கடந்த ஏப்ரல் வாரம் பெருந்துறை சென்னிமலை பகுதியில் பல இடங்களில் ஜெயலலிதா படம் போட்ட பல தட்டிகள் திடீரென முளைத்தன.

perundurai admk 1

தட்டியில் இருந்த வாசகம் இதுதான்....

============================================================

நன்றி ! நன்றி !! நன்றி !!!

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கோகோ கோலா குளிர்பான கம்பெனி அமைந்தால் விவசாயத்திற்க்கும், பொதுமக்களுக்கும், பாதிப்பு ஏற்படும்
என்ற எங்கள் கோரிக்கை ஏற்று

கோகோ கோலா குளிர்பான கம்பெனி அமைவதை பரிசீலனை செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த,

மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் எங்கள் கோரிக்கையினை மாண்புமிகு அம்மா அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற

பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர், தமிழக சுற்றுசூழல் அமைச்சர் மாண்புமிகு தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் அவர்களுக்கு

எங்கள் மனமார்ந்த நன்றி!

பெருந்துறை சென்னிமலை பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பெருந்துறை பசுமை இயக்கம்.
============================================================================

உண்மையில் சட்டமன்றத்தில் மார்ச்-30 அன்று சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.பாலகிருட்டிணன் அவர்கள் கோகோ கோலா ஆலைக்கு அரசு நிலம் வழங்கப்பட்டது உண்மையா என கேள்வி எழுப்பிய போது, தொழில்துறை அமைச்சர் ஆம் எனத் தெரிவித்தார். பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் அவர்கள் கோகோ கோலா ஆலை பற்றி எந்த தெளிவான அறிவிப்பும் செய்யவில்லை. உண்மையில் கேள்வியைக் கண்டு அலறி அடித்து, இன்னும் கோக் ஆலை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பிக்கவே இல்லை, விண்ணப்பம் வந்தால் அம்மாவின் கவனத்திற்க்கு கொண்டு சென்று பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று மட்டும் கூறினார்.

கடந்த டிசம்பர்-2014 முதல் கோகோ கோலா ஆலை பிரச்சினை பெருந்துறை, சென்னிமலை பகுதியில் கொழுந்து விட்டு எரிகிறது. மக்கள் அனைவரும் போராட்டக் களத்திற்க்கு வந்து தங்கள் கடும் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள். கடையடைப்பு, உண்ணாநிலைப் போராட்டம், கோக் ஆலை கட்டிடம் கட்ட எதிர்ப்பு, கருத்துக் கேட்பு கூட்டத்தில் ஆலைக்கு எதிர்ப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆலைக்கும், ஆலைக்கு ஆதரவாக பேசிய அதிகாரிக்கு எதிர்ப்பு, சுற்றுச்சூழல் அமைச்சர் செல்லும் இடத்தில் எல்லாம் அவரது உறவினர்கள் ஆலைக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சருக்கு எதிர்ப்பு என தொடர்கிறது. பல்வேறு வடிவங்களில் அரசின் அச்சுறுத்தல், மிரட்டல் என எதற்க்கும் அஞ்சாமல் மக்கள் போராடி வருகிறார்கள். பெருந்துறை, சென்னிமலை பகுதியில் பேரணி -பொதுக்கூட்டம் என திட்டமிட்டு மாவட்டம் முழுக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தற்போது அனைத்து கட்சிகளையும் இணைத்துக் கொண்டு பெருந்துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் ஏப்ரல் மாத இறுதியில் பெருந்துறையிலும், மே மாத தொடக்கத்தில் சென்னிமலையில் புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினரும், கோக் ஆலையை எதிர்த்து பேரணி-பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்து, மக்களிடையே விரிவான பரப்புரை செய்து வருகின்றனர். இதில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

- ஆலைக்கு 71.34 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ள தமிழக அரசு,

- ஏக்கருக்கு ரூபாய் ஒன்று வீதம் 99 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டு உள்ள அரசு,

-ஆலைக்கு 35 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் ஆற்றில் இருந்து எடுக்க அனுமதி கொடுத்த அரசு,

- லிட்டருக்கு தண்ணீர் 4 பைசா என ஒப்பந்தம் போட்ட அரசு,

-கோக் ஆலை 10 இராட்சச ஆழ்குழாய் கிணறு தோண்டும் போது கண்டு கொள்ளாத அரசு,

- கோக் ஆலை சுற்றுச்சுவர் அமைக்கும் நோக்கத்துடன் முள்வேலியை அகற்றியபோது கண்டுகொள்ளாத அரசு,

