1992 டிசம்பர் 5-ம் தேதி உத்திரபிரதேச மாநிலம், அயோத்தியாவில் அதிகாலையிலேயே நூற்றுக்கணக்கான ‘கரசேவகர்கள்’ வந்து இறங்கினர். காலை 11 மணி அளவிலிருந்து பூஜைகள் ஒருபுறமும், கரசேவகர்களின் பயிற்சிகள் ஒருபுறமுமென அயோத்தி நகரம் பரபரப்பாய் இயங்கியது.

babri masjid 340அயோத்தியிலிருந்து கொண்டே, ராம்சங்கர் அக்னி கோத்ரி பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி, கூடி இருக்கும் கூட்டம் எதற்கானது என்பதனை தெளிவாகக் கூறுகின்றார். மசூதியை இடிப்பது என்பதற்கான பயிற்சியை முழுமையாகப் பெற்றிருந்த கரசேவகர்கள், தங்களது ஒத்திகை பார்ப்புகளை, இடிக்கப் போகும் மசூதியை வைத்தே நிறைவேற்றினர். மறுநாள் காலை, அதாவது டிசம்பர் 6-ம் நாள், முன்னாள் பிரதமர் திரு.வாஜ்பாய், முன்னாள் துணைப் பிரதமர் திரு.அத்வானி, முரளி மனோகர் ஜோசி, வினய் கட்டியார் என முக்கியத் தலைவர்கள் அயோத்தியாவிற்குள் நுழைய, கரசேவகர்கள் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அணிவகுக்கப்பட்டனர், மிகவும் நேர்த்தியான முறையில். காலை எட்டு மணிக்கெல்லாம் கரசேவகர்கள் தங்களது புனிதப் பணியாக நினைத்துக் கொண்டிருந்த பாபர் மசூதியை இடிக்கும் செயலை துவங்கிவிட்டனர். சர்ச்சைக்குரிய நிலம் எனக் கருதி, அமைக்கப்பட்டிருந்த சுற்றுப்புற தூண்களை பிடிங்கி எறிந்ததிலிருந்து ஆரம்பித்தனர், அவர்களது புனிதப் பணியை.

அவ்வப்போது அத்வானி அவர்கள், ஒலிபெருக்கியில் சில தகவல்களை கட்டளைகளாகப் பிறப்பிக்க, அதற்கு இசையும் வண்ணம் கரசேவகர்கள் தங்களது பணியைத் தொய்வின்றி தொடர்ந்தனர். இரண்டு நாட்களாகவே கரசேவகர்கள் அயோத்தியாவில் இருந்தும், பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி இருந்தும், மத்திய ரிசர்வ் படையினர் ஏதோ சம்பவம் டிசம்பர் 6 அன்றுதான் திடீரென நிகழ்ந்தது போல, பைசாபாத்திலிருந்து படையெடுத்து வந்தனர். புயல் வேகத்தில் வந்த ரிசர்வ் படையினரை, அயோத்தி நகருக்கு 2 கிலோ மீட்டர் தொலைவிலேயே தடுத்து நிறுத்தியது, “நிலவரம் கட்டுக்குள் வந்துவிட்டது, யாரும் அயோத்திக்குள் செல்ல வேண்டாம்” என பைசாபாத் மாவட்ட நீதிபதி வத்சவா அவர்கள் பிறப்பித்த ஆணை.

நீதிபதி வத்சவா ஆணை பிறப்பிக்கும்போது மதியம் 2 மணி. பாபர் மசூதியின் வலது புற கோபுரம் இடிந்து கீழே விழும்போது மணி மதியம் 3.05 என மத்திய புலனாய்வுத் துறையின் அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

