தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது பல அண்டை மாநிலங்களுக்கும் புடவைகள் ஏற்றுமதி செய்துவரும் ஒரு சிறு விசைத்தறி தொழில் நகரம் இளம்பிள்ளை. சேலம் மாவட்டத்தில் உள்ள இந்த இளம்பிள்ளை நகரம், சேலத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதைச் சுற்றியுள்ள அனைத்து குக்கிராமங்களிலும் பெரும்பாலும் விசைத்தறி தொழிலே நடைபெற்று வருகின்றது. தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்கள் (வார்பு, கோன், ஜரிகை, டிசைன் அட்டை) விசைத்தறிக்கு தேவையான உதிரிப் பாகங்கள் போன்ற அனைத்தும் வாங்குவதற்கு மக்கள் இளம்பிள்ளை வரவேண்டிய சூழ்நிலையே உள்ளது. ஆகையால் ஒவ்வொரு விசைத்தறி தொழிலாளரும் குறைந்தது நாள் ஒன்றுக்கு மூன்று – நான்கு முறை இளம்பிள்ளைக்கு வந்து செல்லவேண்டியே உள்ளது.

இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக மகுடஞ்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோமளவள்ளி அவர்கள் தலைமையில் இரு சக்கர வாகன தணிக்கை என்ற பெயரில் அனைத்து வாகன‌ங்களையும் வழிமறித்து கட்டாய பண வசூலில் ஈடுபடுகிறார்கள் காவல் துறையினர். பணம் இல்லை என்று சொன்னால் ‘உன்னிடம் தான் போன் இருக்கிறதே, வீட்டிற்கு போன் செய்து பணத்தை கொண்டுவரச் சொல்’ என்கிறார்கள். கட்டணம் செலுத்தியதற்கான ரசீது கேட்டால் கொடுப்பதில்லை. எனவே அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்துகிறோம் என்று சொன்னால், வாகன‌த்தைக் கொடுப்பதில்லை.

இது சட்ட விரோதம் என்று சுட்டிக்காட்டினாலும், என்னிடம் அனைத்து ஆவண‌ங்களும் இருக்கிறதே என்று நியாயம் கேட்டாலும், காவல் துறை அறிவிப்பு படிவத்தில் கூடுதலாக கேஸ் எழுதி வசூல் தொகையை அதிகப்படுத்திக் கேட்கிறார்கள். குறிப்பாக விளக்கம் கேட்கும் அனைவருக்கும் Disobey The police signal என்பதை சேர்த்துக் கொள்கிறார் உதவி ஆய்வாளர் கோமளவள்ளி அவர்கள். நாள் ஒன்றுக்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் வசூலிக்கும் தொகை ஏறத்தாழ‌ ஐம்பதாயித்திற்கும் மேல் இருக்கும் என்று பொதுமக்கள் சொல்கிறார்கள். இதனால் பல கூலித் தொழிலாளர்கள் தங்களது ஒரு வார உழைப்பின் கூலித் தொகையை ஒரே நாளில் இழந்து பெரும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது.

இளம்பிள்ளை மட்டுமில்லாமல் சுற்றியுள்ள குக்கிராமங்களிலும் இது போல் நடந்துகொள்ளும் சில காவலர்களிடம் பொதுமக்கள் நியாயம் கேட்கும் போது, ‘இது தவறு தான் ஆனால் என்ன செய்வது? இது எஸ்.ஐ மேடம் உத்தரவு’ என்று சொல்கிறார்கள்.

இலஞ்சம் கொடுக்க மறுத்த தமிழ் மணி என்பவரின் வாகன‌த்தை தர மறுத்ததோடு, மேலும் சில பொய்யான குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது சட்ட விரோதம் என்று திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்தவர்கள் முறையிட்டுள்ளார்கள். இதனால் தமிழ் மணி மீது மேலும் ஒரு பொய்யான குற்றசாட்டை சேர்த்துக்கொண்டு, சட்டம் என்ன வேண்டுமாலும் சொல்லும்; பணத்தை கொடுத்தால் மட்டும் வண்டியைத் தருகிறேன்; உங்களுக்கெல்லாம் விளக்கம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை; உங்களால் முடிந்ததை செய்துகொள்ளுங்கள் என்று அடாவடித் தனமாக பேசி அனுப்பியுள்ளார் உதவி ஆய்வாளர் கோமளவள்ளி. இது போன்ற நிலை பலருக்கும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

அரசியல்வாதிகளுக்கோ, உயர் அதிகாரிகளுக்கோ கூட அடிபணியாமல் தமது கடமையைச் செய்யும், பெண் உதவி ஆய்வாளரின் துணிச்சல் நேர்மையாக இருந்தால் வரவேற்க வேண்டியது தான். ஆனால் வசூலிக்கும் கட்டணத்திற்கு ரசீது வழங்காததும், நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த வாய்ப்பளிக்காததும் உதவி ஆய்வாளரின் நேர்மையில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், தகவல் வழங்கும் உரிமை சட்டத்தின் கீழ் மகுடஞ்சாவடி காவல் நிலையம் மூலமாக பெறப்பட்ட தகவலில் (ந.க.எண்.456/கூ.கா.க./ குற்றம்&பொ.த.அ/சே.மா./2011. நாள்: 26-04-2011) “எந்த கட்டணத்தையும் வசூலிக்க காவல் துறைக்கு உரிமை இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் மேலும் வலுவாகிறது.

எனவே கட்டாய வசூலில் ஈடுபட்டும், பொதுமக்கள் தங்களை கேள்வி கேட்கவே கூடாது என்ற அதிகாரப் போக்கிலும் நடந்து கொள்ளும் உதவி ஆய்வாளர் கோமளவள்ளி அவர்களைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக, இளம்பிள்ளை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் அறிவித்தது.

