மனிதகுலம் எண்ணற்ற பண்பாட்டு விழுமியங்களைத் தன்னகத்தே கொண்டு முன்னேறி வருகிறது. மாரியம்மன் திருவிழாக்கள், தேர்த்திருவிழாக்கள், காவல் தெய்வங்களுக்கு உயிர் பலி கொடுத்து நடக்கும் உள்ளூர் அளவிலான வழிபாடுகள்.

prabhakaranநவீன காலத்தில் ஆகஸ்ட்-15, தமிழ் மொழி ஈகியர் நாள் என்று நமது பண்பாட்டு வாழ்வியல் விரிகின்றது. தமிழீழ விடுதலைப் போர் உருவாக்கி உள்ள புதிய பரிமாணங்களும், கீழ் வெண்மணி, மே நாள் உருவாக்கியுள்ள பண்பாட்டு அசைவுகளும் நம்மை அடுத்த கட்டத்திற்கு முன்னுந்தித் தள்ளும் புதிய உளவியலை உருவாக்கும் நிகழ்வுகளாகும்.

தமிழீழ விடுதலைப்போரில் மாவீரர் நாள் என்பது மிக உயரிய உன்னதமான தமிழீழ மக்களின் தேசிய நாளாக மாறியது.

இந்திய ஆளும் கும்பலான பார்ப்பனிய முதலாளிய சக்திகள் தமிழ்நாட்டிலுள்ள இளம் தலைமுறைக்கு இந்த தமிழீழ விடுதலைப் போரின் பண்பாட்டியல் கருத்துக்களும், உணர்வுகளும் சென்று சேரக்கூடாது என்பதில் குறியாக உள்ளனர். ஆளும் கும்பலின் ஏவலர்களான காங்கிரசு, பா.ஜ.கவினர் தமிழ் இனத்தின் எழுச்சி கண்டு அஞ்சி அலறுகின்றனர். பிரபாகரனின் உருவம் பொறித்த தட்டிகளே இந்திய ஆதிக்கவாதிகளுக்கு எமனாகத் தெரிகின்றது.

விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று ஆயுதக்களத்தில் இல்லை, பிரபாகரன் இறந்து விட்டதாக இவர்களே கூறுகின்றனர். இத்தனைக்குப் பின்னும் மாவீரர் நாள், பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாட்டங்களைக் கண்டு அஞ்சி நடுங்கிறது டெல்லி அரசு. இந்திய உளவுத்துறை காவல் துறையை ஏவிவிட்டு தமிழ் மக்களை அச்சுறுத்துகிறது. டெல்லிப் பேரரசின் அதிகாரத்தை தட்டிக்கேட்க வக்கில்லாமல் தமிழக அரசு வாய்பொத்தி நிற்கிறது.

பிரபாகரனின் ஒப்பற்ற தலைமையில் வழிநடத்தப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கம் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற வல்லாதிக்கங்களின் விரிவாதிக்க நலனுக்கு சவாலாக இருந்தது. மேலும் தாய்த் தமிழகத்தில் மாபெரும் தமிழ்தேசிய உணர்வை நாளும் வளர்த்து வந்தது. தமிழ்தேசிய இனத்தின் தேசிய எழுச்சி ஏகாதிபத்தியங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியது.

தெற்காசிய வட்டகையின் புவிசார் அரசியல், பொருளியல் நலனைத் தொடர்ந்து பாதுகாக்க தமிழீழ விடுதலை இயக்கத்தை அழித்தொழிக்கும் சதிகள் தொடக்க முதலே நடந்து வந்தது.

இந்தியாவின் "ரா" விரித்த வலையில் சிக்காமல் பிரபாகரன் மக்களைச் சார்ந்து நின்று தமது இயக்கத்தை வளர்த்தெடுத்தார். ராஜீவ் கொலையைப் பயன்படுத்தி தமிழகத்தில் தமிழீழ ஆதரவு சக்திகள் முடக்கப்பட்டனர். தடா, பொடா, தே. ப. ச, 124ஆ போன்ற கருப்புச் சட்டங்கள் தமிழீழ ஆதரவாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந் நிலை இன்றளவும் தொடர்கிறது.

இந்தியா என்பது தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கிறது. காசுமீர், நாகாலாந்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு பகுதியிலுள்ள தேசிய இனங்களையும் தமிழகம் உள்ளிட்ட தொன்மை மிகு தேசிய இனங்களையும் அடிமைப்படுத்தி பார்ப்பனிய முதலாளித்துவ சக்திகள் சுரண்டிக் கொள்ளை அடித்து வருகின்றன. தமிழீழ விடுதலை இயக்கத்தின் வெற்றியானது இந்தியாவிலுள்ள அடிமைப்பட்ட தேசிய இனங்களின் எழுச்சிக்கு தூண்டுகோலாக அமையும் என இந்திய ஆளும் வர்க்கம் சரியாகவே மதிப்பீடு செய்துள்ளது. ஆகவேதான் ஈழ விடுதலைக்கு பின்புலமாக உள்ள தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்து தமிழகத்தில் முகிழ்த்துவந்த தமிழ் தேசிய எழுச்சியை முடக்கியது. உலகம் முழுவதும் விடுதைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்ய இந்தியா தனது முழு ஆற்றலையும் பயன்படுத்தியது.

இந்தியாவின் வல்லாதிக்க நலனுடன் அமெரிக்காவும், இங்கிலாந்தும் இணைந்து செயல்பட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயல்பாடுகளை அரசியல், படையியல் வகையில் முடக்கினர்.