தொடர்ந்து மசூதியின் நடுக்கோபுரமும், இடதுபுற கோபுரமும் சரிய, மாலை 6 மணிக்கெல்லாம் மசூதி மொத்தமாக தரைமட்டம் ஆக்கப்பட்டு, இரவு 8 மணிக்கு இடிபாடுகள் நீக்கப்பட்டு, நள்ளிரவு ஒரு மணி அளவில் மசூதி இருந்த இடத்திலிருந்து சிறு சுவர் எழுப்பப்பட்டு, அது இராமர் கோவிலாக உருவெடுத்துவிட்டது. மறுநாள் டிசம்பர் 7 முழுவதும் பூஜைகள் செய்யப்பட்டு, பிரதிஷ்டைகள் பரிபூரணம் ஆகியதும் நெஞ்சம் உருகிய கரசேவகர்கள், அன்று இரவிலிருந்தே சிறிது சிறிதாக சிறப்பு இரயில்களின் மூலம் தங்களது ஊருக்குத் திரும்ப ஆரம்பித்தனர். டிசம்பர் 8-ம் தேதி காலை, அயோத்தியாவிற்குள் நுழைந்த மத்திய ரிசர்வ் படையினர், முரளிமனோகர் ஜோசி, வினய் கட்டியார், அத்வானி உள்ளிட்ட தலைவர்களை கைது செய்து விருந்தினர் மாளிகையில் வைத்தனர்.

1885-ம் ஆண்டு ரகுபீர் தாசு தொடுத்த வழக்கிலிருந்து சர்ச்சைக்குள்ளாகி, 1949-ம் ஆண்டு அபிராம் தாசு வைத்த இராமர் சிலையால் கலவர பூமியாகி, தொடர்ந்து இந்தியாவின் மிகப்பெரும் கண்காணிப்பிற்குள் இருந்த அயோத்தி நகருக்குள்தான் இத்தனை வெளிப்படையாக பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நடத்தி மசூதியை இடித்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. இந்த இலக்கை அடைய அது எடுத்த முயற்சியும், தொலைநோக்கு திட்டமிடுதலும், அர்ப்பணிப்பும், மசூதியை மீட்கப் போராடுபவர்கள் அறிய வேண்டிய வரலாறு.

1925-ம் ஆண்டு “இந்துத்துவா” எனும் நூலை சாவர்க்கர் என்பவர் வாயிலாகப் பெற்று, அதுகுறித்து அவரோடான சில சந்திப்புகளை நடத்தி, அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில், விஜயதசமி நாளில், “ஆர்.எஸ்.எஸ்” எனும் அமைப்பை நிறுவினார், ‘கேசவ பாலிராம் ஹெட்கேவார்’. இந்து ராஷ்ட்டிரம் அமைக்க வேண்டும், அதன் இராஜாவாக இராமர் இருக்க வேண்டும் என்கிற இலக்கைப் பிரதானமாய்க் கொண்டே அமைக்கப்பட்டது ஆர்.எஸ்.எஸ்.

அப்படி இராமரை மூலதனமாகக் கொண்ட அமைப்பிற்கு, இராம நவமியில் பெயர் சூட்டப்பட்டது. இராமர் இன்றி ஆர்.எஸ்.எஸ் இல்லை என்பதாகவே அதன் எல்லா செயல்பாடுகளும் அமையத் தொடங்கியது. தனது இராஜாவிற்கு என அது ஒரு கோட்டையை அமைக்க ஆசைப்பட்டது. அப்படி அது முனைகையில், 1885-ம் ஆண்டு இவர்களின் மூதாதையரான ரகுபீர் தாசு என்பவர் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இருக்கும் இடம்தான் இராமர் பிறந்த இடம் எனத் தொடர்ந்திருந்த வழக்கு கை கொடுத்தது. உடனே அது தனது பணிகளைத் துரிதப்படுத்தியது.

தங்களது திட்டத்தை செயல்படுத்துவதற்கான கொள்கைக்கு, பாசிசத்தை அடித்தளமாய் முன்வைத்தார் ஹெட்கேவார். 1930-ம் ஆண்டு இவருக்கும், டாக்டர்.மூஞ்சே அவர்களுக்குமான சந்திப்பின் பிறகு முசோலினியின் பாசிசக் கோட்பாடு, இந்தியாவிற்குள் நடைமுறைக்கு வந்தது.

