“இந்தியாவின் உழைக்கும் பெருந்திரளான மக்களும், இயற்கை வளங்களும் விரல்விட்டு எண்ணக்கூடிய புல்லுருவிகளால் உறிஞ்சப்படும் வரை போர்நிலைமை இன்றும் நீடிக்கிறது, எதிர்காலத்திலும் நீடிக்கும் என்று நாங்கள் பிரகடனம் செய்கிறோம். உறிஞ்சுபவன் ஒரு பிரிட்டிஷ் முதலாளியாக இருக்கலாம், அல்லது அவனோடு சேர்ந்த இந்தியனாக இருக்கலாம் அல்லது தனித்த இந்தியனாகவே இருக்கலாம்…..இதனால் ஒன்றும் வேறுபாடு இல்லை” –பகத்சிங்.

tribes 360நிலம் என்பது ஒரு மனிதனின் வாழ்வாதாரப் பிரச்சனை அதைப் பறிக்க முயலும் போது அது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கான போராட்டமாக வெடிக்கும். நாம் படித்த வரலாறுகளில் ஒரு நாட்டின் மன்னன் மற்றொரு நாட்டின் மீது படையெடுத்து அந்த நாட்டின் நிலப்பகுதிகளையும், மக்களையும் தனக்கு அடிமைப்படுத்தி கொள்ளையடிப்பதையே பார்த்திருக்கிறோம். ஆனால் உலகமயமாக்கலின் சூழல் தன்சொந்த நாட்டு மக்களின் நிலங்களையே பறித்து அவர்களை உள் நாட்டுக்குள்ளேயே அகதிகளாக்கி வாழத் தகுதியற்றவர்களாக்கும் நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது.

ஆளும் வர்க்கத்தின் துணையுடன் சாமானிய மக்களிடம் இருந்து நிலங்களைப் பறித்து அதைத் தனதாக ஆக்கிக்கொள்ளும் சூழ்ச்சி இந்திய வரலாறு முழுவதும் தொழிற்பட்டு இருக்கின்றது. கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் பார்ப்பனர்களும், சாதி இந்துக்களுமே இதை எப்போதும் செய்து வந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலப்பறிப்புக்கு எதிரான போராட்டங்கள் இந்திய வரலாறு முழுவதும் காணப்படுகின்றது.

சமண பெளத்த மதங்களின் ஆதிக்க காலத்திலும், பின்பு முகமதியர் ஆட்சிகாலத்திலும், பிரிட்டீஷ்சார் ஆட்சிக் காலத்திலும் தங்களது ஆதிக்கத்தை இழந்த இந்தக் கூட்டணி தற்போது மீண்டும் உங்களது நிலங்களை கொள்ளையிட வருகின்றார்கள்.

இந்து பாசிச கும்பலின் தலைவரான மோடி அவர்கள் கொண்டு வந்திருக்கும் இந்தச் சட்டமும் அதை இயற்றுவதற்கான ஞானமும் அவர்களது முன்னோர் அவருக்களித்த கொடை. என்ன ஒரு வித்தியாசம் முந்தைய காலங்களில் ஆளும்வர்க்கத்தின் துணையுடன் நிலங்களைத் தமதாக்கிக் கொண்டார்கள். தற்போது அவர்களே ஆளும்வர்க்கமாக இருக்கிறார்கள்.

மோடி அவர்கள் பிரதமராக வருவதற்கு முன்பே நிலப்பறிப்பில் தன்னை மிஞ்ச இந்தியாவிலேயே ஆளில்லை என்பதை முதலாளிகளுக்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

குஜராத்தில் அதானி பெயரில் அமைந்துள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக(APSEZ) மோடி அவர்கள் 15946.32 ஏக்கராவை மலிவு விலையில் கொடுத்தார். இதில் 51% மட்டுமே அதாவது 8,287.44 ஏக்கர் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதியை விற்றும் மற்றும் உள் வாடகைக்கு விட்டும் கல்லா கட்டுகிறார் அதானி.

மேலும் டாட்டாவுக்கு 1,110 ஏக்கரும்,போர்டு இந்தியா கம்பெனிக்காக 460 ஏக்கரும், மாருதி சுசுக்கி நிறுவனத்திற்கு 700 ஏக்கரும் கொடுத்துள்ளார். யார் யாரெல்லாம் தனக்கு கொடுத்து உதவினார்களோ அவர்களுக்கெல்லாம் கொடுத்து கொடுத்து கரம் சிவந்தவர்தான் இந்த தர்ம மகாராஜா! (ஊரான் வீட்டு நெய்யே என்பொண்டாட்டி கையே என்றொரு பழமொழி தமிழில் உள்ளது)

