இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான குஜராத்தி மார்வாடி கௌதம் அதானி, சுமார் 137 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்களுடன் உலகின் மூன்றாவது பணக்காரராக முன்னேறியுள்ளார். தற்போது இவருக்கு முன்பாக டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் எலோன் மஸ்க் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஆகிய இருவர் முறையே முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் தான் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி ஆசியாவின் முதல் பணக்காரர் என்று உயர்ந்ததோடு, உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

adani and modiபெரிய வணிக பின்புலம் எதுவும் இல்லாமல், டாடா, பிர்லா போல பரம்பரை பணக்காரரும் இல்லாமல், 1988ம் ஆண்டு முதல் தான் வணிகம் புரிய தொடங்கிய கெளதம் அதானியால் இத்தனை குறுகிய காலத்தில் எவ்வாறு உலக பணக்காரர் வரிசையில் மூன்றாம் இடம் பிடிக்க முடிந்தது? பள்ளி படிப்பை பாதியிலே இடைநிறுத்திய அவர் முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் போல எதையும் புதிதாக கண்டுபிடித்து பெரிய லாபம் அடையவும் இல்லை எனும் போது மோடி போன்ற நண்பர் ஒருவர் கிடைத்தால் எதையும் சாதிக்கலாம் என நிரூபித்து உள்ளார்.

உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்த அதானி, குஜராத் முதல்வராக மோடி இருந்த காலம் முதல் அவருடன் நெருங்கிய நட்பில் இருந்து வருவதும், மோடி குஜராத் முதல்வரான பின்புதான், அதானியின் தொழிலும் வணிகமும் உயர பறக்க தொடங்கிது எனவும் "பில்லியனர் ராஜ்" என்ற புத்தகத்தில் ஜேம்ஸ் கிராப்ட்ரீ என்பவர் குறிப்பிடுகிறார்.

மோடியின் வணிக ஆதரவுக் கொள்கைகள் அதானியின் வணிக விரிவாக்கத்துக்கு பெரிதும் உதவின என்றால் அது மிகையல்ல. அதானியின் பல வணிக விரிவாக்கங்கள் மற்றும் தொழில் வளர்ச்சிகளே மோடியின் குஜராத் மாடலாக நமக்கு காட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாமெல்லாம் நமக்கென்று ஒரு சொந்த வீடு கூட அமைத்து கொள்ள இயலாத நிலையில், தனக்கென தனியே ரயில்வே தடங்களையும், தனி மின் நிலையங்களையும் அமைத்துக் கொண்டவர் அதானி என்றால் நம்ப முடிகிறதா? ஆம், இந்தியாவிலேயே சுமார் 300 கிமீ நீளத்துக்கு தனியார் ரயில் பாதைகளைக் கொண்டிருக்கும் ஒரே நிறுவனம் அதானிதான் என அவர்களின் இணையதளத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ரயில் பாதைகள், அவர்களின் துறைமுகம், சுரங்கங்கள் மற்றும் வியாபார சந்திப்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் ஏலம் விடப்பட்ட 5G அலைக்கற்றையை 212 கோடிக்கு வாங்கிய நிறுவனம் அதனை வாங்கிய பிற நிறுவனங்களைப் போல பொதுப்பயன்பாட்டிற்காக அல்லாமல் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு வைத்துக்கொள்ளவிருக்கிறது.

அதேபோல இந்தியாவில் மிகப் பெரிய தனியார் அனல் மின் நிலையம் வைத்திருப்பவரும் அதானிதான். குஜராத், கர்நாடகா மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் போன்ற பல மாநிலங்களில் 12,450 மெகா வாட் மின்சாரம் தயாரிக்குமளவு திறனைக் கொண்டுள்ளது அதானி அனல்மின் நிறுவனம். அதோடு அவர் இந்த அனல்மின் நிலையத்தின் எரிபொருள் தேவைக்காக இந்தோனேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நிலக்கரி சுரங்கங்களையும் நடத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி பகுதியில் உள்ள அதானி நிலக்கரி சுரங்கத்தை எதிர்த்து பூர்வகுடி மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அதானியை வெளியேற்றக் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மும்பை போன்ற பெருநகரங்களில் மின்சார விநியோகத்தை மேற்கொண்டும் வருகிறது. கொரான காலத்தில் அதிக மின்கட்டணம் வசூலித்தது குறித்து நடிகர்-நடிகைகளே புகாரளிக்கும் நிலைக்கு சென்றது குறிப்பிடத்தக்காது. அதேபோல் பல விமான நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை அதானி நிறுவனம் பெற்றுள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையத்தை கேரள அரசே எடுத்து நடத்திக்கொள்ள அனுமதி கேட்டும், அது அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது சர்ச்சையானது. இதே போல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள ரீயூனியன் என்ற குட்டி நாட்டில் உள்ள விமான நிலையம் அதானி கட்டுப்பாட்டில் செயல்படுதை எதிர்த்து அந்நாட்டு அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராடுகின்றனர்.