அயோத்தி நகரம் முழுவதுமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால் தத்தெடுக்கப்பட்டது. இராமர் பிறந்த தினமான இராம நவமி தொட்டு, உள்ளூர் திருவிழாக்கள் வரை, எதுவென்றாலும் வெகுவிமர்சையாக அயோத்திக்குள் தொடர்ந்து கொண்டாடப்பட்டது. எந்தவொரு திருவிழாவிலும், எப்படியும் இராமர் கதாநாயகனாக முன்னணியில் இருக்கும் அளவு பார்த்துக் கொள்ளப்பட்டது. இராம நவமியைக் கொண்டாடுபவர்கள், இராமரின் திருமணநாளை கொண்டாடமலேயே இருந்தனர். இயல்பிலேயே இருந்த பெண் அடிமை மனோபாவம் இராம அடியார்களுக்கு சீதாவை முதன்மைப்படுத்தும், இராமர் திருமணநாள் நிகழ்வைக் கொண்டாட விருப்பமில்லாமல் இருந்தது. இந்த நிலையை மாற்றி அமைத்து, இராமரின் திருமணநாளையும் திருவிழாவாக்கிக் காட்டியது ஆர்.எஸ்.எஸ். இதனால் அகோரிகளிடத்திலிருந்து சர்ச்சைகளும், எதிர்வினைகளும் ஏற்ப்படா வண்ணம், தனது கிளை அமைப்புகளில் ஒன்றான வி.ஹெச்.பி அமைப்பை வைத்து அது சமாளித்துக் கொண்டது.

1949-ம் ஆண்டு நாம் அறிந்தது, பாபர் மசூதிக்குள் இராமர் சிலை வைக்கப்பட்டது என்பதுதான். அதே சமயம், இதே 1949-ம் ஆண்டுதான் அயோத்திக்குள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டது. அயோத்தியை மையமாகக் கொண்டு, ராமச்சந்திர தாசு பரமஹம்சு தலைமையில் உருவாக்கப்பட்ட ‘ராமாயண மகா சபை’யும், இராமர் திருமணநாள் விழா எடுப்புகளும் இதே 1949-ம் ஆண்டின் தொடக்கத்தில்தான் நிகழ்ந்தவை.

இது நிகழும்போது ஆர்.எஸ்.எஸ் இரண்டாம் தலைமுறையை எட்டியிருந்தது. அதாவது ஹெட்கேவார் இறந்து, கோல்வால்கர் தலைமை ஏற்றிருந்த ஆர்.எஸ்.எஸ் இது. இதேபோல இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும், இந்த சமயம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முதல் மறுமலர்ச்சியும் கூட.

1948-ம் ஆண்டு இந்த இந்திய தேசத்தின் தந்தை என போற்றப்படும், “மகாத்மா காந்தி”யார் அவர்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்த நாதுராம் கோட்சே சுட்டுக் கொலைச் செய்ததை அடுத்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது முதல் தடையைப் பெற்றது. இந்த பலியிலிருந்து மீள, இசுலாமியர்கள்தான் காந்தியைக் கொன்றார்கள் என கதை கட்டிவிட அவை எடுத்த முயற்சிகளை பலரும் முறியடித்தனர். நம் தமிழகத்தில் தந்தை பெரியார் அவர்கள், ஆர்.எஸ்.எஸ்-சின் இந்த முயற்சியை உடைத்து எறிந்ததில் முக்கிய இடம் பிடித்திருந்தார். இந்தப் பின்னடைவை சற்றும் எதிர்பார்த்திராத ஆர்.எஸ்.எஸ், தனது அறிவுக் கூர்மையால், சில சமரசங்களை அரசிடம் செய்து கொண்டு, தனது முதல் மறுமலர்ச்சியை அடைந்தது.

இந்தச் சூழலில்தான் 1949-ம் ஆண்டு, டிசம்பர் 22 நள்ளிரவில் திடீரென பாபர் மசூதியின் உள்ளே இராமர் அவதரித்தார். ஆனால் டிசம்பர் 23-ம் தேதியே அபிராம் தாசு உட்பட 60 பேர் அயோத்தி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர், ‘பாபர் மசூதிக்குள் திருட்டுத் தனமாக சிலையை வைத்தவர்கள்’ என்கிறதன் அடிப்படையில். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இந்த முயற்சி தோல்வியைக் கண்டாலும், அது தளராது, தனது அடுத்தடுத்த திட்டங்களை வகுத்து முன்னேறியது. இராமர் சிலையை அகற்றச் சொல்லி இந்தியப் பிரதமர் திரு.நேரு அவர்கள் பிறப்பித்த உத்திரவை குப்பையில் எறிந்தார், பைசாபாத் மாவட்ட ஆணையர் திரு.கே.கே.நய்யார் அவர்கள். அந்தளவிற்கு தனது அடித்தளத்தை அமைத்திருந்தது ஆர்.எஸ்.எஸ்.

