coca cola agitation

பெருந்துறை கோக்கோ கோலா ஆலைக்கு கடந்த ஜனவரி-2014-இல் தமிழக அரசு கொடுத்த அனுமதியை ரத்து செய்துள்ளதாக சிப்காட் நிர்வாக இயக்குனர் அவர்கள் கையொப்பம் இட்ட (20-04-2015) உத்தரவு 21-04-2015) மதியம் அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த செய்தி வெளிவந்த விதமே மிகுந்த கண்டனத்திற்கு உரியது.

செய்தியை தமிழகத்தின் முதல்வரோ, அல்லது இதற்குப் பொறுப்பான தொழில்துறை அமைச்சரோ, உள்ளூரைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் சுற்றுச்சூழல் அமைச்சருமான தோப்பு. வெங்கடாசலம் அவர்களோ தெரிவிக்கவில்லை. மாவட்ட ஆட்சித் தலைவரும் தகவல் தெரிவிக்கவில்லை. சிப்காட் அதிகாரியும் தெரிவிக்கவில்லை.

ஏதோ ரகசிய ஆவணம் வெளியாவது போல, இன்று காலை முதல் அனைத்து பத்திரிக்கையாளர்களும் இந்த உத்தரவு போடப்பட்டது உண்மையா? இதை யாரிடம் பெறுவது என மதியம் வரை பல இடங்களுக்கும் போராட்டக்காரர்கள் அலைந்தனர். எந்த அதிகாரியும் இதற்கு பதில் சொல்லத் தயார் இல்லை. அமைச்சர்கள் தொலைபேசியை தொடவே மறுத்து விட்டார்கள்.

ஊழல் குற்றவாளியான முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டும் எனச் சொல்லி 8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், சில அதிகாரிகளும் செய்து வரும் எண்ணற்ற கூத்துகளை படம் எடுத்து, அது பத்திரிக்கையிலும், தொலைக்காட்சியிலும் வெளிவர வேண்டும் என மெனக்கெட்டு எண்ணற்ற வேலை செய்யும் இவர்கள், மக்கள் போரட்டத்தால் வேறு வழியின்றி மூடப்படும் அமெரிக்க கோக் ஆலை மூடல் செய்தியை வெளியே சொல்ல அவ்வளவு பயப்படுகிறார்கள். அமெரிக்க கோக் கம்பெனிக்கு அவ்வளவு விசுவாசமாக உள்ளனர்.

மக்களின் தொடர்ந்த உறுதியான ஐந்து மாதப் போரட்டத்திற்குப் பின்பு, இனி மேல் கோக்கோ கோலா ஆலை கட்டத் தொடங்கினால் கடுமையான நெருக்கடி ஏற்பட்டு, ஆளும் அ.இ.அ.தி.மு.க. அரசுக்கு பெரும் சரிவு இப்பகுதியில் ஏற்பட்டு, அக்கட்சியே கலகலத்துப் போய்விடும் என்ற அச்சத்திலேயே, பெருந்துறை கோக்கோ கோலா ஆலைக்கு தமிழக அரசு கொடுத்த அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

ஆளும் அ.இ.அ.தி.மு.க. அரசு முறையாக, ஜனநாயகப்பூர்வமாக எதை செய்யவும் தயாராக இல்லை என்பதை அரசு இன்று அறிவித்த விதமே வெளிப்படுத்துகிறது.

ஏற்கனவே இரண்டு முறை மிகக் கடுமையாக பிரச்சினைகளை சிப்காட் பகுதி எதிர்கொண்டு உள்ளது.

1. 2009 -இல் பெருந்துறை சிப்காட் வளாகத்தை 1100 ஏக்கர் அளவுக்கு விரிவுபடுத்துவது என கம்புளியம்பட்டி உட்பட பல்வேறு கிராமப் பகுதியை உள்ளடக்கிய திட்டத்தை அரசு கொண்டு வந்தது. ஓராண்டுக்கு மேல் தொடர்ச்சியாக எண்ணற்ற வடிவங்களில் பல்வேறு போராட்டங்களை அப்பகுதி மக்களும், விவசாயிகளும் தொடர்ந்து நடத்தி “எங்கள் நிலத்தை இழக்க மாட்டோம்” என உறுதியாகப் போராடினர். இதன் விளைவாக தமிழக அரசு மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்தது. சட்டமன்றத்திலேயே அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள் “சிப்காட் வளாக விரிவாக்கத் திட்டத்தை” கைவிடுவதாக அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மக்கள் போராட்டம் சிப்காட் வளாக விரிவாக்கத் திட்டத்தை விரட்டியடித்தது.

