periyar 408தமிழகத்தில் தற்போது மிகக் கொடூரமான சமூக சூழல் தலைவிரித்தாடுவதாகத் தோன்றுகிறது. தமிழகம் மட்டும் அல்லாமல் உலகத் தமிழகர்களின் சமூக நீதிக்காகவும் மானத்திற்காகவும் போராடிய மிகப் பெரும் ஆளுமையான சமூகப் போராளி பெரியார் இன்று கடுமையான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படுகிறார். பெரியாரின் பெயரைக் கூறுவதற்கே நடுங்கிக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் பெரியாரின் பெயரைக் கூறி ஆட்சி செய்யும் அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் நடுவீதிக்கு வந்து அவர்மீது களங்கங்களை வாரி இறைக்கிறார்கள். வாய்மூடி மவுனியாக இருக்கிறது தமிழக அரசு. பெரியாரை நேருக்கு நேர் சந்திக்கப் பயந்து ஓடி ஒழிந்த பார்ப்பனர்களும், அவர்களைத் தூக்கி பிடிக்கும் இந்துத்துவ கும்பல்களும் இன்று அவரின் சிலைகளின் மீதும், புகைப்படங்களின் மீதும் மோதுகின்றன.

நாட்டில் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் அடிமைச் சங்கிலியை உடைக்க வந்த பெரியாரின் புகைப்படத்திற்கு பிற்படுத்தப்பட்ட ஜாதியினரே மூத்திர அபிஷேகம் செய்தது எவ்வளவு பெரிய துரோகம்! தமிழன் குட்ட குட்ட குனிந்து கொண்டுதான் இருப்பான் என்பதற்கு இதைவிட வேறு என்ன பெரிய உதாரணம் இருக்க முடியும்? அடக்க நினைப்பவனிடமே மண்டியிடும் போக்கு எவ்வளவு குரூரமானது!

கடந்த 14ம் தேதி திராவிடர் கழகம் நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தைத் தொடர்ந்து இந்துத்துவ பயங்கரவாத கும்பல்கள் தமிழகத்தில் எத்தகைய வன்முறைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள்? தமிழகத்தில் மிகவும் மதிக்கப்பட வேண்டிய ஒரு தலைவர் இன்று இந்துத்துவ ஆதிக்க சக்திகளின் கைகளுக்குள் சிக்குண்டிருப்பதை அதிமுகவும் திமுகவும் அமைதியாக கவனித்துக் கொண்டிருப்பதில் இருந்தே இந்த இரு பேரியக்கங்களிலும் இந்துத்துவ சிந்தனையும், பிற்போக்கான மதவாதமும் எவ்வளவு தூரம் புரையோடிக் கொண்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடைபெற இருந்த தாலி சம்பந்தமான விவாதத்திற்கு இந்துத்துவ கும்பல் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த தொலைகாட்சி நிறுவனம் அவர்களிடம் மண்டியிட்டு அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தது. இதை அடுத்துதான் திராவிடர் கழகம் தாலி அகற்றும் போராட்டத்தையே அறிவித்தது. ஊடகத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும் ஆதரவாக களம் இறங்கிய திராவிடர் கழகத்திற்கு தமிழகத்தின் மிகப் பெரிய ஊடகங்கள் எதுவும் ஆதரவு தெரிவிக்காதது பெரும் வேடிக்கையாக உள்ளது. ஊடகத் துறையினர் களத்தில் இறங்கி தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான ஊடகங்கள் திராவிடர் கழகத்தை விமர்சனம் செய்வதிலேயே குறியாக இருந்தது எவ்வளவு பெரிய அநீதி. தமிழகத்தின் முக்கிய ஊடகங்கள் அனைத்தும் தந்தி டிவியின் பாண்டே போன்ற பச்சை ஆர்.எஸ்.எஸ் கும்பல்களின் கையில் சிக்கியுள்ளது ஆபத்தின் அறிகுறியாகவே தோன்றுகிறது.

இந்நிலையில் பாஜகவின் மேனாமினுக்கி ராஜா திராவிடர் கழகத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறுவது குரூரத்தின் உச்சக்கட்டமாகவே உள்ளது. பெரியாரை விமர்சிப்பதற்கு ஒரு தகுதி வேண்டாமா? நிதி நிறுவனம் நடத்தி பாஜககாரர்களிடமே மோசடியில் ஈடுபட்டு வரும் இந்த காலிகள் எல்லாம் பெரியாரை இகழக்கூடிய அளவிற்கு பலகீனமாகிவிட்டதா பெரியார் கொள்கைகள்? குண்டு வெடிப்பு, கலவரங்கள், கொலை, கொள்ளை, ஹவாலா, ஊழல் இவற்றோடு தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ், பாஜக உட்பட இந்துத்துவ அமைப்புகளை தடை செய்ய சர்வதேச அளவில் கோரிக்கை வலுத்துக் கொண்டிருக்கும்போது சமூக நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் திராவிடர் கழகத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்தப் பொறுக்கிகள் கூறுவது எவ்வளவு முரணாக உள்ளது!

தமிழகத்தில் பல ஆண்டுகளாக பிற்போக்கு சக்திகள், மதவாத சக்திகள் ஊடுருவ முடியாததற்கு பெரியாரின் சமூக நீதிப் போராட்டங்களே காரணம். தற்போது காட்டுமிராண்டித்தனமான பிற்போக்கு சக்திகள் வலுவடைந்து வருவதற்குக் காரணம், அந்தக் கொள்கைகளைத் தூக்கிப் பிடிப்பதற்கு வலுவான் அமைப்புகள் இல்லாததே. மதவாத பிற்போக்கு சக்திகளின் பின்னால் திராவிடம் பேசும் தலைவர்கள் நாக்கை தொங்கவிட்டு திரிந்ததன் விளைவே ராஜா போன்ற இரண்டாம்தர அரசியல் தரகர்களால் பெரியார் நடுவீதிகளில் விமர்சிக்கப்படுவது. இதை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் பெரியாரின் போராட்டங்களினால் விளைந்த அனைத்து சமூக நீதி கட்டமைப்புகளும் தகர்க்கப்படும் என்பது திண்ணம்.

- சாகுல் ஹமீது (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It