பிறகு, 1975-ம் ஆண்டு எமர்ஜென்சி கால கட்டத்தில் இன்னொரு தடையைப் பெற்றது, ஆர்.எஸ்.எஸ். இந்த தடையையையும் மிகவும் இலாவகமாக உடைத்து எறிந்து இரண்டாம் மறுமலர்ச்சி அடைந்தது ஆர்.எஸ்.எஸ்.

தங்களது இராமரின் கோட்டைக்காக அது பல யுக்திகளை தீட்டியது. இந்தியாவெங்கும் பள்ளிக் கூடங்களை தோற்றுவித்தது. சாமியார்கள் முதல் மலைவாழ் மக்கள் வரை தங்களது கொள்கையை எடுத்துச் செல்ல அது பல்வேறு அமைப்புகளை நிறுவியது. இளைஞர்களைக் கவர ஏ.பி.வி.பி அமைப்பு தொட்டு பிராமணர் சங்கம், ஜனக் கல்யாண், ஜன் ஜாக்ரன், விசுவ இந்து பரிசத், பஜ்ரங்கதள், விசுவ இந்து சம்மேளனம் என நீண்ட அதன் கிளைகள், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி என்கிற பெயரில் தமிழகத்திலும் உருவெடுத்தது. இதன் அனைத்திற்கும் இலக்கு ஒன்று, பாதை வேறு. எங்கும், எதிலும் இராமர் நிரம்பிக் காட்சி தந்தார். 1940-களில் இருந்து தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பள்ளிகளில் பயின்றவர்கள், அயோத்தியின் பல நிர்வாகங்களில் நிரம்பினர். பிரதமர் சொல்லியும் சிலையை அகற்றாமல் இருந்த மாவட்ட ஆணையர் கே.கே.நய்யார், ஜன சங்கத்தில் சேர்ந்து, அவரின் அச்செயலுக்கான பின்னணிகளை வெளிப்படையாக செயலால் விளங்க வைத்தார்.

babri masjid1989-ம் ஆண்டு இராமர் கோவில் கட்ட வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வேட்கை உச்சத்தை அடைந்து, அத்வானி தலைமையில் நாடெங்கும் இர யாத்திரை நிகழ்த்தப்பட்டு, இராமர் எல்லோர் வீடுகளுக்குள்ளும் இலவசமாக அளிக்கப்பட்டு குடிகொண்டார். இதன் நீட்சியாக, டிசம்பர்-6 1992-ல் தங்களது ‘ஜென்மபூமி ஆபரேசன்’ நிறைவேற்றப்பட்டு, மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த நிலையை இவர்கள் அடைந்தபோது, ஹெட்கேவார், பிரன்ஜ்பே, கோல்வால்கர் என மூன்று தலைவர்களைக் கடந்து, நான்காம் தலைமுறையாக, நான்கம் தலைவராக பாலாசாகிப் தேவரஸ் வந்திருந்தார். இந்த இலக்கை இவர்கள் அடைய 1925-ல் தொடங்கி, 67 ஆண்டுகள் தேவைப்பட்டது. மூன்று தலைவர்களைக் கடந்து நான்காவது தலைவரைக் காண நேரிட்டது. அந்தளவிற்கு பொறுமையும், சகிப்புத் தன்மையும், திட்டமிடுதலில் தெளிவும், களப்பணியில் அர்ப்பணிப்பும் என பல நிலைகளை தனதாக்கிக் கொண்டிருந்தனர். இதே காலகட்டத்தில் மசூதி இடிப்பைத் தொடர்ந்து, தனது மூன்றாவது தடையையும் பெற்றது. பிறகு அதிலிருந்தும் மீண்டு, இப்போதும் தொடர்ந்து இயங்குகின்றது.