தமிழகத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் மிகப்பெரிய தேக்க நிலையில் இருப்பதால் டெல்லியின் வல்லாதிக்க சூழ்ச்சிகள் வெற்றி பெற்று வருகின்றன. முள்ளிவாய்க்காலில் சிங்களப் பேரின வெறியன் ராஜபக்சே மூலமாக மாபெரும் தமிழ் இன அழிப்பை இந்த வல்லாதிக்க சக்திகள் திட்டமிட்டே நடத்தி முடித்தனர். ஆனால் முள்ளிவாய்க்காலோடு தமிழீழ விடுதலைப் போராட்டம் முடங்கிவிடவில்லை. இனப்படுகொலைக்கு நீதி கேட்பது, , தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பிற்கு ஆதரவு திரட்டுவது என்ற அரசியல் போராட்டமாக எழுச்சி பெற்று வருகிறது. தமிழகத்திலும் தமிழீழ அரசியல் கோரிக்கைக்கு ஆதரவான போராட்டங்கள் இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிரான போராட்டமாகவே வலுப்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில்தான் தமிழீழம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழகத்திற்குள் முடக்கும் சதிவேலைகளில் உளவுத்துறை மூலமாக டெல்லி அரசு செய்துவருகிறது.

பிரபாகரன் அவர்களின் 60ஆவது பிறந்தநாளை 2014/நவ-26 அன்று மக்கள் திருவிழாவாகக் கொண்டாட வைகோ அவர்கள் கோரிக்கை வைத்தார். உடனடியாக சுப்பிரமணியசாமி, எச் ராஜா கும்பல் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடுவது இந்திய தேசத்திற்கே எதிரானது, தேசிய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்ய வேண்டும் எனப் பெரும் கூச்சல் போட்டது.

தமிழகம் முழுவதுமுள்ள தமிழ் அமைப்புகள் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளையும், மாவீரர் நாளையும் கொண்டாட பரப்புரைகளில் ஈடுபட்டனர். இந்த பரப்புரை நடவடிக்கைகளையே காவல்துறை தடுத்து நிறுத்தியது. பிரபாகரன் படம் உள்ள தட்டிகளை
காவல்துறையினரே தூக்கிச் சென்றனர். சுவரொட்டிகளை விடிய, விடிய கிழித்தெறிந்தனர். தமிழகம் முழுவதும் கைது நடவடிக்கைகளும் முழுவீச்சில் நடைபெற்றது.

சென்னையில் நவம்பர்-27ம் தேதி ம.தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த மாவீரர் நாள் கூட்டமும் தடை செய்யப்பட்டது. உடனடியாக கருத்துரிமையைப் பாதுகாக்கும் வகையில் வைகோ அவர்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நவம்பர்-26ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றி பேசுவதும், விழாக்கள் நடத்துவதும் குற்றமல்ல என்று நீதிபதி இராம சுப்பிரமணியம் தெளிவு படக்கூறினார்.

தமிழ்மக்கள் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை தமது குடும்பவிழா போல் பொங்கல் வைத்தும், வெடிகள் வெடித்தும், குருதிக் கொடையளித்தும் இன்னும் பல்வேறு வழிகளிலும் நடத்தினர்.

டெல்லியில் காங்கிரஸ் ஆண்டாலும், பாரதிய ஜனதா ஆண்டாலும் தமிழ் இனத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கைக்கு துணைபோகின்ற தமிழினப் பகைவர்களாவே உள்ளனர்.

இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் இருப்பதையே எச்.ராஜா, சு.சாமி கும்பல் மறுக்கின்றது. ஈழத்தில் உள்ள தமிழ்மக்களை இந்து என்று கூட ஏற்க மறுக்கின்றனர். பார்ப்பனியம் தெளிவாகவே தனது செயல்திட்டத்தை நிறைவேற்றி வருகின்றது.

தமிழ்த் தேசிய அரசியல் களம் இன்னும் தனது செயல்திட்டத்தைப் புரிந்து கொள்ளாமல் தடுமாறி வருகிறது. தமிழீழ விடுதலைக்கான அரசியல் களத்தை அமைப்பதும் தமிழ்த் தேசியத்திற்கான செயல்திட்டத்தை வகுத்து செயல்படுவதும் இணைந்த ஒன்றே ஆகும்.

பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் என்பது தமிழ்த் தேசியத்தை கட்டமைப்பதற்கு தமிழீழ மக்களும், தமிழ்நாட்டு மக்களும் உறுதி பூணும் நாளாக மாறவேண்டும்!

ஆளும் வர்க்கம் எதைத் தடுக்கின்றதோ அதை நாம் எழுச்சியோடு செய்வோம்!

ஆண்டுதோறும் பிரபாகரன் பிறந்த நாளையும், மாவீரர் நாளையும் மக்கள் விழாவாகக் கொண்டாடுவோம்!

தமிழகத்திலுள்ள தமிழீழத்திற்கு ஆதரவான அனைத்து அமைப்புகளும் கீழ்கண்ட மூன்று கோரிக்கைகளுக்காக ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.

1). தமிழீழப் பகுதியிலிருந்து சிங்கள இராணுவம் உடனே வெளியேற்றப்படவேண்டும், தமிழர் பகுதிகளில் நடைபெறும் சிங்கள குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2). தமிழின அழிப்புப்போரை நடத்திய சிங்கள பேரினவாதி ராஜபக்சே கும்பல் மீது தற்சார்பான பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும்

3) உலகம் முழுவதும் உள்ள தமிழீழ மக்களிடம் தமிழீழக் கோரிக்கைக்காண கருத்து வாக்கு எடுப்பு நடத்த வேண்டும்.

இந்த அரசியல் கோரிக்கைகளுக்கான வலுவான மக்கள் இயக்கத்தைக் கட்டி அமைக்க ஒன்றுபட்டு செயல்படுவோம்.

Pin It