- கோக் ஆலையை எதிர்த்த மக்கள் உறுதியாக போராடிய போது மாவட்ட நிர்வாகத்தையே அனுப்பி சமாதானப்படுத்த முயன்ற அரசு,

- எப்படியாவது மக்கள் போராட்டத்தை முடக்கி ஆலையை தொடங்க வைத்து விடலாம் என கருத்துக் கேட்புக் கூட்டம் வரை நடத்திய அரசு,

- போராடும் அமைப்புகளுக்கும்,போராட்ட முன்னணியினருக்கும் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் அரசு,

- கோக் ஆலையை எதிர்த்து யார் எந்த போராட்டம் நடத்தவேண்டும் என்று கேட்டாலும் உள்ளூரில் அனுமதி மறுத்து அதனால் உயர்நீதிமன்றம் சென்றே உத்தரவு பெறவேண்டும் என செயல்படும் அரசு,

இப்படி அப்பட்டமாக கோக் ஆலைக்கு ஆதரவாக செயல்பட்டுவிட்டு, இதுவரை அனுமதி கேட்டு அரசையே அணுகவில்லை எனக் கூறியதன் மூலம் தமிழக அமைச்சர், உண்மையில் கொக்கோ-கோலா ஆலையின் ஏவலாட்களாகவே செயல்பட்டு வருகின்றனர் என்பதை உணர முடியும்.

சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அவர்கள், கோகோ கோலா ஆலை விவகாரத்தில் மக்களுக்கு எதிராக உள்ள தனது வேடம் கலைந்து அம்பலமாவது கண்டு தற்போது அஞ்சி நடுங்குகிறார்.

perundurai admk 2

அதனால்தான் இதுவரை கோக் ஆலையை எதிர்த்து அமைச்சர் எதுவுமே செய்யாமல் இருந்தும் கூட, கோகோ கோலா குளிர்பான கம்பெனி அமைவதை பரிசீலனை செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தும், அம்மா கவனத்திற்குக் கொண்டு சென்ற அமைச்சருக்கு நன்றி, நன்றி என சென்னிமலை-பெருந்துறையில் தட்டிகள் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பசுமை இயக்கம் என்ற பெயரில் அமைச்சரின் விருப்பத்தின் பேரில் அமைச்சரின் ஆட்கள் வைத்துள்ளனர்.

இப்படி அமைச்சரின் கைத்தடிகள் தட்டி வைத்துள்ளதே, மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

ஆனால் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அவர்கள் இது போன்ற போலியான விளம்பரங்களால் தனது தவறை மூடி மறைக்க முடியவே முடியாது!

இப்பிரச்சினை தொடங்கியது முதல், அமைச்சர் தொடர்ந்து காவல்துறையை வைத்து போராட்டங்களுக்கு அனுமதியை மறுப்பது, போராட்டக்காரர்களை காவல்துறை மூலம் மிரட்டுவது, மறைமுகமாக மிரட்டல், பேரம், சலுகை என அனைத்து வழிகளையும் சாம, பேத, தான, தண்ட வழிகளில் இப்போராட்டத்தை முறியடிக்க முயற்சிக்கிறார். தனது முயற்சி வெற்றியடையவில்லை என்றவுடன் இப்படி தில்லாலங்கடி (மக்களை ஏமாற்றுவது) வேலை செய்து தனக்குத் தானே தட்டி வைத்துக் கொள்கிறார்.

இந்த தட்டி வைத்தது யார், எந்த அமைப்பினர் அமைச்சரிடம் எப்போது 'பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கோகோ கோலா குளிர்பான கம்பெனி அமைந்தால் விவசாயத்திற்கும், பொதுமக்களுக்கும், பாதிப்பு ஏற்படும், எனவே அதை மூட வேண்டும்' என மனு கொடுத்தனர் என சொல்ல முடியுமா என்று கேட்டால் முடியவே முடியாது என்பது மட்டும்தான் உண்மை.

இதே அமைச்சர்தான் கெயில் பைப் லைன் பதிப்பதை எதிர்த்து போராட்டம் சிறுக்களஞ்சியில் தொடங்கிய போது நாளிதழிலுக்கு 09-02-2013 அன்று கொடுத்த பேட்டி மறுநாள் (10-02-2013) கீழ்க்கண்டவாறு வெளிவந்தது. "குழாய் வழியாக எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் தொடர்பாக அரசியல்வாதிகள் பின்னும் சதிவலையில் விவசாயிகள் சிக்க வேண்டாம்" என்று, வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரோடு அருகே பெருந்துறையில் அவர் (09-02-2013 ) செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:

"கேரள மாநிலம், கொச்சியில் இருந்து பெங்களூர் வரை குழாய் வழியாக எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இத்திட்டத்துக்கான நிலம், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கையகப்படுத்தப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது.