இதனால்தான், இந்த தேசத்தில் பெரும்பான்மை மக்கள் இவர்களுக்கு எதிராக இருந்தும், இவர்கள் ஆட்சியைப் பெறாமலும் கூட இவர்களால், இதனை செயல்படுத்திக் காட்ட முடிந்தது. இப்போது அமைந்திருக்கிற பாஜக அரசு தேர்தல் பிரச்சாரத்தின் போது, “சட்டத்திற்கு உட்பட்டு இராமர் கோவில் கட்டுவோம்” என வாக்குறுதி அளித்துள்ளது. அவர்களின் ஆட்சி இல்லாதபோதே அவர்களால் மசூதியை இடிக்க முடிந்தது எனும்போது, அவர்களின் ஆட்சி உருவாகிவிட்ட பிறகு அவர்களால் தங்களது ஆதர்சன நாயகனுக்கு கோட்டை எழுப்ப இயலாமலா போய்விடுமா?

என்னைப் பொருத்த மட்டில் ஆர்.எஸ்.எஸ் அதன் நோக்கத்தில் தெளிவான, உறுதியான‌ அமைப்பு. அது தனது இலக்கை அடைய அவசரப்பட்டதில்லை. ஹெட்கேவார் தொடங்கி பாலாசாகிப் வரை அது இலக்கில் தெளிவாய் இருந்துள்ளது. இப்போதும் தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதியை, ஆட்சியைக் கைப்பற்றியதும் செயல்படுதிட வேண்டும் என்று துடிக்கவில்லை. சொல்லப்போனால் அதுகுறித்து இதுவரையில் ஒரு வார்த்தையுமே பேசவில்லை. ஆனால் அதற்கான வேலைகள் ஆராவாரங்களற்று நடந்து கொண்டிருக்கும், அதுதான் ஆர்.எஸ்.எஸ்.

இது மாதிரியான எந்த தொலைநோக்காவது மசூதியை மீட்போம் எனச் சொல்லிக் கொண்டிருக்கும் இசுலாமியர்களிடத்தில் இருக்கிறதா? இவர்களைப் போன்ற இலக்கில் உறுதி இருக்கிறதா? இலக்கை அடைவதற்கான அர்ப்பணிப்பு இருக்கிறதா? மீட்ப்பதற்கான ஏதேனும் திட்டமிடுதல் இருக்கிறதா எனில் ஒரு வெங்காயமும் இல்லை என்பதே வெளிப்படையாக யாவரும் அறிந்த நிலை.

இதோ, மசூதி இடிந்து 22-வது ஆண்டு வந்து விட்டது. எல்லா வருடம் போல இந்த வருடமும் போஸ்டர், பேனர், மைக் செட் என திருவிழா களை கட்டிக் கொண்டுள்ளது. இதைத் தாண்டி ஏதும் நடந்துள்ளதா? அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் மேல்முறையீடு குறித்து ஏதும் பார்வை இருக்கிறதா என்றால் அதெல்லாம் நமக்கெதற்கு என்கிற நிலைதான் தமிழக இசுலாமியர்களிடம் உள்ளது.

தமிழகத்தைத் தாண்டி, இந்த சடங்கு நிகழ்ச்சி கூட காணுவது அரிது. ஏதோ சொற்ப இடங்களில் சிறு கருத்தரங்குகள் நடந்தன‌. தங்களது திட்டத்தை நிறைவேற்ற ஆர்.எஸ்.எஸ் இந்தியாவெங்கும் கிளை பரப்பி செயல்பட்டபோதும், அது தனது மையமாக அயோத்தியை, அதாவது மசூதி இருக்கும் இடத்தைக் கொண்டு செயல்பட்டது. ஆனால் அதனை மீட்போம் எனச் சொல்லும் நாம் தமிழகத்தின் சென்னையில் மண்ணடி, நெல்லையில் மேலப்பாளையம், கோவையில் கரும்புக்கடை என மையமிட்டுக் கொண்டுள்ளோம். அயோத்தியில் இதனை நினைத்துப் பார்க்கவேனும் ஆட்கள் உள்ளனரா? தமிழகத்தைத் தாண்டி எந்த மாநிலத்திலும், அரசியலுக்காகவேனும் ஓர் அழுத்தம் பாபர் மசூதி குறித்து எழுப்பப்பட்டிருக்கிறதா? ஏதோ மனித உரிமைச் செயல்பாட்டாளர்களான அருந்ததிராய், நீதியரசர் வீ.ஆர்.கிருஷ்ணய்யர் போன்றோர்தான் குரல் எழுப்புகின்றனரே தவிர, அங்கு இசுலாமியர்களைப் பார்க்க இயலவில்லை.

