farmer maharashtra

மகாராட்டிரத்தில் கடந்த மூன்று மாதங்களில் 601 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நாளேடுகளில் செய்தி வெளியாகி இருக்கின்றது. அதே போல ஏழைகளுக்காகவும், விவசாயிகளுக்காகவுமே தமது அரசு செயல்படுகின்றது என்ற மோடியின் பேட்டியும் வெளியாகி இருக்கின்றது எவ்வளவு பெரிய முரண்நகை இது. ஒரு நாள் கூட மோடியால் தன்னுடைய பொய்யைக் காப்பாற்ற முடியவில்லை.

 இந்த தற்கொலை நடந்தது பா.ஜ.க. ஆளும் மகாராட்டிரத்தில். ஒருவேளை அங்கு காங்கிரசு ஆண்டு கொண்டிருந்தால் இந்நேரம் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து அங்கே கண்ணீர் விட்டு, கதறி, மாரடித்து அழுதிருப்பார் இந்த மகா நடிகன். உலக நாடுகள் பூராவும் சென்று இந்திய புராணம் பாடிவிட்டு வந்த மோடிக்கு இந்த செய்தி கொஞ்சம் சிறுநீரை வரவைத்திருக்கும்.

 வறுமையாலும், கடன்தொல்லையாலும், பட்டினியாலும் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட செய்தியுடன் பா.ஜ.க.வின் யோக்கியதையை வெட்டவெளிச்சமாக்கும் வேறுபல செய்திகளும் வெளிவந்துள்ளன. அரசியல் கட்சிகள் பெரும் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை வாங்குவதை தடைசெய்யக்கூடாது என்று பா.ஜ.க தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொண்டிருக்கின்றது. தடை செய்தால் என்ன ஆகும்? மோடி போட்டிருக்கும் ஜட்டியில் இருந்து அவர் பறக்கும் ஓசி விமானப்பயணம் வரை எல்லாமே பாதிக்கப்படும். விதவிதமாக ஆடைகளை அணிந்து மினுக்க முடியாது. ஒட்டு மொத்த கார்ப்ரேட் கட்சிகளின் கூடாரமே காலியாகும்.

 அடுத்து வந்த செய்தி குஜராத்தில் நடந்த ஒரு கலாச்சார நிகழ்ச்சியில் நடனமாடியவர்கள் மீது பூனம் மாடம் என்ற பா.ஜ.க எம். பி பணத்தை வாரி இறைத்திருக்கிறார். ஒருபக்கம் ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்; மற்றோரு பக்கம் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் பா.ஜ.க காலிகள் கொட்டம் அடிக்கின்றனர்.

 மகாராட்டிரத்தில் சிவசேனாவுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க தான் ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் 601 விவசாயிகளை கொன்று போட்டிருக்கின்றது. ஒரு பக்கம் மகாராட்டிரத்தின் தலைநகர் மும்பையில் உள்ள பங்குச்சந்தையில் நிதி நிறுவன மாப்பியாக்களும், வர்த்தக சூதாடிகளும், இந்திய மக்களின் ரத்தத்தில் வளம் கொழிக்கின்றனர். சென்செக்ஸ் வராலாறு காணாத உச்சத்தை அடைகின்றது. புதிய புதிய பணக்கார பன்றிகளை பங்குச்சந்தை பெற்றெடுக்கின்றது. அன்டில்லாவில் உட்கார்ந்து கொண்டு அம்பானிகள், மோடி என்ற மனித உணர்ச்சியற்ற ரோபோவை அடுத்து ஏழைகளின் மீது எப்படி ஏவுவது என்று புரோகிராம் செய்து கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் பன்னாட்டு விதைக் கம்பெனிகளின் மலட்டு விதைகளாலும், இந்திய வங்கிகளின் விவசாய விரோத ரவுடிதனத்தாலும், கந்துவட்டிக்காரர்களின் நெருக்கடியாலும் முட்டுச்சந்தில் மாட்டிக்கொண்ட விவசாயிகள் வாழ வழியின்றி பூச்சிமருந்து சாப்பிட்டும், தூக்கிட்டுக்கொண்டும் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

 புதிய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப் படுத்தப்பட்டப் பின் இந்தியாவில் 1995-ல் இருந்து 2014 வரை 2,96,438 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டுபோய் இருக்கிறார்கள். மகாராட்டிரத்தில் மட்டும் 1995-2003 வரை 23,902 பேரும் 2004-2013 வரை 36,848 பேரும் மொத்தம் 60,750 பேரும் மாண்டிருக்கிறார்கள்.

 தற்கொலை செய்துகொண்டவர்கள் யாரும் தனி நபர்கள் கிடையாது. அவர்களுக்கு என்று குடும்பங்கள் உண்டு. பெரும்பாலும் ஆண்களே தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆண்களைச் சார்ந்தே இந்திய சமூகத்தின் பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டிருப்பதால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலை அடுத்து எப்படி இருக்குமோ என்று நினைக்கும் போது நம்மால் நிலைகுலையாமல் இருக்கமுடியவில்லை.