அதானி - மோடி நட்பு!

குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை பெற்றபின்பு தான் அவர் வளரத் தொடங்கியுள்ளார். 2000-ம் ஆண்டில் சிங்கப்பூர் வில்மர் நிறுவனத்துடன் இணைந்து சமையல் எண்ணெய் விற்பனை, அதைத் தொடர்ந்து 2001ல் சமையல் எரிவாயு விநியோகம், அதன் பிறகு மின்சார உற்பத்தி, இயற்கை வளங்கள், போக்குவரத்து, மின் பகிர்மானம், பாதுகாப்பு, பழங்கள், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள், வீட்டு கடன் சேவைகள், விமான நிலைய நிர்வாகம், மெட்ரோ ரயில் சேவை, டேட்டா சென்டர்... என எல்லாமுமாக இன்று விளங்குகிறார்.

மோடியுடனான நெருங்கிய நட்பு தான் அதானிக்கு அரசு தரப்பில் இருந்து அதிகப்படியான உதவிகள் கிடைக்க முக்கிய காரணம். அதில் முக்கியமானது குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை நிர்வகிக்க அதானியிடம் கொடுக்கப்பட்டது. அதோடு முந்த்ரா துறைமுகத்தின் வளர்ச்சியும் மோடியின் குஜராத் மாடலின் வெற்றியாக நமக்கு காண்பிக்கப்பட்டது.

அதானி மோடிக்கு மிகவும் விசுவாசமாக இருந்துள்ளார், இருக்கிறார். 2002ல் குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த மிகப்பெரிய இனப்படுகொலையின் போது மோடி கடுமையான பொது விமர்சனத்தை எதிர்கொண்ட நிலையில், அதானி மோடிக்கு ஆதரவாக பேசியதோடு அவரை பாதுகாத்தது குறித்து வெளியான செய்திகள் குறிப்பிடத்தக்கது. மேலும், மோடி 2003-ல் முன்னெடுத்த வைப்ரண்ட் குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மோடி எதிர்பார்க்காத அளவில் 15,000 கோடி அளவில் அதானி முதலீடு செய்வதாக அறிவித்தார். பதிலுக்கு மோடி, முந்த்ரா துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக 15,946.32 ஏக்கர் நிலத்தினை ஒரு சதுர மீட்டர் ரூ.1 முதல் ரூ.32 வரைக்கும் அடிமாட்டு விலைக்கு கொடுத்துள்ளார். இதில் 51% இடங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. அன்று முதல், மோடி குஜராத் முதல்வராக இருந்த போதும், இன்று இந்தியாவின் பிரதமராக இருந்த போதும், தனது அதீத நட்பை விசுவாசத்தை அதானியிடம் காட்டி வருகிறார்.

2006-ம் ஆண்டு தனது முந்த்ரா துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் 8.6% பங்குகளை விற்றதில் குறைந்தபட்சம் 200 கோடி அதானி இலாபம் அடைந்தார். இது முந்த்ரா துறைமுகத்தின் பங்குகளுக்கு குஜராத் அரசு வழங்கிய விலையை விட 14 மடங்கு அதிகமாகும்.

2012-ல் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து CAG ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. அது, குஜராத் அரசு பெட்ரோலிய நிறுவனத்திடமிருந்து இயற்கை எரிவாயுவை வெளி சந்தையில் வாங்கி, வாங்கிய விலையை விட குறைந்த விலைக்கு அதானி நிறுவனத்திற்கு விற்றது. இதன் மூலம் அந்நிறுவனம் 70.5 கோடி ரூபாய் லாபமடைந்தது. 2009-12 இடையே ஒப்பந்தபடி குஜராத் அரசு மின் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய மின்சாரத்தை அதானி மின் நிறுவனம் வழங்காததால் 240 கோடி தண்டம் வசூல் செய்ய வேண்டிய இடத்தில் வெறும் 79.8 கோடி மட்டுமே மோடி அரசு வசூல் செய்தது.