வருடா, வருடம் தனித் தனி அமைப்புகளாய் கூடிக் கலையும் இசுலாமிய அமைப்புகள், குறைந்தது நபிகளாரை இழிவுபடுத்தி எடுத்த அமெரிக்க திரைப்படத்திற்காக ஒட்டுமொத்தமாக திரண்டு போராடியதைப் போலாவது போராடி இருக்க வேண்டாமா? இல்லை இதுகுறித்து மேலும் என்ன செய்யலாம் என அனைத்து இயக்கத் தலைவர்களும் ஒருங்கிணைந்து கூடி விவாதித்திருக்க வேண்டாமா? இந்திய அளவில் உள்ள இசுலமியர்கள் அல்லாத மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், ஜனநாயகச் சக்திகளையும் அழைத்து, கலந்தாலோசித்து இருக்க வேண்டாமா? எதுவும் இல்லை. எப்படி முடியும்? இதைச் செய்தால் நாம் எப்படி அமைப்பு நடத்த முடியும்? நாம் எப்படி தலைவராக இருக்க முடியும்? என்கிற நினைப்புதான் மேலோங்கி இருக்கிறதே தவிர, சமூக அக்கறை சிறு புண்ணாக்கும் கிடையாது.

ஆண்டுதோறும் இதற்கு செலவிடும் தொகைகளை, மேல்முறையீடு செய்து நீதிமன்றத்தில் வழக்கு நடத்திக் கொண்டிருப்போருக்கு கொடுத்து உதவியிருக்கலாம். அப்படி யாரும் இங்கு செய்யவில்லை.

இப்படி ஒரு மசூதி அநீதியாக இடிக்கப்பட்டுள்ளது என எந்த நாடாவது ஐ.நா மன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனரா? பிற நாடுகளை விடுங்கள், இடிபட்டது இசுலாமியர்களின் மசூதி என்கிறதன் அடிப்படையில், ஒரே ஒரு அரபு நாடாவது ஐ.நா-வில் குரல் எழுப்பி உள்ளதா? இதுகுறித்து ஒரு சர்வேதச பார்வையை நாம் ஏற்படுத்தி இருக்கின்றோமா? இதிலும் எந்த ஆணியையும் நாம் புடுங்கவில்லை.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் போல எந்த ஒரு திட்டமிடுதலும் இசுலாமியர்களிடம் இல்லை என்பதைவிட, அவர்களைப் போல ஒற்றுமை குறைந்தபட்சம் கூட இல்லை. ஆனாலும், வெளித்தோற்றத்தில் மசூதியை மீட்போமென பம்மாத்துக் காட்டும் வேலைக்கு ஒன்றும் குறைச்சலில்லை. என்ன செய்ய, தங்களின் குடும்பச் சூழலால், தங்களது உழைப்பை இன்னொரு நாட்டில் செலுத்திக் கொண்டு, அதிலிருந்து சிறு தொகையை ஏதோ சமூகத்திற்கு நல்லது செய்வார்களென நம்பி அனுப்பும் பல ஜீவன்களை திருப்திபடுத்துவதற்காகவாது, இசுலாமிய அமைப்புகள் டிசம்பர்-6-ல் துக்கக் கூட்டம் நடத்தியாக வேண்டியுள்ளது.