 பருவத்தில் பயிரிடப்பட்டிருந்த கோதுமை, தானிய வகைகள், காய்கறிகள் போன்றவை பருவம் தவறி பெய்த மழையால் சேதப்பட்டதால்தான் இந்த தற்கொலைகள் நிகழ்ந்ததாக அரசும் ஊடகங்களும் கூறுகின்றன. இது எல்லாம் ஆளும் வர்க்கங்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள எப்போதும் கூறும் பொய்சாக்குகள். போன வருடம் 1981 விவசாயிகளும், 2013ல் 3146 விவசாயிகளும் மகாராட்டிரத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். அப்போதும் இதே போலவே பல பொய்யான காரணங்களை ஆளும் வர்க்கங்கள் கட்டிவிட்டன. தற்கொலை செய்து கொண்ட 2,96,438 விவசாயிகளும் சொர்க்கத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் அவர்களாகவே தற்கொலை செய்து கொண்டார்கள் என்றுகூட சொல்ல இந்த அயோக்கியர்கள் தயங்கமாட்டார்கள். விவசாயிகளின் உயிர்கள் என்பது அவர்களுக்கு வெறும் எண்ணிக்கை மட்டுமே.

 ஏறக்குறைய 90 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் 4000 கோடி ரூபாயை மட்டுமே மகாராட்டிர அரசு அறிவித்திருக்கின்றது. இதனைக் கணக்கிட்டால் ஒரு விவசாயிக்கு ஏக்கருக்கு ரூ. 1875 ரூபாய் மட்டுமே கிடைக்கும். விவசாயிகள் மீது மோடி அரசாங்கமும், பா.ஜ.க.வும் வைத்திருக்கும் பாசத்தின் விலை 1875 ரூபாய்கள். இதை வைத்துக்கொண்டு அந்த விவசாயி தன் குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். எவ்வளவு குரூரமான ஈனப்பிறவிகள் இவர்கள்! பத்து லட்சம் ரூபாய்க்கு கோட்டு வாங்கி போடும் மேனாமினுக்கி மோடி தன்கட்சி ஆளும் மாநிலத்தில் ஒரு விவசாயியின் வாழ்வை காப்பாற்றத் தரும் நிவாரணத்தொகை வெறும் 1875 ரூபாய்.

 மகாராட்டிர வருவாய்த் துறை மந்திரி ஏக்நாத் கட்சே விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க மாநிலம் முழுவதும் ஒவ்வொரு கிராமத்திலும் குழு அமைக்கப்படும் என்று சட்டசபையில் போன மாதமே அறிவித்திருக்கிறார். இந்தக் குழுவில் பஞ்சாயத்து தலைவர், டாக்டர்கள், படித்தவர்கள் இடம் பெறுவார்களாம். எவ்வளவு பெரிய கேலிக்கூத்து என்று பார்த்தீர்களா! டாக்டர்களும், படித்த அதிமேதாவிகளும், பஞ்சாயத்து தலைவர்களும் அங்கே போய் என்ன புடுங்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. விவசாயிகளின் தற்கொலைக்கான காரணங்கள் அப்பட்டமாக வெளியே தெரியும்போது இது போன்ற வேசித்தனமான நடிப்பை மகாராட்டிர அரசு செய்கின்றது.

 உண்மையில் விவசாயிகளின் தற்கொலையை அரசு தடுக்கவேண்டும் என்றால் காட் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியே வரவேண்டும். அதை இவர்கள் செய்வார்களா? ஒரு போதும் செய்யமாட்டார்கள். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வேண்டும். அதை இவர்கள் செய்வார்களா?ஒரு போதும் செய்யமாட்டார்கள். விவசாய விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். இவர்கள் செய்வார்களா? ஒரு போதும் செய்யமாட்டார்கள். இந்தக் கார்ப்ரேட் கட்சிகளின் உண்மையான நோக்கம் பன்னாட்டு முதலாளிகளையும், இந்திய தரகு முதலாளிகளையும் நக்கிப்பிழைப்பது. அவர்கள் தரும் நன்கொடையில் மஞ்சாகுளிப்பது. அப்படி இருக்கும் போது அவர்கள் எப்படி விவசாயிகளின் தற்கொலையைத் தடுப்பார்கள்.

 விவசாயிகளாகிய நீங்கள் சாவதில் எப்போதும் ஆளும் வர்க்கங்களுக்கு சந்தோசமே. ஏனெனில் நீங்கள் உயிரோடு இருந்தால்தானே போராடுவீர்கள். செத்துவிட்டால் பன்னாட்டு கம்பெனிகளுக்காக எளிமையாக நிலங்களை பிடுங்கிக்கொள்ளளாம். நிலங்களில் உள்ள வளங்களை கொள்ளையடிக்கலாம். சாகாமல் ஆளும் வர்க்கங்களை அச்சுறுத்துனீர்கள் என்றால் மான்சான்டோவை, ஜின்டாலை, டாட்டாவை, அதானியை கூப்பிட்டு அனைத்து முனைகளிலும் இருந்து உங்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடுவார்கள். வங்கியில் கடன்கள் கிடைக்கமால் முடக்கப்படும், விவசாயப் பொருட்களை கொள்முதல் செய்யாமல், அதனை தனியார் கம்பெனிகளிடம் முதலுக்கே மோசம் வருமாறு விற்க வைப்பார்கள். உங்களை மீள முடியாத கடனில் வீழ்த்துவார்கள். இறுதியாக உங்களைத் தானாகவே தற்கொலை செய்து கொள்ள வைப்பார்கள்.

 எனவே மக்களே! ஆளத்தகுதி இழந்து விட்ட, தன் சொந்த நாட்டு மக்களையே கொத்து கொத்தாக கொன்று போடும் இந்த பாசிச அரசு எந்திரத்தையும் அதன் கட்டுமானங்களையும் இனியும் நம்பப் போகிறீர்களா? இல்லை இதை வீழ்த்த புரட்சிகர சத்திகளோடு கைகோர்க்கப் போகிறீர்களா?

Pin It