இந்தியாவில் நிலப்பறிப்புக்கு பெரிய அளவில் பாதிக்கப்படுவது பழங்குடி இன மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களுமே ஆவர்கள். பெரும்பாலான கனிம சுரங்கங்கள், அணைகள், மின்திட்டங்கள், காடுகளை அழித்தே செயல்படுத்தப்படுகின்றன. இதனால் பல லட்சக்கணக்கான தலித் மக்கள் காடுகளில் இருந்து அடித்து விரட்டப்பட்டிருக்கிறார்கள். பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்(CPM) என தேசிய கட்சிகள் மட்டுமின்றி அனைத்து மாநில கட்சிகளும் நிலப்பறிப்புகளின் போது தலித் மக்களையே பெரும்பாலும் குறிவைத்து தாக்கியிருக்கின்றன. அவர்களை சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக்கி ஓட ஓட விரட்டியிருக்கின்றன. கீழே இருக்கும் அட்டவணை நம்மை பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றது.

displaced tribals

ஒவ்வொரு முறையும் நிலப்பறிப்புக்கு எதிராக போராடிய மக்களை ஆளும் வர்க்கங்கள் மிகக் கொடூரமான முறையிலே அடக்கியிருக்கின்றன.

2006 ஆம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி ஒடிசாவிலே கலிங்கா நகரில் தங்களது நிலத்திற்கு நியாயமான நஷ்ட ஈடு கேட்டு போராடிய மக்கள் மீது டாட்டாவின் கூலிப்படையாக செயல்பட்ட போலீஸ் சுட்டதில் 13பேர் உயிரிழ்ந்தனர், 37 பேர் காயம் அடைந்தனர்.

சத்தீஸ்கரின் காடுகளில் சல்வாஜீடும் என்ற அரசே உருவாக்கிய கூலிப்படை பல பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்தும், அவர்களது கிராமங்களை கொளுத்தியும் ஏறக்குறைய 600 கிராமங்களை காலிசெய்தனர். 50ஆயிரம் மக்களை காவல்துறையின் முகாமிற்குள் அடைத்தனர். 3லட்சத்து 50 ஆயிரம் மக்கள் அந்தப்பகுதியை விட்டு விரட்டி அடிக்கப்பட்டனர். காடுகளில் இருந்து வெளியே வரமறுத்த மக்களை மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தினர்.
இப்படி எல்லாம் மாபாதகச் செயலை செய்த காங்கிரஸ் தற்போது பாஜகவை எதிர்ப்பது போல நாடகமாடுகின்றது.

ஆளும் வர்க்கங்கள் எப்போதுமே தங்களை காப்பாற்றிக்கொள்ள பதவியில் இல்லாதபோது மக்களுக்காக முதலைக்கண்ணீர் விடுவதும், பின்பு அரியணையில் அமர்ந்தவுடன் மக்களின் குடிகெடுப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. அதற்கு நம்ம ஊரில் சிறந்த உதாரணம் தி.மு.க. தங்களுடைய ஆட்சிக்காலத்தில் தான் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் அமெரிக்காவைச் சார்ந்த கிரேட் ஈஸ்ட்டன் எனர்ஜி கார்ப்பரேசன் உடன்போடப்பட்டது என்பதை மறந்து தற்போது அதை எதிர்த்துப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றது. இந்தத்திட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டால் 166210 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்படும். இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த மண்ணில் இருந்து அகதிகளாக விரட்டப்படுவார்கள். பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை சூறையாடத் துணிந்த இந்த ஏகாதிபத்திய அடிமைகள் ஆட்சி பறிபோனவுடன் தோசையை திருப்பிப் போடுகிறார்கள்.

அ.தி.மு.கவின் அம்மாவோ தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழ்நாட்டையே கேட்டாலும் எழுதித் தருவதற்கு தயாராக இருக்கிறார்.

தி.மு.க ஆட்சியில் அதன் ஒட்டுவாலாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமா மீத்தேன் திட்டத்திற்கு எதிராக கர்ஜிக்கின்றார். அதுமட்டும் அல்லாமல் லட்சக்கணக்கான தலித் மக்களை அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்த காடுகளில் இருந்து விரட்டி அடித்த காங்கிரசுடன் தி.மு.க கூட்டணி வைத்தால் மகிழ்ச்சி அடைவாராம்.

தேசிய அளவிலும், மாநில அளவிலும் உள்ள அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் தங்களது கார்ப்ரேட் அடிமைத்தனத்தை நிரூபிப்பதற்கு சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்க எப்போதுமே தயங்கியது இல்லை. இந்தியா முழுவதும் ஏறக்குறைய 20 லட்சம் கோடி மதிப்பிலான கார்ப்ரேட் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதை நிறைவேற்ற வேண்டும் என்றால் இப்படியொரு கடுமையான சட்டத்தை கொண்டுவருவதை விட வேறு வழியே இல்லை என்கிறார்கள் அம்பிகள்.