இதைவிடக் கொடுமை, தானும் படுக்க மாட்டேன் தள்ளியும் படுக்க மாட்டேனெனும் மனோபாவம். இந்துத்துவத்தின் எந்த தலைவருக்காவது வரலாறு இல்லாமல் இருந்திருக்கின்றதா? ஆனால் இசுலாமியத் தலைவர்களுக்கு?

இசுலாமியர்களின் அரசியல் எழுச்சியாளராக இந்தியாவில் அறியப்படுபவர்களில் முதன்மையானவர்கள், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களும் பழனிபாபா அவர்களும். குறிப்பாக தமிழகத்தில் இவர்கள்தான் ஆகப்பெரும் இசுலாமிய அரசியல் கர்த்தாக்கள். ஆனால் இவர்களைக் குறித்த தெளிவான வரலாறுகள் உண்டா?
எப்படி வரும்?

காயிதே மில்லத் அவர்களின் வாழ்க்கையை ஆவணப்படமாக்க நான்கு வருடங்களுக்கு மேலாக அலைந்து திரிந்து ஒரு ஆளூர் ஷாநவாஸ் எடுக்க வேண்டியிருக்கிறது. அப்படி கடினப்பட்டு எடுத்த திரைப்படத்தை திரையிட்டுக் காட்ட கூட யாரும் முன்வருவதில்லை. அதற்கும் அயலக வாழ் தமிழ் இசுலமியர்கள்தான் தேவையாக இருக்கிறது.

ஏன் பழனிபாபவின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஒரு வருடமாய் பயணித்துக் கொண்டுள்ளேன், இதுவரையில் முடிக்க இயலவில்லை. இதற்கும் சமகாலத்தில் இறந்தவர்தான் பழனிபாபா. இந்தப் புத்தகத்தில் வரலாறு உடன் சேர்த்து ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவருகிறது. இந்தக் கட்டுரைத் தொகுப்பிற்காக கட்டுரை கேட்டு அலைந்து புறக்கணிக்கப்பட்டதுதான் மிச்சம். தொல்.திருமாவளவன், ஜான் பாண்டியன், சீமான் என இசுலாமியர்கள் அல்லாத தலைவர்கள் உடனே கட்டுரைகளை அளிக்கின்றனர். ஆனால் இசுலாமியத் தலைவர்கள் இன்றுபோய் நாளை வா கதையில்தான் முகாமிட்டுக் கொண்டுள்ளனர்.

இதன் பின்னணியில் உள்ளது தானும் படுக்க மாட்டேன், தள்ளியும் படுக்க மாட்டேன் நிலைதான். மேலும் ‘இதுபோன்றவைகளை சமூகத்தின் வளர்ச்சியாகப் பார்க்காமல், தனி நபரின் வளர்ச்சியாக’ பார்க்கும் நிலைதான் இசுலாமியர்களிடையே அதிகம் பரவியுள்ளது. ஏதோ ஒரு புத்தகத்தை எழுதித்தான் நாளை கோட்டையைப் பிடித்துவிடப் போகிறோமா என்ன?

ஆக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை போன்ற எந்த திட்டமிடுதலும், தொலைநோக்கும் அர்ப்பணிப்பும், பொறுமையும், இலக்கில் நிதானமும், விவேகத்தோடு பொருந்திய வேகமும் என எதுவுமே இசுலாமியர்களிடத்தில் இல்லை. இந்த இலட்சணத்தில் எப்படி மசூதியை மீட்க முடியும்? அதன் ஒரு செங்கல்லைக் கூட மீட்க முடியாது.

மசூதிக்குள் இராமர் சிலை வைக்கப்பட்டபோதும் சரி, அது இடித்து தரைமட்டமாக்கப்பட்ட‌போதும் சரி, அதன் தீர்ப்பு வெளியானபோதும் சரி ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சிதானே தவிர, பாரதிய ஜனதா கிடையாது. ஆக மத்தியில் இருக்கும் கட்சிகள் என்னதான் தேர்தல் அரசியலில் போட்டியிட்டுக் கொண்டாலும், கொள்கையில் ஒன்றாக நிற்பதைத்தான் இதுகாட்டுகிறது. காங்கிரஸ் இருக்கும்போதே இவ்வளவு செய்த ஆர்.எஸ்.எஸ், இப்போது சட்டத்திற்கு உட்பட்டு கோவில் கட்டாதா என்ன? நாம் அப்போதும் மண்ணடியின் ஒரு திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, நாமெல்லாம் 800 ஆண்டுகாலம் இந்த மண்ணை ஆண்ட நவாப்புகள் என பழம்பெருமை பேசாமலா இருக்கப் போகிறோம்?

