அய்யா வணக்கம்,

      ஏழு தமிழர்களில் ஒருவனாக எம் புதல்வன் பேரறிவாளன் கடந்த 24 (இருபத்து நான்கு) ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைத் தாங்கள் அறிவீர்.         

     perarivalan 228 உச்சநீதி மன்றத்தில் மரணதண்டனை விதித்துத் தீர்ப்பு எழுதிய நீதியரசர்கள் மூவர் குழுவின் தலைமை நீதியரசர் திரு.தாமஸ் அவர்கள், அந்த வழக்கைத் தான் சரியாக கவனிக்காமல் தீர்ப்பை எழுதிவிட்டதாகவும் கடவுள்கூட தன்னை மன்னிக்க மாட்டார் என்பதாகவும் கருத்துரைத்தார்!

      அதே போன்று பேரறிவாளனின் வாக்குமூலம் என்ற பெயரில் குற்றச்சாட்டைப் புனைந்த சி.பி.அய்.அதிகாரி திரு.தியாகராசன் அய்.பி.எஸ். அவர்கள்,“பேரறிவாளன் குற்றமற்றவர். வாக்குமூலம் எழுதியபோது ‘ராஜீவ் கொல்லப்படப் போவது குறித்துத் தனக்கு முன்கூட்டியே எதுவும் தெரியாது’ என்று பேரறிவாளன் கூறிய உயிரான வரிகளை எழுதாமல்   விட்டுவிட்டேன். அதுவே இப்போது மரண தண்டனைக்குக் காரணமாகிவிட்டது. இப்போது என் மனச்சாட்சி உறுத்துவதால் இந்த உண்மையைச் சொல்கிறேன். பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும்”  என்று 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஊடகங்கள் வழியாக வெளியிட்டார்!     

      உலகில் உள்ள மனிதநேய மனங்கொண்ட சான்றோர், மாணவர், வழக்கறிஞர், கலைஞர், படைப்பாளிகள், தாய்மார்கள் முதலானோரின் எழுச்சியும், செல்வி செங்கொடியின் ஈகமும், தங்களையொத்த மனித உரிமை ஆர்வலர்களின் ஆதரவும் ஊடகத்தாரின் செய்திப் பரப்பலும் மரணதண்டனை விலக உற்ற துணைகளாக அமைந்தன.

      தூக்கு மேடையில் 16 (பதினாறு) ஆண்டுகள் நிறுத்தப்பட்டபின், கடந்த 2014 பிப்ரவரி 18 ஆம் நாள், உச்சநீதி மன்றத் தலைமை நீதி அரசர் திரு.சதாசிவம் அவர்களின் தலைமையில் அமர்ந்த மூவர் குழுவால் மரணதண்டனை விலக்கிக் கொள்ளப்பட்டது.

      வழக்கின் உண்மையை உணர்ந்துகொண்ட மாண்புமிகு முந்நாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் விடுதலை செய்ய முனைந்தபோது, 22 ஆண்டுகளாக உண்மையைப் புதைத்த சில இனமாச்சரியம் கொண்டவர்களால் தடுக்கப்பட்டு, உச்சநீதி மன்றம் “தீர்ப்பு உரைக்கும் வரை வாழ்நாள் தண்டனை விதிக்கப் பெற்ற சிறைவாசிகளை மாநில அரசுகள் விடுதலை செய்யக் கூடாது” என்று தடைபோட்டுவிட்டது!

      இதனால், இந்தியாவில் பல்வேறு சிறைகளில் பத்தாண்டு முதல் இருபத்தைந்து ஆண்டுகளாக வாடிவரும் சிறைவாசிகள் விடுதலையடையும் வாய்ப்பிழந்து கூண்டுக்குள் பறவைகளாகத் துடித்துக் கொண்டுள்ளார்கள்.   

 மனிதமிகு அய்யா,

      எனக்கு வயது 73. துணைவர் அற்புதத்திற்கு வயது 67. தண்டுவட நரம்பு விலகி என் பாதங்கள் உணர்விழந்துள்ளன. இடது காலால் 5-6 நிமிடங்களுக்குமேல் நிற்கவோ நடக்கவோ இயலாதவனாகவும் முதுமையாலும், சில நோய்களாலும் தாக்குண்டு வருகிறேன். கடந்த 24 ஆண்டுகளும் இல்லறம் காணாமல் போனது. என் துணைவரும் நானும் ஆளுக்கொரு திக்கில் இருந்து வருகிறோம். பொருள் மிக இழந்தோம். எம் சக்திக்கேற்றுச் சமுதாயத்திற்குப் பயன்பட்டு வந்த எம் இறுதிகால வாழ்வு துன்பத்தையே சுவாசித்துக் கொண்டு பயனற்று கழிகிறது!.

