“அறிவியல் எளிய மனிதனுக்கும், ஆற்றல் மிகு அறிவியலாளர்களுக்கும் நம்பிக்கையூட்டுகிற, நன்மை பயக்கிற சக்தியாக இன்று தோன்றவில்லை;மாறாக மென்மேலும் வீணான, அழிவு நோக்கங்களுக்காக முரட்டுத்தனமாகப் பயன்படுத்துகிற ஒன்றாகவே அவர்களுக்கு அது காட்சியளிக்கிறது.”

“முதலாளித்துவ நாடுகளில் அறிவியலாளர்கள் இப்போதெல்லாம் நேராடியாக அரசாலும் அல்லது ஏகபோக நிறுவனங்களாலும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள், அது விசித்திரமான அருவெறுப்பான முறையில் நடைபெறுகிறது.” - மார்க்சிய அறிஞரும் தேர்ந்த இயற்கை அறிவியலாளருமான ஜே.டி.பெர்னலின் “மார்க்சும் அறிவியலும்” நூலிலிருந்து...

nuetrino“அழிவு” வளர்ச்சி முழக்கத்தின் பேரில், தமிழகத்தில் திணிக்கப்பட்ட நாசகார அழிவுத் திட்டங்களான கல்பாக்கம் அணுவுலைத் திட்டம், கூடங்குளம்   அணுவுலைப் பூங்காத் திட்டம், மீத்தேன் எடுக்கும் திட்டங்களோடு தற்போது இணைந்திருக்கும் புதிய அழிவுத் திட்டம்தான் “இந்திய நியூட்ரினோ ஆய்வக”த் திட்டம். 05.1.2015 இல் இத்திட்டத்திற்கான ஒப்புதலை வழங்கிய மோடி அரசின் செயல்பாட்டை, தமிழகத்தை இந்தியாவின் நிரந்தர குப்பைத் தொட்டியாக மாற்றும் முயற்கான முன் அறிவிப்பாகவே நாம் கருதவேண்டியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியான நாட்கொண்டே இத்திட்டத்தின் பின்னாலுள்ள அறிவியல் உலகின் ரகசியங்கள், இயற்கை நிலைமையின் அழிவு, சமூகப் பாதிப்பின் விளைவுகள் போன்றவை தீவிரமாக கேள்விக்குள்ளாக்கப்பட்டன. வழக்கம்போல மத்திய அரசும் அதன் அங்கமான அணுசக்தித் துறை ஆணையம் மற்றும் இந்திய நியூட்ரினோ திட்டத்தின் மேலாளர் போன்ற தொடர்புடைய அரசு இயந்திரமானது, இது குறித்து தொடர்ந்து கள்ள மௌனம் சாதித்து வந்ததது. இந்நிலையில், அறிவியலாளரும் அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஆலோசகருமான திரு பத்மநாபனின் கட்டுரையை மேற்கோள் காட்டி, கேரள மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவரான திரு அச்சுதானாந்தம் அம்மாநில சட்டமன்றத்தில் இத்திட்டத்தின் விளைவுகள் குறித்து கேள்வி எழுப்ப, வேருவழியன்றி குடிமைச்சமூகத்திற்கு பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு தொடர்புடைய அரசு இயந்திரம் தள்ளப்பட்டது.

நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, இந்திய நியூட்ரினோ ஆய்வகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அளிக்கப்பட்ட பதிலோ அப்பன் புதருக்குள் இல்லை என்ற பழமொழியை ஒத்திருந்தது. ஆலை நியூட்ரினோக்களால் ஏற்படும் கதிர்வீச்சு பாதிப்பு, அணைகளுக்கு நேரக்கூடிய விளைவுகள், அணுக்கழிவை சேமிப்பதற்கான திட்டம் இதனுள் மறைந்துள்ளதா என்ற வினாக்களுக்கான பதில்கள் முற்றிலும் முன்னுக்குப்பின் முரணாகவும் இத்திட்டம் தொடர்பான அறிவியல் ரகசியங்களை காக்கும் வகையிலாகவே புனையப்பட்டது. இது குறித்து திரு பத்மநாபன் வேதனையுடன் கீழ்வருமாறு எழுதுகிறார்.

“மேலை நாடுகளில் அறிவிலை சனநாயகப்படுத்தும் போக்கு இன்று அதிகரித்துவருகிறது. அறிவியல் ஆய்வுகளுக்கான நிதிகளை வழங்குகிற அரசானது, மக்களிடம் அறிவியல் உரையாடல்களை நிகழ்த்துமாறு அறிவியலாலர்களிடம் வற்புறுத்துவதோடு மக்கள் புரிந்துகொள்கிற மொழியில் அறிவியல் திட்டங்கள் குறித்து பேசவும் வலியுறுத்துகிறது. ஆனால் இந்தியாவின், அணுசக்தி ஆணையத்தின் அறிவியல் மேலாளர்களோ நம் மக்களை கிள்ளுக்கீரையாக கருதுகின்றனர். உதாரணமாக, இந்திய நியூட்ரினோ ஆய்வகத் திட்ட மேலாளர் திரு மொண்டால், கேரளாவின் எதிர்க் கட்சி த்தலைவர் திரு அச்சுதானந்தத்தை சந்தித்து இத்திட்டத்திற்கான ஆதரவைக்கோருகிறார். ஆனால் மெண்டலின் விளக்கத்தில் அவர் திருப்தி கொள்ளவில்லை. பிறகு கொச்சின் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் மகாராஜா கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த அறிவியல் கருத்தரங்களில் கலந்துகொள்கிற மொண்டால், இறுதிவரை கேரளாவில் ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பைக்கூட நிகழ்த்தாமல் பறந்துவிடுகிறார். இத்தனைக்கும் அவருடன் சில பத்திரிக்கையாளர் அணியினரும் உடன் இருந்தனர் என்பது குறுப்பிடத்தக்கது!

நான் அறிவியலைக் காதலிப்பதால்தான் இத்துறையில் உள்ளேன். பௌதீகத் துறையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் கக்குவும் எனது கதாநாயகர்கள். இந்திய நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தை முன்மொழிபவர்கள், இத்திட்டத்தால் ஏற்பட இருக்கிற சூழல் அமைப்பின் விளைவுகள் குறித்தும் மக்களின் பாதுகாப்பு குறித்தும் வெளிப்படைத்தன்மையோடு பேசுவதில்லை என்பதை நான் குறிப்பிட்டுக்காட்டிவருகிறேன். இத்திட்டமானது இந்திய, அமெரிக்க மேல்தட்டு பௌதீக அறிவியலாளர்கள் மத்தியில் மட்டுமே விவாதிக்கப்பட்டு வருகிறது”

வல்லாதிக்க அரசுகளான அமெரிக்கா மற்றும் இந்தியாவின் மேட்டுக்குடி அறிவியலாளர்கள் கூட்டத்தினர் தங்கள் நாட்டு அரசுகளின் அழுத்தத்தின் பேரில் மானுட சமூகத்திற்கும் இயற்கை அமைப்பிற்கும் பெரும் கேட்டை விளைவிக்கிற திட்டமாகத்தான் நாம் இ.நி.ஆ திட்டத்தைப் பார்க்கவேண்டியுள்ளது.

கேரள மாநில மார்க்சிஸ்டுகள் இத்திட்டத்திற்கு காத்திரமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அறிவியல் திட்டங்களை கண்ணைமூடிக்கொண்டு வெறித்தனமாக ஆதரிக்கிற தமிழகத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, ஆளும் மத்திய அரசின் குரலாகவே இவ்விடயத்தில் செயல்படுகிறது.

ஆளும் அரசோ அல்லது அவர்களுக்கு ஆதரவாக நின்று இத்திட்டத்தை ஆதரிக்கும் அமைப்புகளோ அவர்களிடத்தில் நாங்கள் எழுப்புகிற ஒரே கேள்வி இதுதான். ”இப்பெரும் அறிவியல் திட்டங்கள் மக்களுக்கான அறிவியலாக உள்ளதா?”. அறிவியலின் அரசியல் பொருளாதார வடிவம், சமூகத்துடனான அதன் உறவு, அறிவியலின் உடைமையாளர் யார் போன்ற உப கேள்விகளுடன் பயணித்து அதற்கான விடைகளை பகுப்பாய்ந்து மக்களிடம் கொண்டுசெல்லாமல், அப்பாவித்தனமாக அறிவியலை ஆதரிக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை மார்க்சின் ஆவிதான் ஏற்குமா என்று அவர்களைப் பார்த்து முதலில் கேள்விகேட்டுக் கொள்ள வேண்டும்.!

இன்றைய அறிவியல் மக்களுக்கானதாக இல்லை. மக்கள் சொத்தாக இல்லை. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அறிவியல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவில்லை. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளும் அறிவியல் திட்டங்களும் சமூகப் பயன்பாட்டிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது. இன்றைய அறிவியல், பெரு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இன்றைய வரலாற்றுக்கட்டத்தில், தனி நபரின், அறிவியலாளரின் அறிவியல் சிந்தனையும் கண்டுபிடிப்பும் தனியுடமையாக்கப்பட்டுவிட்டது. அறிவுசார் சொத்துரிமை என்ற பேரில் ஒருவரின் அறிவியல் சிந்தனையையும், ஆய்வையும் தனியுடமையாகக் குறுக்க முடிகிறது. பிற அறிவியலாளர்களுடன் கலந்துரையாடி சமூகத்தின் தேவைக்கான ஆய்வுத் திட்டமாக இச்சிந்தனையை வளரவிடாமல்,இப்புதிய சிந்தனையை எவ்வாறு லாபம் தரும் பொருளாக மாற்றி சந்தைப்படுத்துவது என்ற நோக்கில் அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இன்றைய முதலாளித்துவ அமைப்பினில் இதுதான் நடைமுறை எதார்த்தமாக உள்ளது. அதாவது தனியுடமையாக்கப்பட்ட அறிவியல் சிந்தனைகள், தனியுடமை தொழில்நுட்பங்களாக வளர்ச்சிப்பெற்று, பின்னர் தனியாரின் உற்பத்திப் பொருளாக சந்தைக்கு வந்து அவர்களுக்கு லாபத்தை அளிக்கிறது. அறிவியலை இவர்கள் சந்தை லாபத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அறிவியல் துறையும் சமூகமும் ஒன்றுக்கொன்று ஒட்டுறவுடன் பயணப்படாமல் ஒரு சிறு கூட்டத்தினரின் மண்டையில் முகிழ்ந்ததது போன்றதொரு பிம்பமே இன்று நிலவுகிறது. முதலாளித்துவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிற இன்றைய அறிவியல் துறையானது முதலாளித்துவ சமூகப் பண்பு கொண்டதாக மட்டுமே கொண்டுள்ளது. அறிவியலின் முதலாளித்துவ பண்புகளை மார்க்ஸ் உணர்ந்ததால் மட்டுமே உழைக்கும் மக்களின் கட்டுப்பாட்டில், ஆளுமையில் அது இருக்கவேண்டும் என்று வற்புறுத்தினார்.

மக்கள் அறிவியலின் கூட்டாளியாக வேண்டும். மனிதனின் நீடித்த வளர்ச்சிக்கான திட்டத்தின் அடிப்படையில் மனித சமூகத்திற்கும் இயற்கை அமைப்பிற்கும் இயைபான வகையில் அறிவியல் ஆய்வுகளும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அறிவியலானது. வசதிபடைத்த சிறு கூட்டத்தினரின் ஏகபோக உரிமையாக அல்லாமல் உழைக்கும் வர்க்கத்தினர் பங்கேற்கிற வகையில் இருக்கவேண்டும். அப்போது மட்டுமே அறிவியல் துறையானது மக்களின் சொத்தாக மாறும்.

Pin It