cauvery 380

காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை இந்திய அரசும், கர்நாடக அரசும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் உரிய அளவில், உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. அதற்கான எவ்வித முயற்சிகளையும் இந்திய அரசு இதுவரை காவிரி நடுவர் மன்றம் ஆணையிட்டதில் இருந்து மேற்கொள்ளவே இல்லை. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட இதுவரை எந்த முயற்சியும் இந்திய அரசால் மேற்கொள்ளப்படவில்லை.

இப்படி தமிழகம் தொடர்ந்து காவிரி பிரச்சினையில் இந்திய அரசாலும், கர்நாடக அரசாலும் தொடர்ந்து திட்டமிட்டு வஞ்சிக்கப்பட்டு வரும் நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் இரண்டு அணைகளைக் கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான காவிரி நீர் தடுத்து நிறுத்தப்படும் அபாயமும், இதனால் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் பாலைவனமாகும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது.

காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி சென்னை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமும் பாதிப்புக்குள்ளாகும்.

நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 கோடி தமிழக மக்களின் இயற்கை உரிமை பறிக்கப்படும் நிலை தடுக்கப்பட வேண்டியது அவசர அவசியமாகும். தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை தரமறுக்கும்
கர்நாடக அரசு இப்போது வந்துகொண்டிருக்கும் நீரையும் முடக்கும் முயற்சிகளை இந்திய அரசின் மறைமுக துணையோடு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கி அங்குள்ள மீத்தேன் மற்றும் நிலக்கரியை எடுக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ள இந்திய அரசு இந்த கர்நாடக அரசின் இரண்டு அணைகளைக் கட்டும் முயற்சிக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறது. இதன் உச்சகட்டமாக கர்நாடக அரசு கடந்த13.03.2015 அன்று, சட்டமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், காவிரியின் குறுக்கே அணை கட்டுமானப் பணிக்கு முதல் கட்டமாக ரூ.25 கோடியை ஒதுக்கீடு செய்து, அணையை கட்டியே தீருவோம் என்று அறிவித்துள்ளது.இந்திய அரசு இதுவரை இதுபற்றி எதுவும் கூறாமல் மவுனம் காத்து கர்நாடக அரசுக்கு துணை நிற்கிறது.

பல நூறு ஆண்டுகளாக காவிரி ஆற்றில் சுமார் 400 டி.எம்.சி வரை பெற்று வந்த தமிழகம் (15 மாவட்ட குடிநீர் -25 லட்சம் ஏக்கர் விவசாயம்), 2007 -இல் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பால் 192 டி.எம்.சி என சுருங்கியது.அந்த 192 டி.எம்.சி நீரும் கர்நாடக அரசு அங்கு உள்ள அணைகளில் தேக்கி வைக்க முடியாத நிலையில்தான் தமிழகத்திற்க்கு திறந்து விடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காவிரி ஆறு என்பது வடிகாலாக மட்டுமே மாற்றப்பட்டு உள்ளது.இதனால் காவிரி டெல்டா பாசனம் 25 லட்சம் ஏக்கரிலிருந்து தற்போது 14 லட்சம் ஏக்கர் என சுருங்கியும், முப்போகம் என்பது ஒரு போக சாகுபடியாகவும் மாற்றப்பட்டு விட்டது.தமிழகமெங்கும் காவிரி நீர் உரிமைக்காக போராடி வருகிறோம்.

இந்நிலையில் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் அமைய இருக்கும் அமெரிக்காவின் கொக்கோ-கோலா ஆலைக்காக எங்களின் வாழ்வாதாரமான காவிரி ஆற்றுதண்ணீரை ஈரோட்டுக்கு அருகே தினசரி 35 லட்சம் லிட்டர் நீரை எடுத்து, அதை விசமாக மாற்றி எங்களுக்கு பல பெயர்களில் விற்க முனைவதையும் வன்மையாக எதிர்த்து போராடி வருகிறோம். மேலும் காவிரி ஆற்றில் 2000 ஆம் ஆண்டு முதல் திருப்பூர் புதுமேம்பாட்டு நிறுவனம் என்ற பெயரில் தினமும் 18.6 கோடி லிட்டெர் தண்ணீர் எடுத்து விற்பனை செய்ய அனுமதி பெற்றுள்ள பன்னாட்டு (united kingdom) நிறுவனமான, பொலிவியா நாட்டில் தண்ணீர் வணிகம் செய்யக்கூடாது என மக்களால் விரட்டியடிக்கப்பட்ட பெக்டல் நிறுவனத்திற்க்கு கொடுக்கப்பட்ட அனுமதியை, எங்களுக்கு காவிரியில் பாரம்பரியமாக கிடைத்த நீர், நடுவர் மன்ற தீர்ப்புக்கு பின்னால்(2007 முதல்) சரிபாதியாக குறைந்த நிலையில் பெக்டல் நிறுவனத்திற்க்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி போராடி வருகிறோம்.

இந்திய அரசு தமிழகத்தின் மீது காவிரி உரிமையில் தொடர்ந்து அடாவடி செய்யும் கர்நாடக அரசையும் கண்டிக்காமல் இருப்பதுடன், தமிழகத்தின் மீது நியூட்ரினோ திட்டம், மீத்தேன் திட்டம், என பல்வேறு நாசாகார திட்டங்களையும் நமது தமிழகத்தில் திணித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 21.03.2015 அன்று சென்னையில் நடைபெற்ற விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு கூட்டத்தில், காவிரியில் கர்நாடக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து, தமிழகத்தில் 28.03.2015 அன்று முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என அனைத்து அமைப்புகளாலும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் காவிரியில் கர்நாடக அரசின் அடாவடி நடவடிக்கைகளைக் கண்டிப்பதுடன், அதற்கு துணை நிற்கும் குறிப்பாக இந்திய அரசை எதிர்த்தும் இருந்திருக்க வேண்டும். அப்போதுதான் தமிழக மக்களுக்கு காவிரி பிரச்சினையில் இந்திய அரசின் துரோகம் முழுமையாக அம்பலமாகி இருந்திருக்கும்.

இருந்தாலும், 28.03.2015 அன்று தமிழக வணிகர்கள் தங்கள் வணிக நிறுவனங்களை அடைத்தும், விவசாயிகள் தங்கள் வேலைகளைப் புறக்கணித்தும், தனியார் நிறுவனங்கள் தங்கள் பணிகளை நிறுத்தியும், வாகன உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் தங்கள் வாகனங்களை இயக்காமலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அறிவித்தும் இப்போராட்டத்தை முழுமையாக வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

தமிழ் மக்களின் ஒற்றுமையை, அடாவடி கர்நாடக அரசுக்கும், ஆதிக்க இந்திய அரசுக்கும் பறைசாற்ற வேண்டுமென அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

- முகிலன்,ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம் & கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கம்

Pin It