இதுபோன்ற முன்னோடித் திட்டங்களை குஜராத் மாநிலம் பல ஆண்டுகளுக்கு முன்னரே செயல்படுத்தியதால் தான் வளர்ச்சி பெற்று வருகிறது. இத்தகைய திட்டங்களால் மக்களுக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும்; ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு எரிவாயுவைக் கொண்டு செல்வதும் எளிதாகும். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே சிறுகளஞ்சி என்னும் இடத்தில் இத்திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. ஆனால், இத்திட்டத்துக்கு ஒரு சில அரசியல் கட்சியினர் தேவையற்ற எதிர்ப்புத் தெரிவித்து, பீதி கிளப்பி வருகின்றனர்.

அரசியல்வாதிகள் பின்னும் சதி வலையில் விவசாயிகள் சிக்கிக் கொள்ள வேண்டாம். நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு குறித்து ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இழப்பீடு குறைவாக இருப்பதாக விவசாயிகள் கருதினால், வருவாய்த் துறை அதிகாரிகளிடம் முறையிடலாம்.

அரசின் வழிகாட்டு மதிப்பில் இருக்கும் அதிகபட்சத் தொகையை, இழப்பீட்டுத் தொகையாக வழங்குமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்துக்கு விவசாயிகள் பெருமளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அரசியல் கட்சியினர் சிலர் தான் விவசாயிகளைத் தூண்டி விடுகின்றனர். விவசாயிகளின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் நிச்சயம் நிறைவேறும்" என்றார்.

மக்களின் உறுதியான போராட்டம் தொடர்ந்தது. சென்னை உயர்நீதிமன்றம் (26-02-2013) அன்று கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்திரவிட்டது.

உடனே கெயில் நிறுவனத்துடன் 2011-இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஒரே பல்டி அடித்து, "கொச்சி - சேலம் - பெங்களூரு மார்க்கமாக எரிவாயுவை குழாய் மூலம் எடுத்துச் செல்லும் திட்டத்தின்படி தற்போது பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் இப்பகுதி விவசாயிகளின் விருப்பத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் நடப்பதாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இது தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும், விவசாயிகளின் கருத்துக்களை முதலில் கேட்டறிவது அவசியம்" (27-02-2013) என்று கூறினார் முதல்வர். பிப்'09 அன்று கா(ஏ)வல்துறையை சார்ந்த 2000 காவலர்களை வைத்து, நீதிமன்ற உத்தரவை காலில் போட்டு மிதித்து, உழவர்களை மிரட்டி கெயில் நிறுவன வேலைகளை செய்து கொடுத்த தமிழக அரசு, வேறுவழியின்றி பின் வாங்கி மக்களுக்காக நிற்பது போல் நடித்தது.

மக்கள் போராட்டத்தை எப்போதெல்லாம் காவல்துறையை ஏவியும், பொய் வழக்கு போட்டும் அரசால் அடக்க முடியவில்லையோ அப்போதெல்லாம் அந்தப் போராட்டதை தானும் ஆதரிப்பது போல் நடிப்பார், பின்பு சமயம் பார்த்து போராட்டத்தை அடக்குவார் ஜெயலலிதா அவர்கள். (கூடங்குளம், ஈழம், மூவர் தூக்கு, கெயில், மீத்தேன்...). அதிமுக எப்போதெல்லாம் தோல்வியில் விளிம்பில் வருகிறதே அப்போதெல்லாம் ஜெயலலிதா திருந்தியது போல் ஒரு பிரம்மையை மக்களிடம் உருவாக்குவார்; நடிப்பார். இப்போதும் அதே நிலைதான் தற்போதும் கோக் பிரச்சினையில் ஏற்பட்டு உள்ளது.

எனவே, பெருந்துறை சிப்காட் கோகோ கோலா கம்பெனி ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்து செய்வது ஒன்று மட்டுமே அரசுக்கு சிக்கலைத் தீர்க்கும் ஒரே வழி. வேறு வித்தைகள் எது செய்தாலும் தமிழக அரசு மக்களிடம் மேலும் மேலும் அம்பலப்படவே செய்யும். மக்கள் போராட்டம் தொடரும். எனவே,

தமிழக அரசே !...

* கோகோ கோலாஆலைக்கு கொடுத்த அனுமதியை உடனே ரத்து செய்!

* மக்களின் போராட்டங்களை திசை திருப்ப நடிக்காதீர்!!

* எங்கள் மண்ணை, நீரை, வளத்தை அழிக்காதீர்!!!

Pin It