அதேபோல அதானி குழுமம் முறையாக சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் முந்த்ரா துறைமுகத்தில் தன் சிறப்பு பொருளாதார மண்டலத்தை விரிவாக்கம் செய்வதாக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. ஆனால், மோடி பிரதமரான பின்பு 2014-ம் ஆண்டு அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு (Adani Ports and SEZ Ltd) எல்லா அனுமதிகளும் எளிதாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

2014-ல் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்காக மோடி, அதானி குழும நிறுவனமான கர்னாவதி ஏவியேஷனின் EMB-135BJ Embraer விமானத்தில் பயணித்து சுமார் 150 பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டதாகவும், கிட்டத் தட்ட 2.4 லட்சம் கிலோ மீட்டர் பயணித்ததாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி குறிப்பிடுகிறது. அப்போதே எதிர்கட்சிகள் இதை சுட்டிக்காட்டி விமர்சனங்களை முன்வைத்து கண்டித்துள்ளன.

2014-ல் மோடி பிரதமரான பின், இந்திய பிரதமராக பிரிஸ்பன் நகரில் நடந்த G20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவருடன் அதானியும் சென்றது குறிப்பிடத்தக்கது. அதோடு ஆஸ்திரேலியாவில் அதானியின் நிலக்கரி சுரங்கத்துக்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 1 பில்லியன் டாலர் கடன் கொடுப்பதாக அறிவித்தது என்பதை G20 பயணத்தின் போதே அதானி அறிவித்தார். இத்தனைக்கும் இந்த நிலக்கரி சுரங்கத்துக்கு அனுமதி கொடுக்ககூடாது என அப்போது ஆஸ்திரேலியாவின் பல சுற்றுச்சூழல் அமைப்புகளும் மக்களும் கடுமையாக எதிர்த்த போதும் SBI வங்கி கடன் கொடுக்க முன்வந்தது என்றால் அவருக்கு மோடி அரசுடனான செல்வாக்கு புரியும்.

அதேபோல முந்த்ரா துறைமுகத்திற்கு பிறகு அதானி, இந்தியாவில் சென்னை காட்டுப்பள்ளி, எண்ணூர், காரைக்கால் உள்ளிட்ட பல துறைமுகங்களை வாங்கியுள்ளார். இவ்வாறாக மோடி அவரை இந்தியாவின் மிகப் பெரிய துறைமுக முதலாளியாக்கி இருக்கிறார்.

"இந்தியாவில் கையாளப்படும் ஒட்டுமொத்த சரக்கில் சுமார் 25 சதவீதத்தை அதானி குழும நிறுவனங்கள் கவனித்துக் கொள்வதாகவும், இந்த அளவு வருங்காலத்தில் அதிகரிக்கலாம்" எனவும் ஐடிபிஐ கேபிட்டல் நிறுவன ஆராய்ச்சி பிரிவின் தலைவர் ஏகே பிரபாகர் கூறியுள்ளார். மேலும் அவர் இந்த துறைமுகங்களைச் சார்ந்தே, மின்சாரம், மின் பகிர்மானம், ரயில்வே, சரக்குப் போக்குவரத்து, நிலக்கரி சுரங்கங்கள் என பல நிறுவனங்களை தொடங்கி அதானி தனது சாம்ராச்சியத்தை வலுப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். இவ்வளவுக்கும் பக்கபலமாக துணையாக நின்று அவர் சாதிக்க உதவியது மோடியும் அவரது அரசும்தான்!

அதுமட்டுமல்லாமல் இலங்கையின் காற்றாலை மின் திட்டத்தை நேரடியாக அதானி குழுமத்திற்கு வழங்குமாறு இந்தியா பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக ஜனாதிபதி ராஜபக்சே தெரிவித்ததால் இலங்கை மின்சார சபையின் (CEB) தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ பதவி விலகி உள்ளார்.