      கடந்த 24 ஆண்டுகளில் தங்களில் பலர் துணை ஏற்று - இல்லறம் நடத்தி - மகனைப் பெற்று - கல்வி கொடுத்து - பணியில் சேர்த்து - ஊதியம் ஈட்டி - மணமுடித்துப் - பேரன்களைக் கொஞ்சிக் கொண்டிருப்பீர். அந்த வேட்கை மகனைப் பெற்ற எமக்கும் இருக்காதா? 19 வயதில் சி.பி.அய். எம்மிடமிருந்து இழுத்துச் சென்ற என் மகனுக்கு இன்று 43 வயது! இளமைக்கால வசந்தத்தைப் பறித்துக் கொண்டார்கள். சிறையில் மகன் படும் மன வேதனையை விளக்கச் சொற்கள் அறியோம்.     

      அன்று, பேரறிவாளன் குற்றவாளி என்று சொன்னவர்களே பின்னாளில், “நாங்கள் தவறு செய்துவிட்டோம். பேரறிவாளன் விடுவிக்கப்பட வேண்டும்” என்று உலகமறியச் சொன்னார்கள்! ஆனால், தமிழர்களைச் சாத்திரப்படி கொன்றொழிக்க இயலாவிடிலும் சட்டத்தில் எதையாவது காட்டித் தமிழர்களை அழித்தால்தான் தாங்கள் வாழ முடியும் என்று சிலர் திட்டமிட்டுச்  உண்மையையும் மனிதத்தையும் கொன்று வருகிறார்கள். இவர்களுக்கு ஏற்றவாறு உச்சநீதி மன்றமும் தீர்ப்புரைக்க நாள் பல கடத்திவருகிறது! இறுதிவரை எங்கள் மகனின் விடுதலையைக் காணாமலேயே நாங்கள் காலமாகி விடுவோமோ என்று அஞ்சுகிறோம்.

       ‘பேரறிவாளன் உயிருடன் சிறையில் இருப்பதே போதும்’ என்று எண்ணி வாளாது இருக்கமாட்டீர் என்று நம்புகின்றோம். தூக்குத் தண்டனைக்கும் வாழ்நாள் எல்லாம் சாகடிக்கும் ஆயுள் தண்டனைக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதைத் தாங்கள் அறிவீர். அதிலும் நிரபராதியைச் சிறைக்குள் அடைத்து வைப்பது அறமாகுமா என்பதைத் தாங்கள் சிந்திக்க வேண்டுகிறோம்.  பேரறிவாளனின்  விடுதலைக்காகத் தொடர்ந்து போராடிய மனிதர்குல மாணிக்கம் நீதி அரசர் கிருஷ்ணய்யர் மறைந்துவிட்டது மனிதத்துக்குப் பேரிழப்பே.

       அன்புகூர்ந்து எங்கள் இறுதிக்காலத்தில் எங்கள் இயலாமையைக் கருதி எம் ஒரே மகனை எம்முடன் வாழ வையுங்கள். காலம் கடந்துவிட்டால் கரும்பும் இனிக்காது. நாங்களும் மகனுக்குத் திருமணம் முதலான கடமைகளைச் செய்ய உதவுங்கள். பேரறிவாளனைப் போன்று இந்தியச் சிறைகளில் வாடும் சிறைவாசிகளும் வாழ்வு பெறுவர். மீண்டும் ஒரு செங்கொடியின் சாவை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்புரைத்திடும் வகையில், தங்கள் கட்சி-இயக்கம்-அமைப்பின் மூலம் விரைவு படுத்தி, விடுதலைக்கு வழி திறந்து உதவக் கேட்டுக் கொள்கிறோம்.

                                                                                                                                                நன்றியுடன்   

                                                குயில்தாசன்(எ)ஞானசேகரன்

                அற்புதம்

Pin It