இதன் பின்னால் கடந்த 3-12-2014 அன்று சங்ககிரி தாலுக்கா காவல் துணைக் கண்காணிப்பாளர் கோபால் மற்றும் மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் சாந்தமூர்த்தி ஆகியோர் தமிழ்மணியை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்மணியின் வாகனத்தை, கட்டணம் ஏதுமின்றி திருப்பிக் கொடுத்துள்ளது காவல்துறை.

வழக்கமாக பல ஊர்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது சாதாரண‌ம் தான் என்றாலும், சங்ககிரி வட்டத்தில் சில நாட்களாக காவல் துறை அளவுக்கு அதிகமான வசூலில் ஈடுபடுவதற்கும், பயமின்றி மக்களை ஆட்டிப் படைப்பதற்கும், அதிர்ச்சி அளிக்கக் கூடிய ஒரு முக்கிய காரணம் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் சங்ககிரி நீதித்துறை நடுவர் மன்றத்தின் நடுவர் (மாஜிஸ்ட்ரேட்) தலைமையில் மகுடஞ்சாவடி, பூலாம்பட்டி, சங்ககிரி, எடப்பாடி உள்ளிட்ட காவல் நிலைய ஆய்வாளர்களுடன் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடந்ததாக சொல்லப்படுகிறது. வருகிற டிசம்பர் 6 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டிய வழக்குகளின் எண்ணிக்கையை அதிகமாகக் காட்ட ஒரு பெரிய இலக்கு முடிவு செய்யப்பட்டுள்ளாதவும், அதற்கு ஒரே வழி இரு சக்கர வாகன‌ ஓட்டுநர்கள் மீது வழக்கு போடுவது என்றும் முடிவு செய்ய‌ப்பட்டதாகத் தெரியவருகிறது.

மற்ற எந்த வழக்காக இருந்தாலும் முடிப்பதற்கு சில மாதமாவது ஆகும்; ஆனால் வாகன‌ ஓட்டுநர்கள் மீது வழக்கு போடும் போது, ஓட்டுநர்கள் தங்களின் கால விரயத்தை கணக்கில் கொண்டும், வாகன‌த்தின் அன்றாடத் தேவையை எண்ணியும், பொய்யான குற்றமாக இருந்தாலும் ஒப்புக்கொள்வார்கள் என்று கருதியே இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

காவல் துறையினர் யார் மீதும் பொய்யான வழக்குகளை போடக் கூடும் என்பதாலும், கட்டாயப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ள செய்வார்கள் என்பதாலும், குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் காவல் துறை எழுத்து மூலமாக வாங்கிய வாக்குமூலங்களை ஏற்காமல், நீதி மன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் ‘குற்றத்தை ஒப்புக்கொள்கிறீர்களா?’ என்று கேட்பது வழக்கம். இதுநாள் வரை வாகனத் தணிக்கையில் சிக்கியவர்களிடம் நீதிமன்றத்தில், ‘குற்றத்தை ஒப்புக்கொள்கிறீர்களா? அபராதத் தொகையை செலுத்துகிறீர்களா?’ என்று ஒரு சம்பிரதாயத்திற்காவது கேட்கப்பட்டது.

சங்ககிரி நீதித் துறை நடுவர் மன்ற மாஜிஸ்ட்ரேட் அவர்கள் இதற்கும் முற்றுப் புள்ளி வைத்துவிட்டார். வாகன‌ ஓட்டுநர்களிடம் சம்பவ இடத்திலேயே அபராதத் தொகையை வசூலித்து விடுங்கள்; அவர்களை இங்கு அழைத்து வரவேண்டிய அவசியம் இல்லை என்று கூறி தினமும் பல நூறு வழக்குகளை முடித்து கையெழுத்து போட்டுக் கொண்டிருப்பதாக நீதி மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்றமே தங்களுக்கு வசூலிக்கும் அதிகாரத்தை கொடுத்திருப்பதால் தான் காவல் துறையின் அளவுக்கு அதிகமான முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்.

வழக்கின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கத்திற்காக இப்படி செய்வதாக சொல்லும் காவல் துறை, பணக்காரர்கள் மீதும், அரசு ஊழியர்கள் மீதும், தங்களை கேள்வி கேட்பர்கள் மீதும் வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டு, விபரம் தெரியாத, ஏழை - எளிய நடுத்தர மக்கள் மீது மட்டும் வழக்கைப் பதிந்து, சம்பவ இடத்திலேயே குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கையெழுத்து வாங்குவதும், அபராதத் தொகை என்ற பெயரில் ரசீது கொடுக்காமல் பெரும் தொகையை அபகரிப்பதும் எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

வருகிற டிசம்பர் 6 ஆம் தேதிக்குப் பின்னர், சங்ககிரி நீதிமன்றத்தில் இத்தனை ஆயிரம் வழக்குகள் முடிக்கப்பட்டது என்ற செய்தி கிடைக்கும். இதனால் காவல் துறைக்கும் நீதித் துறைக்கும் நற்பெயர் கிடைக்கும். ஆனால் பாதிக்கப்படுவதோ அப்பாவி பொதுமக்கள் என்பது பலருக்கும் தெரியாமல் போகும் என்பது தான் வருத்தமான செய்தி.

இதனைக் கண்டித்து வருகின்ற 5-12-2014 வெள்ளிக்கிழமை மாலை 3-00 மணிக்கு, இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

- கோகுலகண்ணன்

Pin It