் தொழிற்துறையில் முதலீடு செய்து உற்பத்தியைப் பெருக்கி இந்திய மக்களுக்கு வேலைவாய்பை வழங்குவதில்லை. மாறாக பங்குச் சந்தையில் முதலீடு செய்து குறுகிய காலத்தில் லாபம் பார்ப்பது. அப்படி பார்த்துவிட்டு பணத்தை தூக்கிக்கொண்டு ஓடியதால்தான் ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்தில் வீழ்ந்திருக்கின்றது.

 மோடியும் அவரது அல்லக்கைகளும் இப்படி மண்டையிலே மசாலா இல்லாமல் செய்யும் செயல்பாடுகளால் நாட்டுமக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றார்கள். நிதின்கட்கரி சொல்கின்றார், சிறுநீரை செடிகளுக்கு விட்டால் செடி நன்றாக வளர்கின்றதாம், அவரே ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தாராம். நாம் ஒரு கோரிக்கையை வைக்கின்றோம், அண்ணன் நிதின் கட்கரி அவர்களே! சிறுநீரை விட்டால் செடி வளரும் என்று கண்டுபிடித்ததைப் போல சிறு நீரை குடித்தால் அறிவு வளருமா என்று கண்டுபிடித்து சொல்லுங்கள். அப்படி உங்கள் ஆராய்ச்சி வெற்றி அடையும்பட்சத்தில் செலவில்லாமல் அறிவை வளர்த்துக்கொள்ள உங்கள் கட்சிக்காரர்கள் அனைவருக்கும் அதைப் பரிந்துரைக்கலாம்.

-  செ.கார்கி

Pin It