மின்சாரம் குறித்து 13/2/15 அன்று தினமணியும், 15/2/15 அன்று இந்தியன் எக்ஸ்பிரசும் முறையே தலையங்கமும் கட்டுரையும் வெளியிட்டுள்ளன. இரண்டும் ஒரே கருத்தாக - பணம் படைத்தவர்கள் தடையில்லா மின்சாரம் பெற தனி மின்பாதை அமைப்பதும், மற்றவர்கள் மின் வெட்டுடன் தான் வாழத் தகுதியானவர்கள் என்பது போல தர்ம நியாயங்களை சொல்லியுள்ளனர். மின் இழப்பும், மின் திருட்டும் மின் வாரியங்களின் நட்டத்திற்குக் காரணம் என்று கூறும் expressன் சங்கர் அய்யர், தேசிய மின்சார பகிர்மான நிறுவனம் வேண்டும் என்று முடிக்கிறார். தினமணியோ யூனிட் ஒன்று ரூ.12.50 க்கு வாங்குவது, இல்லாவிட்டால் மின்வெட்டைத் தடுக்க முடியாது என்பது போலவும், விவசாயத்துக்கு மீட்டர் பொருத்தாமல் இருப்பதையும் காரணம் காட்டி மின்வெட்டை அரசியல் கட்சிகள் விமர்சிப்பதையும் குறை சொல்லியுள்ளது.

power grid 340மாநில அரசு, மற்றும் நடுவண் அரசு மின்சாரம் யூனிட் ரூ2.15 ஆக இருக்கும் பொழுது தனியார் மின்சாரம் ஏன் 12.50 ஆயிற்று என்றோ, குறைந்தபட்ச நிலையாக அதனை வாங்க வேண்டாம் என்றோ சொல்ல தினமணிக்கு தைரியம் இல்லை. தலையங்கம் 13ந் தேதி திருவரங்கம் தேர்தலை ஒட்டி வந்திருக்கும்பொழுது அதன் காரணம் வேறாகத்தானிருக்க முடியும். எங்களது மறுப்பு கடிதத்தையும் அது வெளியிடவில்லை.

     ”ஒரு கருத்தை மிக வலுவாக இங்கு பதிவுசெய்திட வேண்டும். மனிதகுலத்துக்கு மட்டும் தான் வெளி ஆற்றல் தேவைப்படுகிறது. மற்ற உயிரினங்கள் உடல் ஆற்றலை மட்டுமே நம்பி வாழ்பவை. வெளி ஆற்றலின் வடிவம் தான் மின்சாரம். ஒரு நாட்டின் ஒட்டு மொத்த வளத்தின் மூல வளம் வெளிஆற்றல் சக்தி வடிவங்கள் தாம். முதல் வளம் உணவு. ஆக ஒவ்வொரு மனிதனுக்கும் நாட்டின் வெளி ஆற்றல் வளத்தில் முழு உரிமையும் உண்டு. அது பணத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படக் கூடாது. கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கலாம். ஆனால், பணம் ஒன்றும் கடவுளால் படைக்கப்பட்டதல்ல.”