ஒருவேளை கோவில் கட்டிய பிறகாவது ஒற்றுமை பற்றி யோசிப்பாமோ என்னவோ தெரியவில்லை. ஆனால் அதற்குள் முஸ்லிம் அமைப்புகளின் எண்ணிக்கை 500ஐக் கடந்துவிடும் போல தெரிகிறது. இந்தச் சூழலில் அமைப்பின்/கட்சிகளின் தலைவர்களைக் கூட்டி கருத்தரங்கம் நடத்தினாலே, அது பொதுக்கூட்டம் ஆகிவிடும் போல இருக்கிறது. போன வருடம் இருந்ததைவிட இந்த வருடம் உள்ள அமைப்புகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கைத் தொட்டுள்ளது. ஆளாளுக்கு தலைவர்கள், அதற்கு ஒரு கொடி. ஒரு அமைப்பில் முக்கியமான ஒருவருக்கும், தலைவருக்கும் கருத்து வேறுபாடு எனில், அடுத்த நாளே மண்ணடியில் புதிய அமைப்பு உதயமாகிவிடுகிறது. எப்படி உருப்படும் சமுதாயம்?

ஒற்றுமை பற்றி யாராவது பேசினாலே, அதெல்லாம் சாத்தியம் இல்லை என்கிற நிலைதான் தலைவர்களின் மனதிலே ஓடுகிறது. இந்து மதத்தில் சாதியால் மக்கள் பிரிந்து நிற்கிறார்கள் எனில், இசுலாமியர்கள் இயக்கங்களால் பிரிந்து கிடக்கிறார்கள். ஒரு இயக்கத்தினருக்கும், இன்னொரு இயக்கத்தினருக்கும் பார்த்தாலே தீட்டு சம்பிரதாயங்களெல்லாம் பரவிவிட்டது. சலாம் (முகமன்) சொல்லாதே, அவர் வீட்டில் பெண்ணெடுக்காதே, அவரோடு உறவு வைத்துக் கொள்ளாதே, நம் அமைப்பினர் மட்டும்தான் முஸ்லிம் என ஒரு அமைப்புத் தலைவர் தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்துகிறார். அதேசமயம் தனது அமைப்பு நடத்தும் போராட்டங்களுக்கு, ‘ஓ இசுலாமியர்களே’ திரண்டு வாருங்கள் என பொது அழைப்பும் விடுத்துக் கொள்கிறார். இதுதான் யதார்த்தமாக உள்ளது. இந்த யதார்த்தங்களையும், ஒற்றுமைக்கான அவசியத்தையும் உணராத வரையில், வெற்றி என்பது ஏட்டுச் சொல்தான்.

நம்மைக் கவிழ்க்க எதிரி எடுத்த முயற்சிகளை நாம் கற்று கொள்ள வேண்டும். ஒற்றுமையற்ற இதேநிலை நீண்டால், நாளை வாரணாசி, காசி, மதுரா என அவர்கள் முன்னேறத்தான் செய்வார்கள். நீங்கள் ஒன்றுபடாமல், வியூகங்களை வகுக்காமல், அவர்களை குறைபேசிக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இது நம்மை நாம் கேள்வி கேட்கும் சுயபரிசோதனை செய்து கொள்ளும் காலம். இதே நிலை நீடித்தால் இந்தத் தலைவர்களெல்லாம், வருங்கால தலைமுறையினரால் மிகவும் மோசமாக தூற்றப்படுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எதிரிகள் பலப்படுவதற்கு, நமது பலவீனமே காரணம். சிந்திக்கப் போகிறீர்களா? இல்லை என்னை, இசுலாமியன் இல்லை என்கிற வசைவுகளைப் பாடி, காலத்தை கடக்கப் போகிறீர்களா?

- பழனி ஷஹான்

Pin It