2. 2010ஆம் ஆண்டு பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 8 மாவட்ட ஆபத்தான நச்சுக்கழிவுகளை கொண்டு வந்து அதை சுத்திகரிப்பு செய்யும் “நச்சுக்கழிவு மேலாண்மைத் திட்டம்” என்பது அரசால் கொண்டுவரப்பட்ட போது நாங்கள் கடுமையாக எதிர்த்துப் போராடி கருத்துக் கேட்பு நிலையிலேயே விரட்டியடித்தோம்.

3. மூன்றாவதாக, 2014- ஜனவரியில் ஒப்பந்தம் போட்டு டிசம்பரில் வேலையைத் தொடங்கிய கொகோ கோலா நிறுவனம், மக்களின் தொடர்ந்த போராட்டத்தின் விளைவாய் இன்று அரசால் ரத்து செய்ய வைக்கப்பட்டு உள்ளது.

இனிமேலாவது அரசு மக்களுக்கு மதிப்புக் கொடுத்து...

1. சிப்காட் பகுதியில் ஆபத்தான, மாசுபடுத்தக்கூடிய, மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக் கூடிய எந்தத் தொழிற்சாலைகளையும் கொண்டு வரக்கூடாது.

2. வெளிநாடுகளில் காலங்கடந்த தொழில் நுட்பக் கருவிகளையும், வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட தொழில்களையும் எக்காரணம் முன்னிட்டும் கொண்டு வரக் கூடாது.

3. கர்நாடகப் பகுதியில் இருந்து பல நூறு ஆண்டுகளாக காவிரி ஆற்றில் சுமார் 400 டி.எம்.சி வரை பெற்று வந்தது தமிழகம் (15 மாவட்ட குடிநீர் -25 லட்சம் ஏக்கர் விவசாயம்). 2007 -இல் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பால் 192 டி.எம்.சி என அது சுருங்கியது. அந்த 192 டி.எம்.சி நீரும் கர்நாடக அரசு அங்கு உள்ள அணைகளில் தேக்கி வைக்க முடியாத நிலையில்தான் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு வருகிறது. 2007-இல் இருந்து இதுவரை 2 முறை மட்டுமே கர்நாடகம் தமிழகத்திற்கு 192 டி.எம்.சி கொடுத்துள்ளது என்பதுதான் உண்மை. அதுவும் உரிய முறைப்படியான காலத்தில் தண்ணீர் கொடுக்கப்படவில்லை . இதனால் தமிழகம் காவிரி வடிகாலாக மட்டுமே மாற்றப்பட்டு உள்ளது. காவிரி டெல்டா பாசனம் 25 லட்சம் ஏக்கரிலிருந்து தற்போது 14 லட்சம் ஏக்கர் என சுருங்கியும், முப்போகம் என்பது ஒரு போக சாகுபடியாகவும் மாற்றப்பட்டு விட்டது.

காவிரியில் தண்ணீர் இல்லாத போது இது போன்ற ஆலைகளுக்கு, கீழ்பவானி ஆற்று நீர்ப் பகுதியில் உள்ள சிப்காட்டில் இடம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் கீழ்பவானி அணை நீரால் பாசனம் பெரும் ஈரோடு - கருர் - திருப்பூர் மாவட்டங்களின் 2.5 லட்சம் ஏக்கர் பாசனம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே சிப்காட் ஆலைகளுக்கு தண்ணீர் கொடுக்க 2000 ஆம் ஆண்டு வாக்கில் போடப்பட்ட, புது திருப்பூர் மேம்பாட்டு நிறுவனத் (New Tirupur Area Development Corporation Limited (NTADCL)) திட்டத்தை இப்போது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அடிப்படையில் மறுபரிசீலனை செய்து புது ஒப்பந்தம் போடப்பட வேண்டும். இல்லையெனில் வருங்காலத்தில் காவிரி, கீழ்பவானி நீர் இந்த நாசகார ஆலைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு விவசாயம் முழுக்க அழியும் நிலை ஏற்படலாம்.