2016-ல் எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி பத்திரிகையில், பரன் ஜோய் குஹா என்பவர் அதானியின் அசாத்திய வளர்ச்சி எப்படி சாத்தியமானது என்பது பற்றியும், அரசின் கொள்கைகள் எவ்வாறு அதானிக்கு சாதகமாக இருந்தது என்பது குறித்தும், அதானி குழுமத்தின் வரி ஏய்ப்பு பற்றியும் தொடர்ந்து எழுதினார். அதை எதிர்த்து அதானி குழுமம் அவதூறு வழக்கு தொடுத்தது. இதனால் எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி பத்திரிகை அவரின் கட்டுரையை நீக்கியது. இதைத் தொடர்ந்து பரன் ஜோய் குஹா பதவி விலகியதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009ம் ஆண்டில் பிரனாய் ராயின் RRPR நிறுவனம், விஷ்வபிரதான் நிறுவனத்திடம் இருந்து, 403 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தது. இந்த கடனை RRPR நிறுவனம் திரும்ப செலுத்தாத நிலையில், அதன் பங்குகள் விஷ்வபிரதான் வசம் சென்றுவிட்டது. தற்போது விஷ்வபிரதானை அதானி வாங்கியுள்ள நிலையில், மொத்தமும் அதானி குழுமம் வசம் வந்து விட்டது. மோடியை கேள்வி கேட்கும் செய்தி நிறுவனமான NDTV-யை அதானி கைப்பற்றதின் மூலம் மோடிக்கும் அதானிக்கும் உள்ள நட்பின் உறவை புரிந்து கொள்ளலாம்

அதானியும் அவருக்கு மோடி அரசு கொடுத்த கடனும்

கடந்த 15 ஆண்டுகளில் அதானியின் வளர்ச்சி அபரிதமாக இருந்துள்ளது. 2006-07 நிதியாண்டில் அதானி குழுமத்தின் வருமானம் ரூ.16,953 கோடி. இதில் கடன் மட்டும் ரூ.4,353 கோடி. இதுவே 2012-13 நிதியாண்டில், வருமானம் ரூ.47,352 கோடி எனவும் கடன் ரூ.81,122 எனவும் இருந்தது. மோடி 2014-ல் பிரதமராக பதவியேற்கும் போது அதானியின் நிகர மதிப்பு 7.1 பில்லியன் டாலர்கள். அது தற்போது 137 பில்லியன் டாலர்கள் என்றளவிற்கு உயர்ந்துள்ளது. இதற்கு பின்னால் மோடி அரசு பின்புலத்தில் வங்கிகள் கொடுத்த கடனே உள்ளது என்பதை அறிய முடிகிறது.

2014-க்கு பிறகு மோடி அரசு 4.6 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த பிறகும், அதானிக்கு தற்போது 30 பில்லியன் டாலர்கள் கடன் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் பின்ச் குரூப்-ன் கிளை நிறுவனமான Credit Sights அதானி குழுமத்தின் கடன் மற்றும் வேகமான வர்த்தக விரிவாக்கத்தை ஆய்வு செய்து "Deeply Overleveraged" என அறிவித்துள்ளது. அதாவது அதானி குழுமத்தின் சந்தை மதிப்பைக் காட்டிலும் கடன் அளவு அதிகப்படியாக உள்ளது என்பது பொருள்.

ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரரான அதானி தலைமையிலான அதானி குழுமம் கடந்த 5 வருடத்தில் ஏற்கனவே வர்த்தகம் செய்து வந்த துறைகளைத் தாண்டி பல புதிய துறைகளில் முதலீடு செய்து தனது வர்த்தகங்களை ராக்கெட் வேகத்தில் விரிவாக்கம் செய்து வருகிறது. ஆனால் இதில் 90 சதவீத விரிவாக்கம் மற்றும் முதலீட்டு பணம் கடன் வாயிலாக வந்தது என்பதால் அதானி குழுமத்தின் கடன் அளவீடுகள் மற்றும் பணப் புழக்கத்தின் மீது அதிகப்படியான அழுத்தத்தை உருவாக்கியுள்ளது எனவும் கிரெடிட்சைட்ஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தாலோ அல்லது ஏதாவது ஒரு வர்த்தகம் மோசமான வர்த்தக நிலைக்குத் தள்ளப்பட்டாலோ அதானி குழுமம் கழுத்து வரையில் கடன்களை வைத்திருக்கும் காரணத்தால் மோசமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கடன் வலைக்குள் தள்ளப்படும் வாய்ப்புகள் உள்ளது எனவும் கிரெடிட்சைட்ஸ் கூறியுள்ளது.

