மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 5 மாதங்களுக்கு முன் பரவிய எபோலா எனும் நோய், உலக மக்கள் அனைவரையும் தொற்றிக் கொள்ளும் அபாயம் இருப்பதைக் கண்டு அஞ்சிய உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation - WHO) இதை உலக அளவில் அவசரநிலையாகப் பிரகடனப் படுத்தியது; இந்நோய் பரவாமல் இருக்கவும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் அடையவும், உலக நாடுகள் அனைத்தும் உதவ வேண்டும் என்று வேண்டுகோளையும் விடுத்தது.

Cuba fights ebola

எபோலா நோயினால் பாதிக்கப்பட்டு உள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் மக்கள் குணமடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ இல்லையோ, அந்த நோய் தங்கள் நாட்டு மக்களைத் தொற்றிக் கொண்டுவிடக் கூடாது என்பதற்காகவேனும் உலக நாடுகள் அனைத்தும் நிதியுதவி முதல் மருந்து மாத்திரைகள் அளித்தல், மருத்துவர்கள் செவிலியர்களை அனுப்புதல் வரை அனைத்து உதவிகளையும் செய்ய முனைந்து உள்ளன.

இச்சேவையில் அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகள் உட்பட உலகின் அனைத்து நாடுகளுக்கும், வழிகாட்டியாகவும், முன்னணி நாடாகவும் கியூபா விளங்குவதை இலண்டன் மாநகரில் இருந்து வெளிவரும் 'தி கார்டியன்' (The Gaurdian) பத்திரிக்கை மறைக்க முடியாமல் வெளியிட்டு உள்ளதை இங்கு 6.12.2014 நாள் இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டு உள்ளது.

உலகின் வல்லரசு நாடுகள் ஆயிரக் கணக்கில் மருத்துவர்களையும் செவிலியர்களையும் அனுப்புவதோடு மட்டும் அல்லாமல் பெரும் நிதி உதவியையும் அளிக்க முன்வந்து உள்ளன. ஆனால் களத்தில் இவர்கள் அனைவருக்கும் வழி காட்டி நடத்திக் கொண்டு இருப்பது கியூபாவில் இருந்து வந்துள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் தான் என்று உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது.

புதிதாகத் தோன்றி உள்ள இந்நோயின் தன்மையை ஆராய்ந்து, அதற்கான மருந்துகளை உருவாக்கித் தருவது முதல் நோயாளிகளிடம் தாங்கள் குணம் அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி, உளவியல் ரீதியாகவும் சிகிச்சை அளிப்பது வரையிலும் கியூப மருத்துவர்கள் மட்டுமே முன்னணியில் இருப்பதையும், வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றும் பிற நாடுகளின் மருத்துவர்கள், கியூப மருத்துவர்களின் தலைமையின் கீழ் செயல்படுவது போலச் செயல்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் பதிவு செய்து உள்ளது. கியூப மருத்துவர்கள் களத்திற்குச் செல்லும் வரை எபோலா நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று வழி தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்த நிலையில், கியூப மருத்துவர்கள் வந்து சிகிச்சை முறையை வெற்றிகரமாக உருவாக்கி உள்ளார்கள். இது மற்ற நாட்டு மருத்துவர்கள் கியூப மருத்துவர்களின் தலைமையை ஏற்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவச் சிகிச்சையில் கியூபாவின் அறிவுத் திறனும் மனித நேயமும் மற்ற நாடுகளுக்கு வழியாட்டியாக இருக்கும் உண்மை வெளிப்படுவது இது முதல் தடவை அல்ல. நான்கு ஆண்டுகளுக்கு முன் ஹைடியில் (Haiti) நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுதும், 2005ஆம் ஆண்டு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுதும் இதே நிலை தான் நிலவியது.

"கியூப நாட்டின் மருத்துவச் சேவையால் உலகில் கோடிக் கணக்கான மக்கள் நோய்களில் இருந்து குணமாகி மறுவாழ்வு பெறுகிறார்கள்" என்று கனடா நாட்டுப் பேராசிரியர் ஜான் கிர்க் (John Kirk) கூறி உள்ளார்.

இவ்வளவு சேவையையும், அமெரிக்கா, கியூபா மீது விதித்து இருக்கும் பொருளாதாரத் தடைகளையும் கடந்து கொண்டு தான் என்றும், பொருளாதாரத் தடைகளை நீக்கப்பட்டால், கியூபாவினால் உலகில் மருத்துவத் துறையில் பாய்ச்சல் வேகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் கார்டியன் பத்திரிக்கை தனது கருத்தைத் தெரிவித்து உள்ளது. மேலும் தனது பதவியின் கடைசிக் காலகட்டத்தில் இருக்கும் பாரக் ஒபாமா, தன்னுடைய காலத்தில் உலகுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்தால், கியூபா மீது 50 ஆண்டு காலமாக உள்ள பொருளாதாரத் தடைகளை நீக்கலாம் என்றும் அப்பத்திரிக்கை கூறி உள்ளது.

உயர் கல்வி மிக உயர்ந்த நிலையில் உள்ளதாகக் கருதப்படும் அமெரிக்க நாட்டு மருத்துவர்களை விட, ஏழை நாடான, அதுவும் 50 ஆண்டுகளாகப் பொருளாதாரத் தடைகளின பளுவைச் சுமந்து கொண்டு இருக்கும் கியூயாவின் மருத்துவர்கள் சிறந்த முறையில் மருத்துவம் பார்க்க முடிவது எப்படி?

முதலாளித்துவப் பொருளாதார முறையில் நாடு இயங்கிக் கொண்டு இருக்கும் பொழுது மனிதர்கள் பொருள் தேட வேண்டும் என்பதற்குச் சிந்திக்கவே ஊக்குவிக்கப் படுவார்கள். அறிவுத் திறன், மனித நேயத்தை விடவும் பொருள் சேர்த்தலே முக்கியமாக மதிக்கப்படும். ஆனால் சமதர்ம (சோஷலிச) அமைப்பில் மக்களின் நலனுக்குச் சிந்திப்பதே ஊக்குவிக்கப்படும்; மக்கள் நலனுக்காகச் சிந்திப்பவர்களே சமூகத்தில் மதிக்கப்படுவார்கள். ஆகவே பணக்கார, வல்வரசு முதலாளித்துவ நாடுகளின் மருத்துவர்கள் பின் தங்கி இருக்க, ஏழை நாடாக இருந்தாலும் சமதர்ம நாடான கியூப நாட்டு மருத்துவர்கள் களத்தில் முன்னணியில் இருக்க முடிகிறது.

நாம் முதலாளிகளின், முதலாளித்துவ அறிஞர்களின் மயக்கு மொழிப் பேச்சுகளின் மயங்கி நம் உடல் நலனைப் பற்றி அக்கறை கொள்ளாமல் இருக்கப் போகிறோமா அல்லது நம் உடல் நலனைப் பேண, சமதர்ம முறை வேண்டும் என்று போராடப் போகிறோமா?

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.12.2014 இதழில் வெளி வந்துள்ளது)

Pin It