4. சிப்காட் பகுதியில் ஆபத்தான, மாசுபடுத்தக்கூடிய, மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக் கூடிய தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய, அதிகாரிகள்- விவசாய அமைப்புகள்- சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து அடிக்கடி ஆலை ஆய்வுப் பணி நடைபெற வேண்டும். (ஏற்கனவே ஒரு முறை இப்படி அமைக்கப்பட்டு தொடந்து இயங்காமல் போனது)

5. சிப்காட் பகுதியில் உள்ள ஆபத்தான, மாசுபடுத்தக்கூடிய, மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக் கூடிய தொழிற்சாலைகளினால் ஏற்பட்ட சுற்றுசூழல் பாதிப்பு, கிணறு- ஆழ்குழாய் கிணறுகள்- குளங்கள் பாதிப்பு, விவசாயம் பாதிப்பு, மக்களின் உடல்நல பாதிப்பு இவைகளை ஆய்வு செய்ய சுதந்திரமான, சுயேட்சையான குழுக்களை அமைத்து மதிப்பீடு செய்ய வேண்டும். (இப்படி கேரளா பிளாச்சிமாடாவில் அமைக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது ). அதன் அடிப்படையில் அனைவருக்கும் அரசு தகுந்த நிவாரணமும், எதிர்கால பாதுகாப்பும், பாதிப்புக்கு உள்ளாக்கிய நிறுவனங்களில் இருந்து பெற்றுத்தர வேண்டும். இதை போர்க்கால அரசு அடிப்படையில் செய்ய வேண்டும்.

6. சிப்காட் பகுதியில் உள்ள ஆபத்தான, மாசுபடுத்தக்கூடிய, மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக் கூடிய தொழிற்சாலைகளினால் ஏற்படும் பாதிப்பை எதிர்த்துப் போராடக்கூடிய மக்கள் அமைப்புகளை காவல்துறையை வைத்து அச்சுறுத்துவதை நிறுத்துவது; தங்களது கருத்துக்களை வெளியே சமூகத்திற்கு சொல்லும் வகையில் போராட்டங்களை தடை செய்யாமல் அனுமதிப்பது; மக்களின் பிரச்சினைகளுக்காகப் போராடுபவர்களை அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் அழைத்துப் பேசுவது; போராட்டங்களையும், போராட்டக்கார்களையும் சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஆளும் கட்சியினர் ஈடுபடாமல் இருப்பது போன்ற முறைகளைப் பின்பற்றி இந்த பெருந்துறைப் பகுதி ஜனநாயகப்பூர்வமாக இயங்கும் அமைதி நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும்.

7. சிப்காட் பகுதி மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப தொழிற்சாலைகளைக் கொண்டு வர வேண்டும். மக்களின் கருத்தைக் கேட்டே இனி எவ்வித ஆலைகளும் வர வேண்டும்.

8. தமிழகம் முழுக்க உள்ள அனைத்து கோக், பெப்சி ஆலைகளுக்கு கொடுத்த அனுமதியை அரசு ரத்து செய்ய வேண்டும். இனி மேல் தமிழகத்தில் இந்த நிறுவன ஆலைகளுக்கு அனுமதி கொடுப்பதில்லை என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும்.

இத்தகு நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை எனில், வருகின்ற காலங்களில் ஆட்சியாளர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்றுக் கொடுப்பார்கள்.

இப் போராட்டத்தை தொடர்ந்து உறுதியுடன் முன்னெடுத்த அனைவருக்கும்,

இப் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்த அனைத்து மக்களுக்கும்,

போராட்டத்தின் நியாயத்தை உலகெங்கும் எடுத்துச் சென்ற அனைத்து ஊடகவியல் நண்பர்களுக்கும்,

எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

மக்கள் போரட்டம் தொடரட்டும் ! நாசகார திட்டங்கள் ஒழியட்டும்!!

இயற்கையை பாதுகாப்போம்... மனிதகுலத்தை விடுவிப்போம்...

Pin It