ஆனால் உண்மை விவரங்கள் இதற்கு எதிர்மாறாக இருக்கின்றன. கடந்த 23 ஆண்டுகளில் 5.1 லட்சம் கோடிகள் மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருக் கின்றன. இதன் மூலம் வெறும் 20.1 லட்சம் வேலை வாய்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்தால் நான்கு பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. ஆனால் அவர்கள் உருவாக்குவதாக சொன்ன வேலைவாய்ப்பு எவ்வளவு தெரியுமா? 102 லட்சம் கோடி முதலீட்டில் 2.3 கோடி வேலை வாய்ப்புகள். இவர்கள் மோசடி பேர்வழிகள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவை இல்லை.

இவர்களின் நோக்கம் உண்மையில் தொழில்வளர்ச்சியை ஏற்படுத்துவதோ வேலை வாய்ப்பை உருவாக்குவதோ அல்ல, மாறாக இந்திய காடுகளிலும் மலைகளிலும், சமவெளி நிலங்களிலும் மறைந்து கிடக்கும் லட்சக்கணக்கான கோடி பெருமானமுள்ள வளங்களை திருடுவது, அதற்காக நிலங்களை சட்டத்தின் துணைகொண்டோ அல்லது வலுக்கட்டாயமாகவோ பறிப்பது. எதிர்த்து கேட்கும் மக்கள் மீது அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுவது. இதைத்தான் எப்போதுமே ஆளும் வர்க்கங்கள் செய்து வந்திருக்கின்றன.

மன்மோகனை விட மோடி சிறந்த கார்ப்ரேட் அடிமை என்பதாலேயே அரியணையில் அமர்த்தப்பட்டிருக்கின்றார். மன்மோகன் முதலாளிகளுக்காக வாலை ஆட்டினார், மோடியோ வாலுடன் சேர்த்து உடம்பையும் ஆட்டுகிறார்.

இந்தியாவில் ஏறாக்குறைய 65 கோடி மக்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்மக்கள் ஆவர்கள். அவர்கள் உண்பதும் உடுத்துவதும் உயிர்வாழ்வதும் அதை நம்பித்தான். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவர்களின் பங்குகளிப்பு 18% மட்டுமே இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த இந்திய மக்களின் உணவுத்தேவையும் இவர்கள் தான் பூர்த்தி செய்கிறார்கள். ஒரு வேலை மோடியும் அவரது அல்லக்கைகளும் வேறு ஏதாவது கருமாந்திரத்தை திண்ணு உயிர்வாழ்கிறார்களா என்று தெரியவில்லை!

காங்கிரஸ் கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டமாக இருக்கட்டும் அல்லது தற்போது பா.ஜ.க கொண்டுவந்திருக்கும் நிலம் கையகப்படுத்தும் சட்டமாக இருக்கட்டும் இரண்டுமே திசு பேப்பரை போன்றதுதான். ஆளும் வர்க்கங்கள் எப்போதுமே தான்கொண்டுவந்த சட்டங்களை பயன்படுத்தித்தான் தங்களது காரியங்களைச் சாதித்துக்கொள்கின்றன என்று நினைப்பது மிகப்பெரும் தவறு. மேலே அட்டவணையில் உள்ள நிலக்கையகப்படுத்துதல் எல்லாம் சட்டத்தை மீறியே நடைமுறை படுத்தப்பட்டவை. சட்டம் என்பது அரச பயங்கரவாதத்தின் ஒரு துணைக்கருவி அவ்வளவே.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை வைத்துக்கொண்டுதான் தங்களது காரியங்களை சாதிக்கவேண்டும் என்ற எந்த அவசியமும் ஆளும் வர்க்கங்களுக்கு கிடையாது என்பதை உணர்ந்தே போரட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அடிப்படை சாராம்சம் நிலம் எதற்காக எந்த வர்க்கத்தின் நலனுக்காக கையகப்படுத்தப்படுகின்றது என்பதுவே . உலகமயமாக்கலையும், தனியார்மயமாக்கலையும், தாராளமயமாக்கலையும் எதிர்க்காமல் நடத்தப்படும் எந்த போராட்டமும் தற்காலிகமான தீர்வை வேண்டுமானால் பெற்றுத்தரலாம் ஆனால் நிரந்தர தீர்வு என்பது இதை ஏற்றுக்கொண்டுள்ள சமூகக் கட்டமைப்பை தகர்ப்பதுவே ஆகும்.

Pin It