அதானி குழுமம், புதிய மற்றும் தொடர்பில்லாத வணிகங்களில் நுழைவதால் அத்தகைய புதிய வணிகங்கள் பெரும்பாலும் அதிக மூலதனம் மிகுந்தவை என்பதால் செயல்படுத்தல் மற்றும் மேற்பார்வை குறித்த கவலைகள் எழுப்புகின்றன என அதானி குழுமத்தில் இருக்கும் முக்கியப் பிரச்சனைகளை கிரெடிட்சைட்ஸ் பட்டியலிடுகிறது. அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி, பிரதமர் மோடி அரசுடன் "வலுவான உறவை பெற்றுள்ளார். இதே போல பல அரசு கொள்கை முடிவுகள் அதானி குழுமத்திற்கு சாதகமாக விளங்குகிறது" எனவும் கிரெடிட்சைட்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் பெற்ற முக்கிய கடன்களில் (ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2022 வரை) ரூ. 48,000 கோடி. இதில் கிட்டத்தட்ட 40 சதவீதம் அதாவது ரூ.18,770 கோடி அரசு வங்கியான எஸ்பிஐ-யால் மட்டும் அளிக்கப் பட்டுள்ளது. அதேபோல குஜராத்தில் உள்ள முந்தாராவில் PVC ஆலையை கட்டுவதற்கு ₹14,000 கோடி கடனுக்காக அதானி குழுமம் பாரத ஸ்டேட் வங்கியை (SBI) அணுகியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில்தான் நவி மும்பையில் உள்ள கிரீன்பிஎல்ட் சர்வதேச விமான நிலையத்திற்காக ₹12770 கோடி பாரத ஸ்டேட் வங்கியிடம் அதானி குழுமம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

அதானியின் நிறுவனம் முந்த்ரா துறைமுகத்தில் புதிய செப்பு சுத்திகரிப்பு திட்டத்திற்காக $6,071 கோடி திரட்டியுள்ளது. மார்ச் 2022 இறுதியில், அதானி குழும நிறுவனங்களின் மொத்தக் கடன், முந்தைய ஆண்டை விட 42 சதவீதம் அதிகரித்து 2.22 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இவ்வாறு பல லட்ச கணக்கான கோடிகளில் இந்திய மக்களின் பணத்தை கடனாக வாரி வழங்கி மோடி அரசு அவரை உலகின் மூன்றாம் பணக்காரராக ஆக்கியுள்ளது.

அதானியின் இந்த வளர்ச்சி கொரானா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றது. ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினர் என நாட்டின் 90% அதிகமான மக்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்த நிலையில், அவர்களை சந்தையாக கொண்ட அதானி குழுமம் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது எனில், நம் மக்களை சுரண்ட அதானியை மோடி அரசு அனுமதித்துள்ளது.

முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன் ஒரு கூட்டத்தில் நிலம், இயற்கை வளங்கள், அரசு ஒப்பந்தங்கள்/உரிமங்கள் தான் இந்திய பணக்காரர்கள் பலரின் பெரிய வருவாய் மூலங்களாக இருக்கின்றன என்றார். அதற்கு "ரிசோர்ஸ் ராஜ்" எனவும் அவர் பெயரிட்டார். அவர் அன்று அவ்வாறு குறிப்பிட்டது அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சரியாக பொருந்துகிறது.

இந்தியாவில் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையே சமத்துவமின்மை வரலாறு காணாத அளவுக்கு மிகவும் அதிகரித்திருப்பதாக பிரான்ஸ் நாட்டு பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கெட்டி கூறுகிறார். அது உண்மை என நிரூபிக்கும் வகையில் அதானி அம்பானி போன்ற இந்திய பணக்காரர்கள் உலக பணக்கார வரிசையில் இடம்பெற, எளிய மக்களோ ஒரு வேளை உணவு கூட கிடைக்க பெறாத நிலையிலும், மேலும் விலைவாசி ஏற்றத்தால் எதிர்காலமே சூனியமாக செய்வதறியாது திகைத்து நிற்கும் நிலைக்கு தள்ளியுள்ளது இந்த மோடி அரசு.

- மே பதினேழு இயக்கம்

Pin It