sr ratha1முன்னாள் அமைச்சர், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எம்.ஜி.ஆரின் அணுக்கமான தோழர் எனப் பல அடையாளங்கள் இருந்தும், தன்னைப் பெரியாரின் தொண்டனாகவே அடையாளப்படுத்திக் கொண்ட பகுத்தறிவுச் சுடர் எஸ்.ஆர். இராதா 8.12.2020 அன்று தனது 87-ஆவது வயதில் காலமானார்.

அமாவாசையன்று பிறந்தால் திருடன் ஆவான் என்று ஒரு நம்பிக்கை உண்டு. ஆனால் எஸ்.ஆர். இராதா 9.8.1934 ஆடி அமாவாசை நாளன்று பிறந்தார். தம் வாழ்நாள் முழுவதும் நேர்மையாகவே வாழ்ந்தார்.

அவருடைய எளிமையான தோற்றத்தைப் பார்க்கும் யாரும் அவரை ஏழையாகவே நினைப்பர். ஆனால் அவருடைய பாட்டனார் காலம் முதல் அவருடைய குடும்பம் பெரும் பணக்காரக் குடும்பம் ஆகும். அரசியல் காரணமாகத் தன்னிடம் உள்ள பணத்தை இழந்து இருக்கிறாரேயொழிய அரசியலிலிருந்து ஒரு சல்லிக் காசுகூட அவர் சம்பாதிக்கவில்லை.

அவர் நடத்திக் கொண்டிருந்த அச்சகத்தை அவரது அரசியல் எதிரிகள் அடித்து நொறுக்கிய பொழுது, அதற்கு எதிராக நடந்த கண்டனக் கூட்டத்தில் எஸ்.ஆர். இராதாவிற்கு நிதி உதவி அளிக்குமாறு எம்.ஜி.ஆர். கூடியிருந்த மக்களிடம் கேட்டுக் கொண்டார். உடனே ரூ.50,000/- சேர்ந்தது.

அதை அப்படியே கொடுத்த பொழுது தனக்கு ஏற்பட்ட பாதிப்பு ரூ.13,000/- அளவில்தான் என்று கூறி, அதை மட்டும் பெற்றுக் கொண்டு மிகுதியைக் கட்சிக்கே அளித்துவிட்டார். அதுமட்டுமல்ல, தேர்தல் செலவுக் காகத் தன்னிடம் கொடுக்கும் பணத்தில் செலவுகள் போக மிகுதியைக் கட்சி அலுவலகத்தில் திருப்பி அளித்து விடுவதும் அவர் பழக்கம்.

தனது 13-ஆவது வயதில் பகுத்தறிவுச் சிந்தனை யின்பால் கவரப்பட்ட அவர், தன் சுற்றத்தார்களின் எதிர்ப்பையும் மீறி, சொந்த ஊரான கும்பகோணத்தில் பெரியாரை அழைத்துப் பொதுக் கூட்டத்தை நடத்தினார்.

பெரியாரைவிட்டுப் பிரிந்து வந்தபின் அவரை வைத்துப் பொதுக் கூட்டம் நடத்துவதா என்று தி.மு.க.வினர் பலர் கூறியபொழுது அண்ணா, “பெரியாரை விட்டுப் பிரிந்து வரவில்லை; பெரியார்தான் நம் கட்சிக்கும் தலைவர்.

அதனாலேயே நான் பொதுச் செயலாளர் பதவியில் இருக்கிறேன்; நம் கட்சியின் நிலைப்பாட்டை எஸ்.ஆர். இராதாதான் சரியாகப் புரிந்துகொண்டு உள்ளார்” என்று விளக்கம் கூறி எஸ்.ஆர். இராதாவைப் பாராட்டினார்.

தி.மு.க. உடைந்து அ.தி.மு.க. தொடங்கப்பட்ட பொழுது, எஸ்.ஆர். இராதா தான் பெரியாருடைய கொள்கையில் தான் தீவிரமாக இருப்பதாகவும், எம்.ஜி.ஆர். பெரி யாரிடமிருந்து விலகினால், தான் அவரை விட்டு விலக நேரிடும் என்பதையும் சொல்லி விட்டுத்தான் அக்கட்சி யில் சேர்ந்தார்.

எம்.ஜி.ஆரிடம் பதவிக்காக, உதவிக்காகப் பலரும் வேண்டி நின்ற நிலையில், எம்.ஜி.ஆர். பதவியை ஏற்றுக் கொள்; உதவியை ஏற்றுக்கொள் என்று வேண்டிக் கொள்ளவைத்த தன்மான வீரர் தான் எஸ்.ஆர். இராதா. பதவியில் இருந்த காலத்தில் அவர் எடுத்த முடிவுகளில் எம்.ஜி.ஆர். தலையிடவே இல்லை என்பது எஸ்.ஆர். இராதாவின் திறமைக்கும், நேர்மைக்கும் எடுத்துக்காட்டு.

அவர் சார்ந்த சௌராஷ்ட்ர சமூகத்தின் மற்ற அரசியல் வாதிகள் தேசிய நீரோட்டம் என்கின்ற மாயையில் சமூகத்திற்குத் தேவையான தொண்டுகளைச் செய்யத் தயங்கி நின்றனர்.

ஆனால் எஸ்.ஆர். இராதா மற்ற வகுப்பு மக்களுக்கு இடையூறு இல்லை என்பதை உறுதிசெய்து கொண்டு தன் சமூக மக்களுக்குப் பல நன்மைகளைத் துணிந்து செய்தார். அது மட்டும் அல்லாமல் எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்களுக்கும் அவர்களுக்குத் தேவையான நியாயமான கோரிக்கை களைத் தானே முன்னின்று நிறைவேற்றி வைத்தார்.

அனைத்து தரப்பு மக்களின் நன் மதிப்பையும் பெற்ற எஸ்.ஆர். இராதாவின் மறைவு தமிழ்நாட்டு மக்களுக்கும், பெரியாரிய உணர்வாளர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். வாழ்க எஸ்.ஆர். இராதாவின் புகழ்.

- இராமியா

Pin It