பணம் படைத்தவன் கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்கான துறையல்ல, மின்சாரம். 1991 ஆம் ஆண்டிலிருந்து கையாளப்பட்ட மிகத்தவறான கொள்கையால் தான் மின்சாரத்தட்டுப்பாடு இந்த நிலைக்கு வந்தது. புதிய உற்பத்திக்கு மூலதனம் இல்லை என்று சொன்ன நடுவண் அரசு, ஒவ்வொரு ஆண்டும் 24% மூலதனக் கட்டணமும், அதனுடன் மின்சாரக் கட்டணத்தையும் கொடுத்து மின்வாரியங்களை தனியார் மின்சாரத்தை வாங்க வைத்தது. தனியாரோ வெறும் 30% மூலதனத்தை மட்டுமே நான்கு ஆண்டுகளில் செலவழித்திருந்தனர். இது தான் மின்வாரியங்களை மீளமுடியாத கடனில் மூழ்கடித்தது. 1957 ஆம் ஆண்டு தொடங்கி 2001ம் ஆண்டு வரையான 44 ஆண்டுகளில் அனைத்து மின்வாரியங்களும் சம்பாதித்த மொத்தக் கடன் 33,000 கோடி தான். அதுவும் இருண்டு கிடந்த நாட்டில் மின்சாரத்தை அனைத்து மூலைக்கும் எடுத்துச் சென்றதால் வந்தது. இதனைச் சமுதாய மூலதனமாகக் கொள்ள வேண்டும். ஆனால் தனியார் மின்சாரத்தால் 2001ம் ஆண்டிலிருந்து 2011 ஆண்டுக்குள்ளான 10 ஆண்டு காலத்தில் 1.1 லட்சம் கோடி நட்டத்தை அடைந்தன வாரியங்கள். முழுக்க முழுக்க தனியார் மின்சாரத்தினால் வந்த கடன் ஆகும். இது சமுதாய மூலதனமல்ல; தனியாரின் கொள்ளை லாப வேட்டை.

2001 ம் ஆண்டில் நாட்டின் மொத்த நிறுவுத் திறன் 1,16,000 மெகாவாட்டாக இருந்த பொழுது வெறும் 2241 மெகாவாட் ஆக இருந்த தனியார் மின்னுற்பத்தி இன்று 93,000 மெகாவாட் உயர்ந்துள்ளது. நாட்டின் மொத்த நிறுவுதிறனோ 2,58,701 மெகாவாட் தான். 1.93 சதத்திலிருந்து 36 சதத்துக்கு உயர்ந்து போயிருக்கிறது. மின்வாரியங்கள் மக்களுக்கு எட்டும் விலையில் மின்சாரத்தை வைக்க மீண்டும், மீண்டும் நட்டத்தையே சம்பாதித்தன. மாநில அரசுகளோ தனியார் மின்சார விலையை ஈடுகட்ட மானியத்தை மட்டும் தரமுடிந்ததே தவிர புதிய நிலையங்களுக்கு முதலீடு செய்யமுடியவிலை. உதாரணத்துக்கு 2008ல் தமிழக அரசின் மின் மானியம் 1987 கோடி. கடந்த ஆண்டு 4900 கோடி. உடன்குடி மின் திட்டத்துக்கு மூலதனமில்லை. அது மட்டுமல்ல; தனியர் கொள்முதல் மிகப்பெரிய ஊழலுக்கு வழியை ஏற்படுத்தியது. ஆண்டுக்கு 2400 கோடி யூனிட் கொள்முதல் மிகப்பெரிய ஊழல் பணத்தை தரவல்லது.

 வாரியங்கள் நட்டத்திலிருந்து மீள வேண்டுமெனில் தனியார் மின்சாரத்தை தவிர்ப்பதே ஒரே வழி என்ற நிலை தெளிவடைந்த பொழுது தான் தினமணி தனியாருக்கு வாதாடவும் விவசாயிகளை சாடவும் ஆரம்பித்திருக்கிறது.

கடந்த 31/3/2014ல் காற்றாலை தனியார் மின்சாரத்தை சரியாக கணக்கிடாததால் 13000 கோடி நட்டம் என்பதை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தோம். அன்று ஊடகங்கள், தினமணி உட்பட ஏனோ கண்டு கொள்ள வில்லை.

நட்டத்திலிருந்து வாரியங்கள் மீளாது என்றால் தனியார் மின்சாரத்தை விற்க சந்தை வேண்டுமே. அதற்கான கண்டுபிடிப்பு தான் பணம் உள்ளவனுக்கு தடையில்லா மின்சாரம்; மற்றவர்களுக்கு மின்வெட்டு கலந்த மின்சாரம் என்கின்றனர் திரு.சங்கர் அய்யரும் தினமணியும்.

இவர்கள் மட்டுமல்ல, நடுவண் அரசும் இதற்கான சட்டத் திருத்ததை கொண்டு வரப்போகிறது.அதனை தனியாக விவரிப்போம்.

- சா